தப்பு என்று தெரிந்தே செய்யும் தப்புகளே அதிகம்!

டிசம்பர் 01-15

 

 

 

 

– முன்னோக்கி

கல்வி கொடுத்தால் பல வன்முறைகள் குறைந்துவிடும் என்று பலர் ஊடகங்கள் வழியே சொல்லி வருகின்றனர். கல்வி விழிப்பு தரும் என்பது மிகவும் உண்மை. கல்விக்கூடம் கட்டுப்பாடு வளர்க்கும் என்பது அக்காலத்தில் சரியாக இருந்தது. இக்காலத்தில் மிகவும் அது குறைந்து வருகிறது. ஆசிரியர் பெற்றோர் முன் மாதிரியாய் நின்று வழிகாட்டியது அக்காலத்தில் அதிகம். ஆனால், ஆசிரியர்களில் பலர் கீழ்த்தரமாக, வன்மமாக, கொடுமையாக, இழிவாக நடப்பது இன்று பெருகி வருகிறது!

பெற்ற மகளைப் புணரும் தந்தை, பெற்ற மகனைப் புணரும் தாய், தன்னிடம் படிக்கும் மாணவரிடம் தவறாக நடக்கும், உடலுறவு கொள்ளும் ஆசிரியர்கள், தன்னை தெய்வமாகக் கருதி வரும் பக்தரிடம் பாலுறவு கொள்ளும் சாமியார்கள், தங்களை நம்பி சாப்பிட வருபவர்களிடம் கேடான உணவைத் தரும் உணவு விடுதியாளர்கள்; கடவுளுக்குத் சமமாகக் கருதி தங்களிடம், வரும் நோயாளியைக் கொடுமைப்படுத்தி காசு பறிக்கும் மருத்துவர்கள்; வாக்களித்த மக்களுக்குக் கேடு செய்யும் ஆட்சியாளர்கள்; இலாபம் மட்டும் முக்கியம் என்று எல்லாப் பண்டங்களிலும் இரசாயனம் கலக்கும் உற்பத்தியாளர்கள்; கலப்படம் செய்யும் வியாபாரிகள்; அரசை மக்களை ஏமாற்றிக் கள்ளப் பணம், கருப்புப் பணம் சேர்க்கும் பெரும்புள்ளிகள், விரும்பாத பெண்ணிடம் வன்தொடர்பும், வன்புணர்வும் கொள்ளும் ஆண்கள் என்று எல்லோரும் தாங்கள் செய்வது தப்பு என்று தெரிந்தே செய்யக் கூடியவர்களே! சந்தர்ப்பச் சூழலில், உணர்ச்சி வசப்பட்டு, தவறி தவறு செய்கிறவர்கள் மிகச் சிலரே!

உண்மை இப்படியிருக்கக் கல்வி எப்படி இவற்றைத் தடுக்க முடியும். கல்வி விழிப்பைத் தரும்; கட்டுப்பாட்டை அது தராது. கல்வி தரும் விழிப்புணர்வு திறமையாகத் தப்பு செய்யவும் தப்பிக்கவும் இன்று பயன்படுகிறது. கல்வி, செய்திகளைத் தருவதாய் அமைந்து தற்போது வணிகமாகி, மனனத்திறன் (மனப்பாடம்) வளர்க்கிறதே தவிர, உண்மையான அறிவை, கட்டுப்பாட்டைச் சிந்தனைத் திறனை, ஆய்வு உந்துதலை, மனித நேயத்தை, நீதி நேர்மையை, உதவும் உள்ளத்தை, தொண்டற வேட்கையை வளர்க்கவில்லை.

கல்வி என்பது பல்துறைசார் அறிவைத் தருவது போலவே, ஒழுக்கத்தை, உயிர் நேயத்தை, நீதி நேர்மையை, கட்டுப்பாட்டை, மாண்பை, மரியாதையை, மானஉணர்வை, பண்பை, நன்னடத்தையை, மேலே சொன்னவற்றை உருவாக்குவதாய், வளர்ப்பதாய், அதன்படி ஒழுகுவதாய் இருக்க வேண்டும். கல்வி கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் அதுவாகவே தந்துவிடும் என்றால், ஆசிரியர், பேராசிரியர்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு சிறிதும் இன்றி செயல்படுவது நடக்காதே!

பக்தியும் கோயிலும் தூய்மை, நேர்மை, வாய்மை தரும் என்றால் அங்கே இருக்கின்ற சாமியார் தப்பு செய்வானா? நூல்கள் படிப்பதால் இவையெல்லாம் வந்துவிடுமா? என்றால் அதுவும் வராது. நூல் செய்திகளைச் சொல்லும், எடுத்துக்கொண்டு அதன்படி உறுதியாய் வாழ்வது படிக்கின்றவனின் உள்ளத்தையும், உறுதியையும் பொறுத்தது.

என்னதான் வழி?

கல்வி; ஒழுக்கம் சார் அறிவுரை, நூல்கள், வழிகாட்டல்கள் எல்லாம் செய்வதோடு, பண்பாடு வளர்ப்பதும் கடும் தண்டனை தருவதுமே தீர்வு ஆகும்.

பண்பாடு என்பது என்ன?

நிலத்தைப் பண்படுத்துதல் என்கிறோம். இயற்கையாய் நிலம் பயிரிட உகந்ததாய், ஏதுவாய் இருக்காது. அதைப் பயிரிடுவதற்கு ஏற்றதாய் நாம், மேடு பள்ளம் திருத்தி, கல்முள் அகற்றி, சமப்படுத்தி, உழுது உகந்ததாக ஆக்குகிறோம். அதாவது, நிலத்தின் இயல்பை நமக்குப் பயன்படுமாறு மாற்றுகிறோம். இதுவே நிலத்தைப் பண்படுத்துதல் ஆகும்.

அதேபோல், மனிதனைப் பண்டுத்துதல் வேண்டும். மனிதன் ஒவ்வொருவருக்கும் இயல்பாய் அமைந்த குணங்கள், செயல்கள் இருக்கும். நிலம் எப்படி இயற்கையில் கரடுமுரடு, மேடுபள்ளம், கல், முள் கலந்து காணப்-படுகிறேதா, அவ்வாறே மனிதன் இயல்பாய் கெட்ட குணங்களும், செயல்களும் உடையவனாய் காணப்படுகிறான். நான் பிறப்பாலே புனிதமானவன் என்று எவன் சொன்னாலும் அவன் மோசடிப் பேர்வழி என்றே அர்த்தம்.

எல்லா மனிதனுக்கும் அழகிய பெண்ணை அல்லது ஆணைக் கண்டால் அவர்களை நுகர வேண்டும் என்ற வேட்கை, உந்துதல் வரும், எழும். அது இயற்கை. ஆனால், அந்த உந்துதல் வழி, செயல்படாமல், உள்ளத்தைக் கட்டுப்படுத்தி, அது தவறு; ஒருவன் ஒருத்தியே சிறந்த வாழ்வு; மற்றவர்களை உடன் பிறந்தோராய் எண்ண வேண்டும் என்று அந்த கெட்ட உணர்வை கட்டுப்படுத்துவதே பண்பாடு.

எல்லா மனிதர்க்கும் சுவையான பொருட்-களைச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் வரும். ஆனால், அந்த விருப்பத்தின் வழி. அவற்றை வேண்டுமளவு சாப்பிடுவது என்பது கேடு தரும். எதை எந்த அளவு சாப்பிட  வேண்டுமோ அந்த அளவு சாப்பிட வேண்டும்; நம் உடலுக்கு எதைச் சாப்பிட வேண்டும்; எதை விலக்க வேண்டும் என்று அறிந்து அதற்கேற்ப செய்ய வேண்டும் என்று அந்த விருப்பத்தைப் பண்படுத்திக் கொள்வதே பண்பாடு.

வரிசையில் பலர் நிற்கும்போது, பின்னால் வந்த நமக்கு முன்கூட்டியே கிடைக்குமா? என்று மனம் நாடுவது இயல்பு. ஆனால், அது தப்பு. அது வரம்பு மீறல், பிறர் உரிமையைப் பறிப்பது என்று உணர்ந்து அந்த நாட்டத்தை அகற்றி, காத்திருந்து பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்வது பண்பாடு ஆகும்.

இருப்பது எல்லாம் நமக்குக் கிடைக்காதா என்று மனித இயல்பு தேடும். ஆனால், நாம் மட்டும் உலகில் பிறக்கவில்லை; பலர் பிறந்திருக்கிறார்கள். அவரவர்க்கு உரியது அவரவர்க்குக் கிடைக்க வேண்டும் என்று உணர்ந்து நமக்குரியதை அளவோடு பெறத் தேடுவது பண்பாடு ஆகும்.

நம்மைக் கண்டு எல்லோரும், வணங்கி கைகட்டி நின்று மரியாதை செலுத்த வேண்டும்; காலில் வீழ்ந்து எழுந்து குனிந்து கும்பிட்டு நிற்க வேண்டும்; நமக்காக மணிக்கணக்கில் பலர் காத்துக் கிடக்க வேண்டும் என்பன போன்ற பல ஆசைகள் எழுவது மனித இயல்பு. ஆனால், அது சரியல்ல. நம்மைப் போன்றே அவர்களுக்கும் மான உணர்ச்சியுண்டு. அவர்களுக்கும் மரியாதை, பெருமை, உயர்வு நாட்டம் உண்டு. அடுத்தவர் இழிவில், தாழ்வில், வீழ்வில் நாம் பெருமை, உயர்வு, மதிப்பு, சிறப்புத் தேடுவது கேவலம் என்பதை உணர்ந்து அந்த வேட்கையை விலக்கி உள்ளத்தைப் பண்படுத்திக் கொள்வதே பண்பாடு.

சுருங்கச் சொன்னால், நாம் செய்வதை பிறர் நமக்குச் செய்தால் ஏற்போமா? எதை ஏற்க மாட்டோமோ அதைப் பிறர்க்குச் செய்யக் கூடாது; எதை ஏற்போமோ அதைப் பிறர்க்குக் செய்ய வேண்டும் என்று நம்மை கட்டுப்படுத்தி, நெறிப்படுத்திக் கொள்வதே பண்பாடு.

இந்தப் பண்பாடு பிறந்தது முதலே பெற்றோரால், மற்றவர்களால், சுற்றுச் சூழலால் உருவாக்கி, வளர்க்கப்பட வேண்டும்; ஒவ்வொருவரும் தனக்குத் தானேயும் உருவாக்கி, வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கடும் தண்டனை: 

கல்வி, பண்பாடு வளர்ப்பு, ஒழுக்க நெறி உரைத்தல், கேட்டல் என்று பலவும் ஒரு மனிதரை தப்பு செய்யாது தடுக்கும் என்பதுபோலவே, தண்டனையும் கட்டாயத் தேவையாகும்!

எல்லோரும் ஒவ்வொருபொழுதும் பலவற்றால் தாக்குதலுக்குள்ளாகிறோம். காண்பவற்றால், தொடுபவற்றால், சிரிப்பால், சினத்தால், சொல்லால், அடியால், நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தாக்கப்படுகிறோம். பல நாள் கட்டிக்காத்த கட்டுப்பாட்டை, ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, ஒரு தொடுதல் தகர்த்து விடும். இதுதான் உண்மை! ஆம்! எல்லா கட்டுப்பாடும், கண்ணியமும்,  அடக்கமும், பண்பாடும் சில நேரங்களில் நொடியில் தகர்ந்து தப்பு செய்யத் தூண்டும். யாருக்கும் தெரியாது; தப்பிவிடலாம், தண்டனை பெரிதாக இல்லை என்ற வாய்ப்புகள் ஒருவனின் கட்டுப்பாடு குலைய, தவறு செய்யத் தூண்டும்.

எனவே, தப்புக்குரிய தண்டனை கட்டாயம் தேவை. கடுமையாகத் தேவை. அதிலும் 18 வயது என்ற வரம்பு தப்பான முடிவு. தவறு எந்த வயதில் செய்தாலும் தண்டனை தரப்பட வேண்டும். வயதுக்கு ஏற்ற, தவறுதான் செய்வான்!  5 வயது சிறுவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய மாட்டான், முடியாது. 14  வயதில் அவன் பருவம் அடையும்போது தான் செய்வான். அப்படியென்றால் தண்டனை தரவும் அவ்வயது சரியான வயதே!

இன்றைக்கு விழிப்புணர்வு என்பது 10 வயதுக்குள்ளே ஏற்படுகிறது. எனவே 10 வயதுக்கு மேலே அவர்கள் தெரிந்தே தப்பு செய்கிறார்கள். 14 வயது முதலே கடும் தண்டனைகள் தரப்பட வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டியது கட்டாயம்.

தண்டனை இன்றேல் இச்சமுதாயம் தறிகெட்டு சிதறிச் சீரழிந்துபோகும்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *