கெ.நா.சாமி
பொழுது விடிந்து எழுவது முதல், அன்றாடம் இன்றைய சமுதாயத்தில் மலிந்து கிடக்கின்ற மூடச்செயல்பாடுகள் அணிவகுத்து நிற்கின்றன.
காலையில் எழுந்திருக்கும்போதே இராசியான முகத்தில் விழிக்க வேண்டும். அப்போதுதான் இன்றையபொழுது இனிதாகக் கழியும், வெற்றிகள் கிட்டும் என்று ஒரு நம்பிக்கை. இதற்கு ஏதாவது அறிவுப்பூர்வமான விளக்கம் தரமுடியுமா? அவர் முகத்தில் விழிக்கும் எல்லா நாள்களிலும் நல்லதே நடக்குமா? பல நாள்களில் கெட்டதும் நடக்குமே. அதேபோல் இராசியற்ற முகத்தில் விழிக்கும் பல நாள்களில் நல்லதும் நடக்குமே. எனவே, நடக்கும் நிகழ்விற்கும் விழிக்கும் முகத்திற்கும் தொடர்பே இல்லை என்பதைத்தானே இது உணர்த்துகிறது.
அடுத்து காலையில் செய்தித்தாளை புரட்டினானால் அல்லது தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினால் பலர் முதலில் பார்க்க விரும்புவது ராசிபலன் பகுதியைத்தான். இந்த ராசியில் உள்ள இன்னார்க்கு இன்று இன்னின்ன பலன்கள் உண்டு என்று கூறுகிற ஊடகங்கள் மலிந்துவிட்டன. அவை அனைத்தும் ஒரு ராசிக்கு ஒரேவிதமான பலன்களைக் கூறுகின்றனவா? இல்லையே! ஒரு ராசிக்கு வேறு வேறு பலன் செய்தித் தாள்களிலும், வேறு வேறு தொலைக் காட்சிகளிலும் வேறு வேறு பலன்கள் கூறப்படுகின்றனவே. உண்மையென்றால் பலன்கள் ஒன்றாக அல்லவா இருக்க வேண்டும்?
இவற்றைப் பார்ப்பவர்கள் அவை அனைத்தும் அப்படியே நடக்கின்றனவா என்று ஒருபோதாவது சிந்திப்பதுண்டா?
ஒரு செயலைச் செய்வதற்கு முன்பே இந்த இராசிபலன் பார்த்து, காரியம் நிறைவேறாது என்று பலன் இருந்தால் அவர் தன்னம்பிக்கை இழந்துவிடுகிறார். நிறைவேறும் காரியம்கூட நிறைவேறாமல் போகும். இது மூடநம்பிக்கையின் கேடு அல்லவா?
ராசிபலன் பார்க்கும் நிலை இது என்று சொன்னால், வீட்டைவிட்டு வெளியில் போகும்போது சகுனம் பார்ப்பது என்பது அதைவிடக் கொடுமை. இதிலே பல வகையினர் உண்டு. ஒருவர் தன் குழந்தைகளைக் கூப்பிட்டு வெளியே போய்ப் பார். யார் வருகிறார்கள்? எது வருகிறது? என்று கூறச் சொல்வர். அக்குழந்தை கூறுவதைக் கேட்டு சகுனம் சரியாக அமைந்தால் வெளிக் கிளம்புவார். ஒரு சிலர் தன் மனைவியை தெரு முனைவரை போய் எதிரே வரச் சொல்வார். அந்த அம்மையார் தெருமுனை போய் திரும்பும்போது இவர் அவர் எதிரில் சென்று நல்ல சகுனத்தைத் தானே ஏற்படுத்திக் கொள்வார். தினமும் அப்படிச் செல்லும்போது அவர் வாழ்வில் தோல்வியோ, அல்லது வேறு பாதகமான நிகழ்வுகளோ ஏற்பட்டதில்லையா? பலமுறை சோதித்தால் இது உண்மை இல்லை என்பது விளங்குமே!
கேவலம் பூனை குறுக்கே வந்துவிட்டது என்பதற்காக மீண்டும் வீட்டுக்குள் வந்து 10 நிமிடம் தங்கிச் செல்பவர்களும் உண்டு. பூனை அது அதன் தேவைக்கு ஏதோ காரணத்திற்கு ஓடுகிறது. அதன் நகர்தல் இவர் வெற்றி தோல்வியை எப்படிப் பாதிக்கும்? இதிலே பரிகாரம் வேறு! ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வர், தண்ணீர் குடிப்பதால் சகுன பாதிப்பு எப்படி விலகும்?
சகுனம் பார்த்து பின், தெரு முனையில் உள்ள ஒரு கடவுளுக்கு ஒரு கும்பிடு போட்டு இன்றைய பொழுது நன்றே அமைய ஒரு வேண்டுகோள், விண்ணப்பம். அந்தக் கடவுள் அனுக்கிரகம் கிடைப்பது உறுதியென்றால் தினம் தினம் உனக்கு வெற்றிதானே கிடைக்க வேண்டும். இல்லையே! அப்படி அமைந்துவிடுகிறதா? கடவுளையும் விதியையும் நம்புவோர் ராசி, சகுனம் போன்றவற்றை நம்புவது முரண் அல்லவா?
சிலர் எந்தப் பொருள் வாங்கினாலும் அதற்கும் ராசி பார்த்தே வாங்குவர். மோட்டார் சைகிள் வாங்கினால் இந்த வண்ணம்தான் எனக்கு ராசி என்றும் அந்த வண்டியின் பதிவு எண் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்றும்கூட திட்டமிடுவர். தனக்கு இந்த நிறம்தான் பிடித்திருக்கிறது என்று சொன்னால் ஏற்கலாம். ஆனால், எனக்கு இந்த நிறம்தான் ராசி என்று சொன்னால் மூடநம்பிக்கைதானே. அப்படியே இந்த எண்ணில் பதிவு செய்ய வேண்டும் என்றால் அதுவும் எண்கணித ராசி என்பதுதானே. அப்படி நிறமும், எண்ணும் கொண்ட வண்டி வாங்கினால் அவை விபத்துக்களில் மாட்டுவது இல்லையா? விபத்துகளில் அடிபடும் வண்டிகள் எல்லாம் ராசி பார்க்காது வாங்கிய வண்டிகளா?
சிலர் தாங்கள் குடியிருக்கும் வீடே ராசியில்லை. இந்த வீட்டுக்கு வந்தபின் எங்களுக்கு வறுமை வாட்டுகிறது. நோயும் நோடியுமாக இருக்கிறோம் என்பார்கள். அப்படியானால் தினம் தினம் மருத்துவமனை நாடிச் செல்லும் நோயாளிகள் அத்தனை பேரும் ராசியில்லா வீட்டில் வாழ்பவர்கள்தானா? வறுமையில் வாடுவோர் வீடு மாற்றி விட்டு அந்த வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருந்தால் செல்வம் கொழிக்குமா? உயர்விற்கும், தாழ்விற்கும், நோய்க்கும், நலிவிற்கும் வீடு எப்படி காரணமாக முடியும்? ராசியான வீட்டில் வாழ்ந்தால் எல்லாம் நன்றாக நடக்குமா?
உனக்கு இப்படித்தான் நடக்கும் என்று அவன் உன் தலையில் எழுதிவிட்டான். அந்த விதிப்படிதான் நடக்கும். அன்று அவன் எழுதியதை அழித்தெழுத முடியாது என்கிறாயே! கடவுள் விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால் இவற்றை ஏன் பார்க்க வேண்டும்?
கடவுள் விதியை மாற்றும் சக்தி இவற்றிற்கு உண்டா?
மருத்துவப் படிப்பில் வெற்றி பெற இந்தக் கடவுள், பொறியியல் படிப்பில் வெற்றி பெற இந்தக் கடவுள், அரசு வேலை பெற இந்தக் கடவுள், புற்றுநோய் குணமாக இந்தக் கடவுள், குழந்தை வரம் பெற இந்தக் கடவுள், நல்ல இணைபெற இந்தக் கடவுள் என்று கடவுளைத் துறை வாரியாகப் பிரித்து பட்டவர்த்தனமாக பத்திரிகைகளில் எழுதி மக்களின் அறிவைச் சிதைத்து சிந்திக்கும் திறனையே மழுங்கடித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் இராகுகாலம், எமகண்டம் என்று பல மணிநேரங்களை வீணடிக்கின்றனர். நல்ல நேரத்தில் செய்யும் எல்லாம் நல்லபடியாக நடப்பதில்லையே! சிந்திக்க வேண்டாமா?