குறும்படம்
உதஞ்சலி
ஒன்றாக இருந்த ஒரு நாடு பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து போகும்போது தனி மனிதர்களுக்கு எழுத இயலாத நினைவுத் துயர்கள் நேரிடலாம். அது பெரும்பாலும் பதிவு செய்யப்படாமலேயே போய்விடும். பொது நன்மைக்காக என்ற தளத்தில் இதெல்லாம் அடிபட்டுப் போய்விடும். இந்தக் கருத்தைத்தான் ‘உதஞ்சலி’ என்ற குறும்படம் அருமையாகப் பதிவு செய்திருக்கிறது. உதஞ்சலி என்பது பாகிஸ்தானின் ஒரு சின்னஞ்சிறு கிராமம். அதில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிரிவினையின்போது, அந்தக் கிராமத்தில் இருந்து தனக்கான இனிமையான நினைவுகளோடு வலுக்கட்டாயமாக வெளியேறுகிறாள். ஆண்டுகள் பல கழித்து மீண்டும் அதே இடத்திற்கு பார்வையிடுவதற்காகத் திரும்புகிறாள். உள்ளுக்குள் உறங்கிக் கிடந்த அந்தக்கால நினைவுகள் அன்று போலவே புத்தம் புதிதாக மலர்கிறது. இந்தக் கவித்துவமான உணர்வுகளைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது இந்தக் குறும்படம்.
இயக்குநர்: சாம், 27 நிமிடங்கள், பெங்காலி மொழி, 2014இல் வெளியிடப்பட்டது. –
உடுமலை
செயலி
Financial Calculators
இச்செயலி அனைத்து நிதிக் கணக்குகளையும் மிக எளிமையாகக் கணக்கிட உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாகும். இதன்மூலம் உங்கள் நிதி, முதலீடுகள், கடன், அடமானம், கடன் ஒப்பீடு, கடன் பகுப்பாய்வு, பணி ஓய்வுக்கால திட்டம், வருமானம், தேவையான குறைந்தபட்ச விநியோகம், நிகர விநியோகம், பங்கு வர்த்தகங்கள், பரஸ்பர நிதி, விகிதங்கள், வாகனக் கடன், குத்தகை, சம்பள அதிகரிப்பு பற்றி கணக்கிடலாம். இன்னும் இதுபோன்ற நிதி தொடர்பான பிற கணக்குகளுக்கும் இது பயன்படும்.
https://play.google.com/store/apps/details?id=com.financial.calculator&hl=en
– அரு.ராமநாதன்
நூல் அறிமுகம்
நூல்: திருவாரூர் தீ பரவட்டும்!
தொகுப்பாசிரியர்: கவிஞர் கலி.பூங்குன்றன்
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, 50, ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7
பக்கங்கள்: 48 நன்கொடை: ரூ.30/-
மகளிர் உரிமைப் பிரகடனம் (Manifesto for women rights) என்று சொல்லத்தக்க திருப்பம் தரும் திருவாரூர் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள்.
அரசு ரீதியாக செய்யப்படவேண்டிய 50 விழுக்காடு இடஒதுக்கீடு, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தல், பெண்களுக்கான கராத்தே பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி, துப்பாக்கி உரிமம் அளித்தல் தொடர்பான தீர்மானங்கள்.
பெண்களுக்கு திருமண வயதை உயர்த்துதல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனை வசதி அளித்தல், பெண்கள் உயர்கல்விக்கு ஊக்கம் அளித்தல் போன்ற முன்னோடியான சிறப்புத் தீர்மானங்கள்.
தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தை தலைப்பெழுத்தாக அரசு ஆவணங்களில் போடுதல், உயர் கல்வி அளித்தல் போன்றவற்றை விளக்கும் தீர்மானங்கள்.
பெண்களை இழிவுபடுத்தும் வேதங்கள், ஸ்மிருதிகளைத் தடைசெய்தல், திருமண வயதை உயர்த்துதல்.
பெண்கள் தங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டிய கொள்கைகள், நடைமுறைகள் பற்றிய முக்கியத் தீர்மானங்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மாநாட்டு உரையையும் உள்ளடக்கிய இந்நூல், பெண் சமத்துவம் பேசும் அனைவரும் கண்டிப்பாகப் படித்துப் பரப்ப வேண்டிய நூல்.
– வை.கலை