கி.வீரமணி எழுதிய இந்நூல் இருபது அத்தியாயங்களையும், ஏழு பின்னிணைப்பு-களையும் கொண்டுள்ளது. பாரதம் நடந்த கதையா? கீதை ஒரு கொலை நூல்தான். கிருஷ்ணன் ஒரு கபட வேடதாரி. கீதையின் முரண்பாடுகள், விநோதக் கருத்துக்கள் முதலிய தலைப்புகளையும் உள்ளடக்கியது.
இராமாயணம் என்ற காப்பியம் மகாபாரதத்திற்குப் பின் வந்தது (பக்கம் 17) என்றும், ஒரே மூலமான கீதையிலிருந்து பலர், பலவகையான போதனைகளைப் பெற்றதன் காரணம் அதிலுள்ள கருத்துக்கள் நம்பமுடியாத அளவிற்கு முரண்பட்டவை என்பதுதான் (பக்.40) என்றும், பக்தி நெறியை இந்து மதம் பவுத்தத்திலிருந்து எடுத்துக்-கொண்டது (பக்.57) என்றும், ஆத்மா என்றொன்று இல்லை (பக்கங்கள் 116, 131) என்றும், ஒரு புதிய புராணத்தை இயற்றுகிற யாரும் வியாசர் என்ற பெயரால் அழைக்கப்படுவதுண்டு (பக்.226) என்றும் பல கருத்துக்கள் இந்நூலில் இடம் பெறுகின்றன.
ஆன்மிகக் கருத்துக்களை ஒட்டி, தொன்று-தொட்டு இருதரப்பு வாதங்களும் இருந்து-கொண்டே வந்திருக்கின்றன. இவை மேலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். சில சமயம் ஒரே கட்சியைச் சார்ந்தவர்களுக் குள்ளும்கூட சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் எழுவதைப் பார்க்கலாம். இவர்களுக்குப் பின் வருபவர்கள் இந்தக் கருத்துக்களை விரிவாக வாதம் செய்து, அவரவர்கள் கருத்துக்களையும் தருவார்கள். இந்த முறையில்தான் அறிவு வளர்ச்சி பெறுகிறது.
இந்த ஆய்வு நூலின் ஆசிரியர் பல மேற்கோள்களையும், ஆராய்ச்சியாளர்கள் கூற்றுகளையும், அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையும் ஆதாரமாகக் காட்டி, சிந்தனைக்குரிய பல கேள்விகளையும் கருத்துக்களையும் மக்கள் முன் வைத்துள்ளார். அவரது முயற்சி பாராட்டத்தக்கது.
– சி.இராமகிருஷ்ணன்
“கீதையின் மறுபக்கம்’’
“தினமணி’’ விமர்சனம், 8.10.1998