பிடல் காஸ்ட்ரோ

டிசம்பர் 16-31

உலகில் உள்ள ஓடுக்கப்பட்ட மக்களின் காவலன்

கெ.ந.நாமி

இருள் கவிந்து நிற்கும் இரவு விலகி விடியல் தோன்ற வேண்டுமெனில் விடிவெள்ளி தோன்றும் கிழக்கு வானம் செஞ்சுடர் சூரியனின் வரவை வரவேற்க ஆயத்தமாக வேண்டும். அதைப் போன்றுதான் இலத்தின் அமெரிக்கக் குட்டி நாடுகளைக் கவ்விய அமெரிக்க இருள் அகன்றிடத் தோன்றிய செஞ்சூரியனே பிடல் காஸ்டரோ என்ற மகத்தான மனிதநேயப் புரட்சியாளர்.

இலத்தின் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய கொடுமைகளையும், சுரண்டலையும் காணச் சகியாமல் எப்பாடு பட்டேனும் அம்மக்களை விடுவிக்க வேண்டும் என்னும் விருப்பமே, கியூபாவின் சர்வாதிகாரி-யாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாக மக்களை வாட்டி வதைத்த கொடியோன் பாடிஸ்டாவை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றிட புரட்சி செய்யத் தூண்டிற்று. பிடல் காஸ்ட்ரோ வறிய குடும்பத்தில் தோன்றி-யவரல்ல; அனைத்து வசதிகளும் நிறைந்த பணக்காரக் குடும்பத்தின் பிள்ளை அவர்.

ஆனால், எப்படி செல்வக் குடும்பத்தில் பிறந்த தந்தை பெரியார் ஆரிய ஆதிக்கத்தில் திராவிட மக்கள் சூத்திரப் பட்டம் சுமந்து சாஸ்திர சம்பிரதாயங்களின் அடிமைத்தனத்தில் ஆழ்ந்து அல்லல்பட்ட நிலையினைக் கண்டு குமுறி எழுந்தாரோ அதைப் போன்றே பிடல் அவர்களும் புரட்சி தீபம் ஏந்தி, ‘கிரண்மா’ என்ற கப்பலில் சேகுவேரா உட்பட தனது தோழர்களுடன் தேவையான ஆயுதங்கள், வெடிப் பொருள்களுடன் பயணம் மேற்கொண்டார்.

உடன் பிறந்தே கொல்லும் நோய்போல் தன் மெய்க் காப்பாளனாகிய ‘டெல்பினோ’வாலேயே உளவுத் துறைக்குத் தகவல் தரப்பட்டும் உளவுத் துறையின் வியூகத்தை தன் நுண்மதியும் செய்திறனும் துணைகொண்டுச் சாய்த்து இலக்கை அடைந்து ‘சியாராமேஸ்ரோ’ என்ற மலையாடிவாரத்தை அடைந்து கொரில்லா யுத்தத்தின் மூலம் பாடிஸ்டா அரசை வீழ்த்தினார். தனது தலைமையிலான ஆட்சியை நிறுவினார். அரசின் கொள்கையாக சமதர்மக் கொள்கையைக் கடைபிடித்தார்.

உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்ற புகழ்பெற்ற கியூபா தன்னிடம் உள்ள சர்க்கரையையே சோவியத் யூனியனுக்கும் மற்ற நாடுகளுக்கும் அளித்துப் பண்டமாற்று முறை மூலம் பெட்ரோலியப் பொருள்களையும் மற்றவற்றையும் பெற்றது.

என்றாலும் தன் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவதில் உள்ள சிரமத்தை உணர்ந்த பிடல் கரும்பு உற்பத்தி செய்யும்போது  மற்ற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் என்ன சிரமமேற்பட்டுவிடப் போகிறது என்று சிந்தித்ததின் விளைவாக நாட்டின் விவசாய முறையே மாற்றப்பட்டு தானியங்களும் காய்கறிகளும் விளைவித்து நாடு தன்னிறைவை பெற்றது.

உறுபசி நீக்கியபின், ‘ஓவாப் பிணி’ நீக்கிய நாடுதானே வள்ளுவன் இலக்கணம். அதற்காக நாட்டு மக்களுக்கு கல்வி அவசியம் அல்லவா?

பிடல் ஆட்சியில் கல்விக்காக மொத்தச் செலவில் 10% செலவு செய்தார். எனவே, அங்கு படித்தவர் சதவீதம் 90%க்கு மேல் உயர்ந்தது.

தன் காலடியில் கிடந்த கியூபா நெற்றிக்கு நேராக நிமிர்ந்து நிற்பதையா அமெரிக்கா சகிக்கும்? சதிச் செயல்கள் பலப்பல அரங்கேறின. கம்யூனிச நாடுகளின் ஆதரவு பிடலுக்கு இருந்த காரணத்தால் தன் ஆயுத பலத்தால் அமெரிக்கா அடக்கிட முனையவில்லை. இராஜதந்திர நடவடிக்கைகள் மூலமும் பொருளாதார தடை விதிப்பின் மூலமும் வழிக்குக் கொண்டுவர முயன்றது.

அங்கு தனியார் பள்ளிகளோ, கல்லூரிகளோ இல்லை என்பது அரசே அனைத்து மக்களுக்கும் கல்வி அளிக்கும் கடமையை ஏற்றுச் செயல்படுகிறது என்பதற்குச் சான்றாகும். அங்கு 155 மக்கள் தொகைக்கு 1 மருத்துவர் வீதம் உள்ளனர். வல்லரசாகத் துடித்துக் கொண்டிருக்கும் இந்தியத் திருநாட்டிலே 2 லட்சம் மக்களுக்கு 1 மருத்துவர் என்ற நிலைமைகூட இல்லை என்பதை ஒப்புநோக்க வேண்டும்.

இப்படி முழுமையாக மக்கள் தேவையை நிறைவேற்றி வைத்திருக்கும் ஒரு அரசின் தலைவராக பிடல் காஸ்ட்ரோ அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பாரும் மிக்காரும் இன்றி ஆட்சி செய்து வந்ததுடன் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்தவருமல்ல. மாறாக எங்கே போரினாலும் இயற்கை சீற்றத்தினாலும் மக்கள் அல்லலுறுகிறார்களோ அங்கெல்லாம் கியூபாவின் சுகாதாரத்துறையும், அதன் மருத்துவர்களும் சென்று உதவுவது என்பது அவரின் மனிதநேயச் செயல்பாட்டிற்கான சான்றன்றோ! மேலும் தன் கொடுமையான எதிரி நாடான அமெரிக்காவை ‘காத்தரின்’ புயல் தாக்கியபோது அம்மக்களின் துயர் துடைக்க முன்னணியில் நின்றது கியூபாவின் உதவிக்கரமே!

அப்படி அமெரிக்காவுக்கு உதவியபோது அமெரிக்க அரசுதான் என் எதிரியே தவிர அம்மக்கள் என் எதிரியல்ல என்று கூறிய மனிதநேயப் பண்பும் பெருமிதமும் போற்றத்தக்கதன்றோ!

வஞ்சகமும், சூழ்ச்சியும், ஆதிக்க அகங்காரமும் உலக சட்டாம்பிள்ளைத் தனமுமே தன் இலக்காகக் கொண்ட அமெரிக்கா மட்டும் கடைசிவரை அவரைத் தன் எதிரியாக வைத்து அவரைக் கொல்ல 638 முறைக்கு மேல் முயன்றது. 11 அமெரிக்க அதிபர்களின் ஆட்சிக்காலம் முழுமையும் அந்த நாட்டின் எதிர்ப்புக்கு இடையில்தான் இத்தனையும் சாதித்தார். எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்கிற கம்யூனிசத் தத்துவத்தை நடைமுறைப்படுத்த எந்த நாட்டின் மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்குத் துணை நின்றார்.

நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனிதர்கள் என்ற மனிதநேயப் பார்வையில் போராடினார். தனது 90ஆவது வயதில் இறந்தாலும் அவர் ஊட்டிச் சென்ற உணர்வுகளும் காட்டிச் சென்ற வழிகளும் ஆதிக்க சக்திகளை அழிக்கும், அடக்கப்பட்ட மக்களுக்கு எழுச்சியூட்டும் என்பது உறுதி! 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *