638 ways to Kill Castro
கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ – உலகத்தைத் தன் காலடியில் வைத்திருப்பதாக இறுமாந்திருந்த அமெரிக்காவின் காலடியில் (உலக வரைபடத்தின்படி) இருந்து கொண்டு கடைசி வரை தலை நிமிர்ந்திருக்கும் தேசத்தைக் கட்டியவர்.
“உலகில் கலவரம் நடக்காத நாடு எது தெரியுமா? அமெரிக்கா. ஏனென்றால், அங்கேதான் அமெரிக்கத் தூதரகம் இல்லை’ என்பது புகழ்பெற்ற அரசியல் நகைச்சுவை. கலவரம், அரசியல் கொலை, ஜனநாயகத்தின் பேரில் போர் போன்றவையெல்லாம் அமெரிக்காவின் உளவுத் துறைக்கு சர்வசாதாரணம்.
உலகெங்கும் செய்யும் முயற்சியை கியூபாவில் செய்யாமல் இருக்குமா? பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல சாப்பாடு, சிகரெட், நீர், படுக்கை போன்றவற்றில் விஷம் வைத்தது, காதலி, கியூப அகதி போன்றோர் மூலம் கொல்ல முயன்றது முதல் அவர் நீந்தி விளையாடும் கடலிலேயே கொல்ல முயன்றது வரை பல கொலை முயற்சிகள் பலிக்காமல் போன கதையைப் பட்டியலிடுகிறது. 2006-இல் டோலன் கேனலின் இயக்கத்தில் வெளிவந்த இந்த ஆவணப்படம். எந்தச் சதிக்கும் பலியாகாமல் இயற்கை எய்தினார் காஸ்ட்ரோ என்பது வரலாறு.
https://www.youtube.com/watch?v=VFQz8racYNk- உடுமலை
—————————————————————————————————————————————————————————–
BILL APP
பில் ஆப் செயலி இது உங்கள் ஈட்டுறுதி அட்டையை (Warranty Card) பாதுகாக்க உதவுகிறது.
நீங்கள் வாங்கும் வீட்டுக்கு தேவையான மின்னணுக் கருவிகளின் ரசீதுகளை கிளவுட் மூலம் சேமித்து வைக்கலாம். இது ரசீதில் உள்ள ஈட்டுறுதித் தேதி முடிவதற்கு முன்னரே நினைவுபடுத்துகிறது. இதனால் அடிக்கடி ஈட்டுறுதி அட்டையைத் தேடிப் பார்க்க தேவையில்லை.
இதிலுள்ள நான்கு இலக்க எண்ணை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் ரசீது விவரங்களைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல் ஜிமெயில், முகநூல், வாட்ஸ்அப் கணக்குகளிலும் பகிரலாம்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஒருமுறை உங்கள் திறன்பேசியில் நிறுவிவிட்டு உள்நுழைய இணையத்தை பயன்படுத்தினால் போதும். அதன்பின் இணைய இணைப்பு இல்லாமலேயே எப்பொழுது வேண்டுமானாலும் இந்தச்செயலியை முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்தமுடியும்.
https://play.google.com/store/apps/details?id=com.codehubindia.billapp&hl=en- அரு.ராமநாதன்
———————————————————————————————————————————————————————————
நூல் அறிமுகம்
நூல்: மக்கள் மேடையில் எனது முழக்கங்கள்
ஆசிரியர்: கவிஞர் செவ்வியன்
வெளியீடு: திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம், 311, 5ஆவது தெற்கு குறுக்குத் தெரு, கபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை, சென்னை – 15.
பக்கங்கள்: 192, விலை: ரூ.130/-
‘மக்கள் மேடை’ மாத இதழில் கவிஞர் செவ்வியன் அவர்களால் எழுதப்பட்ட பல்வேறு தலையங்கங்கள், நூல் அறிமுகங்கள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு. அரசியல், பொருளாதாரம், சமுதாயம், அறிவியல், உடல்நலம் குறித்த பயனுள்ள பல்வேறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, ‘ஆன்மீகமும் லோகாயத வாதமும்’, ‘மாசும் மனிதனும்’, ‘மனிதனை விரட்டும் கொசுக்கள்’ போன்றவை சிறந்த கட்டுரைகள் ஆகும்.
– வை.கலையரசன்