செய்தியும் – சிந்தனையும்

ஆகஸ்ட் 01-15

பெயர் என்ன செய்யும்?

தமிழில் பெயர் வையுங்கள்; பகுத்தறிவாளர் களின் பெயர் வையுங்கள்; அறிவியலாளர்களின் பெயர் வையுங்கள் என்று பல ஆண்டுகளாக பெரியார் தொண்டர்கள் சொல்லி வருகிறார்கள், பெயர்வைத்தும் வருகிறார்கள். இப்படி வைப்பதால் நம்மீது சுமத்தப்பட்ட இந்து மதத்தின் இழிவான பொருளுடைய பெயர்கள் முதலில் நீக்கப்படுகிறது. அசிங்கமான, ஆபாசமான, பெயர்களில் இருந்து விடுபடு கிறோம். ஜாதி அடையாளம் காணாமல் போகிறது. தன்மான உணர்வு பிறக்கிறது. இந்த லாபங்களுடன் இப்போது இன்னொரு லாபமும் சேர்ந்துள்ளது. இயக்கம், கட்சி சாராத பொது நிலையில் அந்தக் கருத்து உருவானதை  ஒரு நிகழ்வில் அறிய முடிந்தது.

அண்மையில் சென்னையில் ரோட்டரி பன்னாட்டுச் சங்க பதவியேற்பு நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்தேன். மெட்ராஸ் மவுண்ட் ரோட்டரிச் சங்கத்தின் 20.11.-2012ஆம் ஆண்டுக்கான புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா அது. அதன் தலைவராக வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன் பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுவாக ரோட்டரி விழாக்கள் முழுக்க இங்கிலீஷிலேயே நடைபெறுவது வழக்கம். அன்றைய விழாவிலும் இங்கிலீஷிலேயே பெரும்பாலானோர் பேசினாலும், அதன் மாவட்ட ஆளுநர் சம்பத்குமார் பேசத்துவங்கும்போது, சென்னையில் உள்ள ரோட்டரி சங்கங்களில் (The Madras Mount Rotary Club)  இந்தச் சங்கத்தில் மட்டும்தான் தமிழில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன, இப்போது இதன் தலைவராகப் பொறுப்பேற்றவர் பெயரும் தமிழ்ச்செல்வன். ஆகவே தமிழில் பேசுவதுதான் சரி. நான் இன்று தமிழில் பேசப்போகிறேன் என்று கூறி தமிழிலேயே பேசினார். இடையிடையே இங்கிலீஷ் தலைகாட்டினாலும் தமிழில் நன்றாகவே பேசினார். அப்போது அவர் சொன்ன ஒரு செய்தி துருக்கியர்களின் மொழிப்பற்றை உணர்த்தியது. ரோட்டரி சங்கப் பணிக்காக தாம் துருக்கி சென்றபோது அங்குள்ள 10 சங்கங்களுக்குச் சென்றதாகவும், அந்தச் சங்கங்களில் எல்லாம் அவர்கள் துருக்கி மொழியிலேயே முழுக்கப் பேசி நிகழ்ச்சி நடத்தினார்கள் என்றார். அவர்கள் இங்கிலீஷ் அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் தனிப்பட்ட முறையில் அவர்கள் நிகழ்ச்சிகளை துருக்கி மொழியிலேயே நடத்தினார்கள் என்றார்.

ரோட்டரி சங்கம் பன்னாட்டுச் சங்கம்தான். ஆனாலும் அதில் உறுப்பினர்கள் தமிழர்களாக இருக்கும்போது தமிழில் பேசுவதுதான் சரி என்ற சம்பத்குமாரின் கருத்து அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. தமிழ்ச் செல்வன் என்ற ஒரு பெயர் அந்தப் பன்னாட்டுச் சங்கத்தில் தாய்மொழி உணர்வை உருவாக்கியுள்ளது. பெயரில் என்ன இருக்கிறது என்று சில படித்த அதிமேதாவிகள் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களுக்காகத்தான் இந்தச் சம்பவத்தைச் சுட்டிகாட்டுகிறோம்.


குழந்தை இப்படித்தான் பேசும்

தமிழ்த் திரைப்படச் சூழலில் குழந்தை களுக்கென எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மிகக்குறைவே. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அப்படி ஒரு சினிமா வரும். அப்படியே வந்தாலும் அதில் நடிக்கும் குழந்தைகள் பெரியவர்கள் போலத்தான் பேசுவர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த பசங்க, பல ஆண்டுகளுக்கு முன் வந்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படங்களைப் போல ஒரு சிலதான் விதிவிலக்குகள். பெரும்பாலும் சிறுவர்கள் பிஞ்சில் பழுத்தவர் களாக இருப்பார்கள். சிறுமிகள் அம்மன் வேஷம் கட்டி ஆடுவார்கள், விபூதி கொடுத்து வேப்பிலை அடித்து சாமி(?) விரட்டுவார்கள். குழந்தை உருவமே தெரியாதபடி மஞ்சள் ஆடை உடுத்தி நெற்றியில் அகலமாகப் பொட்டு வைத்து அருள் சொல்லுவார்கள். இதுதான் தமிழ் சினிமா சித்தரித்துள்ள குழந்தைகள். இதிலிருந்து மாறுபட்டு ஒரு படம் இயக்குநர் விஜயின் இயக்கத்தில் வந்துள்ளது. படத்தின் பெயர் தெய்வத்திருமகள் என்று இருந்தாலும், படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்றுள்ள குழந்தை, குழந்தைகளுக்கே உள்ள இயல்போடு கேள்வி கேட்கிறது. மனநிலை சரியில்லாத அப்பாவுக்கும், தாயை இழந்த குழந்தைக்குமான பாச உணர்ச்சியே படத்தின் மய்யக் கரு. அப்பாவுக்கும் குழந்தைக்குமான உரையாடல் படத்தில் வெகு இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைக்கும் அப்பாவிற்கும் இடையிலான உரையாடல் இப்படிப் போகிறது.
அம்மா எங்கப்பா? சாமிக்கிட்ட போய்ட்டாங்க…

எப்போ வருவாங்க?
வர மாட்டாங்க
ஏன்?

சாமி நல்லவுங்களையெல்லாம் கூட்டிக்குவாங்கன்னு விக்டர் சார் சொன்னாரு
அப்பா நாமெல்லாம் நல்லவுங்க இல்லையா?

குழந்தையின் இந்தக் கேள்விக்கு அப்பா பதில் சொல்லாமலேயே காட்சி நகருகிறது. எதார்த்தம் இதுதான். உண்மையும் இதுதான். இந்தக் கேள்விக்குக் கடவுள் நம்பிக்கை உள்ள எந்த மனிதரிடமும் பதில் இருக்க முடியாது. அதனால்தான் இப்படி பதில் சொல்லமுடியாத கேள்விக்கெல்லாம் சாமி கண்ணக் குத்திடும் என்று சொல்லி கடவுள் அச்சத்தை அந்தச் சின்ன வயதில் வலியத் திணிக்கிறார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் நாத்திகனாகவே பிறக்கிறது என்றார் இங்கர்சால். அறிவு வளர்ச்சிக் காலத்தில் அதன் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் பகுத்தறிவை முடமாக்குகிறார்கள். இதுவே திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் இதுவரை எதிரொலித்தன. இந்தப் படத்தில் அத்தகைய பொய்யான புனைவு இல்லாமல், குழந்தையின் இயல்பான மனநிலையைப் படம்பிடித்துக் காட்டிய இயக்குநரைப் பாராட்டுவோம்.


நேர்த்திக்கடன் அல்ல, சாதனைக்காக…

நம்மூரில் சாமிக்கு நேர்த்திக்கடன் என்று சொல்லி முடி கொடுப்பதில் இருந்து அலகு குத்தி ஆடுவதுவரை நடப்பதைப் பார்த்து வருகிறோம். அதிகபட்சம் 10 கொக்கியைக் குத்திக்கொண்டு சிறு சப்பரத்தை இழுப்பதும், செடில் காவடி, வேல் காவடி, பறவைக் காவடி எடுப்பதும் திருவிழா சீசன் காட்சிகளாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனை திராவிடர் கழகம் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களில் நாமும் அலகு குத்தி கார் இழுத்துக் காட்டி வருகிறோம். (இதுவரைக்கும் இது மாதிரி எந்த பக்தனும் கார் இழுக்கவில்லை. குட்டியூண்டு மரத்தேரைத்தான் இழுக்கிறான்.)

கடளின் பெயரால் நடக்கும் இது போன்ற மனித வதைச் செயல்கள் இல்லாத அயல்நாடுகளில், என்னால் முடியும் என்று அறைகூவல் விடுப்பவர்கள் உண்டு. உலக சாதனைப் புத்தகமான கின்னசில் இடம்பெற விதவிதமாக சாதனைகள் செய்யப்படுகின்றன. அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ஸ்ட்டேஷா ராண்டால் என்ற 22 வயது இளம்பெண். இவர் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ், நேவேடா நகரைச் சேர்ந்தவர். தன்னுடைய உடல் வலிமையைச் சோதிக்க விரும்பி (நல்லா குண்டாத்தான் இருக்காரு) 9அங்குல நீளமுள்ள ஊசியை உடலில் குத்திக் காட்ட முடிவு செய்தார். ஒரே நேரத்தில் இதற்கு முன்பு 3100 ஊசிகளைக் குத்தி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ராண்டால் அந்தச் சாதனையை முறியடிக்க முயன்றார். அதன்படி 3200 ஊசிகளைக் குத்தி கின்னசில் இடம்பிடித்து விட்டார். தனது உடலின் பின்பக்கம், முதுகு, கைகளில் இந்த ஊசிகள் குத்தப்பட்டன. சாதனை நிகழ்த்திவிட்டு இப்படி போஸ் கொடுக்கிறார். தனது உடல் வலிமையை நிரூபித்த இவர் இது கடவுள் அருள் என்று சொல்லவில்லை.

– அன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *