தொகுப்பு: க.பூபாலன் சிங்கப்பூர்
(கடந்த இதழின் தொடர்ச்சி…)
சிங்கப்பூர் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின.வேங்கடேசன் அவர்களின் உரை
சிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சிங்கப்பூர் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின.வேங்கடேசன் அவர்கள் உரையாற்றினார்.
அனைவருக்கும் வணக்கம். நான் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த காலக்கட்டத்தில், எனக்கு அப்பொழுது 10 வயது இருக்கும். புதுச்சேரியில் லாசுபேட்டை என்கிற சிற்றூரைச் சேர்ந்தவன்.
அந்த ஊரில் எல்லா அரசியல் கட்சிகளும், எல்லா விதமான பக்தி நிகழ்ச்சிகளுக்குமான அனைத்து கூட்டங்களும் நடைபெறும். ஏனென்றால், வீதி அமைப்பு அங்கே பெரிதாக இருக்கும் என்கிற காரணத்தினாலும், போக்குவரத்திற்கும் இடையூறு இருக்காது என்கிற காரணத்தினாலும்.
புதுச்சேரியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊர் லாசுபேட்டை. அன்றைக்கு அது சிற்றூராக இருந்தது _ இன்றைக்கு அது பேரூராக இருக்கிறது.
அன்றைக்கு அந்த இடத்தில் பெரியார் உரையாற்றுகின்ற ஒரு கூட்டம் நடைபெற்றது. பெரியார் அவர்கள் நோய் வாய்ப்பட்டு கைகளில் வாளியைத் தூக்கிக்கொண்டு வருகின்ற சூழலிலும் உரையாற்ற வந்திருக்கின்றார்.
எனக்கு என்ன பழக்கம் இருந்தது என்றால், மேடைப் பேச்சுகளைக் கேட்பது என்பது தான். இரவு 10 மணிக்குள் வீட்டிற்குச் சென்றுவிட வேண்டும். புலவர் கீரன் உரையாற்றினாலும் சரி, திருப்புகழ் கிருபானந்த வாரியார் உரையாற்றினாலும் சரி, அய்யா பெரியார் உரையாற்றினாலும் சரி எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்பேன்.
அப்படி ஒரு நிகழ்ச்சியில்தான், நான் பெரியார் அய்யா அவர்களை தூரத்தில் பார்த்தேன். மேடையில் அவர் உரையாற்ற ஆரம்பிக்கும்பொழுதே, கடவுள் மறுப்பைச் சொல்லித்தான் உரையை ஆரம்பிக்கின்றார். பிறகு, முன்வரிசையில் உள்ள சின்ன பிள்ளைகளைப் பார்த்துக் கேட்கின்றார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியரிடம் நீங்கள் கேள்வி கேட்பீர்களா? என்று கேட்டார். பிள்ளைகள் எல்லாம் அமைதியாக இருந்தார்கள். பிறகு, பெரியார் அவர்கள் உரையாற்றிவிட்டு, சொன்னார்.
எங்கே, ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கிறோமோ, அங்கே அறிவியல் வளரும். எங்கே ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கவில்லையோ, அங்கே முட்டாள் தனமும், மூடத்தனமும், பக்தியும்தான் வளரும் என்றார். இந்தச் செய்தி அன்றைக்கு ஆழ்மனதில் எனக்கு நன்றாகப் பதிந்தது. அறிவியல் வளரவேண்டும் என்று சொன்னால், ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க வேண்டும்.
ஏன்? எதற்கு? என்று எவ்வளவு கேட்கின்றோமோ, அந்தக் கேள்விகளால்தான் இன்றைக்கு மனித சமுதாயம் ஒட்டு மொத்தமாக வளர்ந்திருக்கின்ற வளர்ச்சிக்குக் காரணம், இது ஏன் இப்படி நிகழ்ந்தது? ஏன் இப்படி நிகழவில்லை? என்ற கேள்வியை எவனோ ஒருவன் கேட்டான், அதனால் இன்றைக்கு வளர்ச்சியடைந்து உச்சத்தை அடைந்திருக்கின்றோம்.
இந்தச் செய்தியை, அன்றைக்குப் பெரியார் அவர்கள், மிகச் சாதாரணமாக பேச்சுத் தமிழில் சொன்னது, பசுமரத்தாணி போன்று என் மனதில் பதிந்துள்ளது. பெரியார் அவர்களைப் பற்றி நிறைய செய்திகளைப் படித்திருக்கின்றோம்; கேட்டிருக்கின்றோம். ஆனால், பாவேந்தர் பாரதிதாசன் பெரியார் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை, மண்டைச் சுரப்பை உலகு தொழும் _ சில கவிஞர்கள் சில வார்த்தையைப் போட்டார்கள் என்றால், மாறுபட்ட வார்த்தையை போடமுடியாது.
