பெண்களுக்கு நகை, துணி பேராசை கூடாது
பெண்களுக்கு, குறிப்பாக இந்தியப் பெண்-களுக்கு அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு நகை நாட்டமும், துணி நாட்டமும் மிகவும் அதிகம்.
படித்த, விழிப்பு பெற்ற தற்காலப் பெண்கள்கூட இன்னும் இந்தப் பிடியிலிருந்து விடுபடவில்லை.
பெண்ணின் உயர்வும், வளர்ச்சியும் அவர்கள் இலக்கு நோக்கி உழைப்பதில் உள்ளது. அலங்காரம், சமையல், கோலம், நகை, துணி என்பனவெல்லாம் அளவோடு வேண்டும். ஆனால், அதுவே வாழ்க்கை என்று அதிக நேரம் செலவிடுவது அவர்களை வீட்டுக்குள் முடக்கிவிடும்.
கால வளர்ச்சியால் இன்றைய பெண்களின் ஆடை தேவை சுருங்கிவிட்டது. ஆனால், இன்னும் நகை நாட்டம் உள்ளது. அணியவில்லையென்றாலும் அடுக்கி வைக்க விரும்புகின்றனர்.
பெண்ணின் நாட்டம் உயர்பதவி, ஆராய்ச்சி, ஆட்சி, சட்டம், மருத்துவம், விளையாட்டு என்று சாதிப்பதில் செல்ல வேண்டும்; அதன் வழி வெல்ல வேண்டும்!
வரதட்சணை கேட்கும் மாப்பிள்ளையைப் பெண் மணக்கக் கூடாது
ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் மலிந்து கிடப்பதாக ஒரு பொய்யான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிடக் குறைவு. எனவே, பெண் மலிந்து கிடக்கவில்லை.
படித்து, பணியில் உள்ள பெண்ணிடம்கூட வரதட்சணை கேட்கும் அவலம் இன்றும் நிலவுகிறது. பெண்ணுக்கு சொத்துரிமை உண்டு. அவள் பங்கு அவளுக்கு. இதற்கு மாறாகப் பெண்ணை வாட்டி, பிழிந்து வசூல் செய்ய நினைப்பது, முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றம்.
வரதட்சணை வாங்குபவனிடம் உண்மையான அன்பு எப்படி அரும்பும். அங்கு வணிக நோக்குதானே இருக்கும். விலைக்கு வாங்கப்-பட்ட கணவன்மீது மனைவிக்கு மதிப்பு எப்படி வரும்?
வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளையை மறுக்கும் மனத்துணிவு பெண்ணுக்கு வர வேண்டும்; மறுக்கவும் வேண்டும். தன்மான-முள்ள வரை மணக்க வேண்டும்.
உள்ளம் ஒத்தபின் சோதிடம் பார்க்கக் கூடாது
அறிவியல் வளர்ச்சி உச்சத்திலிருக்கும் இக்காலத்திலும் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சோதிடத்தைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள். கணினியிலும் அது ஏற்றப்பட்டு அறிவியல் துணையோடு இன்று அந்த வணிகம் அமோகமாய் நடக்கிறது.
செவ்வாய் தோஷம் என்று சொல்லி, பல பெண்கள் வாழ்வு பாழடிக்கப்படுகிறது. செவ்வாய்க்கு மனிதன் செல்லும் இக்காலத்திலும் இக்கொடுமை.
கடவுள் விதித்தபடி வாழ்வு என்று சொல்லும்போது, கிரகப்படி வாழ்வு என்பது கடவுள் மறுப்பு அல்லவா? கிரகப்படி வாழ்வு என்றால் கடவுளும் இல்லை, விதியும் இல்லை என்றுதானே பொருள். எனவே, சோதிட நம்பிக்கை, கடவுள் நம்பிக்கைக்கு எதிர் அல்லவா? கடவுளை நம்புகின்றவர்கள் சோதிடத்தை நம்பலாமா?
மனம் ஒத்து ஆணும் பெண்ணும் மணம் புரிய முற்படும்போது, சோதிடம் பொருந்தவில்லை யென்று அவர்களைப் பிரிப்பது கொடுமை யல்லவா? அறிவோடு சிந்திக்க வேண்டும். எனவே, மனம் ஒத்து மணக்க சம்மதித்தபின் சோதிடம் பார்ப்பது தப்பு.
அதிக வேலையிலும் புத்துணர்ச்சி பெறத் தவறக் கூடாது
நாம் முதன்மையான வேலையில் ஈடுபட்டுக் கடுமையாகப் பணியாற்றும் நிலையில்கூட நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தர தவறக் கூடாது.
மறுநாள் பொதுத் தேர்வு என்றாலும்கூட முதல்நாள் பிற்பகல் 1 மணி நேரம் தூங்க வேண்டும், அரை மணி நேரம் விளையாட வேண்டும். இரவு சாப்பிடும்போதே கால் மணி நேரம் நகைச்சுவை பார்க்க வேண்டும். இதனால் படிப்பு பாதிக்கப் படாது. மாறாக, படிக்க ஏற்ற வகையில் மூளையும் உடலும் புத்துணர்ச்சி பெறும். மறுநாள் உற்சாகத்தோடு தேர்வு எழுத முடியும். மாறாக, பகலிலும் ஓய்வின்றி, இரவிலும் தூங்காது படிப்பது என்பது அறியாமை. தேர்வு நாளிலும் 5 மணி நேரத்திற்குக் குறையாது தூங்க வேண்டும். எவ்வளவு நேரம் படிக்கிறோம் அல்லது எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த அளவிற்கு அதில் கவனத்தோடு இருக்கிறோம்; எவ்வளவு முடித்தோம்? எவ்வளவு சாதித்தோம்? என்பதே முக்கியம். தூக்கக் கலக்கத்தில் ஒரு மணி நேரத்தில் படிப்பதை உற்சாக மனநிலையில் அரை மணி நேரத்தில் படிக்கலாம். இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.