– எழுத்தாளர் ஓவியா
கடந்த ஒரு மாதத்திற்குள் பெண்களுக்கு எதிரான எத்தனை வன்முறைச் செய்திகள் பரபரப்புச் செய்திகளாகி நம்மைக் கடந்து சென்றிருக்கின்றன என்று பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. நந்தினி கொலை வழக்கின் செய்திகளுக்குள் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் போதே சிறுமி ஹாசினி அடுத்து ரித்திகா என்று வளர்ந்து கொண்டே போகிறது பட்டியல். இப்போது நடப்பில் தொலைக்காட்சிப் பெட்டிகள் நடிகை பாவனாவுக்கு நேர்ந்த துன்பத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றன. வன்முறைகள் அதிகமாகி விட்டதா அல்லது வன்முறைகள் கவனம் பெறுவது அதிகமாகி விட்டதா என்ற எண்ணத்தை ஒதுக்கித் தள்ளி மனதைக் கவ்வுகிறது. நிராதரவன ஓர் உணர்வும் அச்சமும். குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகளை வெளியில் பள்ளிக்கு அனுப்பும் போது கூட மனதைக் கலவரம் சூழ்கிறது. இந்த நிலையில் இந்த உலக மகளிர் நாள் செய்தியாக இதனைக் குறித்த நினைவுகளையே பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.
உண்மைதான். உலக மகளிர் நாள் மாநாடு 1910இல் நடைபெற்ற போது என்னென்ன கனவுகளை முன்வைத்ததோ அதில் எத்தனையோ கனவுகள் பெண்கள் உலகத்தின் வாழ்க்கையில் இன்று நடைமுறை உண்மைகளாக சாத்தியமாக்கப் பட்டிருக்கின்றன. எனினும் ஒரு தனிப் பெண்ணாக ஒவ்வொரு பெண்ணின் மீதும் வன்முறை சார்ந்த ஓர் ஆபத்து எப்போதும் சூழ்ந்திருப்பதை தவிர்க்க, விலக்க நாம் எவ்வளவு துரம் வெற்றி கொண்டிருக்கிறோம்???? அண்மைக் காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிகளையே சற்றுப் பகுப்பாய்வு செய்து பார்ப்போம்.
நந்தினி
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுமி. அந்த சமூகத்தின் அடுத்த மேலடுக்கைச் சேர்ந்த இடைநிலைச் சாதியான வன்னியர் சமூகப் பையன் ஒருவரால் தொடர்ந்து பின்தொடரப்படுகிறார். அவரோடு பழகியாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுவும் வன்முறையாக நிகழ்ந்திருக்கலாம் அல்லது அவன் வார்த்தை-களை நம்பியதில் அவன் பின் சென்றதாகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அதுவும் வன்முறைதான். இறுதியில் அவள் கருவுற்றதும் அவனை தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தத் துவங்குகிறாள். அந்த வெறியனோ அந்தப் பெண்ணை தனது நண்பர்களுடன் சேர்ந்து மேலும் வன்புணர்வுக்குள்ளாக்கி மிகக் கொடூரமாகக் கொலையும் செய்திருக்கிறான். தனது சமூக மற்றும் மதவாத அரசியல் செல்வாக்கு தன்னைக் காப்பாற்றி விடும் என்று நம்பியிருக்கிறான். ஆனால், விழிப்புணர்வு கொண்ட இயக்கங்களின் போராட்டத்தின் விளைவாக இன்று கைது செய்யப் பட்டிருக்கிறான். இறுதியாக தண்டிக்கப் படுவானா அல்லது நமது சட்டங்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி விடுவிக்கப் படுவானா என்ற கேள்வி இன்னும் மிச்சமிருக்கிறது.
எழுவினாக்கள்
1. இந்தப் பெண்ணைத் தனது விருப்பம் போல் ஏமாற்றி வன்முறைக்குட்படுத்தலாம் என்ற தைரியத்தை அந்தப் பையனுக்குக் கொடுத்தது, தான் இவர்களை விட மேல்சாதிக்காரன் என்ற நினைப்புதானே.?? வேறுபட்ட வாழ்நிலையிலிருக்கும் இரண்டு சமூகங்கள் அருகருகாக வாழும்போது எளிய மக்கள் இந்த விதமாக வன்முறைக்காளாவதை நாம் எப்படித் தடுக்க முடியும்? ஒவ்வொரு சம்பவமும் முடிந்த பின் அலசுவதைத் தவிர நாம் என்ன செய்கிறோம்? தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர்கள் தவறு செய்யும்போது அவர்கள் பக்கம் நிற்கின்ற கேவலமான மனநிலையை இன்றுவரை இந்தச் சாதி அமைப்புதானே பாதுகாக்கிறது??
2. தன்னை ஏமாற்றுகிறான் அந்த ஆண் என்று தெரிந்த பின்னும் அவனிடம் போய் கெஞ்சுகிற நிலைக்கு அந்த பெண் ஏன் இன்னும் இந்த சமூகத்தில் இருக்கிறாள்?? தன்னை புறக்கணிக்கும் ஆணை புறக்கணிக்கின்ற சுயமரியாதைச் சிந்தனையை பெண்ணுக்குள் வரவிடாமல் பாதுகாக்கும் அமைப்பு எது? இந்த விசயத்தில் நாடறிந்த ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் தொலைக்காட்சி விவாதத்தில் சொல்கிறார். நந்தினி அம்மா தன் பிள்ளையை ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும் என்று.. பெண்ணடிமைக் கருத்தியல் உள்ள சமூகத்தை வாழ வைத்துக் கொண்டு பெண்களை எப்படி வன்முறையிலிருந்து காப்பாற்ற முடியும்??
8 வயதுச் சிறுமி ஹாசினி
8 வயதுப் பெண் குழந்தை ஒரு வாலிப வயதுடையப் பையனால் பாலியல் கொடுமைக்குட்படுத்தப்பட்டு கொன்று எரிக்கப் பட்டிருக்கிறாள். பருவம் வருமுன்பு விலங்குகள்கூட குட்டிகளை துன்புறுத்தாதே. ஆனால், மனித இனத்தில் ஆண் இப்படி நடந்து கொள்கிறான். ஓர் ஆணாக இருக்க வெட்கமாக இருக்கிறது என்று எத்தனை ஆண்கள் நினைத்தார்கள் என்று தெரியவில்லை. இன்னொரு புறம் நமது சமூகத்தின் பாலியல் வாழ்க்கை குறித்து தீவிரமாக நாம் இப்போது சிந்திக்க வேண்டும். ஒருபுறம் பாலியல் கட்டுப்பாடுகள் மிகவும் நிறைந்த எதார்த்த வாழ்க்கை முறை. இன்னொரு புறம் தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் இவற்றின் வழியாக விஷம் போல் பரவி விரியும் காமக் காட்சிகள். இதற்கு பலியான நிலையில் நமது இளைஞர்கள். இன்றைய இளைஞர்களுக்கு பணம் ஈட்டுவதைத் தவிர வேறெந்த உயர்ந்த இலட்சியங்களும் முன்வைக்கப் படுவதில்லை. பெற்-றோராலும் சரி சமூகத்தாலும் சரி. அவர்கள் எண்ணத்தை இந்தக் கழிசடை சிந்தனைகளே இட்டு நிரப்புகின்றன. மெரீனா போராட்டத்தில் காக்கப்பட்ட கண்ணியத்தின் அடிப்படை அவர்கள் உயர்ந்த நோக்-கத்திற்காக கூடினார்கள் என்பதே. நல்ல இலட்சியங்கள் மட்டுமே மக்களை நல்லவர்-களாக வாழவைக்கும். குற்றங்களுக்கான கடுமையான தண்டனைகளும், பாலியல் கல்வியும் இளைஞர்களின் பாலியல் உணர்வுகளை கட்டுப்பாடு, நெறிமுறைகளால் சீர் செய்வதும், இதற்கான சரியான தீர்வுகளைத் தரும்.
ரித்திகா
அண்டை வீட்டாரால் கடத்தி 3 வயதுக் குழந்தை கொலை செய்யப்பட்டது. அண்டை வீட்டார் மீதுள்ள நம்பிக்கைகூட தவறு என்பதை இது அப்பபட்டமாகக் காட்டுகிறது.
நகரமயமாக்கல் பல்வேறு நன்மைகளைத் தந்திருக்கிறது. ஜாதிய வாழ்க்கை முறை மாற கிராமங்கள் ஒழிய வேண்டும் என்று பெரியாரும் பேசியிருக்கிறார். ஆனால், நாம் கூட்டு வாழ்க்கையையே ஒழித்து நிற்கிறோம். எப்போது அண்டை வீட்டாருடன் நாம் உறவு கொள்வதை நிறுத்தினோமோ அப்போதே அந்த இடத்தை பகையும் வெறுப்பும் போட்டி பொறாமைகளும் நிரப்பத் துவங்கி விடுகின்றன. சென்னை போன்ற நகரங்களில் குடித்தனக்-காரர்கள் உறவோடு இருப்பதை வாடகைக்கு வீடு தருபவர்களே விரும்புதில்லை. தொழிலாளர்கள் உறவோடு இருப்பதை முதலாளி விரும்புவதில்லை. பணியாளர்கள் உறவோடு இருப்பதை அதிகாரிகள் விரும்புவதில்லை. தனது சாதியல்லாத அண்டை வீட்டுக்-காரருடன் எந்த அளவுக்கு பழகுவது என்பதில் மக்களின் தயக்கம் இன்னும் முழுமையாக உடைந்தபாடில்லை. இதற்க்கெல்லாம் மேலாக வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுரிகள் அன்றாட வாழ்வில் பாதிக்கு மேல் பயணம் செய்தாக வேண்டும். மாறிவிட்ட உணவுப் பழக்கத்தின் காரணமாகத் கூடிவிட்ட சமையல் வேலைகள், முன்பு ஒரு அடுப்பு இருந்த இடத்தில் இன்று ஒவ்வொரு வீட்டிலும் நான்கு அடுப்புகள் இருக்கின்றன. ஆனால் சமைப்பதற்-கென்னவோ அந்த ஒரே அம்மாதானிருக்-கிறாள்.. எந்திரமாய்ப் பறக்கிறார்கள் மனிதர்கள். எல்லா இடத்திலும் அந்நியர்களாகவே நிற்கிறார்கள். அறியப்படாத மனிதர்களாகவே காலம் முழுவதும் வாழ்கிறார்கள். இவர்கள் தலையைச் சுற்றி வன்முறை என்ற பருந்து வட்டமிட்டபடியே திரிகிறது. முக்கியமாகக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் இதில் சிக்குகிறார்கள். முதியவர்கள் பாதிக்கப் பட்டால் அது செய்தியாகக் கூட ஆவதில்லை. பெண்கள் குழந்தைகள் என்னும் போது அழுகைச் சத்தம் வெளியில் வருகிறது. வாழ்வதற்காக வேலை செய்யத் துவங்கி வேலை செய்வதற்காகவே வாழ்ந்து சாகும் விநோதங்கள். அடிப்படை வாழ்க்கை அமைப்பு இன்னும் மாறவில்லை. வீட்டுக்கு வீடு அடுப்பங்கரை எதுக்கு என்று கேட்ட பெரியாரின் குரலை செவிமடுக்கவில்லையே இன்னும். குடும்பங்களில் அல்லாமல் சமூகக் கூடங்களில் வாழ புதிதாய்ப் பிறக்க வேண்டும் மனிதர்கள். இந்த மதம், இந்தச் சாதி, இந்தக் குடும்பம் இவை அனைத்துமே பெண்களுக்கு அடிமைத் தனத்தையே வாழ்க்கையாகத் தந்தன. கல்வி வேலைவாய்ப்பின் மூலமாக பெண்களுக்கு வெளிவாசல் கதவுகள் திறந்து விடப்பட்டன. ஆயினும் தன்னை அடிமைப்படுத்திய அமைப்புகளை எதிர்ப்பதற்கு இன்னும் பெண்கள் திரளவில்லை. அதனால் தங்களைச் சுற்றி பின்னப் படும் வன்முறை என்னும் மாயவலையை இன்னும் அவர்களால் அறுத்தெறிய முடியவில்லை. சிந்திப்போம். மாற்றுவோம். பெரியாரின் பாதை நமக்கிருக்கிறது. உலகத்துக்கு வழிகாட்டும் பெண்களாய் உயர்வோம்.