அய்யய்யோ… பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு… எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்! என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இந்தப் படங்களைப் பார்த்ததும் ஆ… அடேயப்பா… எவ்வளவு பெரிய சொகுசு பங்களா…? இது ஆ.ராசாவினுடையதா…? ஊடகங்கள் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்குமோ என்று ஒரு கணம் எண்ணத் தோன்றுகிறதா?
இப்படி அளந்துவிட்டிருக்கும் இந்த மின்னஞ்சல் உண்மையானதா? என்பதை யெல்லாம் கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்காமல், நம் பங்குக்கு நாமும் பரப்புவோம் என்று பகுத்தறிவற்றவர்களாக forward மேனியா பிடித்தலைகிறார்கள் நம் தமிழர்கள்.
அதிலும் சும்மா இல்லை… நீ ஒரு சுத்தமான ஆம்பிளையா இருந்தா..? அப்படிங்கற ரீதியில் உண்மையான இந்தியனா இருந்தா கேள்வி கேட்காம மடத்தனமா இதை forward பண்ணுன்னு ஒரு சீண்டல் வேறு.
இதில் தரப்பட்டிருக்கும் தகவல் உண்மையானது தானா? இப்படி ஒரு வீடு தமிழ்நாட்டில் இருக்கிறதா? அந்த வீடு முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்களுக்குச் சொந்தமானதா? இந்தப் புகைப்படத்தை வெளியிட்டவர்கள் யார்? உள்ளே நுழைந்து ரசித்து, புகைப்படம் எடுத்தவர்கள் யார்? அவ்வளவு பெரிய அப்பாடக்கர் பத்திரிகைகாரர் யார்? யாராவது ஆதாரத்துடன் பதில் சொல்ல முடியுமா?
முடியாது. காரணம்… இப்படியொரு வீடு, ராசா அவர்களுக்கு இல்லை.. இன்னும் சொல்லப்போனால் சென்னையில் அவருக்குக் குடியிருக்க சொந்த வீடே கிடையாது. பிறகென்ன இந்தப் படம் என்று யோசிக்கிறீர்களா?
http://www.sothebyshomes.com/Santa-Barbara-Real-Estate/sales/0113311# இணைப்பையும் இந்தப் படங்களையும் பாருங்கள். உண்மை புரியும்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா கடற்கரைப் பகுதியில் கட்டப்பட்டு இணையத்தில் விற்பனைக்கு விளம்பரம் செய்யப்பட்ட The Glass Pavilion என்ற வீட்டின் புகைப்படத்தை எடுத்துப்போட்டு, இது ராசாவின் வீடு… ஊழல் பணம் இதில் இருக்கும் கழிவுத் தொட்டிக்குள்தான் புதைக்கப்பட்டி ருக்கிறது என்கிற ரீதியில் புரளி கிளப்பி அதனூடாக, தமிழகம் குறித்தும், ராசா அவர்களைக் குறித்தும், தமிழகத்தைச் சேர்ந்தவர், தாழ்த்தப்பட்ட இனத்தவர், சமூக சீர்திருத்த சிந்தனை பெற்றவர் என்ற காழ்ப்புணர்வு காரணமாக வட நாட்டவரும், பார்ப்பனர்களும், முதலாளித்துவவாதிகளும் பரப்பும் இந்த மோசடி மின்னஞ்சலை அரை வேக்காட்டுத்தனமாகவோ, அறியாமையாலோ பரப்பிடும் பணியை நாம் செய்யலாமா?
இப்படி மோசடியான குற்றச்சாட்டை முன்வைத்து, படம் போட்டு ராசாவின் சென்னை வீடு என்பது போல் படம் போட்டுப் பரப்பும் அறிவுஜீவிகளே! கோயபல்ஸ் இல்லாத குறையைப் போக்க ஏன் இந்த ஈனப்பிழைப்பு?
இந்த மோசடி மின்னஞ்சலை திட்டமிட்டுதான் உருவாக்கியிருக்கிறார்கள். இதைப் போலவே தான் காற்று ஊதப்பட்ட பலூனாக இருக்கும் 1,76,000 கோடி என்ற போலியான கற்பனைத் தொகையை வைத்துப் பரப்பப்பட்ட பிரச்சாரமும்! அந்த வழக்கு நடைபெற்று முடிவு வரட்டும். உண்மை புரியும்.
ஆனால், வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு, வேறு எந்த வழக்குக்கும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவத்தை இந்த வழக்குக்கு ஊடகங்களும், பார்ப்பனர்களும் வழங்கி, நம்மை ஏதோ ஒரு மாயையில் ஏன் மூழ்க வைத்திருக்கிறார்கள்? ஏன் அதை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்? என்பதை யோசித்துப் பார்த்தால் இந்த மாய்மாலங்களுக்குக் காரணம் புரியும். அண்டப் புளுகு… ஆகாசப் புளுகு.. என்பார்கள்… அதையெல்லாம் விஞ்சும் ஸ்பெக்ட்ரம் புளுகுகள்தான் இன்றைய பார்ப்பன ஊடகங்கள் உங்களுக்குத் தருபவை… இந்த போலி மின்னஞ்சல் ஆதாரமில்லாமல் உடைந்து நொறுங்கியது போல, இந்தப் போலிக் குற்றச்சாட்டுகளும் உடைந்து நொறுங்கும்.
princenrsama.blogpost.com
.. வலைப்பூவிலிருந்து…