அய்யாவின் அடிச்சுவட்டில்…. இயக்க வரலாறான தன்வரலாறு (167)

டிசம்பர் 01-15

எங்களைத் தூண்டிக் கொண்டேயிருப்பவர் தந்தை பெரியார்

ஒருவர் மட்டுமே!

 

போராட்டத்தை விளக்கி தமிழ்நாடு முழுவதும் தொடர்வண்டி பயணம்

எம்.ஜி.ஆர். அரசின் அக்கிரம ஆணையை எரித்து, அதன் சாம்பலை எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்திருந்த நிலையில் இத்தகைய இரயில் பயணத்தை மேற்கொண்டேன்.

இந்தப் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகமும், அதனுடன் சேர்ந்து தோழமைக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், எம்.ஜி.ஆர். வழக்கம் போல், தமிழர் சமுதாயத்தின் எதிர்காலத்தையே பாதிக்கும் சமூகநீதிக்கான இந்த ஜீவ  மரணப் பிரச்சினையிலும் எடுத்தேன்; கவிழ்த்தேன் என்ற மனோபாவத்துடன் அலட்சியம்காட்டி வந்தார்.

 

எம்.ஜி.ஆரைச் சுற்றி நின்றுகொண்டு, கொட்டம் அடிக்கும் ஒரு ‘காகஸ்’ இத்தகைய விபரீத யோசனைகளை எல்லாம் எம்.ஜி.ஆருக்குச் சொல்லிக் கொடுத்தது. அதன் மூலம் எம்.ஜி.ஆர். அரசின் வேரை அறுக்கும்  விஷப்பூச்சிகளாக செயல்பட்டு வருகிறது ஒரு கூட்டம் என்று நவம்பர் 26ஆம் தேதி கிளர்ச்சி பற்றி ‘அலை ஓசை’ இதழில் சுல்தான் முகமது எடுத்துக்காட்டி எழுதியிருந்ததார்.

வழக்குத் தொடர்ந்தால் நீதிமன்றத்தில் தோழர்கள் தரவேண்டிய வாக்குமூலத்தை தந்தை பெரியார் அவர்கள் எப்படி மேற்கொள்வாரோ அதேபோன்று முன்கூட்டியே தோழர்களுக்கு ‘விடுதலை’யின் மூலம் வாக்குமூலத்தை அறியும்வண்ணம்  தெரிவித்திருந்தோம். அதில், “மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே, தமிழின மக்கள், ஜாதியின் பெயரால் பிற்படுத்தப்பட்ட காரணத்தால், கல்வி,  உத்தியோக வாய்ப்-பின்றி தடுக்கப்பட்டு வந்தார்கள். ஜாதியின் பேரால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டிற்காக தந்தை பெரியார் நீதிக்-கட்சியின் மூத்தத் தலைவர்கள், பேரறிஞர் அண்ணா ஆகியோர் அரும்பாடுபட்டனர். அதன் பயனாய் கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புரிமை ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பு ஆகும்.

பிற்படுத்தப்பட்டோரை வஞ்சிக்கும் வருமானவரம்பாணை எரிகிறது

அந்த வாய்ப்பையும் பறிக்கும் வகையில், வகுப்புரிமை ஒதுக்கீட்டைப் பறிக்கும் குறிக்கோளுடன் இன்றைய தமிழக அரசு, தந்தை பெரியார் போராடிப் பெற்றுத்தந்த வகுப்புரிமை ஒதுக்கீட்டை குழிதோண்டிப் புதைக்கும்வண்ணம் இரண்டு அபாயகர-மான ஆணைகளைப் போட்டுள்ளது.

1. ரூ.9000க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் சலுகையை, ஒதுக்கீட்டை, உத்தியோக உயர்வைப் பெற முடியாது என்று ஒரு ஆணையை 02.07.1979 அன்று அமலாக்கியது.

2. பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்-பட்ட இடங்களுக்குப் போதிய தகுதியுள்ள வேட்பாளர்கள் கிடைக்க வில்லையானால் அவ்விடங்கள் காலாவதி யானதாகவே கருதப்படும் என்ற இரண்டாவது ஆணை.

இந்த இரண்டு ஆணைகளும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்குப் பேரிடியாய் இருப்பதால் தமிழக அரசிற்கு பல மாநாடுகள் மூலம் எடுத்துக்கூறியும், அரசு அந்த ஆணைகளைத் திரும்பப் பெறாததால் மத்திய திராவிடர் கழகம் எடுத்த முடிவின்படி அரசியல் சட்டத்தில் உள்ள உரிமையின்படி பொது அமைதிக்குப் பங்கமோ, பொதுச் சொத்திற்கு நாசமோ, பொதுமக்களுக்குத் தொந்தரவோ இன்றி எங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலும் மேற்படி அரசாணைகளை எரித்தோம்.

எனவே, இது எந்த வகையிலும் குற்றமாகாது. ஆனால், தாங்கள் இது குற்ற-மென்று கருதினால், எந்தத் தண்டனை தந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்-கொள்கிறேன். நான் எதிர் வழக்காட விரும்பவில்லை எனக் கூறிட தோழர்-களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

எரிக்கப்பட வேண்டிய தமிழக அரசு ஆணையின் நகல்கள் எந்தப் பகுதிக்கோ, தோழர்களுக்கோ எந்தக் காரணத்தை முன்னிட்டாவது கிடைக்கப் பெறாமல் இருந்தால், ஒரு காகிதத்திலாவது, பிற்படுத்தப்-பட்டோருக்கு கேடு பயக்கும் தமிழக அரசு ஆணை எண்: 1156, நாள்: 02.07.1979 என்று எழுதி, அதைக் கொளுத்தி அதன் சாம்பலை “மாண்புமிகு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை 600 009’’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று  திராவிடர் கழக தலைமை நிலையம் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ‘விடுதலை’யின் முதல் பக்கத்தின் இடதுபுறம் மேல் பகுதியில் ஒவ்வொரு நாளும் அறிவிப்பு செய்து அறப்போரில் குதித்தோம்.

எரித்து முடித்து அஞ்சல் நிலையம் நோக்கி…

24.11.1979 அன்று ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் அண்ணாசாலையிலுள்ள அய்யா சிலை அருகே எம்.ஜி.ஆர் ஆணைக்கு தீ மூட்டப்படும் என்றும் அதில் நான் பங்கேற்பதாகவும் அறிவிப்பு செய்யப்-பட்டிருந்தது. கழகப் போராட்ட வீரர்களும், வீராங்கனைகளும் 9 ஆயிரம் ரூபாய் உத்தரவுக்குத் தீயிட்டனர். இந்தப் போராட்டத்-திற்கு சென்னை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக இருந்த திருமதி பார்வதி கணேசன் அவர்கள் தலைமை தாங்கினார்.

போராட்டத்தின் முடிவுப்படி அண்ணா சாலையிலுள்ள அய்யா சிலையருகே அரசு ஆணைக்குத் தீயிட்டுக் கொளுத்தி எழுச்சி உணர்வை, எதிர்ப்பின் வேகத்தை ஏற்படுத்திக் காட்டினேன். அதன் சாம்பலை கவரில் போட்டு அண்ணாசாலை அஞ்சலகத்தில் உள்ள தபால் பெட்டியில் அஞ்சல் செய்தேன்.

தமிழ்நாடெங்கும் அரசு ஆணையை பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள், கழகத் தோழர்கள் எரித்து இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சற்றேறக்குறைய 20 ஆயிரம் தோழர்கள், தாய்மார்கள் பங்கு பெற்றனர்.

பிற்படுத்தப்பட்டோருக்குக் குழிதோண்டும் 9 ஆயிரம் ரூபாய் அரசு ஆணையை எரித்து முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட சாம்பல் மூட்டைகள் 20 ஆயிரத்துக்கும் மேல் கோட்டையில் குவிந்தன. தபால்துறை ஊழியர்கள் இவைகளை மூட்டைகளாகக் கட்டி முதலமைச்சர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்ற காட்சி அரசை நிலைகுலையச் செய்தது.

இதில் விசித்திரப் போக்கு என்னவென்றால் எந்த ஊரிலும் ஆணையை எரித்தவர்கள் கைது செய்யப்படவில்லை!

ஆனால், தஞ்சை மாவட்டத்தில் அம்மாப்-பேட்டையில் ஆணையை எரித்த தஞ்சை ஒன்றியக் கழகச் செயலாளர் ஜோசப், அவரது துணைவியார் மற்றும் கழகத் தோழர்களைக் கைது செய்து திருவையாறு நடுகாவேரி காவல் நிலையத்தில் ஒருமணி நேரம் வைத்திருந்து பிறகு வெளியே அனுப்பிவிட்டனர். அரியலூர் மாவட்டம் செட்டித்திருக்கோணத்தில் எரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தோழர்கள்  விக்கிரமங்கலம் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு மாலை அனுப்பி வைக்கப்-பட்டனர். அதன் உதவி ஆய்வாளர் ஒரு பார்ப்பனர். அரசாங்கத்தின் அணுகுமுறை விசித்திரமாக இருந்தது.

