ஓடி ஓய்ந்த வாகனங்களும் ஒயாது உழைக்கும் தலைவரும்!

பிப்ரவர் 16-28

திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி சார்பாக பகுத்தறிவுப் பரப்புரைப் பயண புதிய ஊர்திக்கான சாவியை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன்,  மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவரிடம் மக்கள் வெள்ளத்தில் கரவொலிக்கிடையே வழங்கினர். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், திமுக தீர்மானக் குழு தலைவர் பொன்முத்துராமலிங்கம், ஆகியோர் உள்ளனர் (மதுரை, 4.2.2017)

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறும் வியப்பினை உள்ளடக்கியவை.

பத்து வயதில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியவர், 11 வயதில் திருமணத்திற்கு வாழ்த்துரை வழங்கியவர். மாநாட்டில் முழங்கியவர். 12 வயதில் பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்தவர். 13 வயதில் மாநாட்டில் கொடியேற்றியவர். 14 வயதில் அண்ணாவிடம் தூது சென்றவர் என்று தாம் சிறுவனாக இருந்த காலம் முதல் இன்றுவரை ஓயாது தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பிவருகிறார்.

சுயமரியாதைத் தத்துவங்களை சுமந்து சென்று தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பயணித்து பரப்பிய தந்தை பெரியாருக்கு தமிழ்ப் பெருமக்கள் 1955இல் சென்னையிலும், 1961இல் சிதம்பரத்திலும், 1966இல் கரூரிலும், 1973இல் தஞ்சையிலும் நான்கு முறை பரப்புரைப் பயண வாகனங்களை வழங்கி, தங்கள் நன்றியைக் காட்டினார்.

தந்தையின் மறைவுக்குப் பின் அவரது தூய தொண்டு தொடர பொறுப்பேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இதுவரை 6 முறை பரப்புரைப் பயண ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளன.

முதன்முதலில் 16.08.1981 அன்று திருவாரூரில் நடைபெற்ற விழாவில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் டாக்டர் கலைஞர் அவர்கள் ஒரு பரப்புரைப் பயண ஊர்தியை வழங்கினார்.

இரண்டாவதாக 26.02.1994 அன்று திருச்சியில் ஒரு அம்பாசிடர் கார் நான்கு துணைவேந்தர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. அந்தக் கார் ஓடிய தூரம் 1,20,000 கி.மீ.

மூன்றாவதாக டெம்போ ட்ராவலர் 19.08.1995 அன்று தஞ்சை திலகர் திடலில் வழங்கப்பட்டது. இது 1,30,000 கி.மீ வரை ஓடியது.

நான்காவதாக 26.11.2000 அன்று டெம்போ ட்ராவலர் திருச்சி வெல்லமண்டி திடலில் மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் தலைமையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அந்த வாகனம் ஓடிய தூரம் 1,60,000 கி.மீ.

அய்ந்தாவது முறையாக 21.6.2007 அன்று டெம்போ ட்ராவலர் வழங்கப்பட்டது. இது சென்னை கலைவாணர் அரங்கில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. இது ஓடிய தூரம் 1,20,000 கி.மீ.

ஆறாவது முறையாக 15.10.2012 அன்று நெய்வேலியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் வழங்கப்பட்டது. இது ஓடிய தூரம் 85,000 கி.மீ.

இந்த ஆறு வாகனங்களும் 6,15,000 கி.மீ. ஓடி ஓய்ந்துவிட்ட நிலையில், ஓயாமல் உழைத்து வருகிறார் நம் தமிழர் தலைவர். அவருக்கு ஏழாவது வாகனத்தை திராவிடர் கழக இளைஞரணியும் மாணவரணியும் இணைந்து வழங்கினார்கள்.

இந்த வாகனம் 04.02.2017 அன்று மதுரையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தி.மு.க. தீர்மானக்குழு தலைவரும், மேனாள் அமைச்சருமான பொன். முத்துராமலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றனர்.

இத்தனை வாகனங்களும் ஓடி ஓய்ந்த நிலையில் அவை சுமந்த நம் தமிழர் தலைவர் அவர்களின் ஓயா உழைப்பு, தந்தை பெரியாரின் கொள்கைகள், இலக்குகள் மேலும் மேலும் வெற்றி பெறுவதற்குத் தேவைப்படுகிறது என்பதையே இந்த வாகனம் வழங்கும் நிகழ்வு உலகுக்கு உணர்த்துகிறது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *