வறுமையில் சாதித்து 3 கோடி ஏலம் போன கிராமத்து இளைஞன்!

மார்ச் 16-31

சேலம் மாவட்டம் சின்னப்பட்டி கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் ஒர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த நடராஜன், இன்று இந்தியக் கிரிக்கெட் உலகமே திரும்பிப் பார்க்க, அய்.பி.எல். போட்டியில் சாதிக்கப் போகும் இளம் வீரர். அய்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை மூன்று கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.

தனது சாதனையைப் பற்றி நடராசன் கூறுகையில்,

“எங்க கிராமத்துல பொங்கல் தீபாவளி, ஊர்த் திருவிழான்னு எது வந்தாலும் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நடக்கும். நான் ஸ்கூல் படிச்சிக்கிட்டிருந்தப்போ ஊர் அண்ணன்ங்க விளையாடுறத பார்த்துக்கிட்டிருப்பேன். அவங்க நல்லா விளையாண்டு கப் வாங்குறத பார்க்குறப்ப, நாமும் கிரிக்கெட் நல்லா விளையாண்டு, கப் வாங்கணும்னு ஆசைப்பட்டேன். சிறப்பா விளையாண்டாதானே டீம்ல சேத்துக்குவாங்க. அதுக்காக, கடினமா பயிற்சி எடுத்தேன். நான் பவுன்சர் வீசறத பாத்து என்னையும் டீம்ல சேத்துக்கிட்டாங்க.

ஆனா, எங்க ஊர்ல கிரிக்கெட் பயிற்சி கொடுக்க யாரும் இல்லை. நானும் முறையா கிரிக்கெட் கத்துக்கல. டென்னிஸ் பால்லதான் விளையாடுவேன். இயற்கையாகவே இடது கையால விளையாட ஆரம்பிச்சிட்டேன். இடது கை பவுலருக்கு நல்ல மதிப்பு உண்டு. முதன்முதலில் ஜெயபிரகாஷ் என்கிற அண்ணன்தான் எனக்கு சென்னை சிட்டி லீக் போட்டியில் 4ஆவது டிவிசனில் இருந்த பி.எஸ்.என்.எல் அணிக்கு விளையாடும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார்.

சென்னைக்கு விளையாடப் போகும்போது ரொம்ப பயமா இருந்தது. எல்லோரும் கார்ல வருவாங்க. நல்லா வசதியான குடும்பத்த சேர்ந்தவங்களா இருந்தாங்க. கிராமத்துல இருந்து போன என்னால விளையாட்டுல கவனம் செலுத்த முடியல.

ஜெயபிரகாஷ் அண்ணந்தான், தம்பி அவங்கள்ட்ட இல்லாத திறமை உங்கிட்ட அதிகமா இருக்கு. நீ நல்லா வருவடான்னு சொல்லி பக்கபலமா இருந்தாங்க. அங்கே நல்லா விளையாடினதால இரண்டாவது டிவிசன் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைச்சது. அதுக்கப்புறமா இப்ப முதல் டிவிசன் போட்டிகள்ல விளையாடிக்கிட்டிருக்கேன்.

மாவட்ட அளவிலான எந்தப் போட்டியிலும் நான் கலந்துகொண்டதில்லை. அதேபோல, மாநில அளவிலான எந்தப் போட்டியிலும் நான் கலந்துகிட்டதில்லை. ஆனால், சென்னை சிட்டி லீக் முதல் டிவிசன் போட்டிகள்ல சிறப்பா விளையாடியதால் எனக்கு 2014_15 ஆண்டுக்கான  தமிழ்நாடு ரஞ்சி அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிதான் எனது வாழ்வின் திருப்புமுனை. அந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடினேன். எங்க அணியில் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் அஸ்வின் இருந்தார். அவருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் எனக்கு பவுலிங் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அதுதான் ‘காரைக்குடி காளைஸ்’ அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டைச் சாய்க்க முடிந்தது. டி.என்.பி.எல் போட்டியால் நான் மட்டுமல்ல, என்னைப் போன்ற இளம் வீரர்கள் பலர் பயனடைந்தார்கள். இதற்காக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2014_15ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு _ பெங்கால் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் நான் பந்து வீசிய முறை தவறு என்றும், பந்தை எறிவதாகவும் கூறி, ஒரு வருடம் எந்தப் போட்டிகளிலும் பங்குபெறக் கூடாது என்று அறிவித்துவிட்டார்கள். அப்போதே கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்து மிகவும் சோர்வுடன் இருந்தேன். அப்போது எனக்கு ஆறுதலாக இருந்தவர் ஜெயபிரகாஷ் அண்ணன்தான். சுனில் சப்ரமணியம் சார் எனது பவுலிங் தவறுகளைச் சரிசெய்து மீண்டும் சிறப்பாக பந்து வீசக் காரணமாக இருந்தவர். அதேபோல, பரத்ரெட்டி சாரும் துணையாக இருந்தார்.

வெளிநாட்டு வேங்கைகளும் உள்நாட்டு உடும்புகளும் பங்கேற்ற இந்த ஏலத்தில் இளம் வீரருக்கான ஏலத்தொகையாக ரூ.பத்துலட்சம் மட்டுமே எனக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், என்னை ஏலத்தில் எடுக்க புனே, பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கிடையே கடும் போட்டி இருந்தது. முடிவில் ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணி மூன்று கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. என்னை ஏலுத்துல எடுப்பாங்கன்னு தெரியும். ஆனா, இவ்வளவு பெரிய தொகைக்கு எடுப்பாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை.

டி.என்.பி.எல். போட்டியில கலந்துக்கிட்டதே கனவா இருக்கு. இப்ப அய்.பி.எல். போட்டியில விளையாடப் போறத நினைச்சா நம்பவே முடியல. ரொம்ப பயமா இருக்கு. என் மீதும் என் பவுலிங் திறமை மீதும் நம்பிக்கை வைத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினர் என்னை ஏலத்தில் எடுத்துள்ளனர். அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சிறப்பாக பயிற்சி எடுத்து, பந்து வீசி, எதிர் அணிக்கு வில்லனாகவும் எனது அணிக்கு கதாநாயகனாகவும் இருப்பேன்.

‘யார்க்கர் நட்டு’

இயற்கையாவே யார்க்கர் பால் நல்லா போடுவேன். அதுக்குக் காரணம் டென்னிஸ் பால்ல பவுலிங் போட்டுப் பழகியதுதான். சாதாரணமாவே பேட்ஸ்மேன்கள் யார்க்கர் பாலை ஆடுறது ரொம்ப சிரமம். அதனால, அதிகமா யார்க்கர் பால் போடுவேன். நடராஜன் என்ற என் பேரை சுருக்கி நட்டுன்னு கூப்பிடுறாங்க. அதையே எனது டி_சர்ட்டிலும் போட்டுக்கொண்டேன்’’ என்று கூறும் அவரின், அப்பா தங்கராசு பட்டுத்தறி நெசவுக்கு கூலி வேலையாகப் போகிறார். அம்மா சாந்தா, ரோட்டோரத்துல சிக்கன் கடை போட்டிருக்கார். ஒரு தம்பி மூணு தங்கைகள். இவர்தான் மூத்த பையன். ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்யியிலேயே பிளஸ் டூ வரை படிச்சு முடித்து, பி.காம். சேலத்துல உள்ள ஏ.பி.எஸ். காலேஜ்ல முடிச்சிருக்கார். ரேஷன் அரிசிச் சோற்றை மட்டுமே சாப்பிட்டு, தன் முயற்சியால் இச்சாதனைகளைச் செய்திருப்பது, வியப்பிற்குரிய ஒன்றாகும்! நல்ல உணவு, நல்ல இருப்பிடம், நல்ல உடைகூட இல்லாத நிலையில்.

எதிர்கால ஆசை?

“இந்திய அணிக்காக விளையாடுவதுதான். அய்.பி.எல். போட்டியில் எனது முழு திறமையையும் வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பைப் பெறுவேன். தமிழக மக்களின் ஆதரவும் வாழ்த்தும் எனக்கு எப்பொழுதும் இருக்கும் என்று நம்புகிறேன்.’’ என்றார்.

பார்ப்பனர்களுக்கென்று பட்டயம் எழுதிக் கொண்டு ஆதிக்கம் செலுத்திய கிரிக்கெட் விளையாட்டில், எளிய, கிராமப்புற பிற்பட்ட மக்கள் சாதிக்க வருவது ஆதிக்கத் தகர்ப்பின் அடையாளமாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *