புதிய மாந்தநேயர் – கிரேக் எப்ஸ்டீன்
– சு.அறிவுக்கரசு
மானிடம் போற்ற மறுக்கும் – ஒரு
மானிடம் தன்னைத் தன் உயிரும் வெறுக்கும்
மானிடம் என்பது குன்று – தனில்
வாய்த்த சமத்துவ உச்சியில் நின்று
மானிடருக்கினிதாக – இங்கு
வாய்த்த பகுத்தறிவாம் விழியாலே
வான்திசை எங்கணும் நீ பார் – வாழ்வின் வல்லமை
மானிடத் தன்மை என்றே தேர்!
எனப் பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
மானிட சக்தி எனும் தலைப்பில் இப்பாடலை எழுதிய ஆண்டு 1931. மானிடம், மானுடம், மாந்த நேயம், மனித நேயம் எனப் பலவாறு கூறப்படும் சொற்கள் HUMANISM எனும் இங்கிலீஷ் மொழிச் சொல்லுக்கான, பல தமிழ்ச் சொற்கள் எனலாம். இம்மானுடப்பற்றை இயக்கமாக நடத்திடும் நிலை உலகில் இன்று நிலவுகிறது. இறப்புக்குப் பின்னர் ஓர் உலகம் இருக்கிறது, அதில் ஒரு வாழ்வு இருக்கிறது, அதுதான் பேரின்பம்; இவ்வுலகில் வாழும் வாழ்வு, இறப்புக்கு முன்னர் வாழும் வாழ்வு சிற்றின்பம் – எனவே, பேரின்பத்தை நாடு என மத நூல்கள் எல்லாம் கூறுகின்றன. பேரின்பத்தை நாடும் பேதையர், தம் சம மாந்தர்களைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. சரியாகச் சொன்னால், தம் சக மனிதர்களைச் சங்கடப்படுத்தியும் தொல்லைப்படுத்தியும் தன் பெண்டு, பிள்ளை, சம்பாத்தியம், தானுண்டு எனும் கடுகு உள்ளம் கொண்டு சிற்றின்ப வாழ்க்கையை(?)ச் சுகித்துக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் மானுடப் பற்றின் அவசியத்தைக் கூற ஓர் இயக்கம் அவசியம்தான்!
இவ்வியக்கத்தவர் கடவுள் மறுப்பாளர் களாகவோ, மத வெறுப்பாளர்களாகவோ இருக்க வேண்டியதில்லை; இத்தகைய நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும் மானுடப் பற்று கொண்டிருக்க வேண்டும் என்கின்ற வகையில் இவர்களைச் சிறிது மார்ஜின் கொடுத்து ஏற்று வருகின்றனர் பகுத்தறிவாளர் கள். அத்தகைய மானுடப் பற்றியக்கம் (HUMANISM) 1900 முதல் இயங்கி வருகின்றது. அதனைக் கூர்ந்து புதிய மானுடப் பற்றியக்கம் (NEW HUMANISM) எனும் இயக்கத்தில் ஈடுபட்டு அதன் சார்பாக மதகுருவாகவும் இயங்கி வருபவர் கிரெக் எப்ஸ்டீன் எனும் யூதர்.
யூதமத குருவுக்கு ரப்பி (RABBI) என்று பெயர். அந்தவகையில் இவர் HUMANIST RABBI புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் மதநீக்கு மானிடப்பற்றான மதகுரு (SECULAR HUMANIST CHAPLAIN) ஆக இருந்து வருகிறார்.
1852இல் (SECULAR) செக்யுலர் எனும் சொல் பழக்கத்திற்கு வந்தது. இங்கிலாந்து நாட்டில் ஜி.ஜே. ஹோலியாக் என்பவரால் இச்சொல் உருவாக்கப்பட்டது. இந்த உலகுக்கு உரியன எனும் பொருளில் உருவாக்கப்பட்டுப் பழக்கத்திற்கு வந்தது.
கடவுள், இறப்புக்குப் பிந்தைய உலகம் போன்ற (மூட) நம்பிக்கைகள் அந்த தன்மை, இவ்வுலக வாழ்க்கையைச் சீரிய, நேரிய முறையில் நடாத்திக் கொள்ளும் ஒழுகலாறுகள் போன்றவற்றிற்கு முதன்மை தரும் முறைமைக்கு இப்பெயர் வழங்கப்பட்டது.
இங்கிலாந்து நாடெங்கும் செக்யுலர் சபைகள் ஏற்படுத்தப்பட்டன. அத்தகைய சபை ஒன்று இந்தியாவில், சென்னையில் ஆங்கிலேயரான திரு. அப்ஷன் என்பவரால் யூரேஷியர் மெட்ராஸ் செக்யுலர் சொசைட்டி எனும் பெயரில் 1886இல் அமைக்கப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் 12இல் இங்கிலாந்தில் கிளாஸ்கோ நகரில் இருந்த நேஷனல் செக்யுலர் சொசைட்டியுடன் இணைப்பு பெற்றுச் செயல்பட்டது. கிறித்துவ மதக் காப்பாளராக இருந்துகொண்டே, கடவுளை மறுத்த சீரிய பகுத்தறிவாளர் சார்லஸ் பிராட்லா, இந்த செக்யுலர் சொசைட்டியின் உறுப்பினராக இருந்தவர்தான்.
அவரைப் போலவே கிரெக் எப்ஸ்டீனும் நாத்திகத்தைப் போல கடவுள் மறுப்பையும் மத வெறுப்பையும் தீவிரமாகப் போதிக்காமல், அமைதி முறையில் மக்களை மா-னுடப் பற்றாளர்களாக மாற்றுவது தங்கள் இலட்சியம் என்கிறார். மதங்கள் இக, பர என்று இவ்வுலக, மறுஉலக வாழ்க்கையைப் பிரித்துக்கூறி இகவாழ்க்கையைவிட பரவாழ்க்கையை முன்னிறுத்திக் கூறும்போது இகவாழ்வின் சிறப்புக்குரிய மானுடப் பற்றாளர்களாக எப்படி மதப்பற்றாளர்கள் வரமுடியும்? வாழமுடியும்? என்பதைக் காலம்தான் உணர்த்தும்.
இத்தகைய மானுடப் பற்றாளரான கிரெக் எப்ஸ்டீன் நியுயார்க் நகரில் 1977 பிப்ரவரி 4 ஆம் நாள் பிறந்தவர். இவரது தாய், தந்தை யூதமதத்தினர் என்றாலும் மதப்பற்று மிக்கவர்கள் அல்லர். யூதவிடுமுறை நாள்களிலோ, பண்டிகை நாள்களிலோ மட்டும் தேவாலயம் சென்று மதவழிபாடு செய்யும் பழக்கம் கொண்டவர்கள். இதனாலேயே கிரெக் எப்ஸ்டீன் மானுடப் பற்றுள்ள யூதமதக் கொள்கை கொண்டவராக வளர்ந்தார் எனலாம்.
மன்ஹாட்டனில் உயர்நிலைப் பள்ளியில் படிக்-கும்போது எப்ஸ்டீன் பவுத்த மதம் பற்றியும், சீனத்தின் டாவோயிச மதம் பற்றியும் படித்தார். மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அறிவியல், கலை ஆகியவற்றுடன் ஜென் பவுத்தம் பற்றியும் படித்தார். தைவான் நகரில் ஓராண்டுக்காலம் சீன மொழியிலேயே ஜென் பவுத்தம் பற்றிப் படித்தார். விளைவு?
கீழ்த்திசை மதங்களின் மீது பற்று, பிடிப்பு விட்டுப் போயிற்று. தைவானை விட்டு அமெரிக்கா திரும்பி மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் மதத்தில் பி.ஏ. பட்டமும், சீன மொழியில் பட்டமும் பெற்றார். பின்னர் யூதமதம் பற்றி முதுகலைப் பட்டம் பெற்றார். பிறகு ஹார்வார்டு திருச்சபைப் பள்ளியில் இறையியல் படிப்பு படித்து முதுகலைப் பட்டம் பெற்று மானுடப்பற்றான மதகுருவாக நியமனம் செய்யப்பட்டு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.
கடவுள் இன்றியே நன்மை (GOOD WITHOUT GOD) எனும் நூல் இவர் 2010இல் எழுதிய நூலாகும். மதம் மறுத்த ஒரு கோடி மக்கள் நம்புவது என்ன? (WHAT A BILLION NON RELIGIOUS PEOPLE DO BELIEVE) என்னும் துணைத் தலைப்பு கொண்ட இந்த நூல், கடவுள் நம்பிக்கை இல்லாமலே மக்கள் எப்படி ஒழுக்கமாகவும் உண்மையாகவும் வாழ்கிறார்கள் என்பதை விளக்கும் அருமையான நூல் ஆகும். இந்நூல் வெளிவந்த காலகட்டத்தில் மன்ஹாட்டன் பகுதியின் புறநகர் தொடர்வண்டி நிலையங்களில் பரபரப்பான விளம்பர வாசகம் இடம்பெற்றது நினைவிருக்கலாம். நியுயார்க் நகரின் மிக முக்கியப் பகுதி மன்ஹாட்டன் என்பது. ஒசாமா பின்லாடன் இடித்துத் தகர்த்த இரட்டைக் கோபுரங்கள் இந்தப் பகுதியில்தான் இருந்தன. அந்தப் பகுதியில் எழுதப்பட்ட வாசகங்கள்: நியுயார்க் நகரின் பத்து லட்சம் பேர் கடவுள் இல்லாமலே நல்லவர்களாக இருக்கிறார்கள்: நீங்கள்? (A MILLION NEYYORKERS ARE GOOD WITHOUT GOD. ARE YOU?) இதே வாசக விளம்பரம் 20 பெருநகரங்களில் வெளியிடத் திட்டமிடப்பட்டது. லாஸ் ஏஞ்சலில் சான்ஃபிரான்சிஸ்கோ போன்ற பெரிய நகரங்களிலும் இடாகோ போன்ற சிறிய நகரங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது.
அமெரிக்க மானுடப் பற்றியக்கம் சார்பில் வைக்கப்பட்ட இத்தகைய விளம்பரப் பதாகை சீரழிக்கப்பட்டது சிலரால்! (பக்த கே()டிகளால்தான்!) இதுபற்றி எப்ஸ்டீனைக் கேட்டார்கள். அவர் சொன்னார், யார் மதத்தையும் நாங்கள் சீரழிக்கவில்லை மதத்தை அழிக்கக்கூட நாங்கள் முயலவில்லை. மக்களிடம் உண்மையைச் சொல்கிறோம். அதனைத் தவறாகப் புரிந்துகொண்டோர் இதைச் செய்கிறார்கள். ஆத்திரப்பட்டவர்கள் WITHOUT என்ற சொல்லை அழித்துவிட்டனர்.
OUT என்பதை மட்டும் அழித்திருக்கலாம். அவர்கள் விரும்பும் வாசகமான மில்லியன் மக்கள் கடவுள் நம்பிக்கையுடன் நல்லவர்களாக இருக்கின்றனர் எனும் பொருள் கிடைத்திருக்கும். இதை ஒரு யோசனையாக அவர்களுக்குச் சொல்கிறேன், என்று அமைதியாகக் கூறிவிட்டார். ஆத்திரக் காரனுக்கு அறிவு மட்டு, பக்தி வந்தால் புத்தி போகும் என்பன போன்ற சொலவடைகள் அங்கே இல்லையோ?
அவருடைய கருத்துப்படி, மானுடப் பற்று என்பது சீரிய, சிறந்த, ஒழுக்கமான வாழ்வை இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றல் (SUPER NATURALISM) ஆகப் பெரும் சக்தி போன்றவை – கடவுள் இல்லாமலே வாழமுடியும் என்பதை எண்பிக்கும் வாழ்வியல் என்பதே!
பாஸ்டன் நகரில் இயங்கும் அறிவைப் பயன்படுத்துவோர் கூட்டணி (BOSTON COALITION OF REASON) யினருடன் கிரெக் எப்ஸ்டீனும் அவரது ஹார்வார்டு மதாலயமும் இணைந்து கடவுளின்றியே நன்மை விளம்பரங்களை நாடு முழுவதும் செய்திடும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். 2009 முதல் இவ் விளம்பரப் பணி நடந்து நல்ல விளைச்சலைத் தந்துள்ளது. டாலர் நோட்டிலேயே, கடவுள் நம்பிக்கையைப் பறையடிக்கும் அமெரிக்க நாட்டில் கடவுள் கலகலத் துப் போகிறார் என்பது மகிழ்ச்சிதானே?
– (தொடரும்)