கணிதப் பாடத்தைக் கற்றுத்தருவதில் நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்று சிஎம்அய் என்று அழைக்கப்படும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்மேட்டிக்ஸ். இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சென்னை சிறுசேரியில் இயங்கி வருகிறது. கணிதத்துறையில் ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற கல்வி நிறுவனம் இது. இந்த அமைப்புக்கு மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் உதவி வருகின்றன.
சென்னையில் மேட் சயின்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பாடங்கள் நடத்தப்படுகின்றன. மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட், கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மய்யம், சென்னை அய்அய்டி, புனேயில் உள்ள இன்டர் யுனிவர்சிட்டி ஃபார் அஸ்ட்ரானமி அண்ட் அய்ட்ரோ பிசிக்ஸ், பாரீஸில் உள்ள இஎன்எஸ் கல்வி நிறுவனம் போன்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் பேராசிரியர்களும் இங்குள்ள மாணவர்களுக்குப் பாடம் நடத்த வருகிறார்கள்.
கணித ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த இஎன்எஸ் கல்வி நிறுவனத்துடன் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்மேட்டிக்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பிஎஸ்சி கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் படிக்கும் சிறந்த மாணவர்கள் கோடை காலத்தில், ஆராய்ச்சிக்காக அந்தக் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பாரீசில் உள்ள இகோல் பாலிடெக்னிக்குடனும் இதேபோன்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்சி இயற்பியல் பாடம் படிக்கும் சிறந்த மாணவர்கள் கோடை காலத்தில் அங்கு செல்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். இங்கு படித்த மாணவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் நமது நாட்டில் உள்ள முக்கியக் கல்வி நிறுவனங்களிலும் படிக்க வாய்ப்புக் கிடைத்து வருகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். இங்கு படிக்கின்ற மாணவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஆர்வம் இருந்தால், இங்கேயே தொடர்ந்து படிக்கலாம். வேலைக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
இளநிலைப் பட்டப்படிப்புகள்: இந்தக் கல்வி நிலையத்தில் கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்திலும் மூன்று ஆண்டு பிஎஸ்சி ஆனர்ஸ் படிக்கலாம். இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ படித்திருக்க வேண்டும். அல்லது தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வரும் மே 18-_ஆம் தேதி நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். தேசிய அளவில் நடத்தப்படும் அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், இத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.
நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்கள் இணைய தளத்தில் உள்ளன.
இங்கு படிக்கச் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் மிகக் குறைவு. அதாவது, செமஸ்டருக்குக் கட்டணம் ரூ.750. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு இந்தப் படிப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அத்துடன், மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும். சில மாணவர்களுக்கு உதவித்தொகை இல்லாமல் படிப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து மட்டும் விலக்கு அளிக்கப்படும். பிஎஸ்சி ஆனர்ஸ் படிப்பில் சேர்ந்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் தனியார் நன்கொடை மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
முதுநிலைப் பட்டப்படிப்புகள்: இங்கு எம்எஸ்சி கணிதப் பாடத்திலும் அப்ளிக்கேஷன்ஸ் ஆஃப் மேத்மேட்டிக்ஸ் பாடத்திலும் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதப் பாடப் பின்னணியுடன் பிஏ, பிஎஸ்சி, பிமேத், பிஸ்டாட், பிஇ, பிடெக் படித்திருக்க வேண்டும். எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பின்னணியுடன் பிஏ, பிஎஸ்சி, பிமேத், பிஸ்டாட், பிஇ, பிடெக் படித்திருக்க வேண்டும்.
இந்தப் படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் படிப்புக்கு மொத்த படிப்புக் கட்டணம் ரூ.4,800. தகுதியுடைய மாணவர்களுக்குப் படிப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அத்துடன், மாதம் ரூ.6 ஆயிரம் கல்வி உதவித் தொகையும் அளிக்கப்படும். சிலருக்குப் படிப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு மட்டும் அளிக்கப்படும்.
ஆய்வுப்படிப்புகள்: இங்கு கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பிஎச்டி படிக்கச் சேர விரும்பும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அந்த மாணவர்களுக்கு உதவித் தொகையாக முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ.28 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் ஆண்டுக்கு புத்தக அலவன்சாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றும் பூர்த்தி செய்து அனுப்பலாம். ஆன்லைன் மூலம் பிஎஸ்சி ஆனர்ஸ் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750. தபால் மூலம் விண்ணப்பத்தையும் விளக்கக் குறிப்பையும் பெற விரும்பினால் அதற்குக் கட்டணம் ரூ.900.‘Chennai Mathematical Institute’ என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
ஏப்ரல் 7_ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். அந்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 8_ஆம் தேதிக்குள் கிடைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 8.4.2017 (இரவு 12 மணிக்குள்). இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்காக மே 18_ஆம் தேதி நடத்தப்படும் நுழைவுத் தேர்வு முடிவுகள், ஜூன் 20_ஆம் தேதிக்குள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அட்மிஷன் குறித்த விரிவான தகவல்களை இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். கணிதத்தில் நல்ல திறனும் ஆர்வமும் உள்ள மாணவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு!
விவரங்களுக்கு: www.cmi.ac.in/admissions
தொலைபேசி எண்கள்:
044-6748 0900,
2747 0226/0229, 3298 3441/3442