தமிழக காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த சிலை கடத்தல் வழக்கில், சர்வதேச கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர்தான் சூத்திரதாரி என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் சிலைகள் திருடப்படுவது 1995லிருந்து தொடர்ந்து நடக்கிறது. தமிழக அரசு 2011இல் சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.அய்.ஜி.யாக பொன்.மாணிக்கவேலை நியமித்தது.
அவர் சிலை கடத்தல்காரர்களைப் பிடிக்க களத்தில் இறங்கினார். சென்னையில் அபர்ணா ஆர்ட் கேலரி நடத்தி வந்த தீனதயாளன் உள்ளிட்ட 11 பேரை சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தார். தீனதயாளன் கொடுத்த வாக்குமூலத்தால்தான் சிலை கடத்தலில் சர்வதேச நெட் ஒர்க் இருப்பது தெரியவந்தது.
“தமிழக கோயில்களில் சிலைகளை கொள்ளையடித்தது சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர். 63 வயதான அவன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘ஆர்ட்ஸ் ஆப் தி பாஸ்ட்’ என்கிற ஆர்ட் கேலரியை நடத்தி வந்திருக்கிறான். கபூருக்கு, இந்திய ஏஜென்டாக விளங்கியவன் தீனதயாளன்.
உடனே இன்டர்போல் மூலம் அமெரிக்க போலீசுக்கு தகவல் அனுப்பினார் பொன்.மாணிக்கவேல். அதன் அடிப்படையில் அமெரிக்க போலீசார் கபூரின் ஆர்ட் கேலரியில் சோதனை நடத்த, கம்ப்யூட்டரில் இருந்த 468 சிலைகளில் 32 அய்ம்பொன் சிலைகள், தமிழகத்தில் திருடப்பட்டவை என்பது தெரிய வந்தது.
அதையடுத்து, கபூரின் ஆர்ட் கேலரி மேலாளர் ஏரோன் பிரிடுமேன், காதலி செலினா முகமது, அக்கா சுஷ்மா ஷெரின், பார்ட்னர் நான்சி வியன்னர் ஆகிய நால்வரை கைது செய்தது அமெரிக்க போலீஸ். அந்த நால்வருமே அப்ரூவராக மாறியிருக்கிறார்கள்.
“கடந்த 2012ஆம் ஆண்டு வேறொரு சிலை கடத்தல் வழக்கில் ஜெர்மன் போலீசாரால் கைது செய்யப்பட்ட கபூர், கொஞ்ச நாளில் தமிழ்நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டான். தமிழக கோயில் சிலை திருட்டின் சூத்திரதாரி கபூர்தான் என்பது உறுதியானதும் அவனை காவலில் எடுத்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கபூர் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் வரலாற்று பிரிவுக்கு விசிட் அடிப்பது வழக்கமாம். அப்போது கோயில்கள் பற்றி மாணவர்கள் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை-களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் ஒரு மாணவர் எழுதிய தமிழக கோயில்களில் உள்ள அய்ம்பொன் சிலைகளின் பட்டியல் கிடைத்திருக்கிறது.
குறிப்பாக, நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் உள்ள அய்ம்பொன் நடராஜர் சிலையின் மதிப்பு அளவிட முடியாதது என்பது தெரிந்திருக்கிறது. அதற்காகவே அவரது தொழில் பார்ட்னர்கள் மும்பையைச் சேர்ந்த இந்தோ_நேபாள் ஆர்ட் கேலரி உரிமையாளர்கள் ஆதித்யா பிரகாஷ், வல்லபாய் பிரகாஷ், சூரிய பிரகாஷ் மற்றும் தீனதயாளன் ஆகியோருடன் பழவூர் கோயிலுக்குச் சென்ற கபூர், பூசாரியை நன்கு கவனித்து அய்ம்பொன் நடராஜர் சிலை உள்ளிட்ட எல்லா சிலைகளையும் புகைப்படம் எடுத்திருக்கிறான். பின்னர் அவற்றை தூக்குமாறு தீனதயாளனுக்கு உத்தரவு கொடுத்துவிட்டு மீண்டும் அமெரிக்க சென்றான்.
தீனதயாளன், காரைக்குடி தினகரன், சக்தி மோகன், சவூதி முருகன், பாலச்சந்திரன் ஆகியோர் துணையுடன் 13 சிலைகளை கொள்ளையடித்திருக்கிறான். அதில் ஒன்பது சிலைகள் மீட்கப்பட்டன. மற்ற சிலைகள் அமிலம் மூலம் உருக்கப்பட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தவிர, நடராஜரின் கையை அறுத்து எடுத்த மதுரை நகைக்கடை அதிபர் சக்தி மோகனின் தலையை அறுத்து கொலை செய்துள்ளார்.
கையில்லாமல் வந்த நடராஜருக்கு அமெரிக்-காவைச் சேர்ந்த நீல்பெர்ஸ்மித் என்பவர் புதிய கை பொருத்தியிருக்கிறார். 1995 முதல் 2005 வரை தமிழக கோயில்களில் கபூர் கொள்ளை-யடித்த சிலைகளின் மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய்.
கபூர் ஜெர்மனியில் இருந்தபோது, அமெரிக்காவில் உள்ள தனது ஆர்ட் கேலரி மேலாளர் ஏரோன் பிரிடுமேனுக்கு, ‘சுத்தமல்லி கோயிலில் கொள்ளையடித்த நடராஜர், சிவகாமி சிலைகளை கேலரியிலிருந்து போலீசுக்கு தெரியாமல் அப்புறப்படுத்து’ என்று எழுதிய இமெயில் தமிழக காவல்துறைக்குக் கிடைத்துள்ளது.