சிறுகதை

ஆகஸ்ட் 01-15

பொருத்தம்

– கலைஅரசி

சாயங்கால நேரத்தைக் கடந்து மெல்ல இருள் பரவ ஆரம்பித்தது. ஆனந்தி பொறுமை இழந்து பலமுறை கைத்தொலைபேசியில் அழைத்தும், மறுமுனையில் இருந்து எந்த பதிலும் இல்லை. அடைத்துவிட்ட ஒலிதான் மீண்டும் மீண்டும் கேட்கிறது. என்ன செய்வது? இதற்கும் மேல் அங்கிருப்பதைவிட, நாளை நேராக சிவாவின் அலுவலகம் சென்று பார்த்துவிட வேண்டியதுதான் என எண்ணியபடி அவ்விடத்தை விட்டு விரைவுப் போக்குவரத்து நிலையத்தை நோக்கி நடந்தாள்.

ஆனந்தி, கல்விக்கழகத்தில் இறுதியாண்டு ஆசிரியர் பயிற்சியில் பட்டம் பெற படிப்பவள். இதற்கு முன் சில மாதங்கள் தனியார் நிறுவனத்தில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தாள். அங்குதான் வங்கியில் கணக்கராக வேலை பார்க்கும் சிவாவின் நட்புக் கிடைத்தது. நட்பு மெல்ல மெல்ல காதலாகியது. ஆனந்தி பெற்றோரின் ஒரே செல்லப் பெண். அவளுக்கு இரு மூத்த அண்ணன்கள் இருந்தாலும், அவர்கள் திருமணம் முடிந்து, குடும்பத்தோடு தனியாக வாழ்ந்து வந்தார்கள். ஆனந்தியின் சுதந்திர சிந்தனையைப் பார்த்து பூரித்துப் போவார்கள் அவளின் பெற்றோர்.

சில நாட்களுக்கு முன்தான், பட்டம் பெறும் கையோடு திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற தனது முடிவை சிவாவிடம் கூறினாள் ஆனந்தி. நான்கு ஆண்டுகள் காத்து இருந்தவன் இச்செய்தியைக் கேட்டு வார்த்தைகளால் தனது மகிழ்ச்சியை வெளிக்காட்ட முடியாமல் திக்குமுக்காடிப் போனான். அதனால், அன்று ஆனந்தியுடன் பிரபலமான ஓட்டலில் இரவு உணவு உண்டான். சிவப்பு ரோஜா மலர்க்கொத்து கொடுத்தல், அய்ஸ்கிரீம் என தடபுடலாகக் கொண்டாடினர். அன்று இரவு, அவளை வீட்டின் அருகில் விடும்பொழுது, நாளை சந்திக்கும்போது, என் பெற்றோர்களின் சம்மதம் பெற்று, உன்னைச் சந்திக்க வருவேன் என்று கூறிச்சென்றான் சிவா.

அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு ஆனந்தி மட்டும் தொடர்ந்து வருகிறாள். அவன் வரவில்லை. வராமல் இருக்கக் காரணம். சம்மதம் கிடைக்கவில்லையா? என்கிற அவளின் முடிவுதான், அவனை நேரில் சந்தித்து நடந்த விவரத்தைத் தெரிந்து கொள்வது என்பது.

காலை நேரம். சற்று சீக்கிரமாகவே கிளம்பி, சிவாவின் அலுவலகம் வந்தடைந்தாள் ஆனந்தி. அங்கு வந்த பின்தான் அவன் அவசர விடுப்பில் சென்றிருப்பது தெரிய வந்தது.- ஏமாற்றத்துடன், சரி, என்ன செய்வது சிவாவின் வீட்டு முகவரி தெரிந்திருந்தும் நடந்த விவரம் என்னவென்று தெரியாமல் அவர்கள் வீட்டிற்குச் செல்ல, அவளுக்குப் பிடிக்கவில்லை. சோர்வுடன் அருகில் இருந்த விரைவு உணவுக் கடைக்குள் நுழைந்தாள். சாப்பிட மனம் ஒப்பவில்லை என்றாலும் அந்த இடத்தில் அமர்ந்து இருக்க வேண்டுமே என ஒரு சூடான தேநீர் மட்டும் வாங்கிக்கொண்டு கிடைத்த காலி இருக்கையில் வந்தமர்ந்தாள்.

என்ன நடந்து இருக்கும். ஒரு போன் போட்டுக்கூட சொல்லாமல் இருக்கிறாரே என விரக்தியோடு நினைக்கும் பொழுது, அவளின் கைத்தொலைபேசியின் அழைப்பு ஓசை கேட்கிறது. எடுத்துப் பார்த்தவள், மகிழ்ச்சியுடன் ம்… நான்தான் பேசுகிறேன் என்றாள். மறுமுனையில் எங்கே இருக்கிறே என்றதும், இங்கேதான் உங்க அலுவலகத்தின் அருகில் உள்ள விரைவு உணவுக்கடையில் என்றாள். அப்படியா, சரி உடனே கிளம்பி, நாம் சந்திக்கும் அந்த இடத்திற்கு வந்துவிடு என கூறிவிட்டு பதிலுக்குக்கூட காத்திராமல் கைத்தொலை பேசியை நிறுத்திவிட்டான். சரி, கேள்விக்கு ஒரு விடை கிடைத்துவிடும் என்று நினைத்த ஆனந்தி, வாங்கியது சூடான தேநீர், உடனே குடிக்க சிரமமாக இருக்கும் என்பதால் அதை அப்படியே வைத்துவிட்டுக் கிளம்பினாள்.

சந்தித்து சிறிது நேரம் ஆகியும் மவுனம்தான் நிலவியது. ஆனந்தி மட்டும் ஓர விழியால் சிவாவை நோட்டமிட்டாள். அவன் சற்று களைப்பாகவும், குழப்பத்துடனும் காணப்படுவதை நன்கு உணர்ந்தாள். தொண்டையைச் சற்று செருமிக் கொண்டே பேச ஆரம்பித்தான் சிவா. ஆனந்தி… என நிறுத்தினான். பிறகு மெல்ல தொடர்ந்தான். அவள் அவனையே என்ன சொல்லப் போகிறான் என்று பார்த்த வண்ணம் இருந்தாள். என்னை… மன்னித்துவிடு. மீண்டும் நிறுத்தினான். இதற்குள், ஆனந்தி ஊகித்துவிட்டாள். அவனே தொடர்ந்தான். என் வீட்டில் ஜாதகப் பொருத்தம் பாக்காமல் கல்யாணத்திற்குச் சம்மதம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். தொடர்ந்து பேச வாய் திறந்தவனைப் பார்த்து, போதும் என்பதை கை அசைவால் காட்டியவள் இப்போ, உங்க முடிவு, நான் எவ்வளவோ சொல்லிவிட்டேன். உனக்கு இதிலே நம்பிக்கை இல்லே என்கிறதை எடுத்துச் சொல்லியும்கூட  என் அம்மாவும் பாட்டியும் ரொம்பப் பிடிவாதமாக இருக்காங்க. நானும், உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று உறுதியா சொல்லியதைக் கேட்டு, என் அம்மாவும், பாட்டியும் எடுக்க வேண்டிய மருந்தை நிறுத்தியதாலே ரொம்ப முடியாமப் போயிட்டாங்க. நேற்றுதான் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்கள். என் அப்பாவும் அவங்க பிடிவாதத்தைப் பார்த்து, அவரும் இப்ப அவங்க பக்கம் சேர்ந்துவிட்டார் என மூச்சுவிடாமல் கூறியவன், நிறுத்தி… என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அதான், நீ ரொம்பவும் முற்போக்கோட பேசுவே, சொன்னால், புரிந்து நடந்து கொள்வே என்கிற நினைப்போடுதான் பேச வந்தேன்.

அப்பா, அம்மாவிற்கு ஒரே பிள்ளையா இருக்கிறது ரொம்பப் பிரச்சினையா இருக்கு. அவங்களும் வார்த்தைக்கு வார்த்தை கல்யாணம் ஆகி சில ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன், பிறந்த ஜாதகம் பார்த்துத்தான் பெயர் வைத்தோம்.

அதான் சிறீபிரகீஸ்வரர், அது பிடிக்கலனு சொன்னேன். சிவானு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அது பரவாயில்லையாம். ஆனா இப்போ, உனக்குப் பிடித்த பொண்ணோட ஜாதகப் பொருத்தம் சேரலனா .. ஒன்னும் முடியாது என்று முடிவா சொல்லிட்டாங்க.

எங்க நான் பிடிவாதமா இருந்தா, அவங்களை இழந்துவிடுவேனோ என்கிற பயத்தால், கடைசியா… அவங்களுக்காக… நம்.. காதலை.. மறந்து … விடலாம்… என தொடர்ந்து பேச முடியாமல் மென்றுவிழுங்கி தடுமாறுகிறவனை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள் ஆனந்தி.

தலையைக் குனிந்துகொண்டு வருந்தும் அவனை அதற்கும் மேல் பார்க்கப் பிடிக்காமல், அவனிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டாள் ஆனந்தி.

சுமார் எட்டு மாதங்கள் கடந்து இருக்கும். சிவாவின் வீடு. போட்ட பொருள்கள் எல்லாம் போட்டபடி கிடக்கின்றன. சமையல் அறையும் அலங்கோலமாக இருப்பதைப் பார்க்கவே ரொம்ப கஷ்டப்பட்டார்கள் அவனின் பெற்றோரும் பாட்டியும். அன்று, முதல் ஆடிவெள்ளி என்பதால் மாலையில் பூஜை செய்யவேண்டும். கொஞ்சம் பொறுமையா இருந்து எல்லாவற்றையும் பார்த்துச் செய் என்று ஒரு வார்த்தைதான் கூறியிருப்பாள் பாட்டி. கையில் மைக் ஒன்றுதான் இல்லை. நான் என்ன, இந்த வீட்டு வேலைக்காரியா? பொறுமையா செய், பார்த்து செய் என்று கேட்டுக்கொண்டு இருக்க, நான் உங்க பேரனோட பொண்டாட்டி, அத மறந்து விடாதீங்க என்று கோபத்தோடு கத்திப் பேசினாள். கையில் கிடைத்த எதையோ எடுத்து வீசினாள். அதோடு நிறுத்தாமல் சமையல் செய்கிறேன் என்கிற பெயரில் ஒரு ஒலிம்பிக் பந்து வீச்சே நடந்து கொண்டிருந்தது.

புதிதாக வந்த மருமகளின் குணம் தெரிந்தும் வாய்தவறி சொல்லிவிட்டோமே என்று தனது அறையில் படுத்தபடி விசும்பிக்கொண்டிருந்தாள் பாட்டியம்மாள். அவளின் பக்கத்தில் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தனர் சிவாவின் பெற்றோர். வேதனைகள் பெருமூச்சுகளாக வெளிவந்தன. நாம் சொன்னோம் என்பதற்காக காதலித்த பொண்ணைக்கூட வேண்டாம் என்று பேரன் சிவா சொல்லியதைக் கேட்டு எவ்வளவு சந்தோஷப்பட்டோம். பிறகு, அவனோட ஜாதகத்தோட 9 பொருத்தங்கள் பொருந்தியது… என்று இவளை முடிச்சா வந்த நாளில் இருந்து, ஒரு நாள்கூட நிம்மதியா இருக்க முடியல… இவ அடாவடியை எங்களோட நி-றுத்திக்காம, அவனையும் போட்டு படுத்துறா!… என்று கண்களின் ஓரங்களில் வழியும் கண்ணீரை புடவையின் தலைப்பால் துடைத்துக் கொள்கிறாள் பாட்டியம்மா.

இரவு ஏழுமணி இருக்கும். வாசலின் அழைப்பு மணி ஒலிக்கிறது. சிரித்த முகத்துடன் கதவைத் திறந்தாள். சிவா அவளுக்கு ஒரு புன்னகையைப் பூத்தபடி எங்கே அவர்கள்? வேறு எங்க, எல்லாம் அவர்கள் போகும் இடம்தான், இன்றைக்கு ஆடி வெள்ளியாம், என்றவள் காலையில் நடந்ததைக் கூறினாள். அப்படினா! பெரிய ரகளையே செய்துட்டேன்னு சொல் ஆமாங்க, வேறு வழி என்று சிவாவின் அருகில் அமர்ந்து கொண்டாள் ஆனந்தி.

ஆனால், சிவாவின் மனத்திரையில் மட்டும், அன்று ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றவள், இனிமேல் தன்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டாள் என்று நினைத்தவனுக்கு, மறுநாள் காலை, முதல் மின்னஞ்சலே அவளிடம் இருந்துதான் வந்திருந்தது. அதில் அவள் அடைந்த மனவேதனையும், சற்றும் எதிர்பார்க்காத அவனின் முடிவும் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருப்பதாக எழுதி இருந்தாள்.

ஆனால், மனப்பூர்வமாகப் பழகிய நட்பை, காதலை, இப்படி ஒரு பொய் புரட்டுக்குப் பலியாக்க விரும்பவில்லை என்றும் அவளின் பக்கத்து வீட்டில் வசித்துவந்த தமிழாசிரியர் ராமசாமி அய்யா அவர்கள் கூறிய பல விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, மனத்தெளிவு பெற்ற தன்னால் அவனின் முடிவுக்கு உடன்பட முடியாது என்றும் உறுதியாக எழுதி இருந்தாள்.

ஜாதகம் என்கிற பெயரில் பெண்களுக்கு இழைக்கப்படும் அர்த்தமற்ற அநீதியை, அத்துடன் செவ்வாய் தோஷம் வேறு. யாரோ எழுதிக் கொடுக்கும் காலநேரம், கோடு, வட்டம் என்பது எல்லாம், இன்றும் பல பெண்களுக்குத் திருமண வாழ்க்கை தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. அல்லது, பரிகாரம் என்கிற பெயரில் கேலிக்கூத்து நடக்கிறது. எப்படி சிவா? உங்களால் கணக்குத்துறையில் வேலை பார்த்துக் கொண்டு வீட்டில் நடக்கும் மிரட்டல் நாடகத்திற்கு ஒத்துப் போக முடிகிறது. என்னால் முடியாது. என்னை மட்டும் திருமணம் செய்ய விரும்புவது உண்மையென்றால் நான் சொல்வதைப்போல் செய்யுங்கள் என்று தொடர்ந்து எழுதி இருந்தாள். அவற்றைப் படிக்கப் படிக்க யாரோ தலையில் தடிகொண்டு தட்டுவதைப் போல இருந்தது அவனுக்கு.

சொன்னாலும் புரியாது என்றுதானே, இப்படியெல்லாம் செய்கிறேன். அவர்களும் விரைவில் புரிந்துகொள்வார்கள். அதுவரை கொஞ்சம் பொறுமையா இருங்க, அவர்கள் முன்னாலே எலியும்,பூனையுமா…! இருப்போம். எல்லாம் அய்யா வழியில் முடியும்வரை, அன்று, சொல்லுங்கள் உங்க ஆசையை என்று சிவாவின் தோளைத் தட்டிக் கொடுத்தாள்.

எப்பொழுதும், ஆனந்தியிடம் காணப்படும் உற்சாகமான பேச்சும், உறுதியும்தான் அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தன.

அதுசரி, எப்படி என்னோட பொருந்திப் போன உன் தோழி சூசனின் ஜாதகம், இப்போ வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள வைத்தது, என்று கண்களைச் சிமிட்டியபடி அவளைப் பார்த்துச் சிரித்தான். அவனின் குறும்பை ரசித்தபடி வெட்கத்துடன் தலைகுனிந்தாள் ஆனந்தி. இந்தக் காதல் தம்பதிகளுக்கு அப்பொழுது தெரியாது. அன்று பூஜைக்கென்று சென்றவர்கள், அதில் கலந்துகொள்ள மனம் இல்லாமல், அங்கே இருந்த படிகளில் அமர்ந்தனர்.

அந்த மூன்று பெரியவர்களும் மனவருத்தத்துடன் ஒருவருக்கொருவர் ஆறுதலாகப் பேசிக்கொள்ளும்போது, நாம பெரிய தப்பு செய்துவிட்டோம். சிவா, விரும்பிய அந்தப் பொண்ணு ஜாதகம் பொய் என்று நல்லாத் தெரிந்து வைத்துக் கொண்டு, கடைசி வரை பிடிவாதமா இருந்து பிரிந்து போனாளே, அந்தப் பெண்ணை ரொம்பப் பாராட்டுறேன். ஒரு நாளைக்கு அந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்ல வேண்டும் என்றுசொல்லி முடிக்கும்பொழுது, அங்கு வந்த உறவுக்காரப் பெண் ஒருத்தி, இவர்களைப் பார்த்து நலம் விசாரித்தாள்.

பிறகு, தனது மகளுக்கு வரன் வந்து இருப்பதால், அங்கு ஜாதகப் பொருத்தம் பார்க்க வந்திருப்பதாகக் கூறி முடிக்கும் முன்னரே, அந்த மூன்று பெரியவர்களும் ஒரே நேரத்தில் வேண்டாம் அம்மா வேண்டாம். அது எல்லாம் ஒன்னும் பார்க்காதே, பேசாமல் போய் உன் மகளின் மனசுக்குப் பிடித்த வரனாப் பார்த்து கல்யாணத்தை முடி. இது எல்லாம் பொய், சுத்தப் பொய் என்று ஒன்று சேரக் கூறியதைக் கேட்டு திக்கென்று இருந்த அந்தப் பெண் அவர்களைப் பார்த்தபடி நின்றாள்.

இது பொய் அல்ல  ஒரு உண்மையின் ஆரம்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *