உலகமயம் ஆகிறார் பெரியார்! ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு!

ஏப்ரல் 16-30

மஞ்சை வசந்தன்

இந்தியாவைப் பொருத்தவரை தமிழர்கள் மட்டுமே பரவி வாழ்ந்த காலத்தில் இங்கு கடவுள் நம்பிக்கையென்பதோ, மூடநம்பிக்கை-யென்பதோ அறவே இல்லை. நன்றியின்-பாற்பட்ட வழிபாடு மட்டுமே இருந்தது.

ஆனால், ஆரிய பார்ப்பனர்கள் ஊடுருவிய-பின், சிறுபான்மையினரான அவர்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும், தங்களுக்கு வருவாய் தேடிக்கொள்ளவும், பல்வேறு மூடச் சடங்குகளை நுழைத்து கடவுள்களையும், புராணங்களையும் கற்பித்து, விழாக்கள், பூசைகள், ஆரவாரங்கள் நிகழ்த்தி மக்களை கடவுள் நம்பிக்கையின்பாற் கவர்ந்தனர்.

காலம்காலமாக கடவுள் மறுப்புக் கொள்கைகள் பலரால் பரப்பப்பட்டாலும் அவற்றால் மிகப்பெரிய விளைவுகள் உருவாகவில்லை. ஆனால், தந்தை பெரியாரின் இடைவிடா பிரச்சாரத்தின் விளைவாய் கடவுள் என்ற கற்பனை தகர்க்கப்பட்டது. பட்டை நாமம், கடவுள் பெயர் சூடல் என்ற நிலை முற்றாக மாறி கடவுள் சார்ந்த செயல்பாடுகள் கேலிக்குரியவையாக மாறின.

தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பை தனது முதன்மைக் கொள்கையாகக் கொள்ளவில்லை. அவரது முதன்மைக் கொள்கை சுயமரியாதை. கடவுள், மதம், சாஸ்திரங்கள் பெயரால் மக்களைப் பிறவியால் பேதம் கற்பித்து, உயர்வு_தாழ்வு கற்பித்து, பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தி, மான உணர்ச்சியற்றவர்களாக ஆரியப் பார்ப்பனர்கள் ஆக்கினர். இச்சூழ்ச்சியை, தந்தை பெரியார் முறியடித்து, தன்மான உணர்ச்சியை நாள்தோறும் ஊட்டி, சட்டரீதியாகவும், வாழ்க்கைமுறை மாற்றத்தாலும், ஆரிய பார்ப்பனர் ஆதிக்கத்தை அகற்றினார்.

பெரியார் ஊட்டிய சுயமரியாதை உணர்வு உலக அளவில் தனிச்சிறப்பு வாய்ந்தது. உலகெங்கும் பொருளாதாரம் சார்ந்து போராடிக் கொண்டிருந்த வேளையில், அதனினும் மனிதனுக்கு சுயமரியாதையே முக்கியம் என்ற சூடான உணர்வை உருவாக்கினார். இச்சுயமரி-யாதைச் சூடு இந்திய வரலாற்றையே புரட்டிப் போட்டதோடு, மெல்ல மெல்ல அயல்நாடுகளுக்கும் பரவி, இன்று பெரியார் உலகமயமாகி உணர்சி ஊட்டிக்-கொண்டிருக்கிறார்.

கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என்பது சுயமரியாதை உணர்வின் ஓர் அங்கமே ஆகும்.

பகுத்தறிவுள்ள மனிதனை கல்லும், சிலையும் மதமும், மூடநம்பிக்கையும் ஆதிக்கம் செலுத்தினால் _ அவனது செயல்பாட்டை தீர்மானித்தால், அது அவனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்தானே? எனவே, ஆதிக்கவாதி களிடமிருந்து விடுபடுவது போலவே, இவற்றிட மிருந்தும் விடுபடுவதும் சுயமரியாதை உணர்வினை அடிப்படையாகக் கொண்டதே யாகும். இன்று பெரியாரின் சிந்தனைகள் உலக அளவில் பெருமளவில் பரவி வருகின்றன.

இந்தியாவை தவிர்த்து, வளர்ச்சி பெற்ற நாடுகளைக் கணக்கில் கொண்டால்,

60%க்கும் மேலான மக்கள் கடவுளையும், மதத்தையும் மறுக்கின்ற உண்மை நிலை ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த நாத்திகர்களின் பேரணி

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் ஏற்பாடு செய்த, மதநம்பிக்கை அற்றவர்கள் ஒன்று கூடி நடத்திய மாபெரும் பேரணி ஒன்று லிங்கன் மெமோரியலிலிருந்து புறப்பட்டது.

இந்த பேரணியில் அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் இருந்து 30,000 ஆயிரத்திற்குமேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் அரசியலில் மதம் நுழைவதை கண்டித்தும், அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் நபர் மதச்சார்பற்ற கொள்கைகளை கடைபிடிப்பவராகவும் இருக்கவேண்டும் என்று முழக்கங்கள் இட்டனர். உலகம் முழுவதும் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது, முக்கியமாக மதசார்பற்ற கொள்கைகள் படித்தவர்களிடையே விவாதத்திற்குரிய கருத்தாக இருந்து வருகிறது, இந்த நிலையில் தற்போது ஆசியா மற்றும் மத்திய கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் மதரீதியான தாக்குதல்களும் மதத்தின் பெயரால் வன்முறைகளும் நடந்து வருகின்றன.  அன்பை போதிக்கும் மதங்கள் என்று கூறிக்கொண்டு அந்த மதத்தின் பெயரால் உயிர்பலிகள் நடைபெறுகின்றன. இதனை கண்டிக்கும் விதத்திலும், மதங்களால் வன்முறைகள் தான் அதிகரிக்கின்றன என்ற ஒரு கருத்தை முன்வைத்தும் நாத்திகர்கள் பேரணி அமெரிக்காவில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட அனைவரும் தாங்கள் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் இல்லை, என்றும் தங்களுக்கு கடவுள் மற்றும் மூடநம்பிக்கையின் மீது நம்பிக்கை இல்லை என்றும் கையொப்ப மிட்டுள்ளனர்.

இது குறித்து மதச்சார்பற்ற கூட்டமைப்பு-களின் ஒருங்கினைப்பாளர் லாரி டெக்கர் கூறியதாவது இந்தப் பேரணியில் அமெரிக்க நாடாளுமன்றக் காங்கிரஸ் அவையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன் மூலம் அமெரிக்க அரசியலிலும் மதச்சார்பின்மை மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்-துள்ளது, இது நல்ல மாற்றமாகும்.

அமெரிக்காவில் 60 விழுக்காடு மக்கள் நாத்திகத்திற்கு ஆதரவு தரும் அதிபரையே விரும்புகின்றனர். அமெரிக்கவின் நவீன காலத் துவக்கத்தில் மிகவும் சிறிய அளவு நாத்திகர்களின் எண்ணிக்கை இருந்தது, அந்தச் சிறிய அளவு நாத்திகர்களின் கருத்துக் கண்ணோட்டத்தின் மூலம் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாகின. தற்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எண்ணிக்கை அமெரிக்காவில் சுருங்கிவிட்டது, தற்போது அமெரிக்காவில் படித்தவர்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கைப் பணியில் மதங்களை ஒதுக்கிவைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இப்பேரணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான டெக்கர் என்பவர் கூறும்போது நான் பிற மதத்தவரிடம் பழகுவதை விட மதநம்பிக்கை இல்லாதவர்களிடம் நட்புகொள்ளும் போது ஓர் உளம் சார்ந்த நட்பை உணர்கிறேன். இதுதான் உண்மையும் கூட, ஒரு மத நம்பிக்கை-யுள்ளவர்கள் வேறு மத நம்பிக்கை கொண்டவர்களை நன்பர்களாக பெறும் போது ஏதாவது ஒரு வகையில் இருவருக்குமிடையே ஒரு மாற்றுக்கருத்து ஏற்படும். இது நட்பை சீர்குலைத்துவிடும் அளவிற்கு அதிகரித்து-விடுகிறது, ஆனால் மதநம்பிக்கையற்றவர்-களுடன் பழகும் போது இந்தச் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை,  அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் தீவிர மதநம்பிக்கை கொண்ட அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து ஆரம்ப கட்டத்திலேயே தோல்வியைச் சந்தித்து வெளியேறியிருக்கின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களுள் சிலர் சண்டெட் குரூஸ், ஒஹியோ கவர்னர் ஜான் காசிச், போன்றவர்களைக் கூறலாம். இதில் ஜான் காசிச் தனது தேர்தல் தோல்வி குறித்து பேசும் போது தான் அதிபராக வருவது கடவுளுக்கு பொறுக்கவில்லை என்று கூறினார். அந்த அளவிற்கு அவர் கடவுள் நம்பிக்கையுள்ளவராக இருந்தார்.

(‘வாஷிங்டன் போஸ்ட்’ சிஎன்என், 05.06.2016)

பிரிட்டனில் அதிகரித்து வரும் நாத்திகர்களின் எண்ணிக்கை

பிரிட்டனில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாங்கள் நாத்திகர்கள் என்று குறிப்பிட்ட மக்கள் எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டு 48 -விழுக்காடாக இருந்து அய்ந்து ஆண்டுகளில் மிகவும் அதிகமான எண்ணிக்கையை தொட்டுள்ளது.

அதே நேரத்தில் தீவிர மதப்பற்றுள்ளவர் களின் எண்ணிக்கை தேவாலய நிர்வாகமே கவலைகொள்ளும் அளவிற்கு குறைந்துவிட்டது.

இங்கிலாந்து மக்கள் தொகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், மற்றும் கிறிஸ்தவ மதத்தின் பல்வேறு உள்பிரிவைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.  முக்கியமாக பழமைவாத கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் தென் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் தீவிர மதபற்றுள்ளவர்-களாக இருந்த நிலை மாறிவிட்டது.

நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித் திருப்பது தொடர்பாக இங்கிலாந்தின் டுவக்கென்ஹம் நகரில் உள்ள  செயிண்ட் மேரி காத்தோலிக்க பல்கலைக்கழக விரிவுரையாளர் ஸ்டீபன் புல்வண்ட் கூறியதாவது, வளரும் தலைமுறை மிகவும் தெளிவான சிந்தனையில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அறிவியல் சிந்தனை மதநம்பிக்கையை உடைத்தெறிந்து விட்டது. இதனால் தான் இளைய தலைமுறையினர் அதிக அளவு நாத்திகர்கள் என்று கருத்து-தெரிவித்துள்ளனர்.

மதம் எந்த வகையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது என்று இளையதலைமுறை தங்களுக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொள்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் மதங்களின் பெயரால் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை மற்றும் மூடத்தனமான செயல்பாடுகள் ஆகும்.

இங்கிலாந்து மட்டுமல்லாமல் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து நாட்டில் 52 விழுக்காடு மக்கள் மதநம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர். இப்பகுதிகள் 1999 ஆம் ஆண்டு 49 விழுக்காடு மக்கள் நாத்திகர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். பழமைவாத மதக் கோட்பாடுகளை கடுமையாக கடைபிடிக்கும் ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் நாத்திகர்-களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதும்  குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கிலாந்து கத்தோலிக்க மதப்பிரிவைச் சேர்ந்த மதகுருமார்கள் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது குறித்துப் பேசும் போது கடந்த சில ஆண்டுகளில் தேவாலயத்-திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது,. முக்கியமாக வருகைப் பதிவேடுகள் பெரும்பாலான நாட்களில் ஒரு பக்கங்கள் கூட நிரம்புவ-தில்லை என்று தெரிவித்துள்ளனர்.

கத்தோலிக்க மத தேவாலயங்களும், பிற மதவழிபாட்டுத்தலங்களும் மக்களின்வருகை குறைந்தது குறித்து கவலை தெரிவித்துள்ளன.

இங்கிலாந்தில் மதநம்பிக்கை உள்ள இளைய தலைமுறையினரில் பத்து பேரில் 4 பேர் மதரீதியான நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இனிவரும் காலத்தில் இவர்களும் நாத்திகர்களாக தங்களை அடையாளப்-படுத்திக்கொள்வார்கள். இங்கிலாந்தில் உள்ள தேவாலயங்கள் இளைய தலைமுறைகளை தேவாலயத்திற்கு அழைத்து வர பெரும்பாடு படுகின்றனர். அப்படியே வரும் இளைய தலைமுறைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பும்போது அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிவருகின்றனர்.  பழமைவாதத்தில் ஊறிப்போன பூர்வீக ஆங்கிலேயர்களிலும் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் கிறிஸ்தவம் மற்றும் இந்து, இஸ்லாம் இதர மதத்தினரிடம் கடவுள் நம்பிக்கை அதிரடியாக குறைந்து வருகிறது, முக்கியமாக இக்கணக்கெடுப்பு அனைத்து மதத்தினரும் அந்த மதத்தின் நம்பிக்கையை இழந்து வருவதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

(‘தி கார்டியன்’, 23.05.2016)
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்

48.5% மக்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தங்களை மதம் அற்றவர்கள் என்று அறிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்து

52% மக்கள் தங்களை மதமற்றவர்களாக அறிவித்துள்ளனர்.

செக் குடியரசு:

யு.எஸ்.எஸ்.ஆர் எனும் சோவியத் ரஷ்யாவின் அங்கமாக இருந்து பிரிந்துள்ள நாடான செக் குடியரசு அய்ரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் அதிக விழுக்காட்டளவில் நாத்திகர்களைக் கொண்டுள்ளது. 45 விழுக்காட்டினர் தாங்களாகவே நாத்திகர்களாக இருந்து-வந்துள்ள-தாகவும், 30 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர்கள் தற்போது நாத்திகர்களாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆகமொத்தம் 75% நாத்திகர்கள்.

ஜப்பான்:

பழைமைகள் மற்றும் மதச்சடங்குகளை ஒதுக்கிவிட்டு இருப்பவர்களாக 25 விழுக்காட்டினரும், மேலான சக்தி என ஒன்றும் நம்புவதற்கில்லை என்கிற அளவில் 31 விழுக்காட்டினரும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெர்மனி:

ஜெர்மனி நாட்டில் 60 விழுக்காட்டினர் தங்களை நாத்திகர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இசுரேல்:

இசுரேலியர்களில் 57 விழுக்காட்டினர் தங்களை மதமற்றவர்களாகக் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் நம்பிக்கையிலிருந்து நாத்திகர்களாக 8 விழுக்காட்டினர் மாறி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நார்வே

கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருமளவிலான மாற்றத்தை காண முடிகிறது. இரண்டு ஆண்டு களுக்கு முன்பாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் களும் சம அளவிலான எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால், தற்போது கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

உலகில் முதல் நாத்திக ஆய்வு இருக்கை!

அமெரிக்க நாட்டில் மதத்தினை புறந்தள்ளும் போக்கு அதிகரித்துவரும் நிலையில் மியாமி பல்கலைக்கழகம் ஓர் உயராய்வு இருக்கையினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் புளோரிடாவில் வசித்து வரும் 83 வயதினை எட்டியுள்ள ஓய்வு பெற்ற வணிகரும், பார்பிசன் பன்னாட்டு மாதிரிப் பள்ளியின் மேனாள் தலைவரும், சீரிய நாத்திகருமான லூயிஸ் ஜே அப்பிக்னானி கொடையாக அளித்த 2.2. மில்லியன் டாலர் நிதி ஆதாரத்துடன் நாத்திக உயராய்வு இருக்கை நிறுவப்பட்டுள்ளது

மியாமி பல்கலைக்கழகம் எடுத்திட்ட ஒரு துணிச்சலான செயல் என, கடவுள் ஒரு பொய் நம்பிக்கை (ஜிலீமீ நிஷீபீ ஞிமீறீusவீஷீஸீ) நூலாசிரியரும், பரிணாமவியல் உயிரியலாளரும், நாத்திகப் பெருந்தகையுமான ரிச்சர்டு டாக்கின்ஸ் பாராட்டியுள்ளார். மற்ற பல்கலைக்கழகங்களும் இப்படி நாத்திகப் படிப்பை அளித்திட முன்வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

(‘தி நியூயார்க் டைம்ஸ்’, 30.05.2016)

ஆக, உலகின் பல நாடுகளிலும் மதமற்றோர் எண்ணிக்கையும், கடவுள் மறுப்பாளர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஆய்வுகளின் மூலம் அய்யத்திற்கு இடமின்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை பெரியாரின் கொள்கைக்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இவற்றிற்குச் சிகரம் வைத்தாற்போல் ஜெர்மனியில் நடக்க இருக்கும் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு அமைய இருக்கிறது.

ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு

ஜூலை 27, 28 & 29 – 2017 ஆகிய நாள்களில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

இது பன்னாட்டளவில் நடைபெறவுள்ள முதல் சுயமரியாதை மாநாடு ஆகும்.

அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஏற்பாட்டில், ஜெர்மனி நாட்டு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் கிளையும், தஞ்சை_வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் இணைந்து மாநாட்டினை நடத்துகின்றனர்.

உலகின் பல நாடுகளிலிருந்தும் _ குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள், மனித நேயர்கள், சுதந்திர சிந்தனையாளர்கள் தனிப்பட்ட முறையிலும், அமைப்பின் சார்பாகவும் பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து கருப்புச்சட்டைத் தோழர்கள், திராவிடர் கழகத்தின் சார்பாகத் தங்களது சொந்த செலவில் பங்கேற்க உள்ளனர்.

மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் முதல் நாள் பிற்பகலில் மாநாட்டு தொடக்க விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. ஜெர்மன் நாட்டு பகுத்தறிவு அரசியலாளர்கள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளோர் மாநாட்டினைத் தொடங்கி வைத்திட உள்ளனர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்றிட உள்ளார்.

இரண்டாம் நாள் மாநாட்டில் ஜெர்மனி நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழங்களி லிருந்து கல்வியாளர்கள் பங்கேற்கும் முழுமையான நிகழ்வு. பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், ஜாதி ஒழிப்பும், பெரியாரும் மகளிர் அதிகாரத்துவமயமும் (ணினீஜீஷீஷ்மீக்ஷீனீமீஸீt), பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெரியார் உலகமயமாக்கம் ஆகிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள், கல்வியாளர்களால் படிக்கப்பட்டு விவாதிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாம் நாள் உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தரவுள்ள பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள், சுதந்திர சிந்தனையாளர்கள் “பெரியார் நிறுவி 90-_ஆம் ஆண்டு நிறைவு பெற்றுள்ள சுயமரியாதை இயக்கம் பற்றிய ஆய்வுகள், விளக்கங்கள், கலந்துரையாடல்கள் மேற்கொள்ள உள்ளனர்.

பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு, உலகமயமாகிவரும் பெரியாரை, உலகின் பல பாகங்களுக்கும் கொண்டுசேர்க்கும் சாதனையை நிகழ்த்தும். அதற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன.

பன்னாட்டு மாநாட்டு ஏற்பாடுகளை அமெரிக்காவிலிருந்து பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன், பேராசிரியர் முனைவர் இலக்குவன் தமிழ் மற்றும் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி கிளையின் தலைவர் பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் ஆகியோர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் செய்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸையே  ஆட்கொண்ட
பெரியாரின் சுயமரியாதை!

வளர்ச்சிக் கவர்ச்சியில் ஆட்சியைக் கைப்பற்றிய மதவாதக் கட்சியால், இந்தியாவில் தற்போது சுயமரியாதை உணர்விற்கு சவால் எழுந்தாலும், அந்த மயக்கம் விரைவில் தெளிய, பெரியார் விரும்பிய மானமும், அறிவும் உள்ள சமுதாயம் மலரும் என்பது உறுதி. இதனை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேட்டியே உறுதிசெய்கிறது.

“ஹிந்து சமுதாயத்திலிருந்து விலகி நின்று, ஹிந்து என்று பேச்செடுத்தாலே ஒதுங்கி விடுகிற பிரிவினரை, தொடர்பு கொள்ளும் முயற்சி செய்தோம். விஷயங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவைத்து, ஷாகாவிற்கு வரச்செய்ய முயற்சி நடைபெற்றது. அதன் விளைவாக அவர்களது சுயமரியாதைக்கான போராட்டத்தில் ஹிந்து ஒற்றமைப் பணி புரிவோரின் சக்தியும் ஆங்காங்கே சேர்ந்து கொண்டது.

தனிப்பட்ட முறையிலும், குடும்பத்திலும், பணிபுரியும் இடத்திலும், ஊருக்குள்ளும் எல்லா பேதங்களையும் ஒதுக்கிவிட்டு பழகுவது, பேச்சிலும் நடத்தையிலும் நம்மை மாற்றிக்கொள்வது அவசியம்.

பழைய ஏற்றத்தாழ்வை உதறி, சமத்துவத்துக்கு உகந்ததாக நமது நடத்தை உள்ளதா என்று ஊரார் சோதித்துப் பார்ப்பார்கள். குறிப்பாக, யாரை சங்கப் பணியில் இணைக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ அப்படிப்பட்டவர்கள் சோதிப்பார்கள். சகஜமாகப் பழகும்போதுகூட நம்மை நன்கு திருத்திக் கொள்ள பழக வேண்டும்.

கலப்புத் திருமணம் பற்றிய பேச்சு. அதை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஸ்வயம் சேவகர்கள் கலப்புத் திருமணத்தை ஆதரிப்பவர்கள் என்ற எண்ணம் ஊரார் மனதில் பதிய வேண்டும்.’’

இது தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றும் கவர்ச்சியான மோசடிப் பேச்சு என்றாலும், தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே ஏற்கும் கட்டாயம் வந்துவிட்டதை இது காட்டுகிறது.
ஆதாரம்: 14.4.2017 விஜயபாரதம் பக்.13

பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு பற்றிய மேலும் விபரங்களை www.periyarinternational.com/selfrespectconf  இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *