பார்ப்பனரின் ஜாதித்திமிரும், புல்லாங்குழல் வித்வான் திரு.சாமிநாதப் (பிள்ளை) அவர்களின் சுயமரியாதையும்
(பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத வித்வான்களைக் கச்சேரிகளில் மாத்திரம் இழிவுபடுத்துவது அல்லாமல் சங்கீத மாநாடுகள் கூட்டி நம்மவர்களை வரும்படி செய்து அங்கேயும் இழிவுபடுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். 1930 இல் காரைக்குடியில் நடந்த சங்கீதக் கச்சேரியில் புல்லாங்குழல் வித்வான் திரு. சாமிநாதப் பிள்ளை அவர்களை ஜாதித் திமிர் கொண்ட பார்ப்பன வித்வான்களும், பார்ப்பனர்களும் எப்படி இழிவுபடுத்தினார் கள் என்ற நிகழ்ச்சி கீழே தரப்படுகிறது.
இச்செய்தி திராவிடன் பத்திரிகையில் அக்காலத்தில் வெளிவந்திருக்கிறது. அதை குடிஅரசு மீண்டும் வெளியிட்டு பார்ப்பனர்களின் ஜாதித் திமிரை வெளிஉலகுக்குப் பறை சாற்றுகிறது.)
சென்ற ஆண்டில் காரைக்குடியில் நடந்த சங்கீதக் கச்சேரியில் புல்லாங்குழல் வித்வான் திரு. சாமிநாத பிள்ளையவர்கள் தலைமை வாத்தியக்காரராகவிருக்க மாலை போட வந்த பார்ப்பனன் பிடில்காரப் பார்ப்பனருக்கு முதலில் மாலை போட்டு விட்டு தலைமை வாத்தியக்காரராகிய பிள்ளையவர்களுக்கு பின்னர் மாலை போட்டதால் சபையிற் குழுப்பமேற் பட்டது. மாலை போட்ட பார்ப்பனன் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பின்னர் முறையே மாலை போடப்பட்டதும் கச்சேரி அமைதியாக நடந்தேறியது. (இந் நிகழ்ச்சி குமரனில் வெளிவந்திருக்கிறது) அதே ஊரில் சென்ற சில ஆண்டுகட்கு முன்னர், திரு. ஜெகநாத் அய்யங்கார் இல்லத்தில் நடந்த விசேடத்திற்கு தென்னாட்டில் குறிப்பிடத்தக்க பார்ப்பனர், பார்ப்பனரல் லாத எல்லா வித்வான்களும் வந்திருந்தார் கள். அய்யங்காரவர்கள் அழைப்பிற்கிணங்க நாமும் சென்றிருந்தோம். திரு.சாமிநாதப் பிள்ளையவர்கள் கச்சேரியன்று பிள்ளை யவர்கள் வித்வான்களும், சபையினரும் மெய் மறக்கக்கூடிய அவ்வளவு அருமையாகப் புல்லாங்குழல் வாசித்தார். வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற பார்ப்பன சகோதரர்கள் தங்களிடமிருந்த தங்கச் சங்கிலியுடன் கூடிய மெடலை பிள்ளையவர்கட்குச் சன்மானமாகக் கொடுத்துவிட்டுப் பெரிதும் பாராட்டிப் பேசினார். கச்சேரி முடிந்ததும் அவரவர்கள் தங்கள் தங்கள் ஜாகைக்குச் சென்று விட்டார்கள். அன்றிரவு பார்ப்பனர்களுக்குள் பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது. அதாவது, வீணைக்காரர்களிடம் ஜாதித்திமிர் கொண்ட பார்ப்பன வித்வான்களும், பார்ப்பனர்களும் சென்று உங்களுக்குச் சன்மானமாகக் கொடுக்கப் பட்ட மெடலையும், சங்கிலியையும் நீங்கள் (கேவலம் மேளக்கார ஜாதியிற் பிறந்தவனுக்கு) கொடுத்ததுமல்லாமல் பாராட்டிப் பேசியது பார்ப்பன சமுகத்திற்கே பெரிதும் இழிவென்றும் ஆகலான், அந்த மெடலையும் சங்கிலியையும் உடனே திருப்பி வாங்கிவிட வேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.
மறுநாள் வீணைக்காரர் சாமிநாதப் பிள்ளையைக் கூப்பிட்டுத் தனக்குச் சன்மானமாகக் கொடுக்கப்பட்டதை தான் கொடுத்தது பெரிதும் வருத்தமாகயிருக்கிற தென்றும், ஆகலான், அந்த சங்கிலிக்கும் மெடலுக்குமுள்ள கிரயத்தைக் கொடுத்துவிடு கிறேன் தயவு செய்து எடுத்துக்கொண்டு வாருங்களென்று கேட்டுக் கொண்டார். இச்செய்தியையறிந்த நாம் பிள்ளையவர்களிடம் சென்று அன்பரே, தாங்கள் கேட்போர் உளங்களிக்க வாசித்த இனிமையில் ஈடுபட்டு ஓர் பார்ப்பன வித்வான் தன்னை மறந்து சன்மானித்த சன்மானத்தைத் திருப்பிக் கொடுப்பது முறையல்லவென்று கேட்டுக் கொண்டோம்; நமது மெய்யன்பர் (காலஞ்சென்ற திரு. நாதப்பிரம்மம் மதுரை நாதஸ்வர வித்வான் பொன்னுசாமி பிள்ளையவர்களும் அங்ஙனமே திருப்பிக் கொடுக்கக்கூடாதென்று சொல்லி விட்டபடியால் பிள்ளையவர்களும் வீணைக் காரர்களால் கொடுக்கப் பெற்ற சன்மானத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டார் இச்செய்தியை திராவிடன் பத்திரிகைக்கு எழுதி பத்திரிகையிலும் இந்நிகழ்ச்சி அக்காலத்தில் வெளிவந்திருக்கிறது.
– குடிஅரசு – 01.03.1931 – பக்கம் 11
தகவல் – மு.நீ.சிவராசன்