Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நிலவாக,கதிராக ஆசிரியர் வீரமணி நீடு வாழ்க!

 

அய்யாவின் அடிச்சுவட்டில் பயணிக் கின்ற
    ஆற்றல்மிகு பேச்சாளர்; அறிவுத் தோப்பு;
மெய்யாக உழைக்கின்ற மேன்மை மிக்கார்;
    மிடுக்குடனே பகுத்தறிவைப் பரப்பும் நல்லார்!
பொய்யுரைக்கும் வேதங்கள் மனுநூல் கீதை
    புராணத்துக் குப்பைகளின் புரட்டைக் கூறி
உய்வுக்கே பாடுபடும் எழுத்து வேந்தர்;
    உலகுபுகழ் பெரியாரின் உண்மைத் தொண்டர்!

ஆசிரியர் என்றாலே நமது நாட்டில்
    அய்யாவின் பிறங்கடையாய் வாழு கின்ற
மாசில்லா மனமுடையார், இனத்தின் மீட்பர்
    மானமிகு வீரமணி அய்யா என்பர்!
காசுபணம் குறிக்கோளாய் உடைய நாட்டில்
    கலங்காமல், இனப்பகைவர் எதிர்ப்பை யெல்லாம்
தூசெனவே எண்ணுகிற துணிவு மிக்கார்!
    தொண்டுக்கோர் அடையாளம் இவரே ஆவர்!

அயராத பேருழைப்புச் சுரங்கம்; நாட்டோர்
    அனைவருமே வியக்கின்ற கொள்கைக் கோட்டம்
உயர்வுக்குப் போராடும் நெருப்பு நெஞ்சம்
    ஒடுக்கப்பட் டோர்நலனைக் காப்ப தற்கே
தயங்காமல் கொடியேந்திப் படைதி ரட்டித்
    தன்மான உணர்வூட்டும் எழுச்சி வேங்கை
வியத்தகுநம் ஆசிரியர் எண்பான் நான்கில்
    வீறுநடை போடுகிறார்! வாழ்த்து வோம்நாம்!

ஆரியமாம் நச்சரவை வீழ்த்த நாளும்
    அஞ்சாமல் அய்யாவை நெஞ்சுள் வைத்து
வீரியமாய் வெகுண்டெழுந்து போர்தொ டுக்கும்
    வீரமணிப் பெருந்தகையர் ஈகம் யாவும்
பேரிமயம் நிகர்த்ததென ஞாலம் சொல்லும்!
    பிற்போக்கு மடமைநெறிச் சழக்கை என்றும்
நேரெதிர்க்கும் விடுதலையின் ஆசான், வானின்
    நிலவாக, கதிராக ஒளிர்ந்து வாழ்க!

முனைவர் கடவூர் மணிமாறன்