வீரமணியார் வாழ்கவே!

டிசம்பர் 16-31

– பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

 

சுகமான வாழ்வைத்  துறந்த அறிவுப்

பகலவன் பெரியார் பாதையில் நடக்கும்

தமிழர் தலைவர் தன்மான வீரர்

அமிழ்தினு மினிய அருந்தமிழ்ப் பேச்சினர்;

 

சான்றுகள் மேடையில் சாற்றி நிற்பவர்

வான்புகழ் சுயமரி யாதைச் சுடரொளி

எங்கள் ஆசான் வீர மணியார்

எங்கும் என்றும் புகழுடன் வாழ்க!

 

சிறுவய திலேயே  மேடைகள் கண்டவர்

அறுபது எழுபது எண்பது கடந்தும்

தடைகள் இல்லை! தளர்ச்சியும் இல்லை!

நடையிலும் செயலிலும் நாளும் வேகம்!

 

தொடர்ந்த படிப்பும் தொய்விலா உழைப்பும்

படர்ந்த பல்வகைப் பட்டறி வதுவும்

தாங்கியே நிற்கும் தமிழர் தலைவர்

ஓங்கிடும் அவர்புகழ் ஒவ்வொரு நாளும்!

 

ஆரியப்  படையை அன்று கடந்தான்

வீரிய மிக்க வேந்தன் ஒருவன்;

சீவிய தலைகள் மீண்டும் முளைத்தன

காவிகள் கூட்டம் கடைகள் விரித்தன.

 

அடலேறு பெரியார் ஆணை யிட்டார்

கடலெனக் கரும்படை திரண்டே எழுந்தது                    

திடலின் அப்படை இன்றும் போற்றும்                     

திடமிகு வீர மணியார் வாழ்கவே!!   

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *