சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்..
நூல்: விடுபூக்கள்
ஆசிரியர்: தொ.பரமசிவன்
வெளியீடு: மணி பதிப்பகம்,
29ஏ, யாதவர் கீழத் தெரு,
பாளையங்கோட்டை – 627 002.
நெல்லை மாவட்டம்,
தொலைபேசி: 0462 – 2560083
பக்கங்கள்: 80 விலை: ரூ.60/-
சமய எச்சங்கள்
தமிழ்நாடு பல சமயங்களின் வாழ்விட-மாகவும் சமய முரண்களின் நிலைக்களனாகவும் இருந்தது. சமயங்கள் என்பன நிறுவன சமயங்கள் ஆகும். நிறுவன சமயங்கள் பிறப்பதற்கு முன்னரே தமிழகத்தில் தெய்வ நம்பிக்கைகளும் சடங்குகளும் கோயில்களும் இருந்தன. சமகால ஆராய்ச்சியாளர்கள் இதனை ‘நாட்டார் சமயம்’ என்ற சொல்லால் குறிக்கின்றனர். இச்சொல்லாக்கத்தின் பொருத்தபாடு குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
திஷீறீளீ Folk Religion, Prescribe Religion ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகத் தமிழில்நாட்டார் சமயம், தொல் பழஞ்சமயம் ஆகிய சொற்களை ஆய்வாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்தொடராக்கத்தில் உள்ள ‘சமயம்’ என்னும் சொல்லாட்சி பொருத்த-மானதாகத் தோன்றவில்லை. ‘சமயம்’ என்பது நிறுவனம் ஆனது. ஒரு புனித நூல் (பைபிள், குரான், வேதம் போல), புனிதத் தலங்கள் (ரோமாபுரி, மெக்கா, காசி என்பவைபோல), குறிப்பிட்ட ஆகம ரீதியான வழிபாட்டு முறைகள் (காரணமாகமம், காரியாகமம், பாஞ்சராத்திர ஆகமங்கள் போல) என்பன நிறுவன சமயங்களின் இலக்கணமாகும். இந்த இலக்கணத்தோடு பொருந்திவராத நாட்டார் வழிபாட்டு நெறிகளைச் ‘சமயம்’ என்ற சொல்லால் குறிப்பது பொருத்தமாகாது. நாட்டார் வழிபாட்டு நெறிகள் (அல்லது) வழிபடுநெறிகள் என்ற தொடரே பொருத்தமாக அமையும்.
அதுபோலவே ‘தொல்பழஞ்சமயம்’ என்னும் சொல்லாட்சி, அவ்வகையான நெறிகள் முழுவதும் அரிக்கப்பட்ட மேற்குலக நாடுகளுக்குள் பொருந்துவதாக அமையும். இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் அவை பெருவாரியான மக்களிடம் வாழ்-நெறியாக உள்ளன. அது மட்டுமன்று, நிறுவன சமயங்களின் அசைவுகளிலும் அவை பெருமளவு ஊடாடிக் கிடக்கின்றன. அதாவது நிறுவன சமயங்களின் ஆகமங்களுக்கு முரணாக அவை அவற்றுக்குள் கலந்து கிடக்கின்றன. எனவே, கால ஓட்டத்தில்மறைந்துவிட்ட, அழிந்துவிட்ட அல்லது வாழ்விழந்த என்னும் பொருள்தரும் ‘தொல்பழம்’ என்னும் பெயருக்கு அவை பொருத்தமானவையல்ல.
சமண, பௌத்த மதங்கள் தமிழகத்தில் வாழ்ந்து மறைந்துவிட்டன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உண்மையில் பவுத்தம் மட்டுமே தமிழகத்தில் மறைந்துவிட்ட சமயம் ஆகும். சமணம் தமிழகத்தின் தென்பகுதியில் மட்டுமே மறைந்துவிட்ட சமயம் ஆகும். அழிந்து விட்டதாகக் கருதப்படும் எந்தப் பொருளும் அல்லது நிறுவனமும் அல்லது கருத்தியல்களும் முழுமையாக மறைந்து விடுவதில்லை. இதுவே இயற்பியல் அறிஞர்களுக்கும் மார்க்சியம் அறிந்தவருக்கும் முழு உடன்பாடான கருத்தாகும். அழிந்துபட்டதாக நாம் கருதுவனவற்றின் எச்சங்கள் நமது வாழ்விலும் சமய வாழ்விலும் பரவலாக ஊடுருவிக் கிடக்கின்றன.
அழிந்த சமயங்களின் எச்சங்கள் சொல்லாகவும் தொடராகவும் சொல்லடைவு களாகவும் பழமொழிகளாகவும் தன்னுணர்ச்சி யின்றி நம் நினைவில் நிற்கின்றன. சில இடங்களில் நினைவுகளோடு சடங்குகளாகவும் இவை காணப்படுகின்றன. இவற்றை ஒருங்கு தொகுத்துக் காண்பது சமயங்களினுடைய வாழ்வினையும் சரிவினையும் புரிந்து கொள்வதற்கான எடுத்துக் காட்டுகளாகும்.
நிறுவன சமயங்களாகத் தமிழ்நாட்டில் மறைந்துவிட்டதாகக் கருதப்படும் சமயங்களின் சொல், தொடர், நம்பிக்கைகள், பிற அசைவுகள் என்பன சமய எல்லைகளைத் தாண்டி இன்னும் வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக ஆழ்வார் என்னும் பெயர், வைணவத்திற்கே உரிய சொல்லாகவும், நாயனார்(நயினார்) என்னும் பெயர் சைவத்திற்கே உரியதாகவும் கருதப்படுகின்றன.
பௌத்த மரபில் ‘ஆழ்வார்’ என்ற சொல் ஆசார்யர்களை (அறமுரைக்கும் ஆசிரியர்களைக்) குறிப்பதாக வழங்கியிருக்கிறது. ‘ஈழம் அடிப்படுத்த தாடையாழ்வார் ஒருவரை நீலகேசி உரையிலிருந்து அறிகிறோம். (மொக்கலவாதச் சருக்கம்). இப்பெயர் வழக்கிற்கு இதுவே காலத்தால் முற்பட்ட பயன்பாடு என்று தெரிகிறது. இதற்கு மறுதலையாக ‘ஆழ்வார்’ என்ற சொல் ஆழ்வார்களின் பாசுரங்களில் ஓரிடத்திலேனும் காணப் படவில்லை என்பதையும் நோக்க வேண்டும். பிற்காலக் கல்வெட்டுக்களிலும் உரைகளிலும் இப்பெயர் திருமாலையும் அரச குடும்பத்துப் பெண்களையும் குறிக்கப் பயன்பட்டிருக்கிறது.
வைதீக சைவ வைணவ நெறிகளில் காவியாடை துறவிக்குரியதாக மதிக்கப்படுகிறது. இந்தச் செந்துவராடையை முதலில் பயன்-படுத்தியவர் பௌத்தத் துறவிகளே ஆவர். ‘சீவரத்தர்’ என்ற சொல் செவ்வாடையணிந்த பௌத்தத் துறவிகளைக் குறிக்கும் சொல்லாகும். பிற்காலத்தில் ‘செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்’ என ஆண்டாள் தம் பாசுரத்தில் வைதீகத்து நாராயணரைக் குறிக்கின்றார்.
தமிழகத்தில் முருகன் கோயில்களிலும் திருமால் கோயில்களிலும் நேர்த்திக்கடனாக குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தலைமுடி வழிக்கும் வழக்கம் நடைமுறையாக உள்ளது. இதற்கான விதி பெருங்கோயில் வழிபாட்டை ஒழுங்குபடுத்தும் ஆகம நூல்களில் இல்லை என்பர். கோயில் தொடர்புடைய பிராமணர்-களிடமும் இவ்வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கம் பௌத்தத் துறவிகளின் ஒழுக்கமாகும். பௌத்தத் துறவிகள் தம் உடமையாகக் கொள்ளக்கூடிய எட்டுப் பொருட்களில் மழிகத்தியும் ஒன்றாகும் என்பர் அறிஞர். புனிதர்களின் வழிபாட்டோடு இவ்வழக்கம் தமிழகத்துக் கத்தோலிக்கக் கிறித்துவத்திலும் புகுந்துவிட்டது.
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் காலையிலேயே குளித்து, பழையன உண்ணாமல் நோன்-பிருக்கின்றனர். அன்று வரும் காவி ஆடை பிச்சைக்காரர்களுக்கு உணவளிப்பது நோன்பின் (விரதத்தின்) பயன் என்கின்றனர். அமாவாசை, பௌர்ணமி எனப்படும் காருவா, வெள்ளுவா நாட்களில் ஒரு வட்டத்தில் உள்ள பௌத்தத் துறவிகள்கூடி ‘சங்கம்’ நடத்துவர். இலங்கைச் சிங்களவர் இதனைப் ‘போயா தினம்’ என்பர். அன்று பிச்சைக்கு வரும் பௌத்த துறவிகளுக்கு உணவிடவே பெண்கள் மட்டும் இவ்வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. இந்த நோன்பு ஆண்களுக்குரியதல்ல என்பதும் இது குறித்த பதிவுகள் தேவாரத் திருவாசகங்களிலோ பாசுரங்களிலோ காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
தொழுகைக்குரிய சிறப்பு நாளாக வெள்ளிக்-கிழமையினையும் இசுலாமியர்களும், ஞாயிற்றுக்-கிழமையினைக் கிறித்துவர்களும் கருதுவது-போல பௌத்தர்கள் வெள்ளிக் கிழமையினைப் புனித நாளாகக் கருதுவர். வீட்டினைத் தூய்மை செய்வதற்கும் கோயில் வழிபாட்டிற்கும் உகந்த நாளாகப் பெண்கள் வெள்ளிக்-கிழமையினையே கருதுகின்றனர். இது பௌத்த நெறியின் எச்சமாகும். இதுவும் சைவ, வைணவ தோத்திர, சாத்திர நூல்களில் பேசப்படாத செய்தியாகும்.
தமிழ்நாட்டுப் பக்தி இயக்கம் என்பது சைவ, வைணவ மதங்களின் எழுச்சி மட்டுமன்று. அது சமண, பௌத்த மதங்களுக்கு எதிரான கலகக்குரலும் ஆகும். இதன் விளைவாகப் பௌத்தம் தமிழ்நாட்டில் வேரற்றுப் போயிற்று. சமணமும் பௌத்தமும் வெறுத்தற்குரிய மதங்களாகச் சைவ வைணவர்களால் கருதப்-பட்டன. இந்த வெறுப்புணர்வின் எச்சங்கள் தமிழரிடையே இன்னும் வசைச் சொற்களாக வழங்கிவருகின்றன.
வயதிற் பெரியவர்களின் நிர்வாணம் கேலிக்குரியதாக ஆக்கப்பட்டது. திகம்பர சமணத் துறவிகளின் மீதான எதிர்ப்புணர்வில் தான் அம்மணம், மயிராண்டி, மயிரைப் பிடுங்கு என்பன போன்ற வசைச் சொற்கள் இன்னும் வழக்கத்திலுள்ளன. நிர்வாணமாக இருத்தல், உடம்பில் மயிரின்றி இருத்தல், உடம்பின் மயிர்க் கால்களைக் கத்தி கொண்டு மழித்துக் கொள்ளாமல் கையினால் பிடுங்கும் லோசனம் என்னும் வழக்கத்தைக் கடைப்பிடித்தல் ஆகியனவே மேற்குறித்த வசைச் சொற்கள் பிறக்கக் காரணங்களாகும். நிலையற்றவன், உறுதியற்றவன், ஒற்றைப்போக்கு இல்லாதவன் என ஒருவனைக் குறை கூறும்போது ‘ஏழு வழி போகிறவன்’ என்பது வசை மரபு ஆகும். இது சமணச் சிந்தாந்தத்தில் பேசப்படும் சப்த பங்கி என்னும் ஏழு நிலைகளைக் குறித்ததாகும். சமண மதம் தனியொரு இறைவனை ஏற்றுக் கொள்ளாததாகும். உண்டு, இல்லை, சொல்ல முடியாதது என்ற மூன்றையும் மாறி மாறிக் கூட்டி ஏழு நிலைகளைச் சமணத் தத்துவம் பேசும். அதையே வெற்றி பெற்ற சைவம் வசைச் சொல்லாக நிறுவிக் காட்டியுள்ளது.
சைவ நெறிக்குள்ளும் மறைந்துபோன காளாமுக, பாசுபத மாவிரதிகள் பற்றிய சொற்களும் தொல்_எச்சங்களாக விளங்கு-கின்றன. நெற்றியில் மட்டுமின்றி உடம்பு முழுவதும் நீறு பூசிக் கொள்வது அவர்களது வழக்கம். சிவபெருமானையே ‘மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியன்’ என்று அப்பர் பாடுகிறார். மேற்குறித்த மூன்று பிரிவினரும் ஆண்டிக் கோலமுடையவர்கள். இவர்கள் மாவிரதிகள் கபால மாலை அணிந்தவர்கள். சிவபெருமானின் நெற்றிக் கண்ணைப் போல தம் நெற்றியிலும் ‘கண்’ வரைந்து கொண்டவர்கள். எனவே, குழந்தை-களுக்கு அச்சம் தரும் தோற்றமுடையவர்கள். காட்சி உடகங்களின் வளர்ச்சிக்கு முன்னர் குழந்தைகளை அச்சுறுத்த ‘பூச்சாண்டி வருகிறான்’, ‘மூணு கண்ணு பூச்சாண்டி வருகிறான்’ என்ற தொடர்களைப் பயன்-படுத்தும் வழக்கமிருந்தது.
மேற்குறித்தவை அனைத்தும் மறைந்துபோன சமயங்களின் நினைவெச்சங்களாகும். அவற்றின் பருப்பொருள் எச்சங்கள் மலைக்குகைகள், குடைவரைக் கோயில்கள், அழிந்துப்பட்ட கோயில்கள், அழிவுற்ற நிலையில் காணப்படும் கோயில்கள், கற்சிற்பங்கள் என்னும் நிலையில் தமிழ்நாட்டில் நிறையவே உள்ளன. அவை குறித்து தொல்லியல் துறையினர், வரலாற்றாய்வாளர்கள், மானிடவியலாளர் ஆகியோர் நிறையவே எழுதியுள்ளனர். இவையன்றி மறைந்துபோன தெய்வங்கள் குறித்த ஆய்வு தமிழ்நாட்டில் இன்னும் தொடங்கப்படவேயில்லை.