பகுத்தறிவாளர்கள் சொல்லக்கூடாதவை

டிசம்பர் 01-15

 

 

 

-ஒளிமதி

“நல்ல வேளை’’: நல்ல வேளையாய்ப் பிழைத்தேன்; நல்லவேளையாய் அவர் வந்தார் என்பன போன்றவை சரியல்ல. நல்வாய்ப்பாய் என்றே சொல்ல வேண்டும். காலத்தில் நல்ல காலம் (வேளை) கெட்ட காலம் ஏதும் இல்லை. சூழலே தீர்மானிக்கிறது.

அதிர்ஷ்டவசமாய்: அதிர்ஷ்டம் என்பதே குருட்டுத்தனமாய் வருவது (குருட்டாம்பாக்கியம்) என்றே பொருள். இதற்கும் “நல்வாய்ப்பு’’ என்பதே பொருள். அதேபோல் துரதிர்ஷ்டம் என்பதும் சரியல்ல “கெட்ட வாய்ப்பு’’ என்பதே சரி.

தெய்வாதீனம்: கடவுள் செயலால் என்ற பொருள் தருவதால் இதைத் தவிர்த்து “இயற்கையாய்’’, “வாய்ப்பாய்’’ என்றே சொல்ல வேண்டும்.

வரப்பிரசாதம்: இது கடவுள் அருளால் என்று பொருள் தருவதால் “பரிசு’’ (நிவீயீt), “வெகுமதி’’ போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

கொடுத்து வைத்தது(கொடுப்பனை): முற்பிறவி பயன் என்று இது பொருள் தருவதால் இதைத் தவிர்க்க வேண்டும்.

பிரம்மாண்டம்: பிரம்மனால் படைக்கப்பட்ட அண்டத்தைப் போன்று பெரியது என்ற பொருளில் வருவதால் இச்சொல்லைத் தவிர்த்து, “மாபெரும்’’, “மிகப்பெரும்’’ போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

தலைவிதி: கடவுளால் ஒவ்வொருவர் தலையிலும் அவர் இப்படித்தான் வாழவேண்டும் என்று எழுதப்பட்டிருப்பதாக நம்பும் மூடநம்பிக்கையின்பாற்பட்டது இச்சொல். எனவே, இதைப் பயன்படுத்தாது, “சூழல்’’, “வாய்ப்பு’’ போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

அமரர்: இறந்தவர்கள் தேவர் உலகத்திற்குச் செல்வர் என்ற மூடநம்பிக்கையின்பாற்பட்டது இச்சொல். அமரர் என்றால் தேவர் என்று பொருள். எனவே, இதைத் தவிர்த்து “இறந்தவர்’’, “மரணமடைந்தவர்’’, “மாண்டவர்’, “உயிர்நீத்தார்’’ போன்ற சொற்களையே பயன்படுத்த வேண்டும்.

பகீரத முயற்சி: பகீரதன் பெரும் முயற்சி செய்து கங்கையைக் கொண்டுவந்தான் என்பது புராணம். அது மூடநம்பிக்கையின்பாற்பட்டது. எனவே மூடநம்பிக்கையின்பாற்பட்ட இச்சொல் தவிர்க்கப்பட வேண்டும். “மாபெரும் முயற்சி’’ என்று கூறுவதே சரியாகும்.

கதிமோட்சம்: கடவுள் அருளால் கிடைக்கக் கூடியது இது என்று நம்பப்படுவதால், இதைத் தவிர்த்து, “தீர்வு’’, “நிம்மதி’’ போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

வேதவாக்கு: இது அறியாமையால் சொல்லப்படுவது. வேதம் ஆரியர் நலத்திற்கும் திராவிடர்கள் கேட்டிற்கும் எழுதப்பட்டது. அதில் நற்கருத்துகள் என்று ஏதும் இல்லை. எனவே, அதை உயர்வாக எண்ணி இவ்வாறு சொல்வது தப்பு. “சான்றோர் வாக்கு’’ என்று இதற்கு மாற்றாகச் சொல்லலாம்.

இராசி: இது இராசியான வீடு, இவர் இராசியானவர், இந்த உடை, வாகனம் இராசியானது என்று கருதும் மூடநம்பிக்கையின் அடிப்படையில் வருவது இச்சொல். எனவே, இதைத் தவிர்த்துவிட வேண்டும். இதற்கு மாற்றுச் சொல் தேடக்கூடாது.

சனியனே: சனி பிடித்தால் தொல்லை தரும் என்ற மூடநம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்படுவது. எனவே, இது தவிர்க்கப்பட வேண்டும்.

இராட்சச: இராட்சச என்பது திராவிடர்களை ஆரியர்கள் கொடுமை-யானவர்களாய் சித்தரிக்க பயன்படுத்திய வார்த்தை. எனவே, இராட்சச பலூன், இராட்சச எந்திரம் போன்ற சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

பேய் மழை: பெரும் மழை என்றே சொல்ல வேண்டும். பேய் மழை என்று சொல்வது மூடநம்பிக்கையின் வழிவந்தது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *