நீதித்துறைக்கும் ஆட்சித்துறைக்கும் ஏற்பட்டுள்ள மோதல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அறைகூவல்
இந்திய அரசியல் சட்டம் 1949 நவம்பர் 26ஆம் தேதி *நமக்கு நாமே வழங்கப்பட்டது’ அரசியல் நிர்ணய சபையில். குடியரசாக 1950 ஜனவரி 26 இல் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த நாளை ‘அரசியல் சட்ட நாளாக’ (Constitution Day) என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அனுசரித்துக் கொண்டு வருகிறது. இந்திய அரசியல் சட்டத்தைப் பொறுத்தவரையிலே, இது எப்படிப்பட்ட ஓர் அரசு என்பதை பீடிகையில் அதாவது Preamble என்ற பகுதியிலே சொல்லுகிற போது,
SOVEREIGN, SOCIALIST, SECULAR, DEMOCRATIC REPUBLIC என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதிலே செக்குலர் போன்றவை பின்னாலே சேர்க்கப்பட்டது.
சர்வாதிகார நாடல்ல!
ஒரு ஜனநாயகக் குடியரசு இது. இது ஒரு சர்வாதிகார நாடல்ல. 1. நிர்வாகம் (Executive), 2. சட்டமன்றம் (Legislature), நாடாளுமன்றம், 3. நீதித்துறை (Judiciary) என்ற மூன்று பிரிவுகள் இருக்கின்றன. Seperation of Powers என்று ஒன்றுக்கொன்று இருக்கின்ற அதிகாரத்தைப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.
இந்திய அரசியல் சட்டத்தின் தன்மைகள் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பதை தெளிவாக ஆய்வு செய்ய வேண்டிய உரிமை, நீதிமன்றத்திற்கே உண்டு. அதுபோலவே, அடிப்படைக் கடமைகள் (Fundamental Rights) என்ற பகுதியும் இதிலே இணைக்கப் பட்டிருக்கின்றது.
ஒரு குடிமகனுடைய அடிப்படை உரிமை _- பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, தொழில் உரிமை இதுபோன்ற பல உரிமைகள் பறிக்கப்படாமல் பாதுகாக்கப்படவேண்டும். அப்படி அரசு இயற்றக்கூடிய சட்டம் அதைப் பறிக்கக்கூடியதாக அமையுமானால், பாதிக்கப்பட்ட குடிமகன் நேரடியாக நீதிமன்றங்களுக்குச் செல்லலாம். நீதிமன்றங்கள் அந்த வகையிலே நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லுபடியாகுமா? இல்லையா? என்று தீர்ப்புக் கொடுக்கக்கூடிய அளவிற்கு நிர்வாகம் (Executive) செய்யக்கூடிய அந்த முடிவை ஆய்வு செய்யக்கூடிய உரிமையை நீதிமன்றங்கள் பெற்றிருக்கின்றன.
எனவே, இப்போது பல்வேறு வழக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. விசாரிப்பதற்கு லட்சக்கணக்கான வழக்குகள் பாக்கி இருக்கின்றன, நிலுவையில் இருக்கின்றன. அதனால் “தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி’’ என்ற ஒரு சொற்றொடர் உண்டு. அந்த வகையில் குடிமக்கள் மிகுந்த சங்கடத்தோடு, தங்களுக்கு உரிய நேரத்தில் நியாயங்கள் கிடைக்காத வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உச்ச, உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை!
இதற்கு என்ன காரணம் என்று சொன்னால், நாட்டிலுள்ள உயர்நீதிமன்றங்களில் உள்ள சுமார் 400 நீதிபதிகளின் பதவியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அதேபோன்று உச்சநீதிமன்றத்தில்கூட நீதிபதிகளின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதற்கிடையிலேயே இந்த சட்ட நாளில், ஒரு விரும்பத்தகாத, அச்சுறுத்தக்கூடிய ஒரு போக்கு – ஆட்சித் துறைக்கும், நீதித் துறைக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டு இருக்கிறது என்பது 26.11.2016 அன்று வெளிப்படையாகவே வெடித்து விட்டது.
அரசியல் சட்ட நாளன்று -_ மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் கருத்தரங்கு டில்லியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அவர்கள்,
“நாங்கள் அனுப்பிய பட்டியல்களை யெல்லாம் நிராகரித்து விட்டார்கள். பெரும்பாலான நீதிபதிகள் நியமனம் செய்வதற்கான உத்தரவு வரவில்லை’’ என்று கூறியுள்ளார்.
ஏழு ஆண்டுகளாக தீர்ப்பாயங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன!
தீர்ப்பாயங்களிலும் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. தீர்ப்பாயத்தில் மொத்தம் 65 நீதிபதிகள் இருக்கவேண்டும் என்றால், 20 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அங்கும் கடந்த ஏழு ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
போதிய நீதிபதிகள் இல்லாமல் தீர்ப்பாயங்களில் அமர்வுகளை அமைக்க முடியாது. மேலும் தீர்ப்பாயங்களில் (Tribunal) போதிய வசதிகள் இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலர், தீர்ப்பாயங்களுக்குத் தலைமை ஏற்க விரும்புவதில்லை. தீர்ப்பாயங்களில் சரியான வசதியை செய்து கொடுக்க அரசு தயாராக இல்லை’’ என்று தலைமை நீதிபதி வேதனையோடு சொல்லியிருக்கிறார்.
“நீதிபதிகள் தேர்வுக் குழு’’ முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதும், தேர்வு ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது என்பதால், அதில் உள்ள குறைகளை களையவே தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்ட வரைவு, 2014 தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் 13.08.2014 அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
கொலிஜியம் முறை சரி என்று தீர்ப்பு!
ஆனால், அந்தக் கொலிஜியம் முறை சரியானதா? இல்லையா? என்று வழக்கு வந்தநேரத்தில், பெரும்பாலான நீதிபதிகள் “கொலிஜியம்’’ முறைதான் சரி என்று தீர்ப்புக் கொடுத்துவிட்டார்கள்.
அதிலிருந்து இந்த மோதல் என்பது உள் அடிநீரோட்டமாக ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுது வெளிப்படையாகவே வெடித்துக் கிளம்பியிருக்கிறது.
ஜனநாயகத்தில் மூன்று அங்கங்களாக இருக்கக்கூடியவை நிர்வாகம், நாடாளு மன்றம், நீதித்துறை என்ற நிலையில், நீதித்துறைக்கும், ஆட்சித் துறைக்கும் மோதல் ஏற்பட்டால், அது ஜனநாயகத்தினுடைய அடித்தளத்தையே, அடி வேரையே பறித்துவிடக்கூடிய மிகப்பெரிய ஆபத்தாகும்.
ஜனநாயகத்தில் நீதிமன்றம்தான் மக்களுக்குக் கடைசி நம்பிக்கை. அந்த நீதிமன்றத்துக்கே ஆட்சியாளர்கள் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டால், அது எங்கே போய் முடியும்?
எனவே, நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? ஜனநாயகத்திற்குப் பதிலாக முழுக்க முழுக்க சர்வாதிகார கீற்றுகள் வெளிப்படக்கூடிய ஓர் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
எல்லாவற்றையும்விட, ஒரு பேரபாயமாக இப்பொழுது உருவெடுத்து இருப்பது -_ ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அறைகூவல் விடுப்பது எதுவென்றால், நீதிமன்றம் _- ஆட்சிமன்ற மோதல்தான். இந்தப் போக்கு மிக விரைவில் மாற்றப்பட வேண்டும். இல்லை யானால், இந்த நாடு மீண்டும் ஒரு ஜனநாயக நாடாக தொடருவதற்கு வாய்ப்பில்லை.
69 சதவீத இடஒதுக்கீட்டுச் சாதனை மூலம் சரித்திரமாகி விட்டார் ஜெயலலிதா!
சமூகநீதியில் மிகப்பெரிய அளவிற்கு இந்தியாவினுடைய வேறு எந்த மாநிலங்களிலும் 69 சதவிகித இடஒதுக்கீடு தாழ்த்தப்-பட்டவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு, மலைவாழ் மக்களுக்கு என்ற அளவில் கிடையாது. அதுவும் இந்திய அரசியல் சட்ட 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புப்படி மிகப்பெரிய சாதனையை செய்தவர் சரித்திரமாகிவிட்டார்.
அவர் நம்மிடையே இல்லை என்றாலும், அவரால் உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம் என்றென்றைக்கும் சரித்திரத்தில் நிலைத்து அவர் மறையவில்லை வாழுகிறார் என்பதையே காட்டும்.
காரணம், இது தலைமுறைகளைப் புரட்டிப் போடக்கூடிய சமூக வாழ்விலே மிகப்பெரிய உயர்வைத் தரக்கூடிய அற்புதமான சட்டம். தன்னை எதிர்த்த திராவிடர் கழகம் இதனைத் தருகிறதே என்பதைப்பற்றி கவலைப்படாமல், மிகுந்த பெருந்தன்மையோடு அதனை ஏற்று, எங்களுடைய ஆலோசனைப்படி, சட்டமன்றத்தையே கூட்டி நிறைவேற்றிய பெருமை அவருடையதாகும்.
இந்தச் சாதனை தலைமுறைகளைக் கடந்து நிற்கக்கூடிய அரும்பெரும் சாதனை. அந்த வகையில் ஜெயலலிதா அவர்கள் மறையவில்லை நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
மாநிலங்களினுடைய உரிமை என்று வருகின்றபோது, அவர் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததே இல்லை. அவர் டில்லிக்குச் சென்றதைவிட, டில்லி அவரிடம் வந்ததுதான் மிகப் பெரிய ஒரு சாதனை _ எந்த முதலமைச்சரும் செய்யாத சாதனை! அப்படியெல்லாம் சரித்திரம் படைத்தவர், இன்றைக்குப் படமாகிவிட்டது மட்டுமல்ல. முதலமைச்சர்களுக்கெல்லாம் பாடமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
உரிமைக்குக் குரல் கொடு _- எதற்காகவும் அதனை விட்டுக் கொடுக்காதே!
உறவு காட்டுவது என்பது வேறு; உரிமைக்குக் குரல் கொடுத்து, தமிழ் நாட்டினுடைய உரிமைகளை நிலைநாட்டு என்பதையே அவர்கள் செய்தியாகத் தந்திருக்கிறார்கள்.
எனவே, அவரால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி, நிச்சயமாக அப்படியே செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.
‘மக்களால் நான்; மக்களுக்காகவே நான்’ என்று முழங்கிய அவருடைய அந்த இரு சொற்கள், இன்றைய ஆட்சிக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். ஜனநாயகத்தினுடைய மாண்புகளைக் காத்து, எதிர்க்கட்சிகளிடம் மதிப்பு, கருத்து மாறுபாடுகளையும் ஏற்று, நல்ல ஜனநாயகத்தைத் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
வாழ்க ஜெயலலிதாவின் புகழ்!
கி.வீரமணி,
ஆசிரியர்