இன்னும்…
சுதந்திரப் போராட்ட வீரர்கள்
சாலைகளில், – சந்து தெருக்களில்
எங்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்
ஜாதிச் சங்கப் பலகைகளில்
இன்னும் தீரத்துடன்
– வாலிதாசன், முகவை
மனிதரே இல்லை!
குறையில்லா…
மனிதரில்லை!
குறைகளைக்
களையாதார்…
மனிதரே, இல்லை!!
இடி!…
ராஜகோபுரங்களின்
பாதுகாப்புக்கு…
இடிதாங்கி!
இறை நம்பிக்கைக்கு
இடி!!
சர்வ சக்தியோ சாம்பல்!!!
– நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பார்வை
குறுக்கு மாராப்பில்
குளத்தில் என்
தங்கை
குறு… குறு…
பார்வையில்
விநாயகர்
பயம்
உண்டியல்
நிரம்பியது – ஊர்கூடி
எண்ணத் தொடங்கியது
சாமிக்குப் பயம்
எவ்வளவு
குறையுமோ…
– சு.ஷோதி, ஆர்சுத்திப்பட்டு
எரிக்கிறது வெயில்
இரண்டு நிமிடம் நிற்க இயலவில்லை
எரிக்கிறது வெயில்
எரிகிறது தோல்…
இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல இயலவில்லை
எட்ட நின்று பேசினாலும் வியர்வை நாற்றம்
எதிரில் நிற்பவரிடம் –
உடலில் தேய்த்துக் குளிக்கிறது குழந்தை –
அய்ஸ் கட்டியை ஏசியிலே இருப்பவர்கூட
இன்பச் சுற்றுலாவுக்கு
அதிகாலையில் வேலையை முடித்துவிடவும்
அந்திசாய்ந்தபின் வேலையைத் தொடரவும்
ஏங்குது மனம் –
குடித்த குவளை நீர்
கொட்டுகிறது வியர்வையாய் –
எரிக்கிறது வெயில்
எரிகிறது தோல்…
சுட்டெரிக்கும் சூரியனே –
எதை உணர்த்துகிறாய் எங்களுக்கு?
எரிக்கும் வெயிலையே தாங்கமுடியவில்லையே –
ஈழத்தில் எரிந்த உடல்கள்
எப்படித் துடித்திருக்கும்…
நாக்கு வறண்டு போச்சு
நெஞ்சில் ஈரம் காஞ்சு போச்சு
எரிக்கிறது வெயில்
எரிகிறது வயிறு…
– முத்தழகன் சாத்தப்பன், கோனாபட்டு
ஆடிமாசம்
ஆடிமாசம் தொடங்கிடுச்சி
ஆங்காங்கே சுவரொட்டியும் பொறந்திடுச்சி
இந்த வாரம் எனக்கு
அடுத்த வாரம் உனக்கு
இப்படியே இருக்கு இன்னும்
பலவாரக் கணக்கு
புரியலடா சாமி, மாசத்திற்கு எத்தனை வாரம்?
புரியாம குதிக்குதடா ஒரு சில அவதாரம்,
குடிச்சிப்புட்டு கூத்தடிக்க இதுவும் ஒரு சாக்கு
காலங்காலமாய் தொடருது தவறாம இந்தப் போக்கு
இரவானா குடிச்சிட்டு பொண்டாட்டிய மிதிப்பான்
மாலை ஒன்னு போட்டதும் மாறுதலாய் தீ யை மிதிப்பான்
வேலைவெட்டி இல்லாம ஊருக்குள்ள சுத்துனவன்
தலையில் குடத்தவெச்சு சாமின்னு சுத்துறான்
நாக்குல ஒரு அடி அலகு குத்துறான், கூடியிருக்கும்
புத்திசாலி எல்லாம் பக்தினு கத்துறான்
சொந்தமா வீடில்லாதவனும் வீதிவீதியா சுத்துறான்
கையில் உண்டியல ஏந்தி நன்கொட பொறுக்கிறான்
வாயில்லா உசுருகள கொடூரமா கொன்னுப்புட்டு
வயிறார சப்புக்கொட்டி மிச்சமில்லாம தின்னுப்புட்டு
ஆண்டவன் சொன்னதா அமைதிய போதிப்பான், இருக்கிற கொஞ்ச அறிவையும் பக்தியில மூழ்கடிப்பான்
ஊரே கூடி ஒன்னா கூத்தடிக்குது
திருவிழா முடிஞ்சதும் ரெண்டுபட்டுக் கிடக்குது
இதெல்லாம் பொய்யினு தெரியாத வரைக்கும்
ஆன்மிக கூட்டம் உன் கையிருப்ப கரைக்கும்
இல்லாத ஒன்னும் எதுக்குடா நமக்கு?
சமுதாயமே இதனால பாழ்பட்டுக் கிடக்கு பகுத்தறிவ புரிஞ்சு நல்லதுனு ஒத்துக்கோ மனுசனா வாழ இப்பவாவது கத்துக்கோ!!
– புதுவை ஈழன்