நன்றிக்கு ஏன் நாயை உதாரணமாக்குகிறோம்?
மற்ற பிராணிகள்… இணையைத் தேடியதும் மனிதனை மறப்பவை. ஆனால், நாய்களோ வளர்ந்த இடத்தை மறக்காதவை; வளர்த்த மடியை துறக்காதவை. எனக்குத் தெரிந்த எளிய குடும்பத்தில் ஒருவர், அழகான நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார். அவருக்குத் தெரிந்த பணக்காரர், அதை வளர்க்க ஆசைப்பட்டு வாங்கி தன்னுடைய மாளிகைக்கு எடுத்துச் சென்றார்.
அந்த நாயோ… புதிய இடத்தில் சுவையான உணவைப் பரிமாறினாலும், ஒரு வாய்கூட உண்ண மறுத்துவிட்டது. நான்கைந்து நாட்கள் பார்த்துவிட்டு, அந்த செல்வந்தர் அதன் உரிமையாளருக்கே திருப்பிக் கொடுத்தார். மகிழ்ச்சியாக ஏழை வீட்டுக் கூழை அது குடித்தது. நாய்கள்… பணம் இருப்பதால் எஜமானர்களை மாற்றிக் கொள்வதில்லை!
– இறையன்பு அய்.ஏ.எஸ்.
———-
மெட்ராஸ் – ஐ
ஒரு கண் நோய்க்கு ஒரு நகரத்தின் பெயரே வைக்கப்பட்டது உலகத்தில் ‘மெட்ராஸ் ஐ’ என்ற நோய்க்கு மட்டும்தான். இந்த நோய்க்கு அப்பெயரை வைத்ததில் ஒரு காரணம் உண்டு. 1930, 1940களில் சென்னை கண் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக ‘அடினோ வைரஸ்’ என்ற நுண்கிருமியைக் கண்டுபிடித்தார்கள். இந்த ‘அடினோ வைரஸ்தான்’ கண் வலியை உருவாக்குகிறது. முதன் முதலில் இந்த கிருமியை மெட்ராஸில் (இன்றைய சென்னை) கண்டுபிடித்ததால் இதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயர் வைத்துவிட்டார்கள். இந்த நோயை காற்றின் மூலமும், தொடுதலின் மூலமும் வேகமாகப் பரப்பும் வைரஸ் இது. ஆனால் வீரியம் குறைந்தது.
———-
நிலுவையில் நீதிபதிகள் தேர்வு
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்ற தேர்வுக் குழுவுக்கும் (கொலீஜியம்) இடையே இணக்கமான சூழ்நிலை நிலவவில்லை. இதனால், பல்வேறு உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனங்கள் தாமதமாகி வருகின்றன. இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு, தலையிட்டு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து அண்மையில் சென்னை, கேரள உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கௌல், கொல்கத்தா உயர் நீதிமன்ற முதலாவது பெண் தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசஃப் ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு பரிசீலித்து வருகிறது.
– பத்திரிகைச் செய்தி