மருந்து, விஷம், கூர்மையான பொருள்கள், அடுப்பு, மின் இணைப்பு குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் இருக்கக் கூடாது
குழந்தைகளுக்கு இவற்றின் பாதிப்பு என்னவென்று தெரியாது. அவர்கள் நல்லதையும், கெட்டதையும், ஆபத்தானதையும் ஒரே மாதிரிதான் பயன்படுத்துவர். எனவே, பெரியவர்கள்தான் அவற்றை அவர்கள் கைக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
குழந்தைகள் அறியாதவர்கள் என்பது மட்டுமல்ல மென்மையானவர்கள். எனவே, இவை உடனே பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி, அவர்கள் உயிருக்கே பாதிப்பை உண்டாக்கும். எனவே, குழந்தைகளுக்குப் பாதிப்பு வராத வகையில் எதையும் வைக்க வேண்டும்.
கேடே வரக்கூடாது என்று அஞ்சக்கூடாது
சிலர் ஒரு சின்ன சிக்கலோ, கேடோ, பாதிப்போ, இழப்போ, தோல்வியோ வந்துவிடக் கூடாது என்ற பயத்திலும் கவலையிலுமே தினம் தினம் வாழ்வர். இவர்கள் வாழ்நாள் முழுக்க நிம்மதியாக, மகிழ்வாக இருக்க முடியாது.
வாழ்க்கையென்றால் மேற்கண்டவை யெல்லாம் இருக்கும். அதை எதிர்கொண்டு வாழ்வதே வாழ்க்கை. இவை வராமலே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாத நிலையே ஆகும்.
இவையெல்லாம் நடக்குமோ என்று பயப்படும்போதுதான் கூடுதலாக நடக்கும். நடக்காமல் இருக்க முயற்சி செய்வோம். வந்தால் எதிர்கொள்வோம் என்று வாழ்ந்தால் இவை குறைவாகவே நிகழும்.
பயந்து பயந்து வாகனத்தை ஓட்டினால் விபத்து அதிகம் வரும். துணிவோடும், திறமையோடும் ஓட்டினால் விபத்து பெரும்பாலும் வராது. அப்படித்தான் வாழ்வும். எதிர்கொள்ளும் துணிவு கட்டாயம் தேவை. உச்சம் தொட அச்சம் தவிர்க்க வேண்டும்.
தேவையில்லா நேரத்தில் போராடக் கூடாது
சிலர் எதற்கெடுத்தாலும் போராட்டம், எதிர்ப்பு என்று நிற்பார்கள். அது வெறும் ஆர்ப்பாட்டமாக, விளம்பரமாகவே அமையும்.
எங்குத் தேவையோ அங்கு முறையாக, சம்பந்தப்பட்டவர்களோடு, தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நேரத்தில் போராட்டம் நடத்தப்பட வேண்டும். அதை விடுத்துச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் நடத்தப்படும் போராட்டங்கள் வெறும் விளம்பர நோக்குடையவையாகவே நீர்த்துப் போகும்.
போராட்டம் என்பது இறுதிக் கருவி. அதை மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். விளம்பரத்திற்கான வெற்றுப் போராட்டங்கள், உண்மையான போராட்டங்களை வலுவற்றுப் போகச் செய்யும்.
காரணமின்றிக் கவலை கொள்ளக்கூடாது
அப்படியென்றால் காரணத்தோடு கவலைப்படலாமா என்று கேட்கக் கூடாது. கவலைப்படுவதால் நடக்கப் போவது ஏதும் இல்லை. மாறாக, மன உளைச்சலால் உடல்தான் கெடும். அப்படியிருக்க, காரணமே இல்லாமல் கவலை கொள்வது தவறு அல்லவா?
சிலர் என்னவென்றே புரியவில்லை. மனதிற்குக் கவலையாக இருக்கு என்பர். இது சரியா? ஒன்று பற்றிய கவலை உந்துதலாய் இருக்க வேண்டுமே தவிர, உளைச்சலை ஏற்படுத்துவதாய் இருக்கக் கூடாது. ஒன்றைப் பற்றிய வருத்தம் முயற்சியைத் தாண்டி, கவலைக்குரிய காரணத்தைப் போக்குவதாய் இருக்க வேண்டுமே தவிர, முயற்சியை முடக்கித் தளர்வடையச் செய்யக் கூடியதாய் இருக்கக் கூடாது.
இருட்டின்மீதான வருத்தம் மின்சாரப் பல்பைக் கண்டுபிடித்தது. காலால் நடந்து நொந்து போகிறார்களே என்ற வருத்தம் பேருந்தைக் கண்டுபிடித்தது. கவலை அப்படியிருக்க வேண்டும். இழப்பு, தோல்வி, கிடைக்காமல் போதல் போன்றவைக்கு கவலை கொள்ளக் கூடாது. மாறாக, அவற்றிலிருந்து மீண்டு சாதிக்க முயல வேண்டும்; வெல்ல வேண்டும். சாதனையாளர்கள் கவலை கொள்ள மாட்டார்கள்; ஆர்வம் கொள்வார்கள்.