மன்னிப்புக் கேட்கவில்லை என் தேசம்
எந்த நாடும் தன் நாட்டு மக்களிடம்
மன்னிப்புக் கேட்க வெட்கப்படுகிறது
தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயங்குகிறது
மன்னிப்பு தவறை ஊர்ஜிதப்படுத்தி விடுமென தயங்குகிறது
பெயர்களை அடித்து எழுதுவதைப் போல
சிலரை இல்லாமல் செய்துவிடுகிறது
சிலரை அச்சத்தின் பிடியில் வாழவைக்கிறது
சிலரை ஒதுங்கி வாழச் செய்கிறது
சிலரை நாட்டைவிட்டே ஓடச்செய்கிறது
அரங்கத்திலோ, தெருமுனையிலோ
வீதிகளிலோ கூடியிருக்கும் கூட்டத்தை
எப்போதும் கலைத்து விடுவது
தேசத்தின் அதிகார விளையாட்டாகிறது
தனிமனிதனின் குரலை சுலபமாக நசுக்கிவிடுகிறது
தேசம் என்பது அதிகாரம் படைத்த
சில மனிதர்களின் அபிலாஷைகள் என்று சொல்லக்கூடாது
தேசம் என்பது இறந்தகால பழைய எலும்புக் கூடுகளின்
சொற்களென்று சொல்லக்கூடாது
தேசம் என்பது போர்வெறி பிடித்த மனநோயின் இன்னொரு
கட்டமைப்பு என்று சொல்லக்கூடாது
தேசம் என்பது தன் மக்களை
வறுமையில் சாகடித்தாலும் ஆயுதங்களை
நவீனப்படுத்திக் கொண்டேயிருக்கும்
அது எப்போதும் தன்னை
அழகுபடுத்திக் கொண்டேயிருக்கும் விளம்பரப்படுத்திக் கொண்டேயிருக்கும்
தன் தவறுகளின் முகத்தை
கண்ணாடியில் பார்க்க நேரமிருப்பதில்லை
எல்லா நாடுகளும்
தன் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்பதில்லை
தன் தவறுகளுக்கு
என்னிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை
என் தேசம்
என் சகோதரர்களைக் கொல்வதற்கு
ஆயுதங்கள் கொடுத்ததற்காக.
– கோசின்ரா