கடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்

டிசம்பர் 01-15

கடந்த இதழின் தொடர்ச்சி….

 

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் தலைவர் இறை. மதியழகன் அவர்களின் உரை

சிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் தலைவர் இறை.மதியழகன் அவர்கள் உரையாற்றினார்.

எல்லோருக்கும் வணக்கம். பெரியாரைப் பற்றி நான் சிந்திக்கும் பொழுது எனக்கு 5, 6 வயது தான் இருக்கும். அதற்குப் பிறகு பலவகைகளில் சிந்தித்துப் பார்த்தாலும், பெரியார் அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால், தமிழர்களும், தமிழகமும் என்னவாகியிருக்கும்? என்று நினைத்துப்பாருங்கள்.

 

ஒரு பொருள் இல்லாமல் இருக்கும் பொழுது தான் அதனுடைய மதிப்பு தெரியும். அந்தவகையில் பார்த்தால், 1952-1954 ஆம் ஆண்டு ராஜாஜி என்கிற ராஜகோபாலாச் சாரியார் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்தார். அந்தக் குலக்கல்வித் திட்டம் என்னவென்றால், அரை நேரம் படிப்பு; மீதி அரை நேரம் அவரவர்களுடைய குலத்தொழிலை செய்ய வேண்டும் என்பதுதான்.

அந்தக் குலக்கல்வித் திட்டம் அமுலாக்கப்-பட்டிருந்தால், நம்மில் பாதி பேர், நம்முடைய குலத்தொழிலை மட்டும்தான் செய்திருக்க முடியும். அதை மீறி சிந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.

அந்தக் குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி அவர்கள் கொண்டுவந்த நேரத்தில், அந்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகமே போராட முடியாமல் திணறிக் கொண்டிருந்தபொழுது, விழித்துக் கொண்டிருந்தவர் தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே! அவர் கூக்குரல் கொடுத்து முழக்கத்தை ஏற்படுத்திய பிறகுதான், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, அதற்குப் பிறகு நமக்கு கிடைத்த மாமனிதர்தான் காமராசர் அவர்கள். காமராசர் அவர்களால்தான் எங்களைப் போன்றவர்கள் இங்கே இருப்-பதற்குக் காரணம் என்றால், அதற்கு அடிப்படை காரணம் தந்தை பெரியார் அவர்கள் தான்.

அந்த வகையில்,  நாம் அனைவரும் தந்தை பெரியார் அவர்களுக்கு வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

ஆண்டான் அடிமை என்கிற அடக்குமுறை இப்பொழுது ஏற்பட்ட விஷயம் கிடையாது. ஆயிரம் ஆண்டுகாலமாகக் கூட இருந்திருக்-கலாம். ஆனால், பெரியார் ஒருவர் மட்டும் எப்படிச் சிந்தித்தார் என்றால், மூடநம்பிக்கை-களை ஒரு சிந்தனையின்றி ஏற்றுக் கொள்வது _ -உழைப்பாளி அடிமையாகவும் _ சோம்பேறி, ஆண்டானாகவும் இருப்பது அடிப்படைக் காரணம். எப்படி யோசித்திருக்கிறார் பாருங்கள்.

யார் முன்னேறாமல் இருக்கிறார்கள் என்றால்,  உழைப்பாளி.  உழைக்காதவன் முன்னேறு-கின்றான் என்றால், அதற்கு என்ன காரணம்?

மூடநம்பிக்கை ஒவ்வொன்றையும், நாம் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டதால் தான் இந்நிலை.

அதற்குப் பிறகுதான், பகுத்தறிவுச் சிந்தனையும், இந்த இயக்கத்தைத் தோற்று-வித்ததும் மிகப்பெரிய சாதனையாகும்.

பக்திக்கும் -ஒழுக்கத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் தந்தை பெரியார்.

பக்தி வேண்டுமா? ஒழுக்கம் வேண்டுமா? என்றால், பக்தி என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து.

பக்தி போனால் ஒன்றும் போகாது; ஆனால், ஒழுக்கம் போய்விட்டால், எல்லாமே போய்விடும் என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.

பக்திமானாக இருக்க வேண்டுமா? இல்லையா என்பது முக்கியம் கிடையாது. இரண்டு பேருக்கும் வேண்டியது ஒழுக்கம்.

அடிப்படையில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று மிகத் தெளிவாகச் சிந்தித்துச் சொன்ன ஒரு மாமனிதரை நாம் எல்லாம் நினைத்துப் பார்க்கின்ற வாய்ப்பை அளித்ததற்கு உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இறை.மதியழகன் உரையாற்றினார்.

புதிய நிலா ஆசிரியர் மு.ஜஹாங்கீர் அவர்களின் உரை

சிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் புதிய நிலா ஆசிரியர் மு.ஜஹாங்கீர் அவர்கள் உரையாற்றினார்.

அரிஸ்டாட்டில், பிளாட்டோ, சாக்ரட்டீசு போன்ற சிந்தனையாளர்களின் வரிசையில் போற்றத்தக்கவர் தந்தை பெரியார்அவர்கள்.

பெரியாரைப் பற்றி அதிக அளவில் பல தகவல்களை நான் தெரிந்து கொண்டேன். பெரியாருடைய மனிதநேயத்தைப் பற்றி நிறையப் பேசலாம். அவருடைய சிந்தனை-களில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்று கேட்டீர்களே-யானால்,  தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அன்றைய காலக் கட்டங்களில் தாய் தந்தையற்ற குழந்தைகளை ஆதரிக்கும் அமைப்புகள் ‘அனாதை இல்லங்கள்’,  ‘ஆதரவற்றோர் இல்லம்’ என்ற பெயரில்தான் இருந்தன. ஆனால், தந்தை பெரியார் அவர்கள் அதனை அப்படியே மாற்றினார்.

பெரும் பகுதி பார்த்தீர்களேயானால் அவருடைய அமைப்பு ரீதியில் நடை-பெறக்கூடிய, சுயமரியாதை இயக்க சம்மந்தமான அத்தனை அமைப்புகளிலும், குழந்தைகள் காப்பகம் என்று இருக்கும்; பெண்கள் காப்பகம் என்றுதான் இருக்கும். அனாதை என்ற வார்த்தையை பெரியார் அவர்கள் தவிர்த்தார்.

ஏனென்றால்,  அனாதை என்கிற உணர்வு அவர்களுக்கு இருக்கக் கூடாது என்கிற காரணத்திற்காகத்தான் அந்த இல்லங்கள் நடைபெறுகின்றன. தினமும் அந்தக் குழந்தைகள் அந்த அமைப்பின் பெயரைச் சொல்லும்பொழுது, அனாதை, அனாதை என்கிற வார்த்தை அவர்களுடைய உள்ளத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால்தான் பெரியார் அவர்கள் காப்பகம் என்கிற பெயரை வைத்திருக்கிறார்.

இது மட்டுமல்ல, எந்த ஒரு சிந்தனை-யாளரும் சிந்திக்க முடியாத ஒரு மிகப் பெரிய புரட்சியைச் செய்தார் தந்தை பெரியார்.

பெரியாருடைய காப்பகத்தில், தாய்  தந்தையற்று இருக்கக்கூடிய குழந்தைகளுக்குப் பெரும்பாலான இடங்களில் பிறப்புச் சான்றிதழ் கேட்பார்கள். பெரியார் என்ன செய்தார் என்றால், அந்தக் காப்பகத்தில் இருக்கக்கூடிய பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில், தந்தை என்கிற இடத்தில் ஈ.வெ.ராமசாமி என்றும், தாய் என்கிற இடத்தில் மணியம்மை என்றும் போட்டார். எந்தச் சிந்தனையாளரும் இது போன்று செய்யவில்லை. இன்றைய அளவும் நம்முடைய ஆசிரியர் வீரமணி அய்யா அவர்களுடைய காலத்திலும்கூட அந்தப் பணி தொடருகிறது.

உலகத்திலுள்ள பல சிந்தனையாளர்களைப் பார்த்தீர்களேயானால், சொல்வது ஒன்றாக இருக்கும்; செய்வது ஒன்றாக இருக்கும். ஆனால், பெரியாரைப் பொருத்தவரையில், அவர் சொன்னதைச் செய்தார்; செய்வதைத்தான் சொன்னார்.

இதுதான் பெரியாருடைய 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் நாம் சிந்திக்க வேண்டும்.

வாழ்க பெரியார்! இவ்வாறு மு.ஜஹாங்கீர் அவர்கள் உரையாற்றினார்.

ஜே.எம்.சாலி அவர்களின் உரை

 

சிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கடந்த ஆண்டு பெரியார் விருது பெற்ற ஜே.எம்.சாலி அவர்கள் உரையாற்றினார்.

இனிய நல் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய சகோதரர் இங்கே சொல்லியதைப்போல, கடந்த ஆண்டு எனக்குப் பெரியார் விருது கிடைத்தது. விருதுகள் ஆசை எனக்குக் கிடையாது.

ஆனால், 2012ஆம் ஆண்டு சிங்கப்பூரின் உயர்ந்த விருதான கலாச்சார விருது கிடைத்தது.

கடந்த டிசம்பர் மாதம் எனக்குப் பெரியார் விருது கொடுத்தார்கள். இப்படிப் பல விருதுகள் கிடைத்தன.

எனக்கு அந்த ஆசை, பேராசை, அகந்தை, ஆணவம் எல்லாம் கிடையாது. ஆனால், எனக்கு,

செந்தமிழ் நாடெனும் போதினிலே- – இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

என்று பாரதியார் பாடியுள்ளார்.

அதனால், எனக்குத் தாய்நாடு என்பது தமிழ்நாடு என்று சொன்னாலும், தந்தையர் நாடு என்று சொன்னாலும், அது தமிழ்-நாட்டிற்கும் பொருந்தும்; சிங்கப்பூருக்கும் பொருந்தும். அந்த வகையில், தந்தையர் நாடு என்று சொன்னால், தந்தையாக நான் மதிக்கக் கூடியவர் பெரியார் அவர்கள்.

ஏனென்றால், நான் கும்பகோணம் கல்லூரியில் 1957ஆம் ஆண்டு படிக்கின்ற பொழுது, பெரியார் அவர்களை இரண்டுமுறை சந்தித்துள்ளேன். அதன் பிறகு, 1960ஆம் ஆண்டு சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில்  படிக்கின்றபொழுது, பலமுறை பெரியார் திடலுக்குச் சென்றிருக்கிறேன். பல இடங்-களிலும் பெரியார் அவர்களைச் சந்தித்திருக்-கிறேன். 10 ஆண்டுகள் ஆனந்த விகடனில் நான் துணை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த பொழுதும், பெரியார் அவர்களைச் சென்று சந்தித்தேன்.

சிங்கப்பூர் தந்தையர் எனக்கு இரண்டு பேர். தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் அழைத்துதான் நான் சிங்கப்பூருக்கு 1964ஆம் ஆண்டில் வந்தேன். அப்படியிருக்கும்பொழுது, அவர் பெரியாரை இரண்டு முறை அழைத்த வரலாற்றினைப் பதிவு செய்து, நான் ‘தமிழவேள் கோ.சாரங்கபாணி’ என்ற நூலினை எழுதியுள்ளேன்.

தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களிடம் நிறைய பேர் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால், அவர் என்னை அவருடைய மகனாக நினைத்து, பாசத்தோடு வளர்த்து என்னை ஆளாக்கினார். அவரைப்பற்றி நான் நூல் எழுதியிருக்கிறேன்.

அதேபோன்று இன்னொரு தந்தை என்று சொல்கையில், அவர் எனக்கு மட்டும் தந்தையல்ல- – நாட்டுத் தந்தை லீகுவான் யூ அவர்கள். அவரைப் பற்றியும் ‘நவீன சிங்கப்பூரின் தந்தை லீகுவான் யூ’ என்ற ஒரு நூல் எழுதியிருக்கிறேன்.

சென்ற ஆண்டு எனக்குப் பெரியார் விருது கிடைத்தவுடன், பெரியாரைப் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்று நினைத்து, நிறையச் செய்திகளைத் தொகுத்து வைத்திருக்கிறேன். ஆனால், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்றுவர அதிக வாய்ப்பு வரவில்லையாதலால், மிக விரைவில் அந்த நூலை வெளிக் கொண்டுவர உள்ளேன்.

எனக்குக் கால அவகாசம் தெரியும்; சபை நாகரிகமும் எனக்குத் தெரியும். எவ்வளவோ நான் பேசலாம். இருந்தாலும், இந்த வாய்ப்புக்கு நான் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!-

இவ்வாறு ஜே.எம்.சாலி அவர்கள் உரையாற்றினார்.

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்களின் உரை

 

சிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் காப்பாளர் “புதுமைத்தேனீ’’ மா.அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.

எல்லோருக்கும் வணக்கம். பெரியாருடன் நான் கொஞ்சம்தான் பழகியிருக்கிறேன். எங்களுடைய இல்லத் திருமணங்களில் இரண்டு நிகழ்வுகளில் அவர் பங்கேற்று இருக்கிறார்.

எனக்குப் பிடித்த தலைவர்களில் முதன்மையானவர் தந்தை பெரியார் அவர்கள்தான். அடுத்ததாக அறிஞர் அண்ணா ஆவார்.

இலக்கயவாதிகளில் எனக்குப் பிடித்தவர் திருவள்ளுவர்தான்.

பெரியாருடன் பேசும்பொழுதும், பழகும் போதும், பிரச்சாரம் செய்யும்பொழுதும், நடைமுறை சாத்தியத்துடன்தான் பேசுவார். புரியாத ஒரு மொழியிலேயோ, இலக்கிய நடையிலேயோ பேசமாட்டார். எல்லோருக்கும் புரியும்படியாகப் பேசுவார்.

‘மனிதனுக்கு மானமும், அறிவும்தான் அழகு’ என்று சொல்லியிருக்கிறார். இதனை இன்னும் அனுபவபூர்வமான முறையில் சொல்ல வேண்டுமானால், நானும், திண்ணப்பன் அய்யாவும் இருக்கிறோம். எங்கள் இரண்டு பேரில் யார் அழகு?

நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். என்னைப் பார்த்துவிட்டு, அங்கே அமர்ந்திருக்கின்ற அந்தப் பிள்ளை நான்தான் அழகாக இருக்கிறேன் என்று சொல்வார்.

ஆனால், பெரியார் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. ஒருவரின் உடலைப் பார்த்தோ, உடையைப் பார்த்தோ, குணத்தைப் பார்த்தோ அழகு என்று சொல்லவில்லை.

அழகு என்பது, மானம் – எல்லோருக்கும் மானம் இருக்கிறது; எனக்கும் இருக்கிறது; அய்யா சுப.திண்ணப்பன் அவர்களுக்கும் இருக்கிறது. ஆனால், அறிவு;  இன்றைக்கு சிங்கப்பூரில் அய்யா சுப.திண்ணப்பன் அவர்களை தமிழறிஞர் என்று சொல்கிறோம். என்னைவிட அறிவு அவருக்கு அதிகம் இருப்பதினால், அவர்தான் அழகு. உங்களுக்குப் புரிவதற்காக நான் இதனை சொல்கிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் எப்படி இப்படிப்பட்ட ஒரு இயக்கத்திற்கு வந்தார் என்று சொன்னால், அவருக்கு ஏற்பட்ட பல கொடுமையான சம்பவங்கள் அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் – -அதாவது – கடவுள் மறுப்பாளர் – பிராமண எதிர்ப்பாளர் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அவரை அடைத்து வைக்கிறார்கள்.

அதற்கு மீறி அவர்கள் எவ்வளவோ பணிகளை இந்த நாட்டிற்காகச் செய்திருக்கிறார். தந்தை பெரியாரோடு, ஒருவர், திண்டுக்கல்லுக்குச் சென்றிருக்கிறார். அங்கே ஒரு வழக்குரைஞர் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவருடன் வந்தவர் ஒரு பிராமணர்; அவரை ஒரு தனி அறையில் அமரவைத்து காலை சாப்பாடு போட்டிருக்கிறார்கள். பெரியாருக்கு இன்னொரு அறையில் அமரவைத்து சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.

மதியம் சாப்பாட்டையும் அதேபோன்ற முறையில் போட்டிருக்கிறார்கள். ஆனால், காலையில் சாப்பிட்ட இலையை எடுக்காமல், அந்த இலையின் மீது ஈ மொய்த்துக் கொண்டிருக்கிறது. அங்கே மதிய சாப்பாட்டிற் காகவும் இலை போட்டிருக்கிறார்கள்.

ஆனால், பெரியாரோடு வந்த பிராமணருக்கோ, அவர் அமர்ந்திருந்த அறையில், காலையில் சாப்பிட்ட இலையை எடுத்துவிட்டு, அறையை சுத்தம் செய்து -மதியம் சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.

அன்றைய இரவும் அதேபோன்ற முறையில் செய்திருக்கிறார்கள்.

இவரும் மனிதர்தான்; இவரோடு வந்த பிராமணரும் மனிதர்தான். ஆனால், இவரை ஒரு நிலையிலேயும், அவரை ஒரு நிலையிலேயும் வைத்துப் பார்க்கிறார்கள். ஏன் வேறுபடுத்து கிறார்கள்? ஏன் இழிவுபடுத்துகிறார்கள்? என்று சிந்தித்தார்.

அந்த இழிவுப் பிரச்சினையிலிருந்து ஏற்பட்டதுதான் – இந்தச் சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய்யவேண்டும் – இந்தச் சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டுவர வேண்டும் – இந்த மக்கள் ஏன் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்? அவர்களை எப்படி விழிப்புக் கொள்ளச் செய்வது? அவர்களை எப்படிப் பண்படுத்துவது? எப்படி அவர்களை சீர்திருத்துவது? என்று சிந்தித்தார்.

காந்தியார் அவர்கள் கூட, தென்னாப்-பிரிக்காவில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு தான், இந்திய சுதந்திரத்தை முன்னெடுத்தார்.

அம்பேத்கர்கூட, அவருக்கு ஏற்பட்ட இழிவிற்குப் பிறகுதான், தாழ்த்தப்பட்டவர்களை மேலே கொண்டுவர வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வாழ்க்கையில் அடிபட்ட இழிவிற்குப் பிறகுதான், மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் இல்லை-யென்றால், நம்முடைய தமிழ்ச் சமுதாயம் எவ்வளவோ தாழ்பட்டு கிடந்திருக்கும். இந்தத் தமிழ்ச் சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு வந்தது – தந்தை பெரியார்தான்.

அவருடைய நினைவை என்றும் நாம் போற்ற வேண்டும்;  அவரைப் பற்றி நாம் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய நினைவில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று சொல்லி என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மா.அன்பழகன் உரையாற்றினார்.

(தொடரும்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *