திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் கழகப் பாசறை இணைந்து நடத்திய திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டை யொட்டி பிரம்மாண்டமான பேரணி – திருவாரூர் வரலாற்றில் முத்திரைப் பொறித்ததாக திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று (17.12.2016) மாலை 5 மணிக்குப் புறப்பட்டது.
சிவகங்கை, கங்கைக் கருங்குயில்களின் பறையடி தூள் பறக்க மகளிர் சேனை புறப்பட்டது. இருவர் இருவராக திராவிடர் கழகத்திற்கே உரித்தான அந்த இராணுவக் கட்டுப்பாட்டுடன் அணி வகுத்துப் புறப்பட்டது. ஒவ்வொரு மகளிர் கரத்திலும் கழகக் கொடி அல்லது கொள்கை முழக்கப் பதாகை இடம் பெற்றன. கண்ணுக்கு எட்டிய தூரம் பெண்கள் அணி வகுத்து வந்தனர். பேரணியின் இறுதிப் பகுதியில் ஆண்கள் அணி வகுத்து வந்தனர்.
திருவாரூர் பொது மக்கள் அந்தப் பேரணியை மிகவும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். 50, 60 ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகப் பேரணியை இவ்வளவுப் பெரிய அளவில் பார்த்ததாக எண்பது வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
அச்சிட்டு அளிக்கப்பட்ட முழக்கங்களை ஆட்டோக்களில் ஒலி பெருக்கி மூலம் மகளிரே முழங்கி வந்தனர். திராவிடர் கழகத்தின் கொள்கைகள் எவை என்பதை அந்தப் பேரணியின் முழக்கங்கள் மூலம் பொது மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.
பறை முழக்கம் ஒருபுறம் – தஞ்சைத் தண்டர் வீர விளையாட்டுக் குழுவினரின் (தோழர் பொய்யாமொழி குழுவினரின்) சிலம்ப விளையாட்டு சீறிப் பாய்ந்தது.
தீச்சட்டி ஏந்துவது கடவுள் சக்தி, மாரியாத்தாள் கிருபை என்று நம்பும் மக்கள் மூடநம்பிக்கையின் முதுகெலும்பை நொறுக்கும் வகையில் கழக மகளிர் அணியினர் தீச்சட்டி ஏந்தி வந்தனர். ‘தீச்சட்டி இங்கே மாரியாத்தாள் எங்கே?’ என்று கழக மகளிரணியினர் முழங்கி வந்ததை சாலையின் இரு மருங்கிலும் நின்று வேடிக்கை பார்த்த பொது மக்கள் மிகவும் வியந்து பார்த்தனர். கோவை கலைச்செல்வி, பிரீத்தி பிரியதர்சினி, இனியா, சோழங்க நல்லூர் சரோஜா, திருவாரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அஞ்சம்மாள், சாந்தி, அமுதா, பிரியா, ரேணுகா ஆகிய பெண்கள் தீச்சட்டி ஏந்தி பக்தி மாய்மாலத்தைப் பொசுக்கினர்.
விளக்குடி நாகராசன் நா. பெரியார் செல்வன் ஆகியோர் நாக்கில் சூடம் கொளுத்திக் காட்டி கோயில் பூசாரிகளின் புதிரை அவிழ்த்தனர். அலகுக்குத்திக் காரிழுத்து அசத்தினர் தோழர்கள். கோயில் திருவிழாக்களில் அலகுக் குத்தி சிறுசிறு சப்பரங்களை இழுத்து வருவார்கள் அல்லவா! கடவுள் இல்லை. இல்லவே இல்லை என்று முழங்கி கழகத் தோழர்கள் பொன்முடி, உரத்தநாடு அண்ணா மாதவன் ஆகியோர் அட்டகாசமாய் வேன் ஒன்றை இழுத்து வந்தனர். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களும், கலந்து கொண்டு கடவுள் மறுப்புக் கூறியது ஒரு தற்காலிக வெற்றியே!
பேரணி ரயில் நிலையத்தில் தொடங்கி, தஞ்சை சாலை, அங்காடி வீதி, அண்ணாசாலை நேதாஜி சாலை, அண்ணா சதுரம் வழியே தெற்கு வீதியில் நிறைவுற்றது. பேரணியை கழகத் தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தனி மேடையில் நின்று பார்வையிட்டு அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.