சொன்னதும் புரிந்துகொண்டதும்:
சில வார்த்தைகள் சூழ்நிலைக்கேற்பவும் பேசுபவர் அல்லது கேட்பவரின் மனநிலைக்கேற்பவும் பொருள் கொள்ளப்படும். எனவே. சொல்லப்படும் வார்த்தைகளை சூழ்நிலையோடு ஒப்பிட்டு மற்றவரின் நிலையிலிருந்தும் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அது உறவுகளைப் பலப்படுத்த உதவும்.
வெற்றி முக்கியமல்ல :
உறவுகளை வலுப்படுத்துவதும் தொடர்வதும்தான் முக்கியமே தவிர விவாதத்தில் வெற்றியடைவதோ தன்னுடைய முடிவே சரியானது என்று நிறுவுவதோ அல்ல. மற்றவர்களின் கோணத்தில் வெளிப்படும் கருத்தை மதிக்க வேண்டும்.
பழைய விஷயங்களைக் கிளற வேண்டாம்:
பழைய வலிகளையும் பகையையும் நினைத்துக் கொண்டிருந்தால் இப்போதுள்ள சூழ்நிலையின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்காது. இப்போது என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவெடுங்கள்.
முரண்பாட்டை மதிப்பிடுங்கள்: முரண்பாடு உங்கள் சக்தியை வீணடித்துவிடும். நீங்கள் முரண்படும் காரணம் உண்மையில் அதற்கான மதிப்புடையதா? அல்லது வீண் வீராப்புக்காக அப்படி நடந்துகொள்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்கள் வீட்டுக்குப் போகும் வழிகள் பல இருந்தாலும் இந்த வழியில்தான் போவேன் என்று அடம் பிடிக்க வேண்டுமா? மாற்று வழியில் உங்களுக்கு சில ஆச்சரியங்கள் காத்திருக்கலாம்.
மன்னிக்கத் தயாராக இருங்கள்: நீங்கள் மன்னிக்க விருப்பமில்லாமலோ மன்னிக்க இயலாதவராகவோ இருந்தால் முரண்பாட்டைத் தீர்ப்பது என்பது இயலாத காரியம். ஒருவரைத் தண்டித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துவிடுவது, பின்னர் ஈடு செய்ய முடியாத இழப்பையும் காயத்தையும் ஏற்படுத்தும்.
விலகிப் போக முடிவெடுங்கள்:
ஒரு முடிவுக்கு வரமுடியாத சூழ்நிலையில் ஒத்துப் போவதில்லை என ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். அதாவது, பிரிவதென முடிவெடுத்து அவரவர் வழியில் செல்லுங்கள்.
அமைதியாக இருத்தல்:
சிக்கலான தருணத்தில் அதிகப்படியாக செயல்படாதீர்கள். அமைதியாக இருப்பதன் மூலம் உங்களுடைய கருத்துகளை மற்றவர்கள் பரிசீலிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துங்கள். செயல்களால் அல்ல: ஒரு விஷயத்தை உண்மையாகவும் நேரடியாகவும் நீங்கள் தெரிந்து வைத்துள்ள வலிமையான தகவல் தொடர்பு நுட்பம் மூலம் வெளிப்படுத்தலாம். அதே சமயம் நீங்கள் மிகக் கோபமாகவோ சோர்வடைந்தோ உள்ளபோது உங்களை நிலைப்படுத்திக் கொள்ள நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு நடை, சிலமுறை ஆழ்ந்த மூச்சு,செல்லப் பிராணிகளோடு விளையாட்டு, வேறு உங்களுக்குப் பிடித்த -அந்த சமயத்தில் பயன் தரும் செயல்களைக் கையாளுங்கள்.
உங்களுக்குப் பிரச்சினையாக இருப்பதை மட்டும் கவனியுங்கள். பொதுவாக குற்றம் கூறிக் கொண்டிருப்பது வேலையைக் கடினமாக்கும்.
ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினையை மட்டும் கையாளுங்கள்:
ஒரு விஷயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு விஷயத்தைப் புகுத்தாதீர்கள். இதனால் எந்தப் பாத்திரத்தை முதலில் தேய்த்துக் கழுவுவது என்பது போன்ற (kitchen sink effect ) குழப்பம் ஏற்படாது.
அடி வயிற்றில் அடிக்காதீர்கள். தனிப்பட்ட முறையில் உணர்ச்சி வயப்படக் கூடிய விஷயங்களை விட்டுவிடுங்கள். அது அவ நம்பிக்கையையும், கோபத்தையும், சேதங்களையும் உண்டாக்கும்.
குற்றம் சாட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள். அது அவர்கள் திருப்பித் தாக்குவதற்கு வழிகோலும். மாறாக, அவர்களின் எந்தச் செயல் உங்களைப் பாதிப்படையச் செய்தது என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
பொதுவாகச் சொல்லாதீர்கள்: ‘எப்போதும்’ அல்லது ‘எப்போதுமில்லை’ என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தா தீர்கள். அது துல்லியமில்லா மலும் கோபத்தை அதிகப்படுத்துவதாகவும் இருக்கும்.
திரித்துக் கூறாதீர்கள்:
புதிதாகக் குற்றம் கண்டுபிடிக்க முயற்சி செய்வதும், திரித்துக் கூறுவதும் சமாதானத்தை நோக்கிப் போவதைத் தடுக்கும்.
குப்பை சேர விடாதீர்கள்:
புகார்களையும் உணர்வுக் காயங்களையும் உடனே தீர்க்காவிட்டால் மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருக்கும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால் பிறகு அதைப் புரிந்துகொள்வதும் சிக்கலைத் தீர்ப்பதும் கடினமாக இருக்கும்.
நீண்ட மவுனம் தேவையில்லை:
ஒருவருக்கு நீண்ட காலமாக சரியான சமாதானம் சொல்லாமல் மவுனம் காப்பது கோபத்தைக் கிளறும். இரு தரப்பு தகவல் பரிமாற்றம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
தெரியப்படுத்துங்கள்:
உங்களுடைய செயல்கள் மூலமாகவும் சொற்கள் மூலமாகவும் எதிர் தரப்பினரும் பொதுவான முரண்பாட்டுக் கள விதிகளைத் தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் செய்யுங்கள்.
நேர்மையான சண்டை: படிப்படியாக…..
குறிப்பிட்ட ஒரு முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நேர்மையான போர்க்களத்தைப் பயன்படுத்தலாம்.
படி.1. சண்டையை ஆரம்பிப்பதற்குமுன் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உண்மையில் என்னைத் தொல்லைப் படுத்துவது எது? மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யாமலிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்? என்னுடைய மனநிலை பிரச்சினைக்குச் சம்பந்தமுடையதா?
படி.2. சண்டையை ஆரம்பிப்பதற்குமுன் உங்களுடைய நோக்கத்தைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உண்டாகக்கூடிய விளைவுகள், அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா? என யோசியுங்கள்.
படி. 3 . இந்தச் சண்டை ‘வெற்றி’ யை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக, இருதரப்பும் மன நிறைவடையவும் சிக்கலுக்குத் தீர்வு காணவுமே என்பது நினைவிலிருக்கட்டும்.
படி. 4 . உங்களுடன் முரண்படும் உங்கள் பங்காளியுடன் இது குறித்துப் பேசுவதற்கு நேரம் குறிப்பிடுங்கள். இது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகவும், இருவருக்கும் ஏற்ற நேரமாகவும் இருக்க வேண்டும்.
உடனே நேரம் குறிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
படி. 5. பிரச்சினையைத் தெளிவாக எடுத்து வையுங்கள். உண்மையில் உள்ள நிலையை உங்கள் மன நிலையில் சொல்லுங்கள். ‘நான்’ வருத்தத்திற்குள் ளானேன், காயப்பட்டேன், மனச் சோர்வடைந்தேன்… என்பது போல பேசுங்கள். ‘நீ’ என்ற வார்த்தையைத் தவிர்த்துவிடுங்கள். அதாவது, “நீ என்னைக் கோபப்படுத்தினாய்”…. என்பது போல.
படி.6. உங்களோடு முரண்பட்டிருக்கும் ந(ண்)பரைக் கூப்பிடுங்கள். அவருடைய பார்வையில் அவரின் கருத்துகளை எடுத்துவைக்கச் சொல்லுங்கள். குறுக்கிடா தீர்கள். அவருடைய கருத்துகளை உண்மை யாகக் கருத்தூன்றி காது கொடுத்துக் கேளுங்கள். அது பயனளிப்பதாகத் தெரிந்தால் அதை மீண்டும் நீங்கள் புரிந்துகொண்டவாறு கூறுங்கள். பிறகு, அவரையும் அதைப் போலவே செய்யச் சொல்லுங்கள்.
படி. 7. எதிர்த் தரப்பினரின் பார்வையில் பிரச்சினையைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். ‘எதிர்க்கும்’ பார்வை ஒரு வேளை கருத்தொற்றுமைக்கு வழி கோலக்கூடும்…
நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட!
படி. 8. குறிப்பிட்ட தீர்வை முன்வையுங்கள். அதே போல் மற்றவர் களையும் தீர்வை முன்வைக்கச் சொல்லுங்கள்.
படி. 9. இரு தரப்பு கருத்துகளின் நிறை-குறைகளை விவாதியுங்கள்.
படி. 10. ஒரு சமாதானத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். ஒரே வழிதான் இருக்கிறது என்று எதிர்த் தரப்பை நெருக்காதீர்கள்.
ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தபின் கொண்டாடுங்கள். புதிய மாற்றத்தை நடை முறைக்குக் கொண்டு வாருங்கள் . சில காலக் கெடுவுக்குப்பின் புதிய நடைமுறையிலுள்ள குறை-நிறைகளைப் பற்றி விவாதியுங்கள். தேவை என்றால் மீண்டும் பேசி புதிய முடிவுக்கு வாருங்கள்.
சில நேரம் நம்முடைய இந்த அணுகுமுறை பலனளிக்காமல் போகலாம். அப்போது அனுபவமிக்க வல்லுநரை அணுகலாம். அவர்கள் சிறந்த சாத்தியமுள்ள வழிகளை ஆற்றல் மிக்க முறையில் விளக்கி தீர்வை நோக்கி அழைத்துச் செல்வார்கள்.
முரண்பாடு என்பது இயல்பானது, வரவேற்கத்தக்கது, நலமான உறவுமுறை என்ற நோக்கத்திற்குத் தேவையானது. இதை சிறப்பாகக் கையாண்டால், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் ஆகியோருடன் உள்ள பிணைப்பு வலுவாகவும் நீடித்தும் இருக்கும்.