தந்தை பெரியார்
தமிழ் படித்த புலவர்கள் அனைவரும் சாமியார்கள் ஆவதுதான் பாரம்பரியமான வழக்கம். அதை உடைத்து நொறுக்கி புரட்சி செய்த முதல் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்கிறார் தந்தை பெரியார். தந்தை பெரியார் கண்ட புரட்சிக்கவிஞரை நீங்களும் காணுங்கள் இனி.
நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது. கடவுளைப் பற்றி பாடுவதும், புராணங்கள், ஸ்தல புராணங்கள் பாடுவதும், புலமைக்கு அழகு என்று எண்ணி வந்தார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், பட்டினத்தார், தாயுமானவர், ராமலிங்கர் இவர்கள் எல்லாம் தமிழ்ப் படித்த புலமையினால் சாமியார் ஆனவர்களே. ராமனுடைய கதையைப் பாடியதற்காக கம்ப நாட்டாழ்வார் ஆனான்.
நான் போட்ட போட்டில் தப்பினார்
அதிகம் போவோனேன்! என் கண்ணெதிரே வாழ்ந்த பிரபலமான தமிழ்ப் புலவர் வேதாச்சலம். “சாமி வேதாச்சலம்’’ ஆகி, மறைமலையடிகள் ஆகவில்லையா?
நாடகங்களுக்குப் பாட்டு, கதை முதலியன எழுதிவந்த சங்கரன் என்பவர் சங்கரதாஸ் சுவாமிகள் ஆகவில்லையா?
முத்துசாமி கவிராயர் அவர்கள் முத்துசாமி சாமிகள் ஆகவில்லையா? இவர்களையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். நன்கு பழக்கமானவர்கள். நமது திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் சாமியாராகத்தான் போக முற்பட்டார். நான் போட்ட போட்டிலே அவர் தப்பித்தார்.
முதன்முதலாகப் புரட்சி!
நமது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்தாம் முதன்முதலாக புரட்சிகரமான கருத்துகளை, பகுத்தறிவுக் கருத்தகளை வைத்துப் பாடியவர் ஆவார். அவரே என்னிடத்தில் கூறினார், “அய்யா, நமது சுயமரியாதை இயக்கத்திற்கு நான் வருவதற்கு முன்பு மற்ற புலவர்களைப் போலத்தான் நானும் இருந்தேன். ‘சுப்பிரமணிய துதியமுது’ போன்ற பாடல்களைத்தாம் பாடினேன்.’’ என்று கூறி இசையுடன் பாடியும் காண்பித்தார்.
பீரங்கி வைத்துப் பிளப்பது என்னாள்?
கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எல்லாத் துறைகளிலும் பகுத்தறிவுக் கருத்துகளை, சீர்திருத்தக் கருத்துகளை அமைத்து ஆணித்தரமாகப் பாடியுள்ளவர் ஆவார். புரட்சிக்கவிஞர் என்பதற்கு ஏற்ப அவரது பாட்டுகள் இருப்பதைக் காணலாம்.
“சிறீரங்கநாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் என்னாளோ?’’ என்று பாடியிருக்கின்றவர் ஆவார் அவர்.
வள்ளுவனை வென்றவன்
வள்ளுவனைவிட புதுமையான, புரட்சியான கருத்துகளை _ மக்களை பகுத்தறிவுவாதி களாக்கக்கூடிய கவிதைகளை எழுதியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டு-கின்றன; முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும், முற்போக்கு சமுதாயத்திற்கு ஏற்றதாகவும், அவரது கவிதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு துறையிலும் சிறந்த கருத்துகளை நம்முடைய இயக்க முறையைவிட தீவிரமாகக் கூட எடுத்து விளக்கி இருக்கிறார்.
கடுகளவு அறிவுள்ளவன்கூட அவர் கவிதையைப் படித்தால் முழு பகுத்தறிவு-வாதியாகி விடுவான்.
வண்டி வண்டியாக தமிழர் பிணம் போனாலும் பார்ப்பனருக்கு எந்த குணம் இருக்கும் என்றால், இதில் எத்தனைப் பேருக்கு திவசம் செய்வார்கள் என்று கணக்குப் போடுவதாகத்தான் இருக்குமே தவிர அதுபற்றி வருத்தப்படுவதாக இருக்காது என்றும் தனக்கு எந்தெந்த வகையில் வரும்படி நிறையக் கிடைக்கும் என்றும் இப்படிப் புரட்சிகரமாக கவிதைகளை எழுதிய பாரதிதாசன் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.
– ‘விடுதலை’ – 29.04.1971