அய்யாவின் அடிச்சுவட்டில் … இயக்க வரலாறான தன்வரலாறு (178)

மே 16-31

சமூக உரிமை காப்பதில் தமிழகத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்!

30.09.1980 அன்று உடுமலைப்பேட்டையில், கோவை மாவட்ட பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டு விளக்க வழிநடைப் படையை நான் துவக்கி வைத்து உரையாற்றினேன். பகுத்தறிவாளர்களும், திராவிடர் கழகமும் இணைந்து துவக்க விழாப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அக்கூட்டத்திற்கு அன்புச்சந்திரன், உடுமலை ஒன்றியத் தலைவர் தலைமை ஏற்றார். பொருளாளர் சுந்தரம், படைத்தலைவராக தி.நா.அறிவரசு, திருப்பூர் ஒன்றியச் செயலாளர் இரா.சுந்தரராசன், கோவை மாவட்ட அமைப்பாளர் ஆறுச்சாமி, கோவை மாவட்டச் செயலாளர் தி.வெங்கடேசன், கோவை மாவட்டத் தலைவர் கே.இராமச்சந்திரன் பெரியார் மாவட்டச் செயலாளர் ந.சேதுபதி, கொள்கை பரப்பும் படைத்தளபதி அய்.பெரியசாமி, ஈரோடு வழிநடைப் படையின் வீரப் பெண்மணியார் கோ.லட்சுமி உள்ளிட்ட கழகத் தோழர்கள், தோழியர்கள் பலரும் பெருந்திரளான மாநாடுபோல் கலந்து கொண்டார்கள்.

தந்தை பெரியாரின் 100 ஆண்டுகள், நூறு ஆண்டுகள் ஓயாத உழைப்பின் விளைவுதான் இன்றுள்ள தமிழர்கள் ஓரளவு கல்வி பெற்றதும், அரசு அலுவலகங்களில் அமர்ந்ததும் ஆகும். அய்யா அவர்கள் பிறந்த பிறகுதான் நமக்கு தன்மானம் பிறந்தது. பகுத்தறிவு பிறந்தது. அய்யாவின் சுற்றுப் பயணம் நின்றாலும் அய்யாவின் கொள்கைச் சுற்றுப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

கோவை மாவட்ட பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டின் விளக்க வழிநடைப் பெரும்படையின் கொள்கை வீரர்கள் எதிர்ப்புக்கு அஞ்சாத பெரும்படை மறவர்கள். இது வன்முறை படையல்ல, தமிழர்களுக்கு உள்ள வம்பை நீக்கும் தற்கொலைப் படை, இது பகுத்தறிவு கொள்கை பரப்பும் படை, இன்று ஊர் தவறாமல் பார்ப்பனர்கள் “பிராமணர்கள் சங்கம்’’ என்ற பெயரில் அமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். நவம்பரில் 8, 9ஆம் நாளில் நடக்கவிருக்கும் மாநாட்டுக்குத் தலைப்பு பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடு என்றுள்ளது. இதைக்கண்டு ஏன் பார்ப்பனர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள். இவர்கள் நம்மவர்களை வைத்து நம்மவர்களை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் இனி இது நடக்காது என்று கூறி, ஜாதி ஒழிப்பு, சனாதன  சாஸ்திர எதிர்ப்பு, குலக்கல்வி திணிப்பு ஒழிப்பு பற்றி விளக்கினேன். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகி இனி இழிவு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அது தம் கடமை என்று வலியுறுத்தினேன்.

05-.10.1980 புதுவையில் நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழா காமராசர் சாலையிலுள்ள பிள்ளையார் தோட்டத்தில் நடைபெற்றது. என்னுடைய தலைமையில் தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் இலட்சோபலட்சம் மக்களின் வாழ்த்தொலிக் கிடையே தந்தை பெரியார் அவர்களுடைய சிலையைத் திறந்து வைத்தார்கள்.

புதுவை திராவிடர் கழகத் தலைவர் வலங்கை கு.கலைமணி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, புதுவை நகரச் செயலாளராக இருந்த ஆர்.டி.ராசன், திராவிடர் கழகப் பொருளாளர் திரு. கா.மா.குப்புசாமி, புதுவை மாநில அமைப்புச் செயலாளர் கொறடா மணிமாறன், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் இரகுமான்கான், காரைக்கால் வட்டம் தி.மு.க. செயலாளர் முகம்மது, காரைக்கால் சி.மு.சிவம், அமைச்சர் எம்.சி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நான் எனது தலைமையுரையில், நம் தலைமுறையின் இழிவு நீக்கப்பட்டு, எழுச்சியும், ஏற்றமும், மானமும் உரிமையும் பெற்று உயரும் வரை நமது இலட்சியப் பயணம் ஓயாது; நமக்கு வருகின்ற எதிர்ப்புகள்தான் நமது இலட்சியக் கொடியை மேலும் மேலும் உயர்த்தும் என்பன போன்ற இனமான மீட்புக்குரிய கருத்துக்களை உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தேன்.

சிறப்புரையாற்றிய கலைஞர் அவர்கள், பெரியாருடைய புகழ் புதுவை மாநிலத்திலே மாத்திரம் அல்ல; தமிழ் மண்ணிலே மாத்திரம் அல்ல; தென்னகத்தின் பல பகுதிகளில் மாத்திரம் அல்ல; இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு மாநிலங்களில் மாத்திரம் அல்ல; கடல் கடந்து பரவி இருக்கிற புகழ்!

 

 

கடல் கடந்து வாழ்கிற தமிழர்கள் உள்ளங்களில் எல்லாம் திராவிடர் இன உணர்வு _ தமிழ் இன உணர்வு இன்றைக்கும் பதிந்து இருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டவர் தந்தை பெரியார் என்று சொன்னால் அது மிகையாகாது.

எனவே, அத்தகைய மாபெரும் தலைவருக்கு, பதவிகளில் அமராமலேயே மக்களுடைய உள்ளங்களை எல்லாம் பதவிப் பீடமாக ஆக்கிக் கொண்ட தலைவருக்கு இன்று நாம் விழா எடுக்கிறோம்.

காரைக்கால் சிவம், இங்கே பேசும்பொழுது, எனக்கு வயதாகிவிட்டது என்றாலும், இளமை உணர்வோடு உங்கள் முன்னால் நிற்கிறேன். அது பெரியார் ஊட்டிய உணர்வு, தன்மான உணர்வு, தமிழ் உணர்வு என்று குறிப்பிட்டார்கள்.

அத்தகைய உணர்வினை நமக்கு உருவாக்கிய இந்தத் தலைமுறைக்கும் _ கடந்த தலைமுறைக்கும் _ இணைந்த தலைவராக _ ஏன்? இன்னும் பல்வேறு தலைமுறைகளைத் தொடர்ந்து பகுத்தறிவுத் தலைமுறைகளாக உருவாக்கிக் காட்டியத் தலைவராக நிரந்தரமான, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கக் கூடிய தலைவராக நம்மிடையே வாழ்ந்து மறைந்தாலும் நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ள தந்தை பெரியாருக்குத்தான் இன்று நாம் சிலை வைத்துப் பாராட்டுகிறோம்.

பெரியார் அவர்கள் தன்னைப் பற்றி குறிப்பிடும்போது, என்னை முட்டாள் என்று சொல்லட்டும். மனித சுபாவங்களுக்கு அப்பாற்பட்ட கடையன் என்று சொல்லட்டும். அதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைவேனே தவிர வருத்தப்பட மாட்டேன் என்று அவர் கூறிய கருத்துக்களை இங்கே நம்முடைய நண்பர் வீரமணி எடுத்துக் கூறினார். அதுதான் பெரியாருக்குரிய சிறந்த இலக்கணம். அவர் இங்கு சுட்டிக்காட்டியதைப் போல எதிர்நீச்சல் போட்டே தந்தை பெரியார் தன்னுடைய பொதுவாழ்க்கையை நடத்தியவர். தன்மான இயக்கத்தை நடத்தியவர்.

பெரியார் பெருந்தொண்டர் டேப் தங்கராசு அவர்கள் படத்திறப்பு விழாவில் (26.10.1980)

அவர் ‘ஏன்?’ என்று கேட்ட கேள்வி கிரேக்க நாட்டு சாக்ரடீஸ் கேட்டதைவிட வேகமாக, லிங்கன் கேட்டதைவிட வேகமாக; வால்டேர் கேட்டதைவிட வேகமாக தந்தை பெரியார் அவர்கள் கேட்ட கேள்வி இருந்தது என்றால் அவர்கள் எல்லாம் தனி மனிதர்களாக நின்று அதுபற்றி, நூல்கள் எழுதி பெரிய சொற்பொழிவுகளை ஆற்றி அந்தக் கேள்விகளை மக்கள் முன்னால் வைத்து விட்டுப் போனார்கள்.

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் அந்தக் கேள்வியைக் கேட்கிற ஒரு பெரிய இயக்கத்தையே உருவாக்கினார்கள்.

புத்தரானாலும், இந்தியத் துணைக் கண்டத்தில் சீர்திருத்தம் செய்ய எழுந்த வேறு பல பெரியவர்களானாலும் அவர்கள் எல்லாம் தங்களுடைய கேள்விகளுக்கு ஒரு இயக்கம் காணவில்லை.

‘ஏன்? என்று கேள்’ என்று பொதுமக்களைப் பார்த்துக் கேட்டு விட்டுச் சென்றார்கள். இது சரியா? முறையா? என்று விளக்கங்களைத் தந்தார்கள்.

‘தமிழன்’ என்ற உணர்வை, ‘திராவிடன்’ என்கின்ற உணர்வினை, ‘நீயும் மனிதன்தான்  மண் அன்று’ என்ற அந்த உணர்வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்களேயாவார்!

ஆண்டவன் என்று ஒருவன் இருந்து அவன் மக்களைப் படைத்திருப்பானேயானால் _ அதிலே ஒருவனை ‘பிராமணன்’ என்றும், ஒருவனை ‘சத்திரியன்’ என்றும், ஒருவனை ‘வைசியன்’ என்றும், ஒருவனை ‘சூத்திரன்’ என்றும் படைத்திருந்தால் அவன் ஆண்டவனே அல்ல என்று அடித்துச் சொன்ன பெருமை பெரியாருக்குத்தான் உண்டு’’ என்று கூறினார்.

“வகுப்புரிமை பாதுகாப்பு வாரம்’’ என்று நவம்பர் முதல் வாரத்தை கொண்டாடி, பட்டி, தொட்டி, நாடு, நகரம் எல்லாம் கூட்டம் நடத்தி, நமது மக்கள் மிக மிக விழிப்புடன் செயலாற்ற வேண்டிய தருணம் என்பதை சுட்டிக்காட்டி, “தகுதி, திறமை பல்லவியின் யோக்கியதை’’ என்ற தலைப்பில் 19.10.1980 அன்று ‘விடுதலை’யின் இரண்டாம் பக்கத்தில் பார்ப்பன முதலைகளின் மோசடிகளை விளக்கியிருந்தேன். அதில், இடஒதுக்கீட்டுக்கு எதிரான முக்கிய வாதம் இவர்கள் தரப்பில் கூறப்படுவது என்ன தெரியுமா?’’

ஏராளமான மார்க்குகள் வாங்கியுள்ள “தகுதி _ திறமை’’ உள்ள முற்பட்ட சாதியினரை தேர்வு செய்யாது அவர்களைவிட குறைவான மார்க்குகளை வாங்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களை இடஒதுக்கீடு விதிகளின் காரணமாக முன்னுரிமை கொடுத்துத் தேர்ந்துதெடுப் பதனால் தேசத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஏனெனில், “தகுதி திறமை’’க்கு மதிப்பில்லாமல் செய்யப்படுகிறது என்பதால், என்கிறார்கள்!

‘தகுதி திறமை’ பேசும் பார்ப்பனர்களின் யோக்கியதை எப்படி என்பதற்கு ஒரு சிறப்பான உதாரணத்தை விளக்கியிருந்தேன். பொய் வயது கொடுத்து பிரதம நீதிபதி பதவியில் நீடித்துக் கொண்டிருந்தாரே பார்ப்பனர் திரு.எஸ். இராமச்சந்திர அய்யர்; அதுகுறித்து எவராவது “மூச்சு’’ விட்டனரா?

‘தகுதி_திறமை’ பல்லவி பாடுவோர் யோக்கியதை எவ்வளவு என்று புரியவில்லையா?

ஜஸ்டிஸ் மேடப்பா மைசூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தனக்குத் சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை என்பதற்காக, அவரைக் கொல்ல, அவரது பணியாளர் மூலம் விஷம் கொடுக்க முனைந்த வக்கீல் திரு.எல்.எஸ்.ராஜி அய்யங்கார்களின் தகுதி திறமையும் அவருக்காக அரசியல் சட்டத்தின் விதிகளையே மாற்ற முயற்சி எடுத்த, திருவாளர்கள் சி.இராஜகோபாலாச்சாரியார், அனந்தசயனம் அய்யங்கார் ஆகியோரது “தகுதிகளும்’’ திறமைகளும் நாடறிந்த _ நாறிய விஷயங்களாயிற்றே என்று கூறி, இன்னொரு செய்தியும் இங்கு குறிப்பிடுகிறேன்.

காஷ்மீர் விவகாரம் சம்பந்தமாக ஒரு சிக்கலில் திரு.கோபால்சாமி அய்யங்கார் அய்.நா.சபையில் சென்று திணறியதும், அதுகண்டு சலிப்படைந்த பண்டித நேரு அவரைத் திரும்ப அழைத்ததும், ஆற்காடு சர்.ஏ.இராமசாமி முதலியாரை, அனுப்ப; குறிப்பிட்ட அந்தப் பிரச்சினையில் வெற்றி வாகை சூடி வந்தாரே; தகுதி திறமைக்கு யார் உண்மையான வாரிசுகள் என்பது புரியவில்லையா? இப்படி பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக் கூறி அந்த அறிக்கை எழுதியிருந்தேன்.

13.10.1980 அன்று மதுரை மாவட்டம் நரிமேட்டில் சுயமரியாதைச் சுடரொளி முத்துச்சாமி அவர்களின் நினைவுக் கம்பம் அமைத்து கொடியேற்று விழாவும், பிரச்சாரப் பலகை திறப்பு விழாவும் நடைபெற்றது.

மதுரை இசை அரசன், இ.மு.ஆனந்தன், இரணியன் ஆகியோர் சீரிய முயற்சியில் நடைபெற்ற விழாவில் என்னுடன் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்களும், அமைப்புச் செயலாளர் கோ.சாமிதுரை அவர்களும் தெற்கு மாவட்டத் தலைவர் பே.தேவசகாயம், வடக்கு மாவட்டத் தலைவர் நடராசன் மற்றும் கழக முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொள்ள, கழகக் கொடியை நான் முத்துசாமி அவர்களின் நினைவுக் கம்பத்தில் பலத்த கரவொலிக்கிடையே ஏற்றிவைத்து சில தினங்களுக்கு முன் ஒரு பேரணி நடத்திய பார்ப்பனர்கள் போட்ட கோஷத்தில். “வீரமணியைக் காணோம். வீரமணியைக் காணோம்’’ என்றார்களாம். எங்கே தேட வேண்டுமோ அங்கே விட்டுவிட்டு, காணோம், காணோம் என்று சொல்லுகிறார்கள். நான் இருக்கிறேன் எனக் காட்டத்தான் நண்பர்கள்; வருக என வரவேற்புக் கொடுத்து என்னை அழைத்து வந்திருக்கிறார்கள்.

பெரியவர் முத்துசாமி அவர்கள் பகுத்தறிவுச் சுடரொளி, சுயமரியாதைச் சுடரொளி தன்மானத்தினுடைய தனிப்பெரும் காவலராக தந்தை பெரியாருக்கு உற்ற துணைவராக அந்தக் காலத்தில் வாழ்ந்த பெரும்போர் வீரர்களில் ஒருவராக சுயமரியாதைச் சுடரொளிச் சிங்கமாக வாழ்ந்த அவருடைய நினைவுக் கம்பத்தில் இந்தக் கொடி ஏற்றப்படுவதற்குச், சிறப்பான ஏற்பாட்டைச் செய்த கழக நண்பர்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்தேன். விழாவில், வேல்.சோமசுந்தரம், கோ.மாணிக்கம், கு.பச்சியப்பன், அ.ஆதிமூலம், செயக்குமார் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள், தோழர்கள், தோழியர்கள் உள்பட பெருந்திரளான பொதுமக்களும் மாநாடுபோல் கூடியிருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, மதுரை யாதவர் கல்லூரி மாணவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். விழாவுக்கு கல்லூரி முதல்வர் தமிழ்க்குடிமகன் (தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் அமைச்சராக இருந்தவர்) அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசன் ஆகியோரும் வரவேற்றனர்.

விழாவில், வினா_விடை நிகழ்ச்சியில், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தேன்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் சென்னையில் நடந்த விழா ஒன்றில், “தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும்’’ என்று பேச, பார்ப்பனர்கள் கொதித்துக் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். “இந்து’’ பத்திரிகையில் ஒரு பார்ப்பனர் மிரட்டல் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் நான் 18.10.1980 தலையங்கத்தில், ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் கருத்தை ஆதரித்தும், பார்ப்பனர்களின் எதிர்ப்பைக் கண்டித்தும் தலையங்கம் எழுதினேன்.

“பார்ப்பன பூச்சாண்டிக்கு தமிழக அரசும், அறநிலையத் துறையும் பயந்துவிடக் கூடாது. தமிழக அரசின் தமிழ்ப் பற்றும், மான உணர்ச்சியும் மக்களின் பேராதரவைப் பெற்றுத் தரும். எனவே, தமிழக கோயில்களில் எல்லாம் தமிழ் ஒலிக்க தமிழக அரசு உடன் ஆவன செய்ய வேண்டும்!’’ என்று கேட்டுக்கொண்டேன்.

எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து பலவகையிலும் அதைத் தடுக்க பார்ப்பனர்கள் முயன்றனர். எனவே, பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகவும் விழிப் போடிருந்து கிடைத்த உரிமையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். விழிப்போடில்லை யென்றால் பெற்றதை இழப்போம் என்று எச்சரித்து விடுதலையில் 24.10.1980 அன்று தலையங்கம் எழுதினேன்.

இடஒதுக்கிடு என்பது பிச்சையல்ல, உரிமை என்பதை உணர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் காலவளர்ச்சியில் நீண்டுகொண்டே செல்லுகையில், அவர்களுக்கான இடஒதுக்கீடும் அதிகரிக்கப்பட வேண்டியதுதானே நியாயம் என்பதை உணர்த்தினேன்.

தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டையும் 18%லிருந்து மேலும் உயர்த்தும்படி தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரைக் கேட்டுக்கொண்டேன்.

தமிழகத்திலுள்ள தலைவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி ஒன்றாய்ச் சேர்ந்து இந்த உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இது வருங்கால தலைமுறைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை என்பதையும் உணர்த்தினேன்.