சாம்பல் கோட்டைக்கு அனுப்பப்படுகிறது

தமிழ்நாடு முழுவதும் அரசாணை நகல்கள் பொசுங்கிக் குவிந்துக்-கொண்டிருந்த வேளையில், தமிழக முதலமைச்சர் திருச்சியில் செய்தியாளர்கள் கேள்வி-களுக்கு பதிலளிக்கையில், கருணாநிதி தூண்டிவிட்டுத்தான் வீரமணி இந்தப் போராட்டத்தினை நடத்தினார் என்று பதில் கூறினார்.

இதனைக் கண்டித்து 01.12.1979 அன்று ‘விடுதலை’யின் இரண்டாம் பக்கத்தில் ‘முதலமைச்சரே, திசை திருப்பாதீர்!’ என்ற தலைப்பில் நீண்டதோர் தலையங்கம் நான் எழுதினேன். அதில், முதல்வர் அவர்களைப் பொறுத்தவரை இது வாடிக்கையான பதில்தான் என்றாலும், நமக்கு இது வேடிக்கையான பதிலாகவே தோன்றுகிறது!

பல்லாயிரக்கணக்கான மக்களால் தமிழக அரசின் ஆணை தீக்கிரையாக்கப்பட்டு, அந்தச் சாம்பல் கோட்டையிலே மூட்டை மூட்டை-யாகக் குவிந்துள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த இடத்தில் உள்ள ஒருவர் இப்படி பதிலளித்-திருப்பதைக் கண்டு மக்கள் மிகுந்த வெட்கமும் வேதனையும் அடைவார்கள்!

பார்ப்பனரால் தூண்டிவிடப்பட்டு இப்படி ஒரு பிற்படுத்தப்பட்ட மக்கள் விரோத அரசு நடத்தும் முதல்வர் திரு. எம்.ஜி.ஆர் வழக்கமாக தமிழ்நாட்டில் கிளர்ச்சிகள் ஏற்படும் போதெல்லாம் பாடுகின்ற பழைய பல்லவி-யையே இதிலும் பாடியுள்ளது அவரது அபார நுண்ணறிவையே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது!

இந்த ஆணையைத் தமிழக அரசு பிறப்பித்த அடுத்த நாள் முதலே இதற்கென ஒரு கருத்து விளக்கம், எதிர்ப்பு, அரசு திரும்பப் பெறவேண்டும் என்ற வேண்டுகோள் இவைகளை பல்வேறு கட்சித் தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவர்களைத் திரட்டி கூட்டறிக்கைவிட முயற்சி எடுத்தது யார்? திராவிடர் கழகம் அல்லவா?

திராவிடர் கழகத்தினைப் பொறுத்தவரை, இந்த இயக்கத்தின் எந்த முடிவையும், செயலையும் எவரும் தூண்டிவிட்டோ, கொம்பு சீவியோ, மூக்கைச் சொறிந்துவிட்டோ அல்லது முகமன் கூறியோ செய்யும் என்று எவராவது நினைத்தால் அவர்கள் பாவம்  பரிதாபத்துக் குரியவர்கள் என்றேதான் கொள்ள வேண்டும்.

திராவிடர் கழகம் என்பது என்ன?

தந்தை பெரியார் அவர்கள் கொள்கை-களுக்கும், லட்சியங்களுக்கும், எந்தவித சபலங்-களுக்கும் ஆளாகாமல் ஒப்படைத்துக் கொண்ட தியாக மறவர் கூட்டம், பதவிச் சுகம், விளம்பர மோகம், புகழ் ஆசை, முகமன் பலவீனம், இரட்டை வாழ்க்கை வாழும் தன்மை என்றைக்குமே இல்லாத தன்னல மறுப்பாளர்-களின் பாசறை! இதன் எந்தக் கிளர்ச்சியையும் அவர் தூண்டினார். இவர் தூண்டினார் என்று கூறி திசை திருப்பி விடலாம் என்று எவரும் பகற்கனவு காண வேண்டாம்!

திராவிடர் கழகத்தின் எல்லாக் கிளர்ச்சிகளையும், பிரச்சாரத்தையும் எப்போதும் தூண்டி-விட்டுக் கொண்டே இருப்பவர் ஒரே ஒருவர்தான். மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுக்கு அவர் யார் என்று தெரிந்து-கொள்ள ஆசையாக இருக்குமானால் அதையும் சொல்லிவிடுகிறோம். அவர்தான் எங்கள் அறிவு ஆசான், ஞான, மானத் தந்தை எங்கள் அய்யா அவர்கள்!’’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

தலைவரின் ஆணையை ஏற்று வருமான வரம்பாணையை எரித்த மகளிர் பாசறை

ஆட்சியை அசைக்கும் ஆற்றல் திராவிடர் கழகத்திற்கு உண்டு! ‘கரண்ட்’ ஏடு கணிப்பு!

‘கரண்ட்’ ஆங்கில வார ஏடு (அக்டோபர் 27, 1979) வெளியான இதழில் எம்.ஜி.ஆரை அசைக்கும் சக்தி திராவிடர் கழகத்திற்கு உண்டு! என்று நவம்பர் 24ஆம் தேதி கிளர்ச்சி பற்றி கட்டுரையை தீட்டியிருந்தது. அதனை ஆங்கிலம் மற்றும் தமிழ் வடிவில் ‘விடுதலை’ நாளேட்டில் 14.11.1979 அன்று வெளியிட்டிருந்தோம். அதனை அப்படியே இங்கு தருகிறேன்.

எம்.ஜி.ஆரை அசைக்கும் சக்தி திராவிடர் கழகத்துக்கு உண்டு!

நவம்பர் 26 கிளர்ச்சி பற்றி ‘கரண்ட்’ வார ஏடு அதன் அக்டோபர் 27ஆம் தேதி இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையை அப்படியே இங்கு தருகிறேன்:

எங்களுக்கு அடுத்த பொதுத்தேர்தல் பற்றி கவலை இல்லை. அடுத்த தலைமுறையைப் பற்றித்தான் கவலை என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி ‘கரண்ட்’ நிருபரிடம் கூறினார்.

அரசியல் கட்சி இல்லாவிட்டாலும், திராவிடர் கழகமும் அதன் தொண்டர்களும், எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கும் சக்தி படைத்தவர்கள். அவர்கள் தமிழ்நாடு அரசு உத்தரவை எரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். போர்வீரர்களைப் போல் போராட்டக் களத்தில் இறங்கி யிருக்கின்றனர்.

தொழிற் கல்லூரிகளில் சேருவதற்கு பிற்படுத்தப்பட்டோர் என்பவர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 9 ஆயிரத்துக்கு உட்பட்டு இருக்க  வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் உத்தரவாகும்.

இந்த உத்தரவு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் எதிர்கால சந்ததிக்கு பெரும் தீங்கை விளைவிப்பதாகும் என்று வீரமணி கூறினார். இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் வளர்ச்சி அடைந்த படித்த மக்கள் வெகுசிலர்தான்.

கல்வி பெறாதவரை சமுதாயத்தில் அவர்களுக்கு மரியாதை கிடையாது. அதே நேரத்தில் பார்ப்பனர்களில் தற்குறியை, படிக்கத் தெரியாத பார்ப்பனர்களை நீங்கள் பார்க்க முடியாது.

பார்ப்பனர்களில் ஏழைகள் இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், அவர்களில் தற்குறிகள் கிடையாது. ஒரு படித்த பார்ப்பான், அவன் எவ்வளவு வறுமை நிலையில் இருந்தாலும், சமுதாயத்தில் மிக உயர்ந்த அந்தஸ்து உள்ளவனாக மதிக்கப்-படுகிறான்.

இன்றைக்கு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலே உள்ள ஒரு வியாபாரி கோயில் கட்டுவதற்கு நன்கொடை வழங்கலாம்; வழங்குவதற்குரிய சக்தி அவனுக்கு இருக்கலாம். ஆனால், அவன் கோயில் கர்ப்பகிரகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டான். இந்தக் காரணத்-தினால்தான் கல்வி பெறுவதற்கான பிற்படுத்தப்-பட்டோர் சலுகையில், எந்தப் பொருளாதார வரம்பும் நிர்ணயிக்கக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி எடுத்துச் சொன்னார்.

திராவிடர் கழகத்தின் இந்த நிலைக்கு தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து பேராதரவு கிடைத்திருக்கிறது.

இந்தப் பொதுவான  பெருவாரியான மக்களின் எதிர்ப்பினால், எம்.ஜி.ஆர். மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப் பட்டிருக்-கிறார். எனவே வருமான வரம்பை ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்துவேன் என்று உறுதி அளித்துள்ளார்.

எந்த விதமான பொருளாதார உச்ச வரம்பையும் நாங்கள் ஏற்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். பெரியார் நூற்றாண்டு விழாவிலே கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். தீவிரமாகப் பேசிக்கொண்டு, திராவிட இயக்கத்தை உருவாக்கிய தலைவரின் கொள்கைக்குத் துரோகம் செய்வது, திரிபுவாத-மாகும் என்று திராவிடர் கழகத் தோழர்கள் கூறுகிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் 12 சதவீத ஏழை கிராம மக்களுக்குக் கிடைக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட ஒரு சிலருக்குத்தான் பயன்பட்டு வந்தது என்று எம்.ஜி.ஆர். கூறினாலும் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சுமார் 166 ஜாதியினர் சேர்க்கப்பட்டிருப்பதை திராவிடர் கழக வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. எனவே, இந்த உத்தரவு வரும்வரை பிற்படுத்தப்பட்டவருக்கான சலுகைகள் எல்லா ஜாதியினரும் பரவலாகப் பெற  முடிந்தது என்று வீரமணி குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். மதுவிலக்கு கொள்கையில் தலைகீழ் ‘டர்ன் கர்க்’ அடித்துவிட்டார். குடித்ததற்காக யாரையும் கைது செய்ய வேண்டியதில்லை என்று கூறிவிட்டார். எனவே, இந்த உத்தரவிலும் அவரது எண்ணம் மாறக்கூடும்.

பெரியாருடைய மதச்சார்பின்மை, சோஷலிசம், பகுத்தறிவு லட்சியங்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் திராவிடர் கழகம்  அவசர நிலை காலத்தில் தமிழ்நாட்டில் கடும் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டது. பல இன்னல்களை அனுபவித்தது. எம்.ஜி.ஆர். வலிந்து போய் தவறான வழியில் சென்று அவசர நிலையை ஆதரித்தார். பெரியாருடைய தொண்டர்கள் அவசர நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தார்கள். அந்த எம்.ஜி.ஆர்.தான் இப்போது பெரியார் நூற்றாண்டு விழா மேடையிலே, தன்னைப் பெரியாரின் குழந்தை என்று அழைத்துக் கொள்கிறார் என்று திராவிடர் கழகப் பிரமுகர் ஒருவர் கூறினார்.

அதேநேரத்தில் இப்போது பெரியாரைப் புகழ்வது என்பது ஒவ்வொரு தேசியத் தலைவர்களுக்கும் நாகரீகமாகிவிட்டது.

சரண்சிங் பெரியார் பற்றிய மியூசியம் ஒன்றைத் திறந்து வைக்க வர இருக்கிறார்.

பெரியார் ஒரு பழைய காங்கிரஸ்காரர் என்று கூறி, இந்திராகாந்தி புகழ்ந்து பேசியிருக்கிறார்.

வடநாட்டில் ஒவ்வொரு அரசியல் தலை-வரும் காந்தியாரைப் பற்றிநிற்க விரும்பு-கிறார்கள். இப்போது தந்தை பெரியார் அவர்கள் மக்களின் மதிப்புக்குரிய தலைவராக ஆனவுடன்  (பெரியாரைப் புகழ்ந்தால்தான் தங்களுக்கு மரியாதை என்ற நிலை) தமிழ்-நாட்டிலும் வந்துவிட்டது என்று திராவிடர் கழகத் தோழர்கள் கூறினர்.

தமிழ்நாட்டு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மிகவும் விரக்தி அடைந்துள்ளார்கள். தங்கள் மதக் கொள்கைகளில் நம்பிக்கைக் கொண்டிருந்த, திருப்பதி  காசி போன்ற புண்ணிய ஸ்தலங்-களுக்கு சென்று வந்து கொண்டிருந்த சரண்சிங், இப்போது பெரியார் நூற்றாண்டு விழாவிலே கலந்து கொள்கிறாரே என்று தமிழக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் விரக்தி அடைந்து, அதிர்ந்து போயிருக்கின்றனர். இவ்வாறு மும்பை பிரபல ஆங்கில வார ஏடு ‘கரண்ட்’ எழுதியது.

(நினைவுகள் நீளும்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *