அய்யாவின் அடிச்சுவட்டில்..
இயக்க வரலாறான தன்வரலாறு
‘வருமான வரம்பு ஆணை’ என்ற தலைமுறைப் பாதிப்பை புதைக்குழிக்கு அனுப்பியதோடு, 30 விழுக்காடாக இருந்த ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தச் செய்து திராவிடர் கழகம், தனது மரபு வழிப்பட்ட சாதனையையும், வீரத்தையும், பொறுப்பையும் பதிவு செய்த வரலாற்றுடன், இதையும் பதிவு செய்யும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமை காத்த அரசுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டங்களையும் நடத்திட நான் 28.01.1980 அன்று ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
அதில், பிற்படுத்தப்பட்டோர் வெற்றி பெற்று விட்டனர் என்று மயக்கத்தில், பார்ப்பன எதிர்ப்பை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 205 நாட்களாக ஏற்பட்டிருந்த பேராபத்து நீங்கிவிட்டது. இதில் நாம் எழுப்பிய குரலைப் புரிந்து கைகோர்த்து நின்ற தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு பார்வார்டு பிளாக் கட்சி, மக்கள் கட்சி, காந்தி காமராஜ் தேசியக் கட்சி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்ட அணித் தலைவர்கள் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கு ஆதரவுக் குரல் கொடுத்த பெருமக்கள் ஆகியோர்கட்கும், இதில் பிடிவாதம் காட்டாது ஆணையை ரத்து செய்ததும், 50 சதவீதமாக 31 சதவீதத்தை உயர்த்திய தமிழக முதல்வர் அவர்கட்கும் நன்றி தெரிவித்தும், பார்ப்பன ஏடுகள் துவக்கியுள்ள “இடஒதுக்கீடு பற்றி பனிப்போர்” (Cold War on Reservation) புரட்டினை அம்பலப்படுத்தியும் அவர்களுக்கு எல்லாம் நகரங்கள், சிற்றூர்கள், பேரூர்களில் கூட்டங்கள் நடத்திப் பிரச்சாரம் செய்ததுடன் இதில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை, இயக்கங்களை அழைத்து, “நன்றி அறிவிப்புக் கூட்டங்களை” நாடெங்கும் நடத்திட அன்று நான் வேண்டுகோள் விடுத்து பிப்ரவரி 10 முதல் 17 வரை எட்டு நாட்களில் பரவலாக ஏற்பாடு செய்ய உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தேன். அதன்படி தமிழ்நாடு எங்கும் நன்றி அறிவிப்புக் கூட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியது.
11.02.1980 அன்று மாயவரம் நகர திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு விளக்கமும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு நன்றி அறிவிப்புக்குமான பொதுக்கூட்டம் நகர திராவிடர் கழகத்தின் சார்பில், பெருஞ்சிறப்புடன் நடைபெற்றது. பொதுக்கூட்டம்தான் என்றாலும் பெரிய மாநாடு நடக்கிறதோ என்று வியக்கும் அளவுக்கு நகரெங்கும் தோரண அலங்காரங்கள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. மாயவரம் ஒன்றிய தி.க. தலைவர் என்.வடிவேல் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். விழாவில் நான் கலந்துகொண்டேன். எனக்கு கழகத்தின் சார்பில், “வெள்ளி வீரவாள்” பரிசாக வழங்கினார்கள். இதுபோல தமிழகமெங்கும் நன்றி அறிவிப்புக் கூட்டங்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.
14.02.1980 அன்று நான் ‘விடுதலை’யில் முக்கிய அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையில், “மூடநம்பிக்கையின் மொத்தத் தொகுப்பான கும்பகோணம் மகாமகத்தினைப் பயன்படுத்தி தஞ்சை மாவட்டக் கலெக்டர் மகாமகம் டாலர்களை தங்கமுலாம் பூசி (ரூ.50, 100 என்பதாய்) விற்கும்படி, தன் கீழ் உள்ள மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் மூலம் கட்டாயப்படுத்தி கீழ்மட்ட கிராம அதிகாரிகள் வரை இந்த ‘தர்பார்’ வெகுவேகமாக நடந்துகொண்டுள்ள கொடுமை, இந்த நாட்டில் “இந்து ராஷ்டிரத்தை ஏற்படுத்தும், மதச்சார்பின்மையைக் (Second Secularism) கேலிக்கூத்தாக்கும் மிகப் பெரியதொரு அவமானகரமானச் செயலைக் கண்டித்து வருகின்ற 18.02.2016 அன்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் எழுதியிருந்தேன்.
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதனுடைய அமைச்சர் ஜெயில்சிங் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் இந்த டாலரை வைத்தே ஒரு கடிதம் எழுதியிருந்தேன். விரைவில் பதிலை எதிர் பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.
