– சோம.இளங்கோவன்
ஓப்ராவின் நிகழ்வுகளில் முக்கிய இடம் பிடித்த நாட்களில் ஒன்று மே 4, 2011 ஆகும்.
மேடையிலே 178 பேர். ஆண்கள், பெண்கள், கருப்பு, வெள்ளை, இளையவர், முதியவர் , ஆனால் அனைவரும்
வெற்றி வீரர்கள், சாதனையாளர்கள். ஆம், 50 ஆண்டுகளுக்கு முன்னே தங்கள் உயிர்களைப் பணயம் வைத்தவர்கள். அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தினார் ஓப்ரா வின்ஃபிரி.
அப்படி என்ன அவர்கள் சாதித்து விட்டார்கள் ? அது சாதனை மட்டுமல்ல சரித்திரமும் கூட !
மே 4, 1961 தலைநகர் வாசிங்டனிலிருந்து 13 பேர் ஆண்களும், பெண்களும், 5 கருப்பரும், 8 வெள்ளையருமாக இரண்டு பொதுப் பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனர். தென் கோடியில் உள்ள நியூ ஆர்லியன்சு மாநகருக்குச் செல்லத் திட்டம், எவ்வளவு தூரம் போக முடியும் என்பது அவர்களுக்கே தெரியாது.
1954லிலே அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் சரித்திரப் புகழ் பெற்ற பிரவுன் கல்வி நிறுவனங்கள் வழக்கிலே தீர்ப்பளித்துவிட்டது. நூறாண்டுகளுக்கு முன்னரே ஆபிரகாம் லிங்கன் பல்லாயிரம் மக்கள் இழப்பிலே தெற்கிலே இருந்த அடிமைகளை விடுவித்துவிட்டார். அனைவரும் சமம், சட்டத்திலே. ரோசா பார்க் அம்மையார் 1955 இல் பேருந்திலே கருப்பர்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம், வெள்ளையர்களுக்காக எழுந்து இடங்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று போராடி வெற்றி பெற்றுவிட்டார். அமெரிக்கப் பள்ளியிலே கருப்பு மாணவர்கள் நுழையக் கூடாது என்பதை அய்சனோஃவர் படையை அனுப்பிச் சரி செய்துவிட்டார். அமெரிக்காவின் முதல் கத்தோலிக்கர் ஜான் கென்னடி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.
மிகவும் முற்போக்குவாதியாகக் கருதப்பட்டார். ஆனால், தென் மாநிலங்களிலே நிற வெறி தாண்டவமாடியது. பேருந்திலே சேர்ந்து உட்கார முடியாது. கழிவறைகள் தனித்தனிதான். சேர்ந்து உணவகங்களிலே உண்ண முடியாது. கருப்பர்கள் சாப்பாட்டை வெளியே இருந்து வாங்கி, வெளியே தரையிலே அமர்ந்து உண்ணும் பரிதாபம். இதற்கு முடிவு கட்டக் கிளம்பியவர்கள்தான் அந்தப் பதின்மூவர்.
அவர்களுக்கு ” சமத்துவப் பேராயம் ” என்ற அமைப்பு நல்ல பயிற்சி கொடுத்து அனுப்புகின்றது. உயிருடன் திரும்புவது நிச்சயமல்ல என்பதை நன்கு அறிந்துதான் துணிவுடன் செல்கின்றார்கள். தலைநகர் வாசிங்டனிலிருந்து நிறவெறி ததும்பிய தென் மாநிலங்களைக் கடந்து செல்ல வேண்டும். அமெரிக்கா ஒரு நாடாக இருந்த போதும் மாநிலங்களின் அதிகாரம் சிறப்பானவை. அந்தந்த மாநில அரசுகளுக்குச் சட்ட திட்டங்கள் உண்டு. 50 அய்க்கிய நாடுகள் சேர்ந்ததுதான் அமெரிக்கா.
ஆகவே அந்தந்த மாநிலங்கள் தனி நாடுகள் போன்றுதான் சட்டங்கள். அங்கே அரசாளுவோர் நிறவெறி கொண்ட தலைவர்கள்தாம். கூ கிளக்சு கிளான் என்ற வெள்ளை உடையும், முகமூடியும் அணிந்த நிறவெறிக் கூட்டம் தலைவிரித்தாடும் இடங்கள்தாம் தென் மாநிலங்கள். அதிலே பலி கிடாக்களாக இந்தப் பதின்மூன்று பேர்.
ஆரம்பத்திலே தொந்தரவு இல்லாமல் சென்றுவிட்டனர். ஆனால் இவர்கள் இரண்டு பேருந்துகளிலே கருப்பும், வெள்ளையும் ஒன்றாக அமர்ந்து வருகின்றனர். ஒன்றாக உணவருந்தி வருகின்றனர். கழிவறைகளிலே வெள்ளையர் கழிவறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவிவிட்டது. நிறவெறி வெள்ளையர்கள் கொலை வெறியுடன் இருக்கின்றார்கள். இந்தப் பதின்மூன்று பேருக்கு மார்ட்டின் லூதர் கிங் வரவேற்பு கொடுக்கின்றார். அவரைக்கூட வரச் சொல்கின்றார்கள். அவரோ, இவர்களைத் தொடர்ந்து செல்ல வேண்டாம் என்று கைவிடச் சொல்கின்றார். உயிருக்குத் துணிந்த இவர்கள் தொடர்ந்து செல்வதென்று விடுதலைச் சவாரி” என்று தொடர்கின்றனர்.
தென் மாநிலங்களின் முதல் எல்லையாக அலபாமா மாநிலத்தின் எல்லை அனிச்டன் என்ற ஊரில் நுழைகின்றனர். கும்பல் சூழ்ந்து கொண்டு பேருந்தை அடித்து நொறுக்குகின்றனர். ஓட்டுநர் காரை ஓட்டவிடாமல் டயரை வீணாக்கி விடுகின்றனர். ஓட்டுநர் தாழ்ப்பாள் போட்டுப் பூட்டிவிட்டு உதவிக்காகச் செல்கின்றார். உள்ளே நுழைய முடியாது என்று நம்பி உள்ளே இருப்பவர்கள் கல்லெறியிலிருந்து காப்பாற்றிக் கொஞ்சம் துணிவுடன் இருக்கின்றனர். அப்போது வெளியிலிருந்து அவர்கள் தயாரித்த கைக்குண்டுகளைப் பேருந்தின் உள்ளே வீசுகின்றனர். உள்ளே ஒரே புகையும் நெருப்பும், கதவோ பூட்டப்பட்டுவிட்டது.
சாவதுதான் வழி என்று நினைத்தபோது பேருந்தின் பெட்ரோல் டேங்க் வெடிக்கின்றது. அனைவரும் வெளியே தூக்கி எறியப்படுகின்றனர். கேஃங் தாமசு என்ற கருப்பு இளைஞருக்கும் அவருடன் உயிர் தப்பிய ஜெனவீவ் க்ஃயூசு என்ற வெள்ளை அம்மையாருக்கும் அடி விழுகின்றது.
இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 13 வயது வெள்ளைப் பெண் ஜேனி பொஃர்சைத் ஓடி வந்து உதவி குடிக்கத் தண்ணீர் கொடுக்கின்றார். “கூ கிளக்சு கிளான்” என்ன செய்தாலும் பரவாயில்லை என்று மனிதாபிமானத்துடன் உதவி செய்கின்றார். பின்னாட்களில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக வந்த ஜான் லூயிசு என்பவரை எல்வின் வில்சன் என்ற வெள்ளை நிற வெறியர் அடித்து நொறுக்குகின்றார். அவர் அங்கே அதிகாரி. கடைசியில் அவர், லூயிசிடம் புகார் செய்வதென்றால் நீ புகார் செய்யலாம் என்கின்றார். லூயிசோ நான் இங்கே யாரையும் தொந்தரவு செய்ய வரவில்லை, அனைவரும் அன்புடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் விரும்புகின்றேன் என்றாராம். அமெரிக்கப் போர் வீரர்கள் வாசிங்டன் தலைநகருக்குக் கட்டுப்பட்ட போராளிகள் வந்து காப்பாற்றி அடுத்த மாநிலம் டென்னசியில் நாச்வில்லுக்குக் கொண்டு செல்கின்றனர்.
போராட்டம் முடிந்து விட்டது என்று நிற வெறியர்கள் குதூகலிக் கின்றனர்.
இந்தப் போராட் டத்தைப் பற்றிக் கேள் விப்பட்ட பலரும் கலந்து கொள்ள வருகின்றனர். முக்கியமாகக் கல்லூரி மாணவர்கள் வருகின் றனர். சிகாகோவைச் சேர்ந்தவர் டயான் நாச் எனும் வெள்ளைப் பெண்மணி. அவர் 21 மாணவர்களுடன் போராட்டத்தில் குதிக்கின்றார். அமெரிக்காவின் சட்ட மந்திரியான ராபர்ட் கென்னடி அவரது துணைச் சட்ட ஆணையரை அழைத்து அந்தப் பெண்ணுடன் பேசிப் போராட்டத்தை நிறுத்தச் சொல்கின்றார். உங்கள் உயிர்களுக்கே ஆபத்து என்று அச்சுறுத்துகின்றார். அந்தப் பெண்ணோ, நாங்கள் எங்கள் உயில்களை எழுதி வைத்து விட்டுச் சாகத்தான் இங்கு வந்துள்ளோம் என்று பதிலளிக்கின்றார். இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ராபர்ட் அபர்நாத்திடம் ராபர்ட் கென்னடி இந்த “விடுதலைச் சவாரி” இயக்கம் உலக அளவிலே அமெரிக்காவிற்கு அவமானமாக இருக்கின்றது என்று சொன்னபோது அவர், “எங்களுக்கு இவ்வளவு காலமாக வாழ்க்கையே அவமானமாகத்தான் இருந்து வந்திருக்கின்றது என்பது அவருக்குத் தெரியாதா?” என்று சொன்னாராம். நியூயார்க் கார்னல் பல்கலைக்கழகம், மற்றும் பல பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்கள், பொதுமக்கள் என்று 436 பேர் சேர்ந்து விட்டனர் அங்கே. அதிலே மூன்றில் ஒரு பங்குதான் கருப்பின மக்கள். மீதி அனைவரும் வெள்ளையர்கள். அவர்கள் தொடர்ந்து போராடிச் சென்றனர். மிகவும் பின்தங்கிய வெள்ளை வெறிபிடித்த ஓப்ராவின் மாநிலமான மிசிசிப்பியில் மிகவும் மோசமான சிறைச்சாலையிலே 4 பேர் தங்கும் அறையிலே 40 பேர் என்று அடைக்கப்பட்டனர். அங்கேயும் தொடர்ந்து இன வேறுபாடின்றி அவர்கள் ஒன்றாக இருந்ததைக் கண்டு மாநில ஆட்சியாளர் கொதித்துப் போனார். துன்புறுத்தப்பட்டனர். அங்கே அவர்கள் பாடிக் கொண்டே இருந்தனர். அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தனர் வெறி பிடித்தவர்கள்.
கடைசியாக செப்டம்பர் 22, 1961இல் மாநில வர்த்தக ஆணையர் சட்டப்படி ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வருபவர்களுக்கு மாநில அரசு சட்டப்படியல்லாமல் அமெரிக்கப் பொதுச் சட்டப்படி உரிமைகள் வழங்க வேண்டும், பொது இடங்களில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்தது. அந்தப் போராட்டத்தில் 1961இல் கலந்து கொண்டவர்களில் உயிருடன் உள்ள 178 பேர்கள்தான் ஓப்ராவின் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். இதில் 95 வயதானவர் ஒருவர், அவரும் கலந்து கொண்டார். அதைவிடப் பெரிய அதிசயங்கள் நடத்தியுள்ளார் அதிசயங்களின் சிகரமான “ஓ”.
13 வயது வெள்ளைப் பெண்ணாக தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்த ஜெனி பொஃர்சைத் ரகசியமாக அழைக்கப்பட்டிருந்தார். அவரை மேடைக்கு அழைத்து, அவரிடம் தண்ணீர் குடித்த கருப்பர் ஃகேங் தாமசு அறிமுகப் படுத்தப்பட்டார். இருவரும் உணர்ச்சியுடன் கட்டிப்பிடித்துத் தழுவிக்கொண்ட காட்சி அற்புதமான காட்சி.
ஜான் லூயிசை அடித்த எல்வின் வில்சனும் வந்து அவரிடம் 2009இல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதைச் சொன்னார். அவர்கள் இருவரிடமும் ஓப்ரா கேள்விகளைக் கேட்டார்.
கல்லூரி மாணவர்களைத் திரட்டிப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்த வெள்ளைப் பெண்மணி டயான் நாச் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார் !
கருப்பரும், வெள்ளையரும் இன்னும் முழுக்கச் சரிசமமாக வாழ முடியாவிட்டாலும் அமெரிக்கா ஒரு கருப்பு ஒபாமாவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததில் ” ஓ’ வின் பங்கு மிகவும் அதிகம் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர்.
தமிழகத்திற்கும் ஒரு ” விடுதலைச் சவாரி” இன்னும் தேவை என்பதை இளைய தலை முறை நடத்திக் காட்டினால் தந்தை பெரியாரின் ஆசை நிறைவேறும்.
“அநியாயம் எங்காவது நடந்தாலும் அது நியாயம் எங்கும் நிலைத்திருப்பதற்கு ஆபத்தை உண்டாக்கும் மார்ட்டின் லூதர் கிங் சொன்னதை நினைப்போம் என்று நிகழ்ச்சியை முடித்தார் “ஓ”.