கொஞ்சம்
இது கிஞ்சித் என்ற வடசொற் சிதைவென்று வாய் புளித்ததோ _ -மாங்காய் புளித்ததோ என ஆராயாது கூறுவோர் இருக்கின்றார் போலும்.
கொஞ்சுதல் _ என்பது நிரம்பாப் பேச்சு, சிறிது பேசுதல் -இதன் முதனிலை கொஞ்சு, இது சிறிது, குறைந்த அளவு என்ற பொருளுடையதே.
இக் கொஞ்சு என்பதுதான் அம்முப் பெற்றுக் கொஞ்சம் ஆயிற்று. மிஞ்சு, மிஞ்சல், மிச்சம் என்றதிற் போல.
எனவே கொஞ்சம் தூய தமிழ்க் காரணப் பெயராதல் பெறப்படும்.
பாடம்
இதுபோன்ற ஒலி வடவரிடமும் இருக்கலாம். வடவர் பாடத்திற்கும், தமிழ்ப் பாடத்திற்கும் தொடர்பில்லை. தானம் என்பது போல.
பாடு என்றால் பெருமை, அப் பாடு என்ற நெடிட்றொடர்க் குற்றுகர முதநிலை, அம் என்ற இறுதிநிலை பெற்றுப் பாடம் ஆயிற்று. பாடம் பெருமைப்படுவது. ஆசிரியர் சொல்வதை மனத்தில் கொள்வது.
பாடம் : பெருமை, இது பிறவற்றிற்கும் வரும்.
எனவே பாடம் தூய தமிழ்க் காரணப் பெயர்!
படம்
இதையும் வடசொல் என்பர், எதையும் வடசொல் என்று கூறி மகிழும் ஒரு கூட்டத்தார்.
படு என்ற முதநிலைக்கு ஓவியன் மனத்துள்ளது ஏட்டில் படுவது என்ற பொருள் ஆவது காண்க.
படு+அம்=படம் “முற்றும் அற்று ஒரோ வழி’’ என்பதால் இவ்வாறு புணர்ந்தது.
படம், படல்-இது தொழிற் பெயர், தொழிலாகு பெயராய்ப் படமாகிய பொருளை உணர்த்தியது.
எனவே, படம் தூய தமிழ்க் காரணப் பெயர்.
(குயில்: குரல்: 2, இசை: 30-31, 16-2-1960)
கன்னி
கன்யா என்பது வடமொழியில் இளம் பெண்ணுக்கு வழங்குகின்றது. அதே வட சொற் சிதைவே கன்னி என்பதும் என வடமொழியாளர் சொல்லுவார்கள். கன்யாவுக்கும் கன்னி என்பதற்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது. கன்யா என்பது தமிழில் கன்னியை, கன்னிகை என்றெல்லாம் வந்திருக்க வேண்டும். ஆங்கு அது வடசொல் எனின் ஒக்கும்.
கன்னி என்பது இளமை குறித்துத் தமிழிலக்கியங்களில் பெரிதும் பயின்று வந்துள்ளது.
கன்றுக்குட்டி என்பதன் வேர்ச்சொல்லையும் நோக்குக. நோக்கவே கன்றுதல் கன்னுதல் என்றால் இளமை, வளர்ச்சியின்மை, அழிவு பெறுதல் என்று பொருள்படும்.
கன்றுதலின் வேர்ச் சொல்லாகிய-முதனிலையாகிய கன்னு, இகரப் பெயர் இறுதிநிலை பெற்றதே கன்னி என உணர்தல் வேண்டும்.
கன்று என்ற முதனிலை இகரப் பெண்ணால் இறுதி பெற்று இளம் பெண்ணுக்கு ஆகும்.
கன்று என்பது அஃறினை ஒன்றன் பால் இறுதி பெற்று இளமை உடையது என அஃறிணை ஒன்றன் பெயராகும். கன்னி என்பது தென்பால் உள்ள ஓர் ஆற்றைக் குறித்ததும் காண்க.
கன்னி என்பது தென்பால், ஆற்றுக்கு, முளைக்கு ஆகும்போது அழிந்தது அறிவு பெற்றது என்ற பொருளில் அமைந்ததாகும்.
இனிக் கன்னியாகுமரி என்று வழங்கும் ஒரு தொடரைக் காட்டி அதில் கன்னியா என நிற்பது வடச்சொல் என்பாரும் உளர்.
அஃது அவ்வாறன்று. கன்னி குமரி என்பதன் இடை ஆகாரம் சாரியை ஆடு தொடா இலை என்பதில் உள்ள ஆடு அடா என ஆகாரச் சாரியை பெற்றது போல. இவ்வாறு ஆகாரம் சாரியையாக வருவது தமிழில் பெரு வழக்கே.
எனவே
கன்னி தூய தமிழ்க் காரணப் பெயர் என உணர்க.
– பாரதிதாசன்
(குயில்: குரல்: 2, இசை: 32, 23-2-60)