அவர் துறவிக்கும் மேலே!

டிசம்பர் 01-15

 பிறரொடு ஒப்ப நில்லாது, பேரெல்லையாக அமைந்து சிறந்தவர் பெரியார். ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு நெறிக்குத் தடையான மூடநம்பிக்கை ஒழிப்பு, சமத்துவம் பேணாமல் பெண்களைத் தாழ்த்தும் பெண்ணடிமை ஒழிப்பு முதலிய மகத்தான மனிதநேயச் செயல்பாடுகளில் 60 ஆண்டுகளுக்கு மேல் போராடிய பெருமைக்குரியவர். இப்பணியை எவரும் செய்திட முன்வராத நிலையில், காலத்தில், அதனைத் தம் தோளில் போட்டுக்கொண்டு செயலாற்றியவர். தனி ஒருவராக, எவரையும் எதிர்பாராமல், இப்பணிகளில் ஈடுபட்டார் பெரியார். என்றாலும், அவருடைய கூட்டு உழைப்பாளர்களாக வந்து இணைந்து பணியாற்றியவர்கள் சிலர்.தொடக்க காலத்தில் அவர்களிற் சிலர் பல்வேறு காரணங்களால் அப்பணியில் ஈடுபட இயலாமல் ஒதுங்கிக் கொண்டனர். சிலரைப் பெரியார் இனங்கண்டு பயிற்றுவித்தார். அவர்களில் சிலர் அவரது நம்பிக்கையைப் பொய்த்துப் போகச் செய்துவிட்டனர். என்றாலும் சோர்வு அடையாத பெரியார் தம் பணியைத் தொடரவே செய்தார். அணுக்கமாகப் பலரும் அவருடன் இணைந்தனர். பணிபுரிந்தனர். என்றாலும் அவரின் முழு நம்பிக்கைக்கும் தகுதியானவராக எவரும் திகழவில்லை, ஒருவரைத் தவிர! அவரைத் தம் பணிக்கு, இயக்கத்திற்கு, அதன் திரண்ட சொத்துகளுக்கு பாதுகாவலராக நியமித்திடச் செய்த ஏற்பாடு காரணமாக ஏமாற்றம் அடைந்த சிலர் விலகினர். ஒதுங்கினர். பெரியார் கவலைப்படவில்லை.

என்னதான் தூற்றிச் சலித்துப் பொறுக்கு-மணிகளாகச் சலித்தெடுத்த நெல்லாக இருந்தாலும் ஊறவைத்தால் பதர் மிதக்கிறது, கருக்காய் நெல்லும் கலந்தே இருக்கிறது. அதைப்போல!

அந்த நேரத்தில் பல பெருமரங்கள் அடியோடு பெயர்ந்து வேரோடு சாய்ந்தன. ஆனால், அருகம்புல் இடம் பெயராமல் மண்ணோடு வேர்பிடித்து விளங்கியது. பெரியாரின் பெரும்படையில் பெரிய பேச்சாளராக, எழுத்தாளராக, அவரின் கருத்துக்-களை விளக்கிடும் ஆற்றலாளராகப் பலப்பலர் இருந்தனர். அவர்களெல்லாம்கூட விலகிப் போயினர்; தத்துவத்தின் மீதல்ல, தனிநபர் மீதான காழ்ப்பினால். ஆனால், ஆந்திரத்து ஊசி மிளகாயென விளங்கியவர், அருகம்-புல்லென அசையாது நின்றவர், தலைவரின் கட்டளையொன்றே தமிழர்க்கு வாழ்வு தரும் என்பதில் எந்தச் சபலத்திற்கும் இடம் தராமல் உறுதியாக நின்றவர் ஒருவர். வினாத் தெரிந்த வயது முதல் வரித்துக்கொண்ட தத்துவத்தின் சொந்தக்காரனாக விடாப் பிடியாகப் பின்பற்றியவர். தாய்க் குரங்கைப் பற்றிக் கொண்டிருக்கும் குட்டியைப் போலத் தன் தலைவனைச் ‘சிக்’ எனப் பிடித்துக் கொண்டவர். உடன்பிறந்தோர் மாற்றுக் கருத்தைத் தெரிவித்த-போதும் மனம் மாறாதவர். உடன் பணி செய்தோர் வேறுபட்டபோதும் மனம் தளராமல் பெரியாரைப் பின்தொடர்ந்தவர். அவரின் 84ஆம் பிறந்த நாள்தான் டிசம்பர் 2.

அவரின் தொடக்ககால ஆசான்கள் இருவருமே சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டவர்கள். திராவிடமணி என மாறிவிட்ட ஆசான்தான் இன்றைய திராவிடர் கழகத் தலைவரை அடையாளங்கண்டு அறிமுகப்படுத்தியவர். தொடக்கப் பள்ளி நாடகத்தில் சாலமன் மன்னர் வேடம் பூண்டு நடித்தபோது அவரின் உடல் அசைவுகள், பேச்சொலி போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு அவரைப் பேச்சாளராகப் பயிற்றுவித்தார். பெயரை மாற்றிப் பள்ளியில் சேர்த்ததோடு வடலூர் வள்ளலாரைத் தெரிந்திருந்தவரிடம் பெரியாரை அறிமுகம் செய்தார். அருட்பா பாடல் படித்தவரிடம் பெரியாரின் அறிவுப் பாக்களைப் படிக்கச் செய்தார். அறிஞர் அண்ணா நடத்திய, “திராவிட நாடு’’ ஏட்டுக்கு நன்கொடை திரட்டி அத்தொகையைப் பொதுக்கூட்டம் ஒன்றில் தாம் கண்டெடுத்த கடலூர் ஆனிமுத்துவான இவரின் கைகளால் தரச்செய்து முதல் பொது மேடையில் அரங்கேற்றினார். அப்போது இவரின் வயது 9 ஆண்டு 6 மாதங்கள். அப்போது முதல் இப்போது வரை ஆயிரமாயிரம் மேடைகள் இவரை அழைத்து, அமர்த்திப் பேசச் செய்து பெருமைப்படுத்துகின்றன.

அன்று முதல் இன்றுவரை அவரது சொற்பொழிவுகள் அனைத்துமே தலைவர் பெரியாரின் தத்துவங்களுக்கான கருத்துரை, விரிவுரை என்ற வகையில் அமைந்தனவே தவிர, மதச் சொற்பொழிவுகளைப் போன்று உபன்யாசங்கள் அல்ல, உளுத்துப் போனவற்றை உயர்த்திப் பிடிக்கும் உதவாக்கரைப் பேச்சுகள் அல்ல. தாழ்நிலைக்கு ஆளாக்கப்பட்ட தமிழர்   உயர்ந்திட உதவும் உண்மைகளைக் கொண்டவை.

ஒரு நல்ல பேச்சாளர் நிறையப் படித்திருக்க வேண்டும். சமூகச் சீர்திருத்தத் தொண்டில் ஈடுபட்டுள்ள அவர் போன்றோர் நாள்தோறும் படிக்க வேண்டும். நல்ல நூல்களைத் தேடித் தேடிப் படிக்கும் பழக்கம் இவரிடம் உண்டு. எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குள்ள புத்தகக் கடைகளுக்குச் சென்று நூல்களை வாங்குவார். படிப்பார். அதன் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தம் பேச்சுகளில் பொருத்தமாகப் பயன்படுத்துவார். அதனால், அவருடைய சொற்பொழிவைக் கேட்டால் பல நூல்களின் கருத்துப் பிழிவைக் கேட்கும் வாய்ப்புக் கிடைக்கும். கல்லூரிகளில் பேசினால் மாணவர்க்கு மட்டுமல்ல, பேராசிரியர்களுக்கும் தெரியாத புதிய செய்திகள் சிதறும். திண்டுக்கல்லுக்குச் சென்று ஒரு மேலாண்மைக் கல்லூரியில் உரையாற்றி முடித்ததும் கல்லூரியின் துறைத் தலைவரும் பேராசிரியர்-களும் அவரைச் சூழ்ந்துகொண்டு, ஆதாரம் காட்டிப் பேசிய நூல்களின் பட்டியலை எழுதிக்கொண்டனர்.

கடவுள் மறுப்பு இயக்கத் தலைவர் அந்தக் கொள்கைபற்றிப் பேசினால் கேட்போர் வியப்படைய மாட்டார்கள். இவர் பேசியதோ, முற்றிலும் மாறுபட்ட மேலாண்மைத்துறை சார்ந்த உரை. கேட்டவர்கள் வியப்பால் விழிகள் விரியக் கேட்டனர் என்றால் இவரது பல்துறை அறிவு ஆற்றலை என்சொல்வது? தென்னை மரம் தாளாலே தான் கொண்ட நீரை இளநீராகத் தலையாலே தான் தருதலால் எனப் பாடியதைப் போன்று தாம் கற்றவற்றைப் பிறர் பயனுறுமாறு பயன்படுத்திடும் பாங்கு, இவரைத் தவிர வேறு யார்க்கும் நம் நாட்டில் கிடையாது. மேற்கோள் கருத்தை அவ்வாறு தோன்றா-வண்ணம் தம் கருத்தே போல் பேசிடும் தன்மை பெரும்பாலோரிடம் இருக்கும் நிலையில், பேச்சுக் கலையிலும் இவர் தனித்து விளங்குகிறார்.

வழக்குரைஞர்க்கான படிப்பை முடித்து இரண்டாண்டுக் காலம் வெற்றிகரமாக நீதிமன்றங்களில் பேசி வென்றவர். தலைவரின்  ஆணையையேற்று மக்கள் நல்வாழ்வுக்காக வாதிடும் வேலையைச் செய்து கொண்டிருக்-கிறார். பலன்பெற்ற எளியோர் ஏராளம். சமூக நீதிக்காக வாதாடி வென்றவர். மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு போன்ற பற்பல சமுதாயத் துறைகளில் சலிப்பின்றி, களைப்-பின்றிப் போராடி வருபவர். பெரியாரைத் தவிர, வேறு தலைவரைத் தேடாதவர்; பெரியாரின் தத்துவம் தவிர வேறு எதனையும் நாடாதவர். “நாயினுங்கேடாய் நம் தமிழ்நாட்டார் நலிவதை நான் கண்டேன்’’ என்று 10, 11 வயதில் கழக மேடைகளில் தொடக்கப் பாடகராகப் பாடிய பாடலை மாற்றி அமைத்திடும் வகையில் தமிழ்நாட்டு மக்களின் நலிவு போக்கிட நாளும் உழைப்பவர். தன்னலங்கருதாது, பணியாற்றும்-போது, பலன் பெற்றவர்களே நன்றியுணர்ச்சி இல்லாமல் நடந்துகொள்ளும்போது, சோர்ந்து போகாமல் தொடர்ந்து பணி செய்பவர். “அது மனித சுபாவம்’’ என்று அறிவு ஆசான் பெரியார் சொன்னதைப் புரிந்து செயல்படுபவர்.

பெரியாரின் கொள்கைகளை அவர் போட்டுத்தந்த பாதையில் செயல்படுத்தி வெற்றி பெற உழைப்பவர். எந்தச் சலனமும் இல்லாமல் எந்தச் சபலமும் ஏற்படாமல் பணி செய்பவர். விரக்தி உணர்வு அவரின் விரல் நுனியைக் கூடத் தொட்டதில்லை. அவர் முழுக்க முழுக்கப் பெரியாரிடம் பாடம் பயின்றவர்; பயிற்சி பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கழகப் பொதுச் செயலாளராக இருந்தபோது, ஒரு நாள் அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு தன் உடன் பணியாற்றியவரை அந்தப் பொறுப்பில் நியமித்துவிட்டார். தாம் சாதாரண உறுப்பினராக மட்டுமே நீடிப்பதாக அறிவித்துவிட்டார். கழகம் அதிர்ந்தது. எதனால் இந்த அறிவிப்பு எனப் புரியாமல் வேற்று இயக்கத்தோர் குழம்பினர். அப்போதுதான் பெரியாரின் வாசகங்கள் நினைவுக்கு வந்தன. “என் தொண்டர்கள், தோழர்கள் துறவிக்கும் மேலே! துறவிக்காவது மோட்சம் போக வேண்டும் என்கிற அசை இருக்கும். மோட்சம், நரகம் என்பனவெல்லாம் கிடையாது என்ற நம்பிக்கை இருப்பதால் என் தோழர்களுக்கு அந்த ஆசை கூடக் கிடையாது’’ என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. பொதுச் செயலாளர் பொறுப்பை ஏன் அவர் துறந்தார்? வேறு ஒருவரை நியமித்தார்?

அவர் பெரியாரின் தொ£ண்டர். அவர் துறவிக்கும் மேலே! எந்த எதிர்பார்ப்பும் ஆசையும் அவர்க்கில்லை! அவரைத் தொடர்வோம்!

– சு.அறிவுக்கரசு

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *