அ.இ.அ.தி.மு.க.வை அபகரிக்க துடிக்கும் ஆரிய நரிகள்
எச்சரிக்கை! எச்சரிக்கை!
மஞ்சை வசந்தன்
திராவிடர் கழகமும் தி.மு.கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்றார் அண்ணா. ஒரே இலக்கை இரு முறைகளில் அடையும் என்பதே அவர் அதன் வழி உணர்த்திய செய்தி.
1967இல் ஆரியத்தின் மூத்த நரியான இராசகோபாலாச்சாரியையே தன் அறிவுக் கூர்மையால் மயங்கவைத்து, ‘தன் அமைச்சரவையே பெரியாருக்குக் காணிக்கை’ என்றதன் மூலம் தான் கூறியதை நடைமுறையிலும் உறுதி செய்தார்.
தி.க.விலிருந்து தி.மு.கழகம் பிரிந்தது முதல் எவ்வளவோ முரண்பாடுகள், எதிர்ப்புகள், விமர்சனங்கள், கருத்து மோதல்கள் இருப்பினும் தந்தை பெரியாரின் கொள்கையிலிருந்து இம்மியும் புரளோம் என்பதைச் செயலில் காட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார். நிறைவேற்றுவதற்கு முன் பெரியாரிடம் காட்டி திருத்தமும் ஒப்புதலும் பெற்றார். இதுதான் அண்ணா வழி! அண்ணாயிஸம் என்றாலும் அதுதான்!
அண்ணாவிற்குப் பின்வந்த கலைஞர் இன்றளவும், ஆட்சியில் இருந்தாலும், இல்லாமல் போனாலும் பெரியாரின் கொள்கையினின்று பிறழாமல் செயல்பட்டு வருகிறார்.
தி.மு.க.விலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை உருவாக்கிய பின் ஆரிய பார்ப்பனர்கள் அந்தரங்க ஆலோசகர்களாய் இருந்து இடஒதுக்கீட்டை ஒழிக்க முயன்றனர். நுழைவுத் தேர்வை நுழைத்து, ஒடுக்கப்பட்ட மக்களை ஓரங்கட்டினர்.
ஆனால், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழிப்போடு இருந்து தி.மு.கழகத்தோடு இணைந்து எதிர்த்துப் போராடி, இப்பாதிப்பு-களை அகற்றினார்.
எம்.ஜி.ஆர். அவர்களும் பொருளாதார அளவுகோலை நுழைத்த பின்பு இடஒதுக்கீட்டு தத்துவத்தின் உட்பொருள் உணர்ந்து தவற்றைத் திருத்திக் கொண்டதோடு, பிற்பட்டோர் இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தியதன் மூலம் தந்தை பெரியாரின் நோக்கத்திற்கு வலுச் சேர்த்தார்.
எம்.ஜி.ஆருக்குப் பின் அ.தி.மு.க. ஆட்சியின் முதல்வராக வந்த ஜெயலலிதா பார்ப்பனப் பெண்மணியாக இருந்தாலும், தன் கட்சியில் இலட்சக்கணக்கான திராவிடத் தமிழர்கள் இருக்கும் உண்மையை ஆழமாக உணர்ந்து கொண்டு, அதற்குத் துரோகம் செய்யாமல் நடக்க வேண்டும் என்று எச்சரிக்கையோடு நடந்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மரியாதையுடன் அழைத்து நீங்கள் சொல்வதை அப்படியேச் செய்கிறேன் என்று உறுதிகூறி, இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் நடந்து கொண்டார். அதன்படி 69% இடஒதுக்கீட்டை ஆசிரியரின் ஆலோசனையின்படி, இந்திய அரசமைப்புச் சட்டம் 31-_சி பிரிவில் சேர்க்கச் செய்தார். அதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் “சமூகநீதிகாத்த வீராங்கனை’’ என்ற பட்டத்தை அளித்தது திராவிடர் கழகம்.
அதேபோல் நுழைவுத் தேர்வை எதிர்ப்-பதிலும், ‘நீட்’ தேர்வை எதிர்ப்பதிலும் உறுதியாக இருந்து ஒடுக்கப்பட்டோரின் உயர்விற்கும் பாதுகாப்பிற்கும் துணை நின்றார். அவருள் ஆழமாய் இருந்த கடவுள், சோதிட, இராசி, சடங்கு நம்பிக்கையில் சில நடவடிக்கைகளில் அய்யாவின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டாலும், முதன்மைக் கொள்கையில் அய்யா வழியில் உறுதியாய் நின்றார்.
இதனால், ஆரிய பார்ப்பனர்கள் வயிறு எரிந்தாலும், தங்கள் இனத்துப் பெண் முதல்வராய் இருப்பதினாலும், கோயில் சார்ந்தவற்றில் தங்களுக்குச் சாதகமாய் அவர் செயல்படுவதாலும், திராவிடக் கொள்கையில் உறுதியாய் இருக்கும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதாலும் ஜெயலலிதாவைத் தூக்கிப் பிடித்தனர்; அ.தி.மு.க.வே ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆதரித்தனர்.
ஆனால், அந்த அம்மையார் நோய்-வாய்ப்பட்டு மருத்துவமனையில் தன்னிலை இழக்க, மத்தியில் ஆரிய பார்ப்பன பி.ஜே.பி. ஆட்சியும் அதன் கைப்பாவையாக மோடியும் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தில் எப்படியாவது பி.ஜே.பி.யை வளர்த்து விட வேண்டும், நிலைநிறுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மறுபக்கம், அ.இ.அ.தி.மு.க.வையும் அதன் முக்கிய பொறுப்பாளர்களையும், அமைச்சரவை யையும் தங்கள் கைப்பாவையாக வைத்து, அதன்பின், அ.தி.மு.க.வைச் சிதறடித்து, அந்த இடத்தை தாங்கள் கைப்பற்றி விட வேண்டும் என்ற ஒரு சதித் திட்டத்தோடு தொடர்ந்து காய் நகர்த்தி வருகின்றனர்.
யானை வரும் பின்னே
மணி ஓசை வரும் முன்னே!
என்பதைப் போல சுப்பிரமணியசாமியின் மணி ஓசையை முன்கூட்டியே ஒலிக்கச் செய்கிறார்கள்.
முதல்வராய் ஜெயலலிதா அவர்கள் இறந்துபட்ட நிலையில், அவர் கல்லறை ஈரம்கூடச் சரிவர காயாத நிலையில் சுப்பிரமணியசாமி, “அ.இ.அ.தி.மு.க. ஒரே கட்சியாக இருக்காது. சசிகலா நடராஜன் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பார். பன்னீர் செல்வத்தை சுதந்திரமாக இருக்க விடமாட்டார். தன்னுடைய குடும்பத்தில் இருந்து பன்னீர்செல்வம் இடத்திற்கு ஒருவரை கொண்டுவருவார்.
பன்னீர் செல்வத்திற்கு கட்சிக்குள் எந்தவித அடித்தளமும் இல்லை. அதேபோல் சசிகலா-விற்கும் எந்தவொரு அரசியல் புத்திசாலித்-தனமும் இல்லை’’ என்று கூறினார்.
அடுத்தபடியாக, ஆரியமயமான ஆங்கில ஊடகங்கள் தன் வேலையைத் தொடங்கியது. தங்கள் இனத்துப் பெண் முதல்வராய், கட்சிக்கும் ஆட்சிக்கும் இருந்தவரை மகிழ்ந்திருந்த-வர்கள், அவர் மரணமடைந்ததும், தங்களின் ஆட்சி அதிகாரம் இனி தமிழகத்தில் தலைகாட்ட வழியே இல்லை என்ற அதிர்வில், ஆத்திரத்தில், கொல்லைப்புறமாகக் கோலோச்ச டில்லியிலிருந்து நூலை நுழைக்க சூழ்ச்சி வேலையில் இறங்கியுள்ளனர்.
இதைப் புரிந்துகொண்ட தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர், விடுதலை நாளேட்டில் ஓர் எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டார் (08.12.2016). இது திராவிட உணர்வாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பாலும் கூர்மையாக நோக்கப்பட்டு உள்வாங்கப்பட்டுள்ளது.
அதன் வெளிப்பாடு தொலைக்காட்சி விவாதங்களில் வெளிப்படுகிறது.
08.12.2016 ஒரு அ.தி.மு.க. பொறுப்பாளர் ஒருவர் விவாதத்தின்போது, “நாங்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட திராவிட இயக்கக் கொள்கைகளில் உறுதியாய் இருப்போம். எங்களுக்கு அம்மா வழிகாட்டிச் சென்றுள்ளார்கள்’’ என்றார்.
இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு, ‘நீட்’ தேர்வு என்று எல்லாவற்றிலும் ஜெயலலிதா அவர்கள் எந்த உறுதியோடு இருந்தார் என்பது ஒவ்வோர் அ.தி.மு.க. தொண்டரும் அறிவர்.
அ.தி.மு.க.வில் உள்ள அத்தனை தலைவர்களும், தொண்டர்களும் திராவிடத் தமிழர்கள் என்பதை ஆரிய பார்ப்பனர்கள் மறந்துவிட்டு காய் நகர்த்துவது நகைப்புக்கு உரியதாகும் என்பதால், அவர்கள் வேறு மிரட்டல் ஆயுதத்தையும் கையில் எடுக்கின்றனர்.
அமைச்சர்கள், சசிகலா போன்ற முக்கியமானவர்கள், அ.தி.மு.க.வின் முதன்மைத் தலைவர்கள் போன்றவர்களுக்கு வருமானவரிச் சோதனை போன்ற நெருக்கடிகளைக் கொடுத்து பணிய வைத்து விடலாம் என்று முடிவு செய்து அதையும் செயல்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
இந்த இரண்டு வேலைகளுக்கு இடையே, “தலையைத் தடவல்’’, “தட்டிக் கொடுத்தல்’’ போன்ற தாஜா வேலையிலும் மோடியே முன்னின்று செயல்படுகிறார்.
நான்காவதாக அ.தி.மு.க.வை ஜாதி வாரியாகப் பிரித்து சாய்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். 09.12.2016 ஹிந்து நாளேட்டில் ஆறாம் பக்கத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ஜாதிவாரியாக சலித்துப் பிரித்து, வரைபடமே வரைந்து காட்டி விட்டனர்.
எந்த ஜாதிக்கு எத்தனை எம்.எல்.ஏ. பலம் இருக்கிறது என்று காட்டி, உசுப்பிவிடுவதன் மூலம் முதல்வர் பதவிக்கும், கட்சித் தலைமைக்கும் போட்டியை உருவாக்கி அதன்வழி கூறாக்கி, நூறாக்க முயலுகின்றனர்.
மத்திய இணை அமைச்சர் பொன்.இராதா கிருஷ்ணன், “அரசியல் மாற்றம் நிகழப்போகிறது’’ என்ற ஆரூடம் கூறிவிட்டார்.
சுப்பிரமணியசாமி சொல்வதையும், பொன்.இராதாகிருஷ்ணன் சொல்வதையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், மத்திய பி.ஜே.பி. அரசின் உள்ளார்ந்த சதித் திட்டங்களை சாதாரண மனிதனும் புரிந்துகொள்ளலாம். அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும், அணி மோதல்கள் மூலம் அழித்துவிட்டு, அந்த இடத்தை அபகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆரிய பார்ப்பன நரிகளின் ஆசை, திட்டம், சூழ்ச்சி என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அதன் வெளிப்பாடுகள்தான் சுப்பிரமணியசுவாமி, பொன்.இராதாகிருஷ்ணன், ஹிந்து பத்திரிகை மூலமாய் வெளிப்படுகிறது.
