தந்தை பெரியார், 80 ஆண்டுகளுக்கு முன், ஆண் பெண் சேர்க்கையில்லாமல் குழந்தை பெறுவர்.
கம்பியில்லாமல் பேசும் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.
ஆளுக்காள் உருவங்காட்டிப் பேசும் சாதனம் வரும்.
உணவு சத்துப் பொருளாகச் சுருக்கப்பட்டு ஒரு வார உணவு ஒரு குப்பியுள் அடக்கப்படும் என்றார். அவர் கூறியபடியே, செயற்கைக் கருவூட்டல், செல் போன்ற தொலைக்காட்சிகள் எல்லாம் வந்துவிட்டன.
பெரியார் சொன்ன உணவு முறையும் தற்போது நடப்பில் வந்து கொண்டுள்ளது.
2050ஆம் ஆண்டில் உலகின் முக்கிய உணவுப் பொருளாக இருக்கப் போவது பூச்சிகள்தான்’ என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது ஐ.நா.சபை.
‘உலகின் மொத்தப் பரப்பளவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏற்கெனவே பூச்சிகளை உணவாக உட்கொள்ள ஆரம்பித்து விட்டன. இன்னும் சில ஆண்டுகளில், இந்தியாவிலும் இந்தக் காட்சிகளைப் பார்க்கலாம்’ என பயமுறுத்துகிறது ஐ.நா.
‘இனிவரும் காலங்களில், மனித உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும் உணவுகளை மட்டுமே உற்பத்தி செய்தால் போதும். நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்களைப் பயிர் செய்ய, பல லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மக்கள் தொகைப் பெருக்கம், வறட்சி போன்றவற்றின் காரணமாகச் சாகுபடி நிலங்கள் குறைந்துவரும் சூழலில், அது சாத்தியமில்லாத ஒன்று.
அதேநேரம், ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து கிடைக்கும் தானியங்கள் எத்தனை நபர்களின் பசியைப் போக்குமோ அத்தனை நபர்களின் பசியை, பத்துக்குப் பத்து அறையில் பூச்சிகளை வளர்ப்பதன் மூலம் போக்க முடியும். பூச்சிகளில் அதிக அளவு புரதம் உள்ளது. எனவே, பூச்சிகளை உணவாக உட்கொள்வதன் மூலம் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கலாம்’ என்கிறது ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கை.
பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம் கூறுகையில்,
“இன்னும் 30 ஆண்டுகளில், பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நிச்சயம் இடம் பிடிக்கும். நீங்கள் உண்ணாவிட்டாலும், உங்கள் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் நிச்சயம் பூச்சி உணவை ருசி பார்ப்பார்கள். இந்தியாவில் ஈசலைப் பிடித்து வறுத்து உண்ணும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்துவருகிறது.’’
2050ஆம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை ஒன்பது பில்லியன் கோடியாக மாறும் என எதிர்பாத்துக் கொண்டிருக்கும் சூழலில் உணவுப் பாதுகாப்பு என்பது முக்கியமான துறையாக விளங்கப் போகிறது. உலகில் வாழும் அனைத்து மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய, வேளாண் துறையால் மட்டும் முடியாது. அதனால், மாற்று உணவைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. அப்படி மாற்று உணவாக, பூச்சி உணவுகளை முன்னேடுத்துள்ளது அய்.நா. காரணம், தற்போது உள்ள 720 கோடி மக்களில் கிட்டத்தட்ட 200 கோடிப்பேர் பூச்சிகளைத் தான் உணவாக உட்கொள்கிறார்கள் என்ற நடைமுறைதான். புரதம் நிறைந்த உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு, பூச்சிகள் உற்பத்திதான் சரியான தீர்வு என்ற முடிவை எடுத்துள்ளது அய்.நா.
‘மனிதர்கள் ஏன் பூச்சிகளை உணவாக உட்கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கு, வலுவான மூன்று காரணங்களை முன்வைக்கிறார்கள்.
1. உருவத்தில் மனிதனைவிடச் சிறியதாக இருந்தாலும், உண்மையில் பூச்சிதான் மனிதனைவிடப் பெரியது. இன்றைய நிலையில், உலகில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் எடையைவிட, உலகில் உள்ள ஒட்டுமொத்தப் பூச்சிகளின் எடை ஆறு மடங்கு அதிகம்.
2. மனிதன், பத்து மாதங்கள் கழித்து ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளைப் பெறலாம். ஆனால், ஒரு தாய்ப் பூச்சி, ஒரு நாளைக்கு 40 முட்டைகள் முதல் 400 முட்டைகள் வரை இடும். வெறும் பத்து நாள்கள் உயிரோடு இருக்கும் சில பூச்சி இனங்கள் கூட, சர்வசாதாரணமாக 4,000 முட்டைகளை இடும். இவ்வளவு வேகமான இனப்பெருக்கம் , மற்ற உயிரினங்களில் இல்லை. ஆகவே, குறைந்த நாள்களில் அதிக அளவிலான பூச்சிகளை உற்பத்தி செய்ய முடியும்.
3. மனிதனின் சராசரி ஆயுள்காலம் 60 ஆண்டுகள். பூச்சிகளின் சராசரி ஆயுள்காலம், முட்டை, புழு, கூட்டுப்புழு, தாய்ப் பூச்சி ஆகிய நான்கு பருவங்களிலும் சேர்த்து மொத்தமே 25 முதல் 40 நாள்கள்தான். அதிகபட்சமாக 60 நாள்கள். எனவே ஆடு, மாடு, கோழிகளைப்போல மாதக் கணக்கில், வருடக்கணக்கில் வளர்க்கத் தேவையில்லை. சிறிய அறையில்கூட ஆயிரக்கணக்கான பூச்சிகளை வளர்க்க முடியும்.
கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து, தைவான், கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் வழக்கம் ஏற்கெனவே இருக்கிறது. அதை, அவர்கள் பாரம்பர்ய உணவாகக் கொண்டாடுகிறார்கள்.
ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டில் தென்னை மற்றும் பனை மரங்களின் தண்டுகளில் காதை வைத்துக் கேட்பார்கள். உள்ளே குடையும் சத்தத்தை வைத்து எந்த விதமான பூச்சி, எந்தப் பருவத்தில் (குட்டி, புழு, வளர்ந்த பூச்சி) இருக்கிறது என்பதைக் கணிப்பார்கள். குட்டிப் புழுவைவிட வளர்ந்த புழுவில் புரதச்சத்துகள் அதிகம். எடையும் அதிகம் இருக்கும் என்பதால், சத்தத்தை வைத்து வளர்ந்த புழுக்கள் உள்ள மரத்தைத் தேர்வு செய்து, மரத்தில் துளையிட்டு, புழுவை வெளியே எடுத்து, வறுத்து உண்பார்கள். அதேபோல, காங்கோ நாட்டிலும், புழுக்களை வறுத்து உண்ணும் பழக்கம் உண்டு.
மெக்ஸிகோ நாட்டில் மக்காச்சோளம், பீன்ஸ் மற்றும் பயிர் வகைகளின் விளைச்சல் குறைந்த காலங்களில் முக்கிய உணவாக விளங்குவது பூச்சிகள்தான்.
ஆஸ்திரேலியாவிலும், உகாண்டாவிலும் பூச்சிகள் சாப்பிடும் வழக்கம் உண்டு.
சீனா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நம் ஊரில் ‘சிக்கன் 65’ விற்பதுபோல, பிளாட்பாரக் கடைகளில் பூச்சி வறுவல் கிடைக்கிறது. உலகின் பெரும்பாலான மக்கள், பூச்சிகளை உணவாக உண்கின்றனர். இந்தப் பட்டியலில் விரைவில் இந்தியாவும் சேரும்! இளைய தலைமுறை தயாராக இருக்க வேண்டும்.
பூச்சி உணவின் சிறப்பு:
தைவான் நாட்டில் உள்ள காய்கறி ஆராய்ச்சி மையத்தின் பூச்சிகள் துறைத் தலைவர் முனைவர் சீனிவாசன் ராமசாமி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் கூறுகையில்,
“பூச்சி உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியக் காரணிகளால், அவற்றை உண்ணும் பழக்கம் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. பொதுவாக, பூச்சி உணவுகளிலிருந்து சர்க்கரை, புரதம், கொழுப்பு அமிலங்கள், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் வெகுவாகக் கிடைக்கின்றன. அத்தியாவசிய அமினோ அமிலங்களும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் இருக்கின்றன. அதில் உள்ள தரமான புரதங்கள், வழக்கமான உணவுகளில் உள்ள புரதப் பற்றாக்குறையைப் போக்கக்கூடியவை. சமீபத்தில் சென்னை உள்பட இந்தியாவின் ஏழு பெருநகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்று, கிட்டத்தட்ட 90சதவிகித நுகர்வோரின் உணவுகளில், புரதப் பற்றாக்குறை நிலவுவதை உறுதிசெய்துள்ளது. எனவே, பூச்சி உணவுகள் இந்தியர்களின் உணவுகளிலிருந்து புரதத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவல்லவை.
பாலைவன வெட்டுக்கிளிகளில், கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய ஸ்டீரால்கள் மிகுந்திருப்பதாகவும், அவற்றை உண்பவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்றும் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
2050ஆம் ஆண்டு, உலக அளவில் ஏறக்குறைய 930 கோடி மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், பூச்சிகளை உண்ணும் பழக்கம் அதிகரித்தால், நமக்குக் கூடுதலான உணவு வகைகள் கிடைப்பதன் மூலம், இந்தப் பற்றாக்குறையை ஓரளவுக்கு நிவர்த்தி செய்ய முடியும். பூச்சி உணவுகளை உற்பத்தி செய்வது ஒரு தொழிலாக மாறும்போது, உணவுப் பற்றாக்குறை காலங்களில் பூச்சி உணவுகள் முக்கியமான ஓர் உணவாக மாறும். எனவே, பூச்சி உணவுகள், உணவு மற்றும் ஊட்டச் சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்’’ என்கிறார் சீனிவாசன் ராமசாமி.