தந்தை பெரியார் உருவச் சிலையை காஞ்சிபுரம் நகரில் நிறுவுவதற்கு திராவிடர் கழகம் 1974ஆம் ஆண்டு ஏற்பாடுகளைச் செய்தது. சிலை பராமரிப்பதற்கான தொகை காஞ்சிபுரம் நகராட்சியிடம் கட்டப்பட்டு அந்த இடத்தில் சிலை வைப்பதற்குத் தடை ஏதும் கிடையாது என்ற அனுமதி உத்தரவையும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட போலீஸ் சூப்பரிண்டெண்ட் ஆகியோரிடமிருந்தும் பெறப்பட்டது.
1975ஆம் ஆண்டு சிலை வைப்பதற்கான பீடமும் எழுப்பப்பட்டது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் நடந்த ஆலோசகர் ஆட்சியின்-போது – சில பார்ப்பனர்கள் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மடம் இருப்பதால் சிலை வைக்க அனுமதிக்கக் கூடாது என்று முறையிட்டதைத் தொடர்ந்து ஆளுநரின் பார்ப்பன ஆலோசகர் சிலையை அமைக்கும் அனுமதியை நிறுத்தி வைத்திருந்தார்.
ஆளுநர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு காஞ்சிபுரம் நகரமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்திருந்ததைத் தொடர்ந்து – தனி அதிகாரி சிலை வைப்பதற்கான மேல் நடவடிக்கையை மேற்கொண்டார்.
காஞ்சிபுரத்தில் “சங்கராச்சாரியார் மடம் இருப்பதால் சிலை வைக்க அனுமதிக்கக் கூடாது” என்ற சில பார்ப்பனர்களின் வெற்றுக் கூச்சலை அ.தி.மு.க. அரசு ஏற்று தடை உத்தரவினைப் பிறப்பித்தது.
இதை எதிர்த்து செங்கை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.பி.ராசமாணிக்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை நீதிபதி ராமசாமி அவர்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் அவர்கள் இந்த இடத்தில் தந்தை பெரியார் சிலை வைப்பதை அரசு தடுக்க முடியாது என்று (19.02.1980) அன்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர் துரைசாமி ஆஜரானார்.
இதைத் தொடர்ந்து 24.2.1980 அன்று செங்கை மாவட்ட கழகத் தலைவர் சி.பி.இராசமாணிக்கம் தலைமையில் அய்யாவின் சிலையை திறந்துவைத்தேன். மீண்டும் 18.3.1980 அன்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சுக்கு மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடை கோரியது. தலைமை நீதிபதி இஸ்மாயில், நீதிபதி ரத்தினம் ஆகியோர் பெஞ்ச் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில், மாநில தொழில்நுட்பக் கல்வி போர்டு தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தில் -பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளைக்கு மகளிர் பாலிடெக்னிக் துவங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தோழர்களுக்கு அறிவித்தோம்.
தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெண்களுக்கு தனி பாலிடெக்னிக் இல்லாத பெருங்குறை இதன்மூலம் தீர்க்கப்பட்டது.
27.02.1980 அன்று ‘தினகரன்’ கந்தசாமி அவர்களின் பாராட்டத்தக்க முயற்சியாக தமிழர்களின் நீண்ட நாள் ஏக்கம் போக்கிட ‘இந்தியன் சன்’ ஆங்கில நாளேடு வெளியிடப் பட்டது. அதில் நான் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
தமிழர் சமுதாயத்துக்கென்று ஒரு ஆங்கில நாளேடு இல்லையே என்ற நீண்டநாள் ஏக்கத்தைப் போக்கிடும் வகையில், “தினகரன்” நிறுவனத்தால் துவக்கப்பட்டுள்ள “இந்தியன் சன்” நாளேடு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி, பாராட்டு தெரிவித்து பொன்னாடையை கே.பி.கந்தசாமிக்குப் போர்த்தினேன்.
“சென்னை பெரியார் திடலிலே நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு தோழர் கந்தசாமி அவர்கள் வந்திருந்தபோது – நாங்கள் எங்கள் ஆதரவைக் காட்டும் வகையில் ஆங்கில ஏட்டுக்கு – ஒரு சிறு தொகையை ரூ.100/_ அன்பளிப்பாக வழங்கினோம்.
அதே நேரத்தில் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது “கணக்கு எதுவும் கேட்காமல், ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். ஆங்கில நாளேடு ஒன்றை எப்படியாவது துவக்க முயற்சி செய்யுங்கள்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் அவர்களிடம் கூறினார்கள். ஆனால் அந்த எண்ணம் ஈடேற முடியாமல் போய்விட்டது.
நாங்கள் ரூ.100 அச்சாரமாகத் தந்தோம்! இப்போது பத்திரிகை வந்துவிட்டது. நாங்கள் அச்சாரம் தந்தது எதுவும் இதுவரை வீண்போனது கிடையாது” என்று அப்போது குறிப்பிட்டேன்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் கலைஞர், நடிகர் சிவாஜி கணேசன், சக்திதாசன், வை.கோபால்சாமி, பி.ஆண்டியப்ப தேவர், முரசொலி மாறன், மரகதம் சந்திரசேகர், கருப்பையா மூப்பனார் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் முத்தமிழ் விழா 27.2.1980 அன்று நடைபெற்றது. விழாவில் சிறப்புரையாற்ற அழைக்கப் பெற்று அதில் நான் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினேன்.
தஞ்சையிலே டாக்டர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் தந்தை பெரியார் கலந்துகொண்டு பேசும்பொழுது, “கடவுள் கொடுத்த நோய்களை எல்லாம் போக்க வந்துள்ள உங்களைப் பின்பற்றிதான் நானும் கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறேன்’’ என்று குறிப்பிட்டார் என்று அப்போது குறிப்பிட்டேன்.
சென்னை பெரியார் திடலில் 09.03.1980 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் ‘இந்து ராஷ்டிர’ எதிர்ப்பு மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
கழக மாவீரர்கள் ராணுவத்தைப்போல உணர்ச்சி முழக்கமிட்டு அணிவகுத்து வந்த காட்சியை எழுதுவதற்கு வார்த்தைகள் கிடையாது!
எழுச்சியுடன் நடைபெற்ற இந்த மாநாட்டை கருநாடக மாநில முன்னாள் அமைச்சரான பசவலிங்கப்பா அவர்கள் திறந்துவைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து ஜனதா கட்சி மாநில செயலாளர் இரமணிபாய் உரையாற்றினார். “ஜனதா கட்சியிலும் உறுப்பினராக இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்.ஸிலும் உறுப்பினராக இருக்கலாம் என்ற “இரட்டை உறுப்பினர்’’ நிலையை தமிழ்நாடு ஜனதா கடுமையாக எதிர்க்கும். ஆர்.எஸ்.எஸ். செத்த பாம்பு அல்ல; அடிபட்ட பாம்பு! தமிழ்நாட்டில் எங்கள் ஜனதா கட்சித் தலைவர் பா.ராமச்சந்திரன் அவர்களை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தேர்தலில் வேலை செய்தார்கள்.
இன்றைக்கு ‘சூத்திரன்’ என்று வெளிப்படையாகச் சொல்வதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை.
இப்போது நாம் ஏமாந்துவிட்டால், எச்சரிக்கையோடு இந்தப் பிரச்சாரத்தை முறியடிக்காவிட்டால் மீண்டும் “இந்து ராஜ்ஜியம்’’ வந்துவிட்டால் “ராமராஜ்யம்தான்’’ ஏற்படும். ராமராஜ்யம் என்றால் என்ன? சூத்திரன் படிக்கக் கூடாது என்பதுதான்! சூத்திர சம்பூகன் தவம் செய்தான், அதனால் பார்ப்பனர் வீட்டுக் குழந்தை இறந்துவிட்டது’’ என்று கூறி சம்பூகனின் தலையை வெட்டினான் ராமன்; இதுதான் “ராமராஜ்யம்’’ என்று குறிப்பிட்டார்கள்.
‘இந்து ராஷ்டிர எதிர்ப்பு’ மாநாட்டில் நிறைவுரையாற்றிய நான்,
தந்தை பெரியார் அவர்கள் கட்டுப்பாடு மிக்க இயக்கத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். திராவிடர் கழகத்தின் கட்டுப்பாடு உலகப் பிரசித்திப் பெற்றதாகும்.
பாதுகாப்புக்காக வேண்டுமானால் _ சட்ட வரம்புக்குட்பட்ட கத்தியை கழகத் தோழர்கள் வைத்துக்கொள்ள தந்தை பெரியார் அனுமதி தந்திருக்கிறார். பாதுகாப்புக்காக _ தேவைப்படும் நிலை ஏற்படுமேயானால் அதைப் பயன்படுத்துவோமே தவிர நமக்கு இருக்கிற _ நாம் பயன்படுத்தும் கருவிகள் எல்லாம் பொது மேடைகள்தான், மேடைப் பேச்சுகள்தான்! அறிவு விளக்கங்கள்தான்! பேனாக்கள்தான்! எழுத்துக்கள்தான்! இந்தக் கருவிகளை வைத்தே _ ‘இந்து ராஷ்டிரம்’ மட்டுமல்ல _ அதற்கு அப்பன் பாட்டன் ராஷ்டிரத்தையே சந்திக்கக்கூடிய திராணி நமக்கு உண்டு! என்று பேசினேன்.
11.03.1980 அன்று திருத்தணி அரசினர் கலைக்கல்லூரியில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவும், அய்யா அவர்கள் படத்திறப்பு விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்லூரித் துணை முதல்வர் செல்லதுரை எம்.ஏ. அவர்கள் தலைமையில், பொதட்டூர் புவியரசன் எம்.ஏ., பி.டி. அவர்கள் வரவேற்புரையாற்ற கழகத்தின் சார்பில் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தந்தை பெரியார் அவர்கள் உருவப் படத்தினை திறந்துவைத்து சிறப்புரையாற்றினேன்.
தாழ்ந்த ஜாதிக்காரன் எச்சிலை தெருவில் துப்பக்கூடாது. அதற்காக கழுத்திலே ஒரு கொட்டாங்கச்சியைக் கட்டிக்கொண்டு அதில் துப்பிக் கொள்ள வேண்டும். இதற்கு இந்தக் கால படித்த முட்டாள்கள், “அந்தக் காலத்திலேயே சுகாதாரம் கடைபிடிக்கப்பட்டது என்பார்கள்’’ அதற்குத்தான் அய்யா கேட்பார்கள், “உயர்ந்த ஜாதிக்காரன் எச்சில் என்ன நோய் பரப்பாதா? அல்லது அவனுக்கு எச்சிலே சுரக்காதா?’’ என்று. தந்தை பெரியார் அவர்கள் பிறந்திருக்காவிடில் கல்லூரியில் படிக்கும் நம் கழுத்துகளிலும் ஒவ்வொரு கொட்டாங்கச்சி தொங்கியிருக்கும்.
இதைவிட, இராணுவ அமைச்சராக இருந்த ஜகஜீவன்ராம் அவர்கள் சம்பூர்னந்தர் சிலையை திறந்துவைத்தபோது ஏற்பட்ட குழப்பத்தைப் பார்த்தோம். ஜாதிப் படைகளை இவருடைய முப்படையும் ஒன்றும் செய்ய இயலாமல் போய்விட்டதே. இவர் திறந்ததால் சிலை தீட்டாகிவிட்டது என்று கூறி கங்கை நீரில் கழுவினார்களே! இதை நம் விடுதலைதானே கேட்டது.
ஒரு குடம் தண்ணீரால் சிலை தீட்டு நீங்கி சுத்தமாகும் என்றால் பத்து குடம் தண்ணீர் ஊற்றி ஜகஜீவன்ராம் அவர்களையே சுத்தப்படுத்தி விடலாமே’’ என்று பேசினேன்.
13.03.1980 அன்றும் தஞ்சை அரசினர் சரபோஜி கல்லூரியில் முத்தமிழ் விழா நடைபெற்றது. விழாவில் நான் கலந்துகொண்டு பேசுகையில், “மனித அறிவு என்பது ஒவ்வொரு நாளும் வளரக் கூடியது. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் வளர்ந்துகொண்டே இருக்கக்கூடிய ஒன்றாகும்.’’
மாற்றம் என்பது உடையிலே இருந்து, முடியிலே இருந்து பயன் என்ன? மனிதன் சிந்தனைகளிலே மாற்றம் வேண்டும்! செயல்முறைகளிலே மாற்றம் வேண்டும்! அந்த மாற்றங்கள் சமுதாய நன்மைக்கு சமுதாய முன்னேற்றத்துக்கு துணை செய்வதாக _ வகை செய்வதாக அமைய வேண்டும்.
பழமை என்பனவற்றையெல்லாம் உதறிவிட வேண்டும் என்பதோ _ அல்லது புதுமை என்ற காரணத்தினால் அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோகூட _ அதன் பலன் என்ன? அதன் விளைவு என்ன? என்பதைப் பொறுத்ததுதானே தவிர வேறெதற்கும் அல்ல.
நம்முடைய சிந்தனைகளிலே மாற்றம் வேண்டும், திறந்த மனதோடு சிந்திக்க வேண்டும். தாராளமாக சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலேயும் புதிய புதிய உத்திகள் தோன்ற வேண்டும், புதுமைகள் மலர்ந்திட வேண்டும் அதற்கு நம்முடைய தமிழ் எந்த அளவுக்கு பயன்படுகிறது என்பதை தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழமை’’ என்று நம்முடைய மொழியிலே இருக்கிறதே தவிர, நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளிலே, சொல்லியவற்றிலும் எந்த அளவுக்குப் பழையன கழிந்து புதியன புகுந்தது? என்பதை யோசித்துப் பாருங்கள்’’ என்று பேசினேன்.
(நினைவுகள் நீளும்)