இதய நோய்கள் வருவது பற்றி பல்வேறு செய்திகள் இணையத்தில் உலாவிக்கொண்டே இருக்கின்றன. எது உண்மை, எது பொய் என்று தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது.
1. இளம் வயதில் இதயநோய் வருமா?
குழந்தைப் பருவத்தில் இருந்தோ அல்லது இளமைப் பருவத்தில் இருந்தோ ரத்தக் குழாயில் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடுகிறது. எதிர்காலத்தில் இந்தப் படிதல் அளவு அதிகரிக்கும்போது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும். மாரடைப்பு என்று மருத்துவமனைக்கு இளைஞர் முதல் முதியவர் வரை எல்லோரும் வருகின்றனர். உடல் பருமன், டைப் 2 சர்க்கரை நோய் போன்ற காரணிகள் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் வருவதற்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. எனவே, இளைஞர்-களுக்கும் வரும்.
2. நெஞ்சில் ஏற்படும் வலியைக் கொண்டே மாரடைப்பை அறியலாமா?
சர்க்கரை நோய் இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படாமல்கூட போகலாம். (முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சர்க்கரை நோய் காரணமாக மாரடைப்பு அறிகுறிகள் வெளிப்படவில்லை.) ஆனால், இவர்களுக்குத்தான் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாக இருக்கிறது. எனவே, நெஞ்சில் அழுத்தம், வாந்தி, தலைபாரம், கைகளில் வலி ஏற்பட்டால், அருகில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு உடனே செல்வது அல்லது 108அய் அழைத்துத் தெரிவிப்பது நல்லது.
3. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மருந்தை சாப்பிடுவதால், எதையும் சாப்பிடலாமா?
நம் உடலில் கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் உருவாகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்தும் கொலஸ்ட்ரால் பெறப்-படுகிறது. அதைத் தவிர, நம் உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலில் ஒரு பகுதி நம் கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது. ஸ்டாடின்ஸ் (Statins) எனப்படும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ராலை மட்டுமே கட்டுப்படுத்தும். கொழுப்பைக் குறைக்கும் மருந்தை எடுத்துக்கொண்டு உணவின் மூலமாக கொலஸ்ட்ராலைச் சேர்த்துக்கொண்டே போவதால் எந்தப் பயனும் இல்லை. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி கொலஸ்ட்ரால் குறைவான உணவுப்பொருட்களை உண்பதே நல்லது.
4. வயதாவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது இயல்பா? பாதிப்பா?
வயதாவதால் ரத்த நாளங்கள் தளர்-வடைகின்றன. அதனால், ரத்தத்தை வேகமாகப் பாய்ச்சுவதற்காக இதயம் கடினமாக உழைக்கிறது. ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிப்பதால், நாளங்கள் மேலும் பலவீனமடைகின்றன. இதனால் இதயம் மேலும் மேலும் கடினமாக உழைப்பதால், ஒருகட்டத்தில் இதயத் தசைகளும் தளர்வுறுகின்றன. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால், இதயப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரத்த அழுத்தம் 140/90-க்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, தேவையான சிகிச்சை பெற வேண்டும்.
5. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்தாலும் இதய நோய் வருமா?
சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதுடன், கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம். இல்லையெனில் மாரடைப்பு வரும்.
6. வைட்டமின்கள் அதிகம் எடுத்துக் கொள்வதால் இதய நோய்கள் தடுக்கப்படுமா?
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த வைட்டமின் களான இ, சி மற்றும் பீட்டாகரோட்டின் போன்றவை இதய நோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்கும். ஆனால், வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் கார்டியோவாஸ்குலர் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்-படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. எனவே, உணவின் மூலமாக வைட்டமின்கள் எடுத்துக்கொள்வதே சிறந்த வழி. இதற்கான காரணங்களை முழுமையாக அறியமுடிய-வில்லை என்றாலும், இதயத்தைப் பலப்படுத்தும் வைட்டமின்களான இ, சி மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்த கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துகொள்வது நல்லது. காய்கறி, பழங்களைத் தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் இயற்கையான முறையில் அனைத்து வைட்டமின்-களும் தாதுஉப்புக்களும் கிடைத்துவிடும்.
7. புகை இதயத்திற்குப் பகையா?
ஒரு வருடம் புகைபிடிக்காமல் இருப்பதால், இதய நோய்களுக்கான வாய்ப்பு 50 சதவிகிதம் குறைகிறது என்கிறார்கள். இதுவே, 10 ஆண்டுகளாகப் புகைபிடிக்காமல் இருப்பவர்-களுக்கு புகைப்பழக்கம் இல்லாதவர்களின் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்குமோ அவ்வளவு ஆரோக்கியத்துடன் இருக்கும். எனவே, இப்போதே இந்தக் கணமே புகைபிடிப்பதை நிறுத்துவது நல்லது.
8. இதய நோய்கள் பெண்களுக்கு ஏற்படாதா?
மெனோபாஸ் வரையிலான காலக்கட்டத்தில் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. மெனோபாஸுக்குப் பிறகு, அந்தப் பாதுகாப்பு அவர்களைவிட்டுப் போய்விடுகிறது. எனவே, நீங்கள் ஆணோ பெண்ணோ, 50 வயதைக் கடந்தவர் என்றால், குறிப்பிட்ட இடை வெளியில் ரத்த அழுத்தப் பரிசோதனையும், இதயப் பரிசோதனையும், கொலஸ்ட்ரால் பரிசோதனையும் செய்துவருவது நல்லது.
9. இதய நோய் இருந்தால் கொழுப்பே சாப்பிடக் கூடாதா?
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த எண்ணெய் மீன்கள், ஃபிளாக்ஸ் விதை போன்றவற்றை வாரம் இருமுறை எடுத்துக் கொள்ளலாம். குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருட்கள், மீன்கள், நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். கெட்டக் கொழுப்பு உணவைத் தவிர்த்து, நல்லக் கொழுப்பு தரும் உணவை அளவோடு மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
10. சிறிய மாரடைப்பு என்பது பெரிய ஆபத்தா?
முதல் மாரடைப்பு வரும்போது சிலருக்கு உணர முடியாது. ஆனால், ஒருமுறை அட்டாக் ஏற்படுவது என்பது, உங்களுக்கான எச்சரிக்கை மணி! எனவே, சரியான எடையைப் பராமரிப்பது, அளவான கொழுப்பைப் பராமரிப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது என இதய நோய்களைத் தவிர்ப்பதற்கான ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.