காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது என்று ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு. அதுபோல எதேச்சையாக நடந்தவற்றை ஜோதிடத்தின் பெயரால், கடவுளின் பெயரால் நடந்தது என்று கூறி மனிதனின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் செயல் காலம் காலமாக நடந்து வருகிறது. எந்தச் செயலையும் ஏன் எதற்கு எப்படி நடந்தது என்று ஆராயாமலேயே உடனே கடவுள் செயல்; எல்லாம் விதிப்படிதான் நடக்கும் (அப்ப… கடவுள் எங்கே போனாரோ…?); அன்னைக்கே அந்த ஜோதிடர் சொன்னார் என்றெல்லாம் சொல்லி அறிவு வளர்ச்சியைத் தடுத்து வருகிறார்கள் மூடநம்பிக்கை யாளர்கள். அந்த மூட நம்பிக்கையாளர்களின் வாழ்வில் ஜோதிடன் சொன்னதற்கு எதிராகவும் நடப்பதுண்டு. ஆனால், தங்களின் பக்தி உணர்ச்சியால், கடவுள், -ஜோதிட நம்பிக்கையால் அதனை வெளியில் சொல்லமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்காகத்தான் இந்தச் செய்தி, உண்மை வாசகர் கோவை கே.கே.பாலசுப்பிர மணியம், பல்வேறு இதழ்களில் வெளிவந்த வாசகர்களது அனுபவங்களை தனது கடிதமடலின் பின்பக்கத்தில் அச்சிட்டுள்ளார். அந்த அனுபவங்கள் பேசுகின்றன:
சகுனம், சாஸ்திரங்கள், சடங்குகள், நல்ல நேரம், ராகு காலம் என்று சொல்வதெல்லாம் சும்மா ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே! நடைமுறையில் வாழ்க்கைக்கு இவை எந்த அளவு பயன்படுகின்றன என்றால் பூஜ்ஜியம் தான். சகுனம் பார்க்காமல் செய்யும் காரியம் சரியாக நடக்காது, கெட்டுவிடும் என்றால் சகுனம், சாஸ்திரங்கள் அனைத்தையும் பார்த்து செய்தால் மட்டும் என்ன வாழ்கிறதாம்?
1965ஆம் வருடம் எனது ஒரே சகோதரியை எங்களது தாய்மாமன் கே. ராமலிங்கம் (பி.இ.ஹானர்ஸ், எம்.எஸ்.சி.யில் மாநிலத்திலேயே இரண்டாவதாக தேர்வில் வெற்றி பெற்ற கோவை வி.எஸ்.ஜி. கல்லூரி மாணவர்) அவர்களுக்கு ஜாதகத்தில் நட்சத்திரம், யோகம், கரணம், ராசி, லக்கினம், திசை, புத்தி பார்த்து கரிநாள், ராகுகாலம், எமகண்டம், குளிகை, அஷ்டமி, நவமி, அமாவாசை கணக்கிட்டு நட்சத்திரம், கனம், ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை, நாடி உள்ளிட்ட 11 பொருத் தங்கள் சரிபார்த்து திருமணம் நிச்சயித்தோம். உப்பு, ஜவுளி வாங்க, தாலி செய்யக் கொடுக்க, வாங்க, ஜவுளி எடுக்க, முகூர்த்தப் புடவை வாங்க, பத்திரிகை அடிக்க, கொடுக்க, விநியோகிக்க, நேரம் காலம் பார்த்து, சகுனங்கள், சடங்குகள் சாத்திரங்களைப் பின்பற்றி வைதீக திருமணம் செய்து வைத்தோம்.
முகூர்த்த நேரத்திற்கு சில மணி நேரம் முன்பாகவே மின்சாரம் இல்லை. பெட்ரோ மாக்ஸ் விளக்குகளின் உதவியுடன் சடங்குகள் நடந்து, மணமகன் தாலிகட்டப் போவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக மின்சாரம் வந்துவிட, திருமணத்திற்கு வந்திருந்த அனை வருமே அந்நல்ல (!) சகுனத்தைப் போற்றிப் பேசினர். திருமணம் முடிந்த 6 மாதங்களுக்குள் ளாகவே எனது மைத்துனர் பாலக்காடு சென்று நண்பருடன் வரும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
தனது தம்பி இறந்த அதிர்ச்சியிலும், பயத்திலும் எனது மூத்த தாய்மாமன் கோவை கடை வீதியில் இருந்த மின்சார சாதனங்கள் கடை, பருத்தி விதைக் கடை, அரிசிக் கடை ஆக மூன்று கடைகளிலும் வியாபாரத்தைக் கவனிக்காமல் செய்வினை, ஏடு, நாடி, முகராசி, விளக்கு, ப்ரஸ்ன ஜோதிடங்கள், மனையடி (அந்நாளைய வாஸ்து), எண் கணிதம், கைரேகை, ஜோதிட பரிகாரங்கள் என 1975 வரை 10 வருடங்களுக்கு இம்மாதிரி கலைகளிலேயே நாட்டம் கொண்டு நிறைய பணம் செலவழித்து தனது 38ஆவது வயதில் வேலூர் மருத்துவமனையில் காலமானார். சகுனங்கள், ஜாதகப் பொருத்தங்களில் ஏதுமில்லை என்பதையே இந்த நிகழ்ச்சி எங்களுக்கு உணர்த்தியது.
பாம்பு புரோட்டா சாப்பிடலாமா?
பாம்புக்குக் காது கிடையாது. அசைவையும், அதிர்வையும் கொண்டே அது அறிந்துகொள் கிறது. பாம்புக்கு காது கேட்குமெனில் நீயா படத்தில் மகுடி ஓசை வரும்போதெல்லாம் தியேட்டருக்குள் பாம்புகள் நுழைந்துவிடாதா? பாம்பு பால் அருந்தாது, உலகில் 3,000க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் இருந்தாலும் அவற்றில் 5 சதம் பாம்புகள் மட்டுமே விஷமுடையவை, எனினும், பாம்புப் புற்றில் பாலூற்றி வருவதற்குக் காரணம் பயமே. இவை ஒருபுறமிருக்க, கிரக (?) அடிப்படையில் கணிக்கப்படும் ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் எனவும் சர்ப்ப தோஷம் நீங்க பரிகாரம் எனவும் கூறப்படுவது வேடிக்கை!
பாம்பைப் பார்த்தவுடன் பயத்தில் (!) அடித்துக் கொன்றுவிட்டு, அதற்குப் பாலூற்றி எரிப்பது கொடுமை!
பாம்பு பழிவாங்கும், கண்ணைக் கொத்தும், பாம்பு கடித்த விஷத்தை மகுடி ஓசை கேட்டு அப்பாம்பே திரும்ப வந்து உறிஞ்சுவது (மகாதேவி) என்பதெல்லாம் அப்பட்டமான பாம்புப் புராண புளுகு கதைகள். தொலைக் காட்சியின் உதவியால் பாம்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பிருந்தும், சில நாடுகளில் பாம்பை கொத்துப் புரோட்டா வாகவும், பாயாவாகவும் மக்கள் சாப்பிடுவதைப் பார்த்த பின்னரும் பாம்பைப் பற்றிய மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட மறுப்போரை என்னென்பது? அப்பளக் கம்பெனியாரின் வாஸ்து சாஸ்திரம்
எனக்குப் பாத்தியப்பட்ட கட்டிடத்தில் அப்பளம் தயார் செய்யவென வாடகை பேசி ரூ.1,000 டோக்கன் அட்வான்ஸ் கொடுத்தவர் கள், இரண்டு நாளில் ஆவணி மாதம் முடிகின்றபடியால் அடுத்தநாளே வந்து பூஜை செய்து, நிறுவனத்தை ஆரம்பித்து விடுவதாகச் சொல்லிச் சென்றனர். அந்த இடத்தைச் சுத்தம் செய்து ரிப்பேர் வேலைகளுக்காக ரூ. 2,000க்கு ஹாலோபிளாக் கற்கள், சிமெண்ட் வாங்கி வைத்தேன். ஆனால், அவர்கள் சொல்லியபடி பூஜையும் போடவில்லை; நிறுவனத்தையும் ஆரம்பிக்கவில்லை. என்ன விவரம் என்று தெரிவிக்கவும் இல்லை.
என்ன விஷயம் என்று விசாரித்தபோது வாஸ்து சாஸ்திரப்படி (?) என்னுடைய இடத்தில் உள்ள நீர் செழிப்புள்ள மிகப்பெரிய பாறைக்கிணற்றை மூடவேண்டு மென்று அவர்களுக்கு வாஸ்து நிபுணர் (!) ஒருவர் கூறியிருப்பதாகத் தெரிந்தது. வாஸ்தோ, மனையடி சாஸ்திரமோ அதை அவரவர் வீட்டிற்குள் பார்த்துக் கொள் ளுங்கள். வாடகைக்குச் செல்லும் இடத்தில் கிணற்றை மூடு; கட்டிடத்தை இடி; வாசலை மாற்று என்று கூறுவதென்ன நியாயம்? சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 110 மாடிக் கட்டிடம் தரைமட்டமானதற்கும், இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட் டதற்கும் வாஸ்து சாஸ்திரமா காரணம்? ரூ. 1,000 அட்வான்ஸ் வாங்கியதற்காக ரூ. 3 லட்சம் செலவு செய்த நீருள்ள கிணற்றை நான் மூடமுடியுமா?
வாசகர்களே! உங்கள் வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெற்றிருந்தால் உண்மைக்கு எழுதி அனுப்புங்கள்.