இதற்கு ஊடகங்கள் வழி மக்கள் கருத்து என்ற சாக்கில், இரண்டு திராவிடக் கட்சிகளும் வேண்டாம்; மத்தியில் அதிகாரத்தில் உள்ள கட்சி மாநிலத்தில் இருந்தால் நல்லது என்று பி.ஜே.பி. ஆதரவு பிரச்சாரத்தை மாற்று ஏற்பாடாய் செய்யத் தொடங்கிவிட்டனர்.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் முரண்பட்டு நிற்கலாம், எதிர்த்து நிற்கலாம். ஒருவரை ஒருவர் தோற்கடிக்கலாம். அதனால் தமிழகத்தின் உரிமைகளுக்கோ சமூகநீதிக் கொள்கைகளுக்கோ பெரிய பாதிப்பு வந்துவிடாது. காரணம், இரண்டும் தந்தை பெரியாரின், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை உள்வாங்கிய அமைப்புகள் _ தர வேறுபாடுகள் என்பது வேறு.
ஒரு பார்ப்பன பெண்மணியே திராவிட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலும், ஆட்சிப் பொறுப்பிலும் வந்த நிலையிலும் சமூகநீதிக் கொள்கையிலும், மதச்சார்பின்மை உறுதியிலும், ஒடுக்கப்பட்டோரின் உயர்விற்கான முயற்சியிலும் அவர் மாறுபட்டு செயல்-படவில்லை; செயல்பட முடியாது. செயல்-பட்டால் அதில் நீடிக்க முடியாது என்பது அவருக்கே தெரிந்துதான் இருந்தது.
ஆரிய பார்ப்பனர்களின் ஆலோசனை-யின் பேரில், தந்தை பெரியாரின் கொள்கைக்கு எதிராய் எம்.ஜி.ஆர். முதல்வராய் இருந்தபோது 9000 ரூபாய் வருமான வரம்பு கொண்டு வந்து இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராய் செயல்பட்டதால், அப்போது நடந்த தேர்தலில் அவரை மக்கள் படுதோல்வி அடையச் செய்தார்கள் என்ற வரலாறு அம்மையாருக்குத் தெரியும். எம்.ஜி.ஆருக்கே பாடம் புகட்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை அவர் நன்கு உணர்ந்தே செயல்பட்டார்.
தமிழக மண் பெரியார் மண். இங்கு மதவாத சக்திகள் காலூன்ற முடியாது. திராவிட கட்சிகள் இரண்டில் ஒன்றுதான் ஆட்சியில் அமரும். இதை இரண்டு திராவிடக் கட்சிகளும் நன்றாய் உணர்ந்து தான் செயல்படுகிறார்கள்.
ஜெயலலிதா நோயுற்றபோதும், இறந்த பின்னும் கலைஞரும், அவர் குடும்பத்தாரும், தி.மு.க.வினரும் எப்படி நடந்துகொண்டார்கள்; அவர்களிடம் அ.தி.மு.க.வின்ர் எப்படி நடந்துகொண்டார்கள் _ வஞ்சக எண்ணத்தில் வைகோ போன்றோர் உசுப்பேற்றினாலும் _ என்பதை எல்லோரும் நன்கு அறிவர்.
அதேபோல் தாய்க் கழகமான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார், எப்படி வழிகாட்டுகிறார்; எப்படி பாதுகாக்கிறார் என்பதும் அனைவராலும் கூர்ந்து நோக்கப்படுகிறது.
இந்த நிலையில் அ.இ.அ.தி.மு.க. முதன்மைத் தலைவர்களும் தொண்டர்களும் மிகவும் விழிப்போடு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். ஆரிய சூழ்ச்சிக்கு ஜாதி உணர்வாலோ, சொத்து பயத்தாலோ பலியாகிவிடக் கூடாது.
இந்தச் சிக்கல்கள், சோதனைகள், பழிவாங்கல்கள் அரசியலில் வரத்தான் செய்யும். அதையெல்லாம் எதிர்கொள்வதுதான் தன்மானத்திற்கும், தமிழர்க்கும் அழகு.
இரு திராவிடக் கட்சியில் ஒன்றுதான் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதில் இரு கட்சிகளும் உறுதியாய் இருக்க வேண்டும். மதவாத பி.ஜே.பி. அரசோ, ஆரிய பார்ப்பன ஆதிக்கமோ காலூன்றி நிலை கொள்ளக் கூடாது என்பதில் அதைவிட உறுதியாய் இருக்க வேண்டும். அ.தி.மு.க.வினர் தி.மு.க. வரக்கூடாது என்பதில் கவனம் செலுத்தாது மதவாத சக்தி வரக் கூடாது என்பதில் அதிக கவனத்துடனும், அதிக எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்சின் முழு ஆலோசனை, வழிகாட்டல், கட்டளையின்படி நடக்கும் பி.ஜே.பி.யினர், தமிழ்நாட்டில், மந்திரிகளும் அதிகாரிகளும் திருமதி சசிகலா இருக்கும் இடத்திற்குச் சென்று ஆலோசனை செய்தது எப்படிச் சரி என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
முதல்வராய் இருந்த ஜெயலலிதாவுடன் நீண்டகாலம் நெருங்கி வாழ்ந்தவர். அவரின் கருத்து, நோக்கம், திட்டம் அவருக்குத்தான் மற்றவர்களைவிட அதிகம் தெரியும், புரியும். எனவே, முதல் அமைச்சரவைக் கூட்டம், நடைபெறும் நிலையில் அவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவதில் தவறு என்ன?
சசிகலா யார் என்று கேள்வி எழுப்புவதன் மூலம், அவரை உசுப்பிவிட்டு, அவர் பெரும் பொறுப்பிற்கு வரவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கி, அதன் வழியான போட்டியில் அ.தி.மு.க. உடையாதா? என்ற எதிர்பார்ப்பின் விளைவே இந்த விமர்சனங்கள்.
அ.தி.மு.க.வின் முக்கியப் பொறுப்பாளர்கள்; குறிப்பாக அமைச்சராய் இருக்கக் கூடியவர்கள், மத்திய அரசின் செயல்பாடுகளில் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும். கருத்துக் கூறவேண்டும்.
உறவுக்குக் கை கொடுக்கலாம்; ஆனால், உரிமைக்கு, செல்வி ஜெயலலிதாவைப் போல் ஓங்கிக் குரல் கொடுப்பதில் சற்றும் தயங்கக் கூடாது.
மேலே தேன்தடவி உள்ளே விஷத்தைக் கொடுக்கக் கூடியவர்கள் பி.ஜே.பி. பரிவாரங்கள். ‘நீட்’ தேர்வு தமிழில் எழுதலாம் என்றவுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்பது, ஆபத்து புரியாது அரைகுறையான தகவல்களின் பேரில் சிலரால் சொல்லப்பட்டதாகும்.
‘நீட்’ தேர்வே கூடாது என்பதே திராவிட இயக்கத்தின் நிலைப்பாடு. ஜெயலலிதா அம்மையாரின் உறுதியான நிலைப்பாடும் அதுவே. எனவே, அந்த அடித்தளத்தை விட்டு, அகன்று கருத்துக் கூறுவது ஆரிய சூழ்ச்சிக்கு பலியானதாக ஆகும். எனவே, அ.தி.மு.க அரசு ஒவ்வொரு செயல்பாட்டிலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி என்ன சொல்கிறார் என்பதறிந்து அதன்வழி செயல்படுதல் ஒன்றே சரியான பாதுகாப்பாக அமையும்.