அமைதிப் புரட்சி என்று சில அரைகுறைகள் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த தேர்தல் முடிவுகளின்போது நீட்டி முழக்கின. சில லட்சம் அதிகமான வாக்குகளைப் பெற்றதாலேயே ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க வுக்கு ஆதரவாக மக்கள் அமைதிப் புரட்சி செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பன ஊடகங்கள் துள்ளிக் குதித்தன. நடுநிலை என்ற பெயரில் பார்ப்பன சார்புநிலை எடுத்த அவர்கள் தமிழ்நாடே மாறிப்போகப் போகிறது என்று மார்தட்டின. ஆனால், நடந்தது என்ன?
நீண்டநாட்களாக கோரப்பட்டு வந்து, கலைஞர் அரசால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை முடக்கி தனது ஆட்சி அமைத்தவுடனேயே ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். சமூக நீதியாளர்களும், கல்வியாளர்களும் மட்டுமல்லாமல், பெரிய அளவுக்கு கொள்கை பற்றியெல்லாம் அக்கறை இல்லாத பொதுமக்களும் கூட இந்த நடவடிக்கையை எதிர்த்தனர். பெற்றோர், மாணவர், கல்வியாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
உயர் நீதிமன்றம் அரசின் சட்டத்திருத்தத்திற்குத் தடை விதித்தது. உடனடியாக இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆணையிட்டது. மக்களும், கல்வியாளர்களும் தீர்ப்பை அரசு மதித்து செயல்பட வேண்டும்; மேல் முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் செல்லக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனாலும், ஜெயலலிதாவின் அரசு மீண்டும் முரண்டு பிடித்தது. மேல்முறையீட்டுக்குச் சென்றது.
உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் தொடர தமிழ்நாட்டின் எதிர்காலமான மாணவச் செல்வங்களின் கல்வி வீணானது. என்ன பாடம்? எப்போது படித்துத் தேர்வு எழுதுவது? என்ற குழப்பத்திற்கு மாணவர்களும் பெற்றோரும் ஆளாயினர். இதுவரை இந்தியக் கல்வி வரலாறு காணாத சோகம் நடந்தேறியது. மாணவர்கள் கோவில் குளங்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். 100 நாட்கள் வீணாயின.
தமிழக கல்வி வரலாற்றில் இதற்கு முன்னர் ராஜகோபாலாச்சாரியார் காலத்தில் கல்விக்குப் பெரும் நெருக்கடி வந்தது; மதுவிலக்கைக் காரணம் காட்டி அவர் பள்ளிகளை மூடினார். குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்குப் பிறகு இப்போதுதான் ஜெயலலிதா அரசின் பிடிவாதத்தால் கல்விக்குச் சிக்கல் வந்தது என்பதைத் தமிழக வரலாறு பதிவு செய்துவிட்டது.
பொதுவாக கல்லூரி சென்றவுடன்தான் மாணவர்களுக்கு அரசியல் குறித்த பார்வை வரும். ஆனால், சமச்சீர் கல்விக்கு ஜெயலலிதா அரசு தடைபோட்டதால் 5 ஆவது படிக்கும் 10 வயது மாணவனுக்குக்கூட அரசியல் காரணங்களால்தான் கல்விக்குத் தடை என்பது புரிய ஆரம்பித்துவிட்டது.
நாட்கள் இப்படி நகர கடந்த ஆகஸ்டு 9 அன்று உச்ச நீதிமன்றம் தனது நச் தீர்ப்பை வழங்கிவிட்டது. சமச்சீர் கல்வியை 10 நாளில் அமல்படுத்த வேண்டும்; அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்கக்கூடாது; பாடப்புத்தகங்களை 10ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாஞ்சால், சவுகான், தீபக்வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பை வழங்கினர். 3 நீதிபதிகளும் சமச்சீர் கல்வி குறித்து ஒருமித்த கருத்தையே தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு மற்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்ட கருத்துகளில் 25 காரணங்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதில் சில முக்கியமான கருத்துகள் வருமாறு:
சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. வரும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ஆம் தேதி பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியல்ரீதியான உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில்தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.
அவரே இந்த ஆண்டு உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை என்றும், தரமற்றது என்றும், அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படிப்பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ஆம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியைத் திரும்பப் பெறுவது போல உள்ளது. எனவே, இதை ரத்து செய்கிறோம்.
ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறிய பிறகு அதைத் திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாததாகிவிடும்.
2010 & 2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம்தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர். அந்த நம்பிக்கையை அரசு பாழடித்துள்ளது.
ஒவ்வொரு கட்சியும் அரசு மாறும்போது மாணவர்கள் பாதிக்கும் அளவு நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்களின் அடிப்படை அதிகாரத்தைப் பறிப்பதாகும்.
மாணவர்களைப் பாதிப்பதாக உள்ளது. அரசியில்ரீதியான முடிவுகள் எடுக்கும்போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் என்ற காரணத்தைக் காட்டி மாணவர்கள் படிப்பைப் பாழாக்கக் கூடாது. பாழாக்கியது தவறு. அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்காதவகையில் அரசு செயல்பட வேண்டும். அரசியல் உள்நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்ததாக தெளிவாகத் தெரிகிறது. உயர் நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்கிறோம்.
நீதிமன்றத்தின் கருத்துகள் இப்படி இருக்க கடந்த 3 மாதங்களாக பல்வேறு அமைப்புகளும், மாணவர்களும் வீதியில் இறங்கிப் போராடியதைத்தான் புரட்சி என்று சொல்ல வேண்டும். பள்ளி மாணவர்களே அரசை எதிர்த்து கேள்விகள் கேட்கத் தொடங்கினர். இணையதளங்களில் வழக்கு நடைபெற்ற நாட்களில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
குறிப்பாக, தினமலர் இணையதளத்திலேயேகூட வாசகர்கள் தினமலரே ஜால்ரா போடாதே என்று தமது எழுத்தால் எதிர்ப்புக்குரல் எழுப்பினர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த சிலமணி நேரத்திலேயே இணையதளங்களில் பதிவான சில கருத்துகள் இதோ:-
தினமலர் 9.8.2011 இணைய இதழில் வந்த வாசகர் கருத்துகள்:-
மரியா அல்போன்ஸ், சென்னை 09.08.2011 07:23:02 சமச்சீர் புத்தகங்கள் அடித்ததற்கான செலவு இருநூறு கோடி ரூபாய்… பழைய பாடத் திட்டங்கள் அடிக்க இருநூறு கோடி ரூபாய்.. முறையீடு.. மேல் முறையீடு என சொல்லி, பிள்ளைகள் படிப்பு நாசமாய்ப் போனது மூனு மாசம்… என்னய்யா நடக்குது நாட்டிலே? – சுப்பிரமணியம், வேதாரண்யம்
09.08.2011 07:11:35 யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? எனது வைராக்கியம்தான் எனக்கு முக்கியம் என ஜெயா கருதாமல் இந்தத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்… உடனடியாக
பெரியசாமி சக்திவேல், கரூர்
ஜெ.யின் முரட்டுப் பிடிவாதத்தால் இரண்டு மாத காலம் வீணானதுதான் மிச்சம்!
அப்துல்லா, நாகப்பட்டினம்
09.08.2011 07:06:08 தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தாலும் அதை உடனே ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை.. அதை விடுத்து ஏதாவது சில்லுண்டி வேலைகளைச் செய்ய அரசு முயற்சிக்க வேண்டாம். கலைஞர் சொன்னதைப் போல, இது யாருக்கும் வெற்றியும் அல்ல. யாருக்கும் தோல்வியும் அல்ல…
தினகரன் 9.8.2011 இணைய இதழில் வந்த வாசகர் கருத்துகள்:-
அந்தோணிரஜ், சென்னை
09.08.2011 01:00:07
இன்று வெற்றி நமக்கே…… (சமச்சீர் கல்வி) …. இனிமேலாவது மாணவர்கள் படிப்பைத் தொடரட்டும் …….. அம்மாவின் அடம்பிடிப்பு அடங்கட்டும்…
சதீஷ், திமிரி 09.08.2011 10:52:19
நியாயத்திற்கு வெற்றி நிச்சயம். .
ஆனந்த், கோவை
09.08.2011 10:33:06
அம்மா தாயே !! எதாவது பாடப் புத்தகம் இருந்தா கொடுங்கம்மா… படிச்சு ரொம்ப நாள் ஆச்சு…!!! (இப்பிடி இருக்கு இன்றைய மாணவர்களின் நிலைமை)
கே. சந்திரசேகரன், கோபிசெட்டிபாளையம்
09.08.2011 09:34:55
சமச்சீர் கல்வி சரியானது. இதனால் மாணவரின் அறிவாற்றல் மேலோங்கும். அனைத்து மாணவருக்கும் சமமான கல்வி சிறந்த கல்வியாய் அமையும்.
பதி, சென்னை
09.08.2011 11:08:08
அமெரிக்க நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடியாதா?
நக்கீரன் 9.8.2011 இணைய இதழில் வந்த வாசகர் கருத்துகள்:-
ஹபிப் ரஹ்மான், போலந்து 09.08.2011 11:26:49 தமிழக மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பு. தமிழக அரசு காலம் கடத்தாமல் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும்
அபூராஜியா, ஆஸ்திரேலியா
09.08.2011 11:01:46 அய்.நா. சபையில் அப்பீல் பண்ணுறதுக்கு ஏதும் வழியிருக்கா? இந்த வருஷம் இன்னும் 150 வேலை நாள் பாக்கியிருக்கு. அதை ஓய்க்கிறதுக்கு ஏதாவது நல்ல அய்டியா இருந்தா அம்மாக்கிட்ட சொல்லுங்க.
பொன் திராவிடன், ஆஸ்திரேலியா
09.08.2011 10:55:28 தமிழக அரசின் முட்டாள்தனத்திற்குக் கிடைத்த ஜீரணம் செய்ய முடியாத, நெத்தியடித் தீர்ப்பு .இனிமேலாவது இந்த ஆணவம் பிடித்த புத்தியை விட்டுத் தொலைத்தால் தமிழக மாணவர்கள் உருப்பட்டுத் தொலைவார்கள்.
அங்ககுமார், 09.08.2011 10:53:01
சமூக நீதிக்கும் கல்வியாளர்களுக்கும் வெற்றி
ஜான், இந்தியா 09.08.2011 11:40:31
பூணூலுக்குப் பாடம் புகட்டி சமூக நீதி வென்று உள்ளது .
சமச்சீர் கல்வி என்பது சமூக நீதியின் ஒரு அங்கம். கல்வி குறித்த விழிப்புணர்வு சில ஆண்டுகளாகத்தான் மேலோங்கி வருகிறது. கடன் வாங்கியாவது குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்ற நிலை இன்று உருவாகிவிட்டது.
மாணவச் செல்வங்களிடம் போட்டி மனப்பான்மை ஏற்பட்டு 95 மதிப்பெண்கள் எடுப்போரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இச்சூழலில் சோ போன்ற பார்ப்பன ராஜகுருக்கள் சமத்தாழ்வுக் கல்வி என்று கூறி கல்வியில் சமநிலையை உருவாக்கும் முதல்படியான சமச்சீர் கல்வியை முடக்க அரசிற்கு ஆலோசனை கூறினர். அதன் செயல்வடிவத்துக்கு மக்கள் எழுப்பிய கண்டனமே உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பாய் மலர்ந்துள்ளது.
- அன்பன்