பாரதியார்கூட, ‘முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்’ இந்த மொய்ம்புற வார்த்தையைப் போட்டிருப்பார். அதற்கு வேறு மாற்று வார்த்தையைப் போட்டு சொல்ல முடியாது. அதேபோன்று, பாரதிதாசன் அவர்கள் பெரியாரைப் பற்றி சொல்லும் பொழுது, மண்டைச் சுரப்பு என்று சொன்னார். மண்டையில் சுரக்கின்ற விஷயங்கள், அறிவு, அறிவு சார்ந்த, அதற்கு அப்பாற்பட்டு எவ்வளவோ இருக்கிறது.
ஆனால், பெரியாருடைய அறிவு இந்த – சமுதாயத்தை அழைத்துச் செல்லக்கூடிய வழி- புதிய வழியாக அமைந்தது – அன்றைய காலகட்டத்திற்குத் தேவையாக இருந்தது – பெண் விடுதலைக்கு வித்திட்டது. இன்னும் சொல்லப்போனால், சமுதாயத்தையே புரட்டிப்போட்டது.
ஆனால், அப்படி ஒரு தீவிரமான இயக்கமாக வளர்ந்து. தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லா இனத்தவரும் சமமானவர் என்கிற ஒரு காலம் இருந்தது. அப்படியிருந்த ஒரு நிலை, இன்றைக்கு மீண்டும் பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதே ஏன்? என்கிற கேள்வி எழுகிறது.
அப்பொழுது எனக்குள் தோன்றிய ஒரு செய்தி – எங்கேயோ பெரியாரியம் நீர்த்துப் போகிறதோ _ பெரியார் கட்டிக்காத்து வந்த பெரியாருடைய கொள்கை எங்கோ நீர்த்துப் போகிறதோ என்று ஒரு சிறிய கேள்வி எழுகிறது. ஆனால், அதற்கான பதில் கிடைக்கவில்லை. அதனை ஆய்வு பூர்வமாக பார்க்கவேண்டும். ஒரு இடத்தில் எனக்கு சிறிய பொறி தட்டியது.
ஒரு காலத்தில் பெரியார் இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு கருப்புச்சட்டைக்காரர் வீடு என்று பெயர். அந்தக் கருப்புச் சட்டைக்காரர் வீட்டில் உள்ள அத்தனை பேரும் அந்தக் கொள்கையில்தான் இருப்பார்கள். கருப்புச்சட்டை அணிவது மட்டுமல்ல, கோவில்களுக்குச் செல்வது கிடையாது – வீட்டில் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய மாட்டார்கள். இதனை நான் கிராமங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
ஆனால், இன்றைக்கு அது எப்படி வடிவமெடுத்து இருக்கிறது என்று சொன்னால், நான் பெரியார் கொள்கைக்காரன்; நான் மட்டும் கோவிலுக்குப் போகமாட்டேன்; ஆனால், என் மனைவி கோவிலுக்குப் போனால், தடுக்க-மாட்டேன். இங்கே தான் அந்த நீர்த்துப்போன தன்மை ஏற்பட்டு இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது.
எங்கே நாம் கொஞ்சம் சறுக்குகின்றோமோ, அங்கே கொள்கை விழுந்து விடும். கொள்கை விழுந்துவிட்டால், அதனை செயல்முறைப் படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். இது என்னுடைய சிந்தனை. நான் கூர்ந்து கவனித்ததில் ஏற்பட்ட ஒரு செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ளஆசைப் பட்டேன்.
ஆனால், பெரியார் ஒட்டுமொத்தமாக நம் சமுதாயத்திற்குத் தேவை. இன்று ஒரு பெரியார் தேவை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்குப் பெரியாரைப் போன்று ஒரு வன்மமாக, பெரியாரைப் போன்று நெஞ்சுரத்-தோடு உறுதியோடு எந்தச் செயலையும் செய்யக்கூடிய ஒரு ஆள் நமக்குத் தேவை. அப்படி இருந்தால்தான், இன்றைக்குத் தமிழகத்தை மாற்ற முடியும்.
தமிழகத்தில் இல்லாத சித்தர்களா? மகாராஷ்டிராவிலிருந்து ஒரு சித்தரை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, அதனை உலகளாவிய அளவிற்குக் கொண்டு போகிறார்கள். அதன் பின்னணியில் உள்ள செய்தி என்னவென்று பார்த்தால், கோவிலைக் கட்டி விற்பதுதான். கோவில்களையே இன்றைக்கு விற்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி ஒரு மோசமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்றால், பெரியாரைப் போன்று வலுவாகப் போரில் நின்று போராடக் கூடிய அளவிற்கு நாமெல்லாம் திரண்டு போராடாமையே.
பெரியாருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவது என்பது மெத்த மகிழ்ச்சியான விஷயம். ஆனால், பெரியாருடைய கொள்கைகள் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்வது, பெரியாரைப் பின்பற்றுகின்ற நம் அத்துணை பேருடைய கடமையாக இருக்கும் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி முடிக்கின்றேன். இவ்வாறு இரத்தின. வேங்கடேசன் அவர்கள் உரையாற்றினார்.
வள்ளல் ஜோதி மாணிக்கவாசகம் அவர்களின் உரைர்
சிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் வள்ளல் ஜோதி மாணிக்க-வாசகம் அவர்கள் உரையாற்றினார்.
அனைவருக்கும் வணக்கம். தந்தை பெரியாரைப் பார்க்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், பெரியார் தொண்டர்களுடைய தொடர்பு எனக்கு 6 வயதிலே கிடைத்தது. எங்களுடைய ஊரில் பொங்கல் விழாவன்று விளையாட்டுப் போட்டிகளை நடத்துவார்கள். அதனை எடுத்து நடத்துவது எங்களுடைய வீட்டின் அருகிலுள்ள திருவள்ளுவர் படிப்பகத்தின் சார்பில், தந்தை பெரியார் இயக்கத் தொண்டர்கள்தான்.
அதில் கலந்துகொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர் மூன்று பேர்களுக்கு மூன்றாவது நாள் விழாவில்தான் பரிசு கொடுப்பார்கள். கடைசியாக வந்தவர்களுக்கு பென்சில், பேனா, ஸ்கேல் என்று உடனே கொடுத்துவிடுவார்கள். அப்படித்தான் எனக்கு பெரியார் தொண்டர்களிடம் பழக்கம் ஏற்பட்டது.
தந்தை பெரியாரிடம் எனக்குப் பிடித்த விஷயம் – அவர் இறக்கின்ற வரையில்கூட, தன்னுடைய கொள்கைகளை எந்தக் காரணத்திற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததேயில்லை. எந்தவிதமான பிரச்சினைகள் வந்தாலும், அதனையெல்லாம் சமாளித்து, தன்னுடைய கொள்கையை நிலைநாட்டினாரே தவிர, இல்லை இல்லை, நான் சொன்னது தவறு; இவர்களுக்காக நான் மாற்றிக் கொள்கிறேன் என்று அவர் ஒருநாளும் சொன்னதில்லை.
இங்கே உரையாற்றியவர்கள் சொன்னது போன்று, இன்றைக்கு ஜாதி உணர்வு மக்களிடம் ஓரளவு குறைந்து கொண்டுதான் வருகிறது. ஆனால், அரசியல் தலைவர்களிடம் ஜாதி உணர்வு அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.
பெரியார் வந்த காலத்தை நான் எப்படிப் பார்க்கிறேன் என்று சொன்னால், தமிழர்கள் சீர்கெட்ட நிலையில் இருக்கும் பொழுது, ஜாதி, மதம், கல்வி மறுப்பு என்று இருந்த நிலையில், ஒரு தலைவர் தேவைப்பட்டார். ஜாதி என்பது வள்ளுவர் காலத்திலிருந்தே இருக்கிறது என்பதற்கு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லும் பொழுதே அப்பொழுதே ஏதோ பிரச்சினை இருந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். அப்பொழுதும் மக்கள் திருந்தவில்லை.
அதற்குப் பிறகு சென்ற வாரம் இராமானுஜர் நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதில் சில கருத்துகளைச் சொன்னார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராமானுஜர் இதற்காகப் பாடுபட்டிருக்கிறார். அரிஜனங்களுக்கு, திருக்குலத்தவர் என்று பெயர் வைத்திருக்கிறார். அவர்களை அழைத்துக் கொண்டு கோவில் பிரவேசம் செய்திருக்கிறார். அதனால் அவர் அவருடைய ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார். அப்பொழுதும் மக்கள் திருந்தவில்லை. இது போன்ற சாத்வீகமான முறையில் சொல்லிக் கொண்டே போனால், மக்கள் திருந்தமாட்டார்கள் என்ற நிலையில்தான், அதிரடியாக உள்ளே நுழைகிறார் தந்தை பெரியார் அவர்கள்.
அவருடைய கருத்துக்கள், பேச்சுக்களை எல்லாம் யாரும் சமாதானப்படுத்திக் கொள்ளக் கூடிய பேச்சுக்களாக இருக்காது. பொட்டில் அடித்தது போன்று என்று சொல்வார்களே, அது போன்று நேரிடையாகத்தான் அவர் தாக்கிப் பேசினார். சுற்றிவளைத்துப் பேசுகின்ற வழக்கமுடையவர் பெரியார் அல்ல.
கடவுள் எதிர்ப்பாளர் என்று பெரியாரை சொல்கிறார்களே, அதில் நான் மாறுபடுகிறேன். நான் அவரை எப்படிப் பார்க்கிறேன் என்றால், அவரை ஒரு முரட்டு பக்தராகத்தான் பார்க்கிறேன். ஏனென்றால், சுதந்திர போராட்டக் காலத்தில், காந்தியடிகளுக்கு ஒரு வழிமுறை இருந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு ஒரு வழிமுறை இருந்தது.
பக்தர்களிலே சில பேர் சாதாரணமாக விரதம் இருந்து செல்வார்கள்; சிலர் அலகு குத்தி உடலை வருத்திக்கொண்டு செல்வார்கள். அப்படிப் பார்க்கும் பொழுது, தந்தை பெரியார் அவர்கள், மூட நம்பிக்கைகளை எதிர்த்து, நம்முடைய மனதில் மூடிக்கிடக்கக் கூடிய நம்பிக்கைகளைத் திறந்து வைத்தார். ஏனென்றால், நான் தாழ்ந்த ஜாதி, நம்மால் அதனைச் செய்ய முடியாது; இதனைச் செய்ய முடியாது என்று நம்மை நாமே தாழ்த்திக் கொண்டிருந்தோம். அதனை முறியடித்து, நம்மை நம்பிக்கையோடு செயல்பட வைத்தவர் தான் தந்தை பெரியார் அவர்கள்.
நான் ஏன் பெரியார் அவர்களை முரட்டு பக்தர் என்று சொல்கிறேன் என்றால், ஆன்மீகத்தை எடுத்துக் கொண்டால், அந்த விரதம் இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியாக, கடவுள் எங்கேயும் கிடையாது; உன்னுடைய மனதில்தான் இருக்கிறார் என்று சொல்வார்கள். அவர்களும் கடவுள் வெளியில் இல்லை என்று தானே சொல்கிறார்கள்.
கடவுளை ஏன் வெளியில் தேடுகிறீர்கள். நீதான் கடவுள் என்று சொல்கிறார்கள்.
சில மாணவர்கள் தமிழை நன்றாகப் படித்து, அர்த்தம் புரிந்து 90 மதிப்பெண் எடுப்பார்கள். ஆனால், சிலர் என்னைப் போன்று இருப்பவர்கள், கோனார் நோட்சைப் படித்து குறுக்கு வழியில் வந்துவிடுவார்கள். ஆனால், தேர்வில் மதிப்பெண் வாங்குவது தானே குறிக்கோள்.
கடவுள் சிலைகளை ஏன் உடைத்தார் பெரியார் என்று நான் பார்க்கிறேன் என்றால், நம்மிடையே உள்ள ஒரு நல்ல பழக்கம் என்னவென்றால், நம்முடைய தவறை நாம் ஒப்புக் கொள்வது கிடையாது. கணவன் மனைவி மீது பழிபோடுவதும்; மனைவி கணவன் மீது பழிபோடுவதும், குழந்தைகள் பெற்றோர் மீது பழிபோடுவதும் -ஏன், தேர்வில் கூட மதிப்பெண் எடுக்கவில்லை என்றால், ஆசிரியர்கள் மீது பழி போடுவோம், ஒழுங்காக சொல்லித் தரவில்லை என்று.
அதுபோன்று தமிழன் தன்னுடைய குற்றங்களை, தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக அந்தச் சிலைகள் பயன்-படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்த சிலைகள் தேவையில்லை என்பதற்காகத்தான் பெரியார் அவர்கள் அதனை உடைத்திருப்பார்கள் என்று நான் என்னுடைய கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.
அந்த வகையில் பார்க்கும் பொழுது, அந்தப் பெருந்தலைவர் அன்றைக்கு இல்லை என்று சொன்னால், இங்கே உரையாற்றிய பெரியவர்கள் சொன்னது போல, நம்மில் பலர் இந்த நிலையில் இருந்து பேசிக்கொண்டிருப்போமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறிதான்.
நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதற்கு ஒரு சிறிய உதாரணம். இன்றைக்கு முன் வரிசையில் நிறைய நாற்காலிகள் காலியாகத் தான் இருந்தன. ஆனால், எந்தப் பெண்களும் முன் வரிசையில் வந்து அமரவில்லை. பின்னால் உள்ள நாற்காலியில் தான் அமர்ந்தார்கள்.
பெண்களே, நீங்கள் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காகப் பாடுபட்ட தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். நீங்கள் முன்னால் வந்து அமருங்கள். தைரியமாக நீங்கள்வாருங்கள். ஆண்களாகிய நாங்கள் அதனைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு வள்ளல் ஜோதி மாணிக்கவாசகம் அவர்கள் உரையாற்றினார்.
(தொடரும்…)