திருச்சி மாவட்டம் அணைக்கரையில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் அணைக்கரை டேப் தங்கராசு அவர்களின் நினைவுச் சின்னத்தைத் திறந்து வைக்க என்னை அழைக்கப் பெற்று (26.10.1980) அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் அணைக்கரை தங்கராசு அவர்கள் இராணுவவீரர்போல கழகத்திற்கு உழைத்தவர், இந்த இயக்கத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவர் அவர் உழைத்த விதம், காட்டிய பண்பாடு என்றைக்கும் போற்றத்தக்கது. தங்கராசு அவர்களின் இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியுமா என்பது கேள்விக்குறி! எந்தச் சோதனையிலும் சபலத்திற்கு ஆளாகாத கருஞ்சட்டை வீரர் அவர்! அவருக்குச் சின்னம் எழுப்ப வேண்டியது நமது கடமை. அவர் நடத்திய உணவு விடுதிக்கு முன் உள்ள இடத்தில் “சுயமரியாதை வீரர் படிப்பகம்’’ உருவாக்கப்பட வேண்டும். அதற்கு கழகம் எவ்விதத்திலே உதவ வேண்டுமோ, அந்த விதத்தில் உதவும். அவரது நினைவு நாளிலே படிப்பகமும் சிலையும் உருவாக வேண்டும். சிலர் தாங்கள் மட்டும் சுயமரியாதைக்காரர்களாக இருப்பார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு அந்தக் கொள்கை உடன்பாடற்றதாக இருக்கும். ஆனால், தோழர் தங்கராசு, தான் மட்டுமல்ல – _ தன் குடும்பத்தையே கொள்கைக் குடும்பமாக ஆக்கி வைத்தார்.

பெரியார் பெருந்தொண்டன் என்றால், உயிரோடு இருக்கும்பொழுது மட்டுமல்ல. அவன் செத்த பிறகும்கூட அவன் உடல் அந்தக் கொள்கைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டேன். நிகழ்ச்சியில் முன்னாள் மேலவை உறுப்பினர் கோ.சி.மணி, கா.மா.குப்புசாமி, கே.பி.கலியமூர்த்தி, உல்லியக்குடி ரெங்கசாமி, சிதம்பரம் என்.வி.இராமசாமி, ஜெயங்கொண்டம் பாஸ்கரனார், மேலதஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ராஜகிரி கோ.தங்கராசு, காண்டியங்கொல்லை முத்துசாமி, மேலதஞ்சை தி.க.தலைவர் ஆர்.பி.சாரங்கன், திருச்சி கிழக்கு மாவட்ட டி.டி.வீரப்பா உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.

28.10.1980 அன்று வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் தமிழ்ப் பேரவை தொடக்க விழா கல்லூரி முதல்வர் பேராசிரியர் சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் நான் கலந்துகொண்டு தமிழ்ப் பேரவையைத் தொடங்கி வைத்து, அய்யா பெரியார் அவர்களின் தனித்தன்மை என்னவென்றால், கடவுள் சொன்னது _ மதம் சொன்னது _ சாஸ்திரம் சொன்னது _ முன்னோர்கள் சொன்னார்கள் _ மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னால் சொல்லப்பட்டது என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் சொந்த பகுத்தறிவால் சிந்தித்து சரியெனப் பட்டதை  எடுத்துச் சொன்னார்கள். தவறு என்பதை துணிவோடு சுட்டிக்காட்டினார் என்று எடுத்துக் கூறினேன்.

மேலத்தஞ்சை மாவட்ட திராவிடர் கழக நிர்வாகக் குழு கூட்டம் 7.11.1980 அன்று குடந்தை பெரியார் மாளிகையில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. மாணவரணி செயலாளர் ஒரத்தநாடு முகிலன் அவர்களின் கடவுள் மறுப்பு முழக்கத்துடன் துவங்கிய மன்னை ஆர்.பி.சாரங்கன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் நான் பேசும்பொழுது, நமது இயக்க வரலாறு என்பது வகுப்புரிமை வரலாறு, மக்களிடத்திலே வகுப்புரிமையின் வரலாற்றை நாம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினேன்.

பார்ப்பனர் அல்லாத மக்கள் சிந்திக்க வேண்டும். “வகுப்புரிமையைப் பறிகொடுத்தோ மேயானால் மீண்டும் இங்கே மனுதரும வாழ்வுதான். அதை எவரும் மறந்துவிட வேண்டாம்’’ என்று எடுத்துரைத்தேன். என்னுடன் பொருளாளர் கா.மா.குப்புசாமி, ராஜகிரி கோ.தங்கராசு, மன்னை வழக்கறிஞர் அருளரசன், மேலத்தஞ்சை மகளிரணி அமைப்பாளர் பத்மாவதி, இராமமூர்த்தி, மகளிரணி தோழர்கள் சரசு பழனி, நீடாமங்கலம் ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

நீதிக்கட்சி காலந்தொட்டு, தந்தை பெரியார் அவர்களின் அணுக்கத் தொண்டராக விளங்கி வரும் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு உறுப்பினரும் முன்னாள் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவருமான நீடாமங்கலம் அ.ஆறுமுகம் அவர்கள் 11.11.1980 அன்று மறைவுற்றதை கேள்விப்பட்டு ‘விடுதலை’யில் 13.11.1980 அன்று முதல் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தோம். இவர் கருப்புச் சட்டை தவிர வேறு சட்டை அணியாத கருப்புச்சட்டை வீரரான சுயமரியாதை இயக்க வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும், பங்கு பெற்று பலமுறை சிறைவாசம் அனுபவித்த செம்மல் ஆவார்!

கேரளத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த போராட்ட வீரர் அய்யன் காளியின் சிலையை பிரதமர் திருமதி இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் திறந்துவைத்துப் பேசும்பொழுது, தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்டத்தில் பாடுபட்ட வரலாற்றை அங்கே சுட்டிக்காட்டவில்லை என்பதனை விளக்கி, 13.11.1980 அன்று ‘விடுதலை’யின் நீண்டதோர் அறிக்கையை வெளியிட்டேன். அதில், “தென்னாட்டில் ஜாதி உணர்வு அதிகமாக இருந்தது. அது கேரளாவிலும் காணப்பட்டது. ஜாதிக்கொடுமை எப்படிப்பட்டது என்பதனை விளக்கி திருமதி இந்திராகாந்தி அவர்கள் பேசியுள்ளார்.

பிரதமர் இப்படிப்பட்ட ஒருவரது சிலையைத் திறந்து வைத்தது வரவேற்கத்தக்கது. அதில் அவர் பேசும்பொழுது தீண்டாமையை ஒழித்ததற்காக பாடுபட்டவர்களின் பெயர்களைச் சொன்னபோது, “வைக்கம் வீரரான’ தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொல்ல ஏன் மறந்தார்? நமக்குப் புரியவில்லை!

இவர், வைக்கம் போராட்டத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தினைத் துவக்கி வைக்க கேரளம் வந்தபோது 1975இல் விழாவில் கலந்துகொண்டபோதும் தந்தை பெரியார் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. நூற்றாண்டு விழாவின்போது மத்திய அரசு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்ட பிறகுகூடவா குறிப்பிடத் தயக்கம்? நமது வேதனையையும் அதிர்ச்சியையும் பிரதமருக்குத் தெரிவிப்பது கடமையாகும். வரலாற்றில் வைக்கம் வீரரை இருட்டடிப்பது கட்டுப்பாடாக நடைபெறுகிறது என்பதை விளக்கி நமது வேதனையை வெளியிட்டிருந்தேன்.

(நினைவுகள் நீளும்)

மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் பே.தேவசகாயம்
தமிழர் தலைவருடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *