கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு குறித்த ஆய்வு அறிக்கையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மற்றும் உறுப்பினர்கள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து வளமான பிரிவினரை நீக்காமல் இப்போது உள்ளதுபோலவே தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வாகனங்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் புதிய மென்பொருளை இத்தாலி போலோனா பல்கலைக்கழகக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஜிசாட்-_12 தகவல் தொடர்பு செயற்கைக் கோளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பணியில் பிரமோதா ஹெக்டே, டி.கே. அனுராதா, கே.எஸ். அனுராதா என்ற மூன்று பெண் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் உள்ளதாக அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பழநி அய்வர்மலையில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாடப்புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு என்ற மூன்று தேர்வுகளுக்கும், ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பாடப் புத்தகங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவோ அல்லது வேறு நாடுகளோ சிரியாவின் தலைமையை முடிவு செய்யும் நிலையில் இல்லை. உள்நாட்டில் கோபத்தை உண்டாக்கி, பதட்டத்தைத் தொடரச் செய்யும் அமெரிக்காவை வன்மையாகக் கண்டிப்பதாக சிரிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
நில மோசடி விவகாரத்தில் கருநாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர்மீது விசாரணை நடத்த ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.
ஊராட்சி, நகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 33 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கட்டாயக் கல்விச் சட்டம் காரணமாக இந்த ஆண்டு முதல் நேரடியாக 8 ஆம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.