வை.கலையாரசன்
நவம்பர் 26 என்பது திராவிடர் கழக வரலாற்றில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தோரணமாக விளங்குகிறது. அவற்றில் முக்கியமானவை 1933, 1957, 1979 ஆகிய ஆண்டுகளின் நவம்பர் 26 ஆகும்.
புரட்சித் தீ மூட்டிய ‘புரட்சி’ ஏடு
தந்தை பெரியார் அவர்கள், ‘அனைவருக்கும் அனைத்தும்’ எனும் கோட்பாட்டினை தமது இலக்காகக் கொண்டு மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டமைத்தார். இதற்கு தந்தை பெரியாரின் ஆயுதமாக வந்ததுதான் ‘குடிஅரசு’ எனும் ஏடு. 1931ஆம் ஆண்டிலேயே இரஷ்ய கம்யூனிஸ்ட் கொள்கை அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமைக்கு உரியவர் தந்தை பெரியார். பின்னர் சோவியத் ரஷ்யா, எகிப்து, கிரீஸ், துருக்கி, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுக்கல் போன்ற நாடுகளுக்கு 11 மாதங்கள் பயணம் செய்துவிட்டு தாயகம் திரும்பியவுடன், தமது சமத்துவ, சமதர்மப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார். அதுகுறித்து பொதுவுடைமை சிந்தனையாளர்-களுடன் இணைந்து ஒரு தெளிவான திட்டத்தை வரைந்தார். அது ‘ஈரோடு சமதர்மத் திட்டம்’ என்று அழைக்கப்பட்டது.
இதன் நீட்சியாக ‘குடிஅரசு’ ஏட்டில் ஒரு கட்டுரையைத் தீட்டினார். இதன் தலைப்பு ‘இன்றைய ஆட்சி ஒழியவேண்டும் ஏன்?’ என்பதாகும். அக்கட்டுரையில் சமதர்மத்திற்கு எதிரான மதம், கடவுள், முதலாளித்துவம், வெள்ளையர் ஆட்சி போன்றவை ஒழிக்கப்பட வேண்டும் என்று எழுதினார். விளைவு ‘குடிஅரசு’ ஏடு நோக்கிப் பாய்ந்தது அரசாங்கத்தின் அடக்குமுறை அம்பு. ‘குடிஅரசு’ நிறுத்தப்பட்டது.
அந்த நிலையில் பூத்ததுதான் ‘புரட்சி’ ஏடு. ‘குடிஅரசு’ இல்லாதபோது ‘புரட்சி’ ஏற்படுவது இயல்புதானே. முதல் ஏடு 26.11.1933 தேதியிட்டு வெளிவந்தது.
உண்மை விளக்கம் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு தந்தை பெரியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதன் முதல் இதழிலேயே தலையங்கத்தில் ‘புரட்சி’யின் கொள்கையைத் தெளிவாகப் பிரகடனப்படுத்தினார் தந்தை பெரியார்.
அதன் ஒரு பகுதி இது…
“மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி;
மதமே மனிதனின் சுதந்திரத்திற்கு விரோதி;
மதமே மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு விரோதி;
மதமே மனித சமூக சமத்துவத்திற்கு விரோதி;
மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்றதுணை;
மதமே முதலாளி வர்க்கத்திற்கு காவல்;
மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு;
மதமே உழைப்பவனை தரித்திரத்தில் ஆழ்த்தி, உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கிற முடிவின் பேரிலேயே புரட்சி தோன்றியுள்ளது என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம்.’’ என்பதைத் தெரிவிக்கிறார்.
மேலும், “இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம்-_கிறித்துவ மதத்தை பரப்ப புரட்சி தோன்றியதல்ல. அதுபோலவே இஸ்லாம்_கிறித்துவ மதங்களை ஒழித்து இந்து மதத்தை நிலைநிறுத்த புரட்சி வரவில்லை.
சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடனும் ஆண், பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காகப் புரட்சி செய்யவே ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது. அது உயிருள்ளவரை அதன் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கும்.’’ என்று தெரிவித்தார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் வந்த ‘இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் ஏன்?’ என்ற கட்டுரைக்காக கைது செய்யப்பட்டார். ஆசிரியராக ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் பொறுப்பேற்றார்.
‘புரட்சி’ மதங்களுக்கு எதிரான, முதலாளித்துவத்திற்கு எதிரான மடமைகளுக்கு எதிரான தன் பயணத்தைத் தீவிரமாகத் தொடர்ந்தது.
மதங்களின் கொடுமைகளுக்கு எதிரான, பெண்கள் உரிமைகளை முழங்கியபடி புரட்சி ஏட்டின் பகுத்தறிவுப் பயணம் 17.06.1934 அன்றுவரை தொடர்ந்தது.
இந்த ஏடு தொடங்கி 24 ஆண்டுகள் கழித்து இயக்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு 1957ஆம் ஆண்டு நவம்பர் 26இல் நடைபெற்ற “அரசமைப்பு சட்ட எரிப்பு போராட்டம்!! ஜாதி ஒழிப்புப் போராட்டம்.’’ அதுதான் ஜாதி ஒழிப்பிற்காக ஒரு நாட்டின் அரசமைப்புச் சட்டம் அந்நாட்டு குடிமக்களால் தீவைத்து எரிக்கப்பட்ட முதலும் கடைசியுமான நிகழ்வு.
1957ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் வரலாற்றில் கறைபடிந்த நிகழ்வாக காட்சியளிக்கும் தென்மாவட்டங்களின் முதுகுளத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஜாதிக் கலவரம் நடந்தது. ஜாதி ஒழிப்பிற்கே தமது பெரும்பகுதி பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் நடத்திவந்த தந்தை பெரியார் 1957 நவம்பர் 3ஆம் நாள் தஞ்சையில் ஜாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாட்டைக் கூட்டினார். திரண்டனர் தமிழ்ப் பெருமக்கள்; இம்மாநாட்டில் உலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு நாத்திகத் தலைவருக்கு மக்களால் எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது.
இந்த மாநாட்டில்தான் தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பிற்காக அதனைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவுகளை எரிப்பது என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனை அதே ஆண்டில் அதே மாதத்தில் 26ஆம் தேதி எரிப்பேன் என்று கர்ஜித்தார். அரசாங்கத்திற்கு ஒரு தலைவர் வாய்தா கொடுத்தார், “சட்டப்பிரிவுகளை மாற்றுங்கள்; சட்டத்தைத் திருத்துங்கள்: குறிப்பிட்ட நாட்களுக்குள் செய்யாவிட்டால் சட்டம் எரிக்கப்படும்’’ என்று. ஆனால், அரசு தமது அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்குப் பதிலாக அப்படி எரித்தால் என்ன தண்டனை தரலாம் என்று தேடியது. பின்னர் தெரிந்துகொண்டது அரசியல் சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்பதை அறிவிக்கும் புதிய சட்டத்தை இயற்றுவது அவசியம் என்று, உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசாக தம்மைப் பெருமையுடன் அறிவித்துக் கொண்ட நேரு தலைமையிலான அரசு.
சட்டத்தைக் கண்டு அஞ்சுபவரா பெரியார்? குறித்த தேதியில் போராட்டம் நடத்திட சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். கொந்தளித்தது தமிழ்நாடு. தந்தை பெரியார் முன்கூட்டியே வேறு வழக்கிற்காக கைது செய்யப்பட்டார். இந்தியாவை உலுக்கிய இந்த மாபெரும் போராட்டத்தில் 10,000 கருஞ்சட்டைத் தோழர்கள் பங்கேற்று அரசமைப்புச் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளுக்கு தீ வைத்தனர். இதில் 3,000 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர். எதிர் வழக்காடவில்லை. தமது விளக்கத்தை மட்டும் அளித்தனர். அனைவருக்கும் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏன்? ஜாதியை ஒழிக்க தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்றதால். சில நீதிபதிகள் குறைந்தபட்ச தண்டனை அளித்தபோது, “ஏன் அதிகபட்ச தண்டனை வழங்கவில்லை’’ என்று நீதிபதியைக் கேட்டனர். ஜாதியை ஒழிக்க அவர்கள் நெஞ்சில் மூண்ட தீ அரசமைப்புச் சட்டத்தோடு எரிந்து முடிந்துவிடவில்லை என்பதை இது உணர்த்தியது.
ஒரு சிறுவன் தண்டனைப் பெற்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தபோது, அவனைப் பார்வையிட ஆளுநர் வந்தார். “சிறுவன் செய்த தவறென்ன?’’ என்று வினவினார். “அரசமைப்புச் சட்டத்தை எரித்தவர்’’ என்று பதிலளித்தனர் அருகில் இருந்தோர். “விடுவிக்கிறேன் சென்று விடுகிறாயா?’’ என்று ஆளுநர் கேட்டார். கருஞ்சிறுத்தை அளித்த பதில் ஆளுநரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“ஆம். செல்கிறேன். ஆனால் தந்தை பெரியார் மீண்டும் ஆணையிட்டால் மீண்டும் சட்டத்தைக் கொளுத்திவிட்டு வருவேன்’’ என்று பதிலளித்தான் சிறுவன்.
17 மாவீரர்கள் சிறைக்குள்ளும் வெளியிலும் மடிந்தனர். ஆனால் ஒருவர்கூட தாம் செய்தது தவறு, மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்புக் கேட்கவில்லை. இதுதான் பெரியார் தொண்டர்களுக்கு சிறப்பு.
இந்நிகழ்வு நடந்து 22 ஆண்டுகளுக்குப் பின் இதே நாளில் மீண்டும் ஒரