கேடு நீங்கியது! கூடுதல் கிடைத்தது!
இயக்க வரலாறான தன்வரலாறு (170)
பிற்படுத்தப்பட்டோர் பேராபத்தைத் தகர்த்து பெருமை பெற்றது நம் கழகம்!
நமது விளக்கத்தினைக் கூர்ந்து கவனித்து உண்மைகளை உணர்ந்த தமிழக முதல்வர் மாண்புமிகு எம்ஜி.ஆர். அவர்கள், அதன் விளைவாய் 24.01.1980 அன்று காலை செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாய் தகவல் தரப்பட்டது. செய்தியாளர்களை சந்திக்கும் முன் அமைச்சரவையின் ரகசியக் கூட்டம் நடந்தது. பின் செய்தியாளர் அறைக்கு வந்த முதல்வர் தனது தாமத வருகைக்காக மன்னிப்பு கோரி அறிவிப்புகளைத் தொடர்ந்தார்.
முதல்வர் முதலில் குறிப்பிடும்போது, பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரியதற் கிணங்கவும், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கேட்டதற்கிணங்கவும், சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்கவும், நடுநிலையாளர்கள் அல்லது கட்சிகளுக்காக மக்கள் முன் பேசுவோரின் கருத்துக்களுக்கேற்பவும் – இருக்கின்ற சட்டங்களில் சிலவற்றை மாற்றியமைக்க இந்த அரசு விரும்புகிறது. மக்கள் நலனிலேயே அக்கறை உள்ள இந்த அரசு மக்களுக்காக எதையும் செய்யும்.
அதன் முன் அரசு நடைமுறைக்கு வரவுள்ளவற்றின் சாராம்சங்களை தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவிப்பார் என முதல்வர் கூறினார்.
தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் முதல்வரின் ஒப்புதலின் பேரில் கீழ்கண்ட அறிவிப்புகளைச் செய்தார்.
“ரூபாய் 9 ஆயிரம் வருமான வரம்பாணை ரத்து செய்யப்படுகிறது. அரசின் வேலைவாய்புகள் மற்றும் கல்வித்துறை ஒதுக்கீடுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை 31 சதவீதமாக இருந்தது. 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. பொதுப் போட்டிக்கு 32 சதவீதமாக இருக்கும். தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு ஏற்கனவே இருந்தபடி 18 சதவீதம். வருமான வரம்பாணை உடனடியாக இன்றுமுதலே ரத்தாகும்.’’ _ இவ்வாறு முதல்வர் சார்பில் தலைமை செயலாளர் அறிவித்தார்.
கழகத்தின் பேச்சும் மூச்சுமாக இருந்த ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பாணை எனும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான ஆணை இன்றோடு ரத்தாகிறது என்ற தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் முதல்வரின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன என்றார். இதனை வரவேற்று ‘விடுதலை’ இதழ், வெற்றி! வெற்றி! “கழகக் கோரிக்கை மகத்தான வெற்றி’’ என்று முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு இருந்தது. (24.01.1980 – ‘விடுதலை’)
இது ஏதோ திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லாமல் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு நியாயமாக கிடைத்த வெற்றி என்றே நாங்கள் கொள்கிறோம் என்று நான் குறிப்பிட்டு இருந்தேன்.
மேலும், ரூ. 9 ஆயிரம் உத்தரவு வாபஸ் என்ற மகிழ்ச்சி ஒருபக்கம், மற்றொரு மக்கம் 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதாகும். இது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். தமிழக முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு மிக மிக பாராட்டத் தகுந்த துணிச்சலான முடிவு ஆகும்.
தற்பொழுது பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவீதமுமாக மொத்தம் 68 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பொதுப் போட்டிக்கு 32 சதவீதம் ஒதுக்கப் பட்டிருக்கிறது. கருநாடகத்தில் தற்பொழுது பிற்படுத்தப்-பட்டோர், பழங்குடியினர் விஷேசப் பிரிவினர், தாழ்த்தப்பட்டோர், மலை ஜாதியினர் அனைவருக்கும் மொத்தம் 58% இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது தமிழ்-நாட்டில் 68% கொடுக்கப்பட உள்ளது. இதனை தீவிரமாக செயல்படுத்தவேண்டும், 50 சதவீத ஒதுக்கீடு தனியார் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சருக்கு நான் வேண்டுகோளும் வைத்தேன்.
இது குறித்து 25.01.1980 அன்று விடுதலையின் இரண்டாம் பக்கத்தில், தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு நமது பாராட்டுதலும் நன்றியும் என்ற தலைப்பில் நீண்டதோர் தலையங்கம் நான் எழுதியிருந்தேன்.
அதில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு மலையென வந்த பெரும் ஆபத்து பனியென நேற்று விலகிவிட்டது! திராவிடர் கழகம் முன்னெடுத்த இப்போராட்டத்திற்கு திராவிட முன்னேற்ற கழகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கிளையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும், தமிழ்நாடு காங்கிரஸ் (அர்ஸ்) கட்சியின் தலைவர் திருமதி டி.என். அனந்தநாயகி அம்மையார், என்.எம். மணிவர்மா, செங்கல்வராயன், இந்திரா காங்கிரஸ் கட்சியின் மேலவை உறுப்பினர் தோழர் திண்டிவனம் இராமமூர்த்தி, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் மற்றும் பல்வேறு துறை நிபுணர்களும் முன்னாள் பல்கலைக் கழகத் துணைவேந்தர் என்.டி.சுந்தரவடிவேலு, டாக்டர் சுந்தரவதனம் போன்றவர்களும், எம்.பி. நாச்சிமுத்து போன்ற பெரியவர்களும், தமிழக அரசு ஊழியர்கள் சங்கமும் அதன் மதிப்பிற்குரிய தலைவர் திரு. சிவ.இளங்கோ அவர்களும் பல்வேறு பிற்படுத்தப்-பட்ட சமுதாயத்தின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் பேராதரவு தெரிவித்தனர்.
தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் நேற்று இந்த 9000 ரூபாய் அரசு ஆணையை ரத்து செய்தது மாத்திரமல்ல பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய ஒதுக்கீடு சதவிகிதத்தை 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி, அவ்வாணை உடனடி-யாக (நேற்று 24.-1.19-80 முதலே) அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும். கோடானுகோடி பிற்படுத்தப் பட்ட மக்களின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் ஏற்பட்ட பெரும் ஆபத்து இதன் மூலம் நீக்கப்பட்டதோடு, அவர்கள் முன்னேற்றத்திற்கான மிகவும் அருமையான தொரு முயற்சிக்கு ஆக்கரீதியாக தமிழக அரசு கால்கோள் இட்டிருக்கிறது.
இதற்காக தமிழக முதலமைச்சருக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களை, நன்றியை கோடானு கோடி பிற்படுத்தப்-பட்ட மக்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்ள நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.
கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப் பட்டோருக்கு 25 சதவிகிதம் என்பது 31 சதவிகிதமாகப் பெருகியது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியூட்டியதோ அது போலவே, பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் அதற்குப் பிறகு பெரும் அளவு பெருத்துவிட்டதால் (மிஸீயீறீணீtமீபீ) அதற்கேற்ப 50 சதவிகிதம் ஆக அவ்வொதுக்கீட்டினை இன்றைய அரசின் முதல்வர் அவர்கள் உயர்த்தியுள்ளதும் மகிழ்ச்சிக்கும் உளப்பூர்வமான பாராட்டு-தலுக்கும் உரிய ஒன்றாகும்
பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை தமிழ் நாட்டில் 68 முதல் 72 சதவிகிதம் ஆகும்.
(முஸ்லீம்கள் அத்தனைப் பேரும் பிற்படுத்தப்-பட்டோர் பட்டியலில் தான் உள்ளனர் என்பதையும் கணக்கெடுத்துப் பார்த்தால் தற்போது தமிழக அரசு ஒதுக்கியுள்ள 50 சதவிகித இடங்கள் அதிகமானது என்று எவரும் கூப்பாடு போடமுடியாது)
72 சதவிகிதத்தினர் உள்ள பிற்படுத்தப்-பட்டோருக்கு உரிய பங்கு கிட்டவில்லையே என்ற ஆதங்கம் இன்னமும் நமக்கு உண்டு.
தாழ்த்தப்பட்ட மலைஜாதியினர் 18 சதவிகிதம் என்பது அவர்களின் மொத்தமக்கள் தொகை அடிப்படையில் தான் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கை என்பது பல ஜாதியினர்கள் அதில் புதிதாக சேர்க்கப்பட்டு பட்டியல் பெருகுகின்றது.
ஆனால் தாழ்த்தப்பட்டோர் பட்டியல் அந்தப்படிக்கு பெருகிட வாய்ப்பில்லை. அவர்களது முன்னேற்றமும் நமக்கு மிக மிக அவசியம் என்றாலும், மக்கள் தொகை விகிதாச்சாரம் கூடுமானால் அதற்கேற்ப அவர்களுக்கும் பங்கு தொகை பெருக வேண்டும் என்று நாம் கோரலாம் கோருவோம்!
பிற்படுத்தப்பட்டோர் அரசு ஆணை குறித்து முன்பு மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்த பார்ப்பன ஏடுகள் இதற்காக இப்பொழுது தமிழக அரசுக்கு எதிராக சாம, பேத, தான, தண்ட முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும் என்றால், பிற்படுத்தப்-பட்ட சமுதாயம் அதனைத் தீவிரமாக எதிர்த்து உறுதியாக இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு பக்கம் நின்று, தமிழக அரசிற்குத் தனது முழு ஆதரவினைத் தருவதற்கு ஒருபோதும் தயங்காது, தயங்கவே தயங்காது.
கடந்த ஜூலை 2 முதல் இவ்வாணை காரணமாக பாதிக்கப்பட்ட பிற்படுத்தப் பட்டோருக்குப் பரிகாரம் காணவும் தமிழக அரசு குறிப்பாக நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் தவறக்கூடாது.
அரசியல் சட்டம் 15 (4) கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு 16 (4) துறைகளில் பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எப்படியெல்லாம் பரிகாரம் தேடவேண்டுமோ அதை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும். குறிப்பாக வேலைவாய்ப்பில் நியமனம், பிரமோஷன் ஆகியவைகளை நியாயம் வழங்க வேண்டிக் கொள்கிறோம்.
205 நாட்கள் வேதனை தீர்ந்தது என்று குறிப்பிட்டேன்.
கழகத்தின் போர் வென்றது!
பிற்பட்டோரின் எதிர்காலத்தையே இருளச் செய்யும் சூழ்ச்சிச் சதியாய் வந்த ரூபாய் 9 ஆயிரம் வருமான வரம்பு ஆணையை ரத்து செய்தும், கூடுதல் பயனாய் பிற்படுத்தப் பட்டோருக்குக் கூடுதல் இடஒதுக்கீடு அளித்தும் நாம் பெற்ற சரித்திரச் சாதனைச் சான்றாவணங்களான அந்த அரசு உத்தரவுகளை உங்கள் பார்வைக்கு இங்கு வைத்து மகிழ்கிறேன்; நிறைவும் பெருமையும் கொள்கிறேன்.
சமூக நலத்துறை
ஜி.ஓ.எம்.எஸ்.72 தேதி: 1.2.1980
(1) உத்தரவு: மேலே படித்த உத்தரவில் (சமூக நலத்துறை அரசாணை 1156 தேதி 02.07.1979), பிற்படுத்தப்பட்டோர் கல்வி நிறுவனங்களில்அரசு சர்வீசுகளில் சலுகை பெற 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு நிர்ணயித்திருந்தது. மேற்கண்ட உத்தரவை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்தன.
இந்தப் பிரச்சினையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு – அரசு 21.1.1980 அன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியது.
அரசுக்கு வந்த முறையீடுகளைப் பரிசீலித்தும் – அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கேட்டும் – மேற்கண்ட வருமான வரம்பு உத்தரவை நீக்கிவிட அரசு முடிவு செய்துள்ளது.
(2) அரசியல் சட்டத்தில் 15(4)வது பிரிவின் கீழான நோக்கங்களுக்கு வருமானத்தை கணக்கில் எடுக்காமல் கீழே குறிப்பிட்டுள்ள பட்டியல்களில் உள்ள சாதி, சமூகத்தினர் அனைவரும் “சமூக கல்விரீதியாக’’ பிற்படுத்தப்-பட்டவர்களாக கருதப்படுவார்கள் என்று அரசு அறிவித்துக் கொள்கிறது (சாதி, சமூக பட்டியல் உத்தரவுடன் இணைத்து அரசு வெளியிட்டிருக்கிறது).
(3) அரசியல் சட்டம் 16(4)வது பிரிவுக்கும் – இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சாதி, சமூகத்தினர் – வருமானத்தைக் கணக்கி-லெடுக்காமல் பிற்படுத்தப்பட்ட குடிமக்களாக கருதப்படுவார்கள் என்றும் – அரசு வேலை உத்தரவுகளுக்கும் இது பொருந்தும் என்றும் அரசு இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறது.
(4) இந்த உத்திரவு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 15(4) மற்றும் 15(4)இல்வழி சமுதாய நிலையில் கல்வி நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு தமிழக சமூக நலத்துறை அரசு ஆணை எண்: 1156 நாள் 2.7.1979இன் வழி பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும், அதைத் தொடர்ந்த உத்தரவுகளையும் ரத்து செய்து 1980 சனவரி 24, நாள்முதலாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.
சமூக நலத்துறை
ஜி.ஓ.எம்.எஸ்.எண்: 73
தேதி: 1.2.1980
ஜி.ஓ.எம்.எஸ்.எண்:
695 சமூக நலத்துறை
தேதி: 7.6.1971
உத்தரவு
மேற்கண்ட உத்தரவுப்படி – அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீதம் இடஒதுக்கீடு செய்திருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலை-வாய்ப்பு – கல்வி நிறுவனங்களில் அனுமதி ஆகியவற்றில் போதுமான வாய்ப்புகளை மக்கள் தொகை அடிப்படையில் இந்தச் சமூகத்தினர் பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு – இந்தச் சதவீதத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை அரசு கவனமாக பரிசீலித்தது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதமும் – தாழ்த்தப்பட்டோர், மலைவாசி யினருக்கு 18 சதவீதமும் 24.1.1980 முதல் ஒதுக்கீடு செய்ய அரசு உத்தரவிடுகிறது.
எல்லா வகைப்பட்ட எல்லா படிப்பு-களுக்கும், எல்லா நிர்வாகங்களின் கீழ் உள்ள எல்லா நிர்வாகங்களுக்கும், (உதாரணமாக அரசாங்கம், உள்ளாட்சித் துறை, அரசு உதவி பெற்று நடைபெறும் தனியார் நிறுவனங்கள்) பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு இடஒதுக்கீடு செய்துள்ள எல்லா நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
பல்கலைக்கழகங்களோ, தனியார் நிறுவனங்களோ, உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள நிறுவனங்களோ – இந்த இடஒதுக்கீடு உத்தரவை அமல்படுத்தினால்தான் அரசு மான்யமோ, நிதி உதவித் தொகையோ வழங்கப்படும் என்று அரசு நிபந்தனை விதிக்கிறது.
2. தகுதி அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் 32 சதவீத இடஒதுக்கீட்டிலும் இடம்கோரி வரும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். இந்த 32 சதவீத ஒதுக்கீட்டில் தகுதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவதன் மூலம் _- பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ள இடங்கள் எந்த விதத்திலும் பாதிக்காது.
3. ஜனவரி 24, 1980 முதல் _- பிற்படுத்தப்-பட்டோருக்கு 50 சதவீதம் -_ தாழ்த்தப்-பட்டோருக்கு 18 சதவீதம் வழங்கும் உத்தரவு மேற்கண்ட சமூகத்தினருக்கு தமிழ்நாடு அரசு வேலை நியமனங்களில் எந்தத் துறைகளில் இடஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருக்கிறதோ அத்தனைத் துறைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
4. பொதுவிதிகள் 22க்கு தேவையான திருத்தங்களை, அரசு உள் – நிர்வாக சீர்திருத்தத் துறையினால் தனியே வெளியிடப்படும்.
5. மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் “குறிப்பிடப்பட்ட வகுப்பினர்’’ ஆகியோரும்கூட இந்த உத்தரவில் குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வகையில் பொருள் கொள்ளப்படும்.
6. தமிழக அரசு சமூக நலத்துறை அரசு ஆணை 695, நாள் 7.6.71 உத்திரவையும், அதன் பின்னால் பிறப்பிக்கப்பட்ட தொடர்புடைய உத்திரவுகளையும் ரத்து செய்து 24.1.1980 நாள் முதலாக நடைமுறைக்கு கொண்டுவரப் படுகிறது.
என்பதே அந்த இரு ஆணைகள்! இவை வெறும் ஆணைகள் அல்ல. பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான உந்து சக்திகள்; உரிமைச் சாசனங்கள்!
அந்தப்படி அன்றைய முதல் அமைச்சர், பிற்படுத்தப்பட்டோருக்கான _ ரூபாய் ஒன்பதாயிரம் (ரூ.9000) வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு, மற்றொரு அறிவிப்பு – ஆணையும் தந்தார்.
காமராசர் முதல்வரான ஆட்சிக் காலத்தில் 25 விழுக்காடும், பிறகு தி.மு.க. -_ கலைஞர் முதல்வரானவுடன் 25அய் 31 விழுக்காடாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது; இந்த 31 விழுக்காட்டினை 50 விழுக்காடு என உயர்த்தி ஆணை தந்தது, அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் தள்ளியது.
இதன் காரணமாக 50+18(எஸ்.சி.-எஸ்.டி.) மொத்தம் தமிழ்நாட்டில் கல்வி, உத்தியோக வாய்ப்பு இடஒதுக்கீடு 68 விழுக்காடாகியது.
(அதன் பின்னர் தி.மு.க. ஆட்சியின்போது மலைவாழ் மக்களுக்காக முழுமையாக ஒரு சதவிகிதம் தனி என்று ஆணையிட்டு, 1980 முதல் 68 சதவீதமாக இருந்தது 1989-_1990இல் 69சதவீதமாக உயர்ந்தது.)
இதனை உடனே வரவேற்ற நாம் – திராவிடர் கழகத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்து மகிழ்ச்சி தெரிவித்தோம்.
முதலில் எம்.ஜி.ஆர். 9 ஆயிரம் வருமான வரம்பு ஆணையிட்டபோது அவரைப் பாராட்டிய பார்ப்பனர்கள், அந்த ஆணையை அகற்றி இடஒதுக்கீட்டை 50% ஆக, பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்த்தியதால் ஏமாற்றமடைந்து, அவரைத் தூற்றத் தொடங்கினர். உடனே இதற்காக எம்.ஜி.ஆர். அரசுக்கு எதிர்ப்பு கிளம்புமானால் அதை முறியடிக்கும் முயற்சியில் திராவிடர் கழகம் முதலில் நிற்கும் என்று கூறினோம்!
இந்த எம்.ஜி.ஆரின் வருமான வரம்பு _ பொருளாதார அளவுகோல் ஆணை ரத்து ஆனதை தி.மு.க. – மகிழ்ந்ததோடு, வெற்றி விழாக் கூட்டங்களை நடத்துவோம் என்று அதன் தலைவர் கலைஞர் கூறினார்.
நாம் திராவிடர் கழகச் சார்பில் ஒரு மாற்றுக் கருத்தை முன்வைத்தோம்.
வெறும் 9000 ரூபாய் ஆணையை அவர் (எம்.ஜி.ஆர்) ரத்து மட்டும் செய்திருந்தால் வெற்றி விழா என்பது சரியாக இருக்கும். ஆனால், அவரோ நாம் கேட்காமலேயே, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31அய், 50ஆக உயர்த்தித்தர உத்தரவிட்டுள்ளார்; எனவே நன்றி அறிவிப்புக் கூட்டமாக அதை நடத்துவதே நனிச் சிறப்பாக இருக்கும் என்றோம்.
தி.மு.க. வெற்றி விழாக் கூட்டங்களை நடத்தியது; திராவிடர் கழகம் நன்றி அறிவிப்பு விழாக் கூட்டங்களை நடத்தியது.
அய்யா மறைந்தபோது இனி தி.க. இருக்காது; தி.மு.க.வுடன் இணைந்துவிடும் என்ற பேச்சு அடிபடுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “கண்ணீரைத் துடைத்துக்-கொண்டே கழகப் பொதுச் செயலாளரான நான், தி.க. இணையாது – கலையாது, தனித் தன்மையுடன் என்றும் இயங்கும்’’ என்று கூறிய பதில், ஊடகங்களில் ஒலிபரப்பப்பட்டது.
அது உண்மையானது என்பதற்கு இந்நிகழ்வே ஓர் அருமையான எடுத்துக்காட்டு – சான்று அல்லவா?
அய்யாவிற்கும் அம்மாவிற்கும் பிறகு, மிகப் பெரும் சமுதாயப் பொறுப்பை அம்மாவின் ஆணைக்கிணங்க ஏற்ற நான், அரசிற்கு எதிராய் மிகப்பெரும் போராட்டம் செய்து, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சூழ்ந்த பேராபத்தை, ஒத்த கொள்கையுடைய அரசியல் கட்சிகள், ஒட்டுமொத்த தமிழ் மக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தடுத்து, தகர்த்த சிலிர்ப்போடும், பிற்படுத்தப் பட்டோருக்கு உரிய ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்திப் பெற்ற சாதனைப் பெருமையோடும் வெற்றிக்களிப்-போடும், எதிரிகளின் சூழ்ச்சியை வென்ற பூரிப்போடும் இப்பாகத்தை நிறைவு செய்து, அடுத்தப் பாகத்தில் இன்னும் ஏராளமான வரலாற்று நிகழ்வுகளோடு உங்களைச் சந்திப்பேன்!
(நினைவுகள் நீளும்)