பகுத்தறிவுடன் கூடிய சுயமரியாதை உணர்வே
பெண்ணுக்கு விடுதலை தரும்!
கே: அஞ்சலக பண ஆணை (Money Order) படிவத்தில் முதலில் தமிழ் இருந்து, தற்போது நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் இடம்பெற தாங்கள் முயற்சி மேற்கொள்வீர்களா?
– சுமதி சண்முகசுந்தரம், திட்டக்குடி
ப: அஞ்சலகப் பண ஆணை தமிழில் வர நண்பர் குமரி ஆனந்தன் அவர்களின் சீரிய முயற்சியே முழுமுதற் காரணம்; அது நீக்கப்பட்டதை எதிர்த்து நீங்கள் கூறும் அரிய யோசனைப்படி, முழு முயற்சியை, ஒத்தக் கருத்துள்ளவர்-களோடு கலந்து நிச்சயம் மேற்கொள்ளுவோம்!
கே: மதுரை மாவட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் தலித் மாணவர்களைக் கொண்டு பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யும் நிலை எதைக் காட்டுகிறது?
– சீதாலட்சுமி, தாம்பரம்
ப: கழிப்பறை சுத்தம் செய்வது ஜப்பானில் அனைத்து மாணவர்களுக்கும் சேவை மனப்பான்மையைக் கற்றுக் கொடுக்கும் பாடம்போல நடைபெறுகிறது. நம் நாட்டில் குறிப்பிட்ட ஜாதி மாணவன் அதைச் செய்யும்படி வற்புறுத்தப்-படுவது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்!
கே: ‘உண்மை’ இதழ் தமிழகமெங்கும் பேருந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் கிடைக்கச் செய்வீர்களா?
– குணசேகரன், காட்டுமன்னார்குடி
ப: நிச்சயமாக; நிர்வாகம் முயற்சி எடுக்கும்.
கே: இழந்துவரும் தன் செல்வாக்கை மீட்டெடுக்கவும், பிரச்சினைகளைத் திசைதிருப்பவும், பாகிஸ்தான் பிரச்சினையை மோடி அரசு வளர்க்கிறதோ என்ற என் அய்யம் சரியா?
– ச.கோ., பெரம்பலூர்
ப: உங்கள் அனுமானம் தவறு என்று யாரும் எளிதில் கூறிவிட முடியாது!
கே: வரும் தேர்தல் களங்களில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையைப் போல இந்திய அளவில் பிற்போக்கு ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக முற்போக்கு சமூகநீதிக் கூட்டணி உருவாகுமா?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப: இன்னும் இரண்டரை ஆண்டு காலத்தில் அரசியல் எப்படியும் மாறலாமே! நாளை என்ன செய்தி என்பதுதானே அரசியல்?
கே: ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்ற அதிகார ஆணவத்தில், கொலைகாரன் கோட்சேவுக்கு சிலை வைக்கின்றனரே நியாயமா?
– இரா.முல்லைக்கோ,
பெங்களூரு-43
ப: இன்னும் 2 ஆண்டுகள்வரை இத்தகைய பாசிச சர்வாதிகாரப்போக்கு தலைவிரித்தே ஆடும்!
கே: சுயமரியாதை உணர்வு ஒரு பக்கம் பெண்களுக்கு வளர்ந்து கொண்டு வரும் நிலையில் கடவுள்சார் மூடத்தனங்கள், அளவிற்கு அதிகமாகக் காரணம் என்ன?
– அ.காஜாமைதின், நெய்காரப்பட்டி
ப: நம் நாட்டில் உள்ள விசித்திர நிலையே இதுதான். சுயமரியாதை உணர்வு ஓங்குவது மகிழ்ச்சிதான்; அத்துடன் பகுத்தறிவுடன் கூடிய சுயமரியாதையாக அது மாறினால்தான் அவர்களுக்கு உண்மை விடுதலை கிடைக்கும்.
கே: தொலைக்காட்சி விவாதம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை மட்டும் அடாவடித்தனமாகப் பேச அனுமதிக்கும் ஊடகங்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் ‘பார்ப்பனர்’ என்ற சொல்லைக்கூட பயன்படுத்த அனுமதி மறுப்பது ஏன்?
– செ.பாக்யா, ஆவடி
ப: ‘பார்ப்பனர்’ என்பதுதான் தமிழ் இலக்கியப்படி உள்ள சரியான சொல்; இதையே புரிந்துகொள்ள, அல்லது ஏற்றுக்கொள்ளத் தயங்கும் “அதிபுத்திசாலிகளான’’ ஊடகங்கள் வருவாய் பெருக்கிகளே தவிர, சமுதாய ஆர்வலர்கள் அல்ல.
கே: பெண்ணிய இதழ்கள் என்ற பெயரில் பெண்களுக்கென நடத்தப்படும் ஏடுகள் பல கடவுள், மூடநம்பிக்கைக் குப்பைகளை விதைக்கும் சூழலில் ‘பெரியார் பிஞ்சு’ போல பெண்களுக்குத் தனி இதழ் நடத்தினால் என்ன?
– உ.கனிமொழி, சோழன்குறிச்சி
ப: எங்கள் சுமைகளை ஏற்ற வேண்டிய அளவு ஏற்றிக் கொண்டிருக்கிறோம். எனவேதான் தயக்கம். ஆனால், அது நிச்சயம் தேவைதான்! 2017இல் முயற்சிப்போம்.