பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு (2011)- எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விவரங்கள் ஜூலை 19 அன்று வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியே 1 இலட்சத்து 93 ஆயிரத்து 422. இதில் பெண்கள் 62 கோடியே 37 இலட்சம், ஆண்கள் 58 கோடியே 65 இலட்சம். பாலின விகிதாச்சாரம் 1,000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது.
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 இலட்சத்து 38 ஆயிரத்து 958.
இதில் பெண்கள் 3 கோடியே 59 இலட்சத்து 80 ஆயிரத்து 87 ஆண்கள் 3 கோடியே 61 இலட்சத்து 58 ஆயிரத்து 871.
கிராமங்களில் 51.55 சதவிகிதம் மக்களும் நகர்ப்புரங்களில் 48.45 சதவிகித மக்களும் வாழ்கிறார்கள்.
கிராமப்புறங்களின் மக்கள் தொகை 3.719 கோடி; நகர்ப்புரங்களின் மக்கள் தொகை 3.495 கோடி. கடந்த 10 ஆண்டுகளில் (2001–_2011) கிராமப்புறங்களில் 22.7 லட்சமும், நகர்ப்புரங்களில் 74.7 லட்சமும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. கிராமப்புற மக்கள் தொகையில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதன் மக்கள் தொகை 29.5 இலட்சம், நகர்ப்புர மக்கள் தொகையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதன் மக்கள் தொகை 46.8 லட்சம் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் (2001_-2011), தமிழ் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.60 சதவிகிதமாக உள்ளது. இதில் கிராமப்புறங்களில் 6.49 சதவிகிதமும், நகர்ப்புரங்களில் 27.16 சதவிகிதமும் ஆகும்.
தமிழ்நாட்டில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 68.9 லட்சம்.
தமிழ்நாட்டில் எழுத்தறிவுடையவர்களின் எண்ணிக்கை 5.241 கோடி. இதில் 2.475 கோடி பேர் கிராமப்புறங்களிலும், 2.766 கோடி பேர் நகர்ப்புரங்களிலும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 1.189 கோடி பேராக எழுத்தறிவுள்ளவர்கள் அதிகரித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 80.33 ஆகும். இதில் கிராமப்புற எழுத்தறிவு விகிதம் 73.80 ஆகவும், நகர்ப்புர எழுத்தறிவு விகிதம் 87.24 ஆகவும் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், எழுத்தறிவு விகிதமானது 6.88 சதவிகிதம் கூடியுள்ளது. இதில், கிராமப்புறங்களின் எழுத்தறிவு விகிதமானது 7.59 சதவிகிதம்; நகர்ப்புர எழுத்தறிவு விகிதம் 4.71 சதவிகிதம்.