இளம் வயதிலே இருந்து நாங்கள் இருவரும் நட்பினால் வயப்பட்ட போதிலும், கருத்துக்-களினால் முரண்பட்டே நின்றோம்; நிற்கின்றோம்; நிற்போம். இதுகுறித்து எங்கள் இருவருக்கும் மத்தியில் உளப்பூர்வமான தெளிவு உண்டு. என்னையும் அவர் மாற்ற முயன்றதில்லை. அவரையும் நான் மாற்ற முயன்றதில்லை எனினும், நாங்கள் இருவரும் நிறைய மாறித்தான் இருக்கின்றோம். இந்த மாற்றம் முரண்பாடு அன்று. காலத்தினால் நேர்ந்த கனிவும், வளர்ச்சியும் ஆகும்.
நண்பர் வீரமணியைக் காணும் பொழு-தெல்லாம் நான் வியப்படைய ஒரு காரணம் உண்டு. எனது இளமைப் பருவ நிகழ்ச்சியை என்னைப் போலவே, அவரும் பசுமை மாறாமல் நினைவில் பாதுகாத்து வைத்து இருக்கும் பண்புதான் அது! பகைமை இருந்தால் மறந்துவிடலாம்; மறந்து விடவும் வேண்டும். உறவையும், நட்பையும் அஃது மறக்க-வொன்னாது. மறப்பது மானுட தர்மமும் அல்ல; தமிழர் பண்பும் அல்ல.
நான் மதித்துப் போற்றுகின்ற தமிழர் தலைவர்களிள் தலைக்ஷ்யாயவர் வீரமணி. அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட ‘வாழ்வியல் சிந்தனைகள்’ என்னும் நூலை நான் பாராட்டி வெளியிடும் விழா ஒன்று மதுரையில் நடந்தது. அந்த நூலை நான் மிகவும் விரும்பிப் படித்தேன். போற்றிப் புகழ்ந்தேன். அது நட்பு கருதியோ, சம்பிரதாயம் கருதியோ நடந்த நிகழ்ச்சி அல்ல. அவரது ஆன்மிக வளர்ச்சியை அந்த நூல் எனக்குப் பறைசாற்றியது. ஆன்மிகம் என்பது எனது கருத்தில் ஆத்திகம் சம்பந்தப்-பட்டதல்ல. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது; வாழ்நாளில் நான் சந்தித்த மிக மிக அரிய மனிதர் தமிழர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவரது வழியில் நடந்து, வீறுடனும் இளமையுடனும், அறிவுப் பணி ஆற்றிவரும் என் நண்பர் இன்னும் நூறாண்டு வாழ்வார்.
– த.ஜெயகாந்தன்
(கோ.அண்ணாவி தொகுத்துள்ள வீரமணி ஒரு
வீரவிதை நூலின் அணிந்துரையில்…)