இந்தியாவில் கடந்த (8) ஆண்டுகளில் ரயில் விபத்துகளில் 3 நாள்களுக்கு 2 பேர் வீதம் மரணமடைகின்றனர். கடந்த எட்டு (2009-_2010 முதல் 2016_2017ஆம் ஆண்டுகள்) ஆண்டுகளில் 1018 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 1940 பேர் மரணமடைந்துள்ளனர். 3200 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துகளில் 44 விபத்துகள். அதாவது 4.7 சதவீதம் மட்டுமே நாசவேலைகளால் நிகழ்ந்துள்ளன.
மற்றவற்றில் 44% ரயில்வே தொழிலாளிகளின் தவறுகளாலேயே நிகழ்ந்துள்ளன. இதற்கு முக்கியக் காரணம் ட்ராக்மேன், பாய்ண்ட்ஸ் மேன், பாதுகாப்பு ரோந்துத் தொழிலாளர், தொழில்நுட்பத் தொழிலாளர்கள் போன்ற ரயில் இயக்கப் பாதுகாப்பு வகையினர் என்ற பிரிவுகளில் போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாமல், 1.27 லட்சம் பணியிடங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளதேயாகும்.
இவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளமையால் இருக்கின்ற ஒவ்வொரு ஊழியரும் 15 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்ய வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் தவறுகள் நேரக் காரணமாகிறது என தொழிலாளர் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றில் மிக அதிகமான விபத்துகள் ரயில் தடம் புரளுவதாலேயே நிகழ்ந்துள்ளன. இந்தத் தடம் புரளுதல் ரயில் தண்டவாளங்களின் இணைப்பில் பற்றவைப்புப் பகுதிகளிலேயே ஏற்படுகின்றன. இதற்குப் போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்களால் இந்தப் பணி மேற்கொள்ளப் படாமையே காரணம் என்று கூறுகிறார்கள்.
9.3% விபத்துகள்தான் கருவிகள் பழுதடைந்தமையாலும், மற்ற தற்செயல் நிகழ்வுகளாலும் ஏற்பட்டுள்ளன.
என்னென்ன வகையில் காரணங்களை வகைப்படுத்தினாலும் இழப்பு, வரி செலுத்துவதோடு, கட்டணம் செலுத்திப் பயணம் செய்கின்ற பொதுமக்களுக்குத்தானே!
விஞ்ஞான யுகத்தில் பாதுகாப்புக் கருவிகளின் வடிவமைப்பும் செயல்பாடுகளும் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் இவ்விபத்துகளைத் தடுக்கவேண்டிய பொறுப்பு அரசைத்தானே சாரும். இனியேனும் போதுமானப் பணியாளர்களை நியமித்து சரியாகக் கண்காணிப்புப் பணிகளில் கவனம் செலுத்தி பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு அரசு உத்தரவாதம் தருமா?
கெ.நா.சாமி, செய்தி ஆதாரம்: ஜி.ளி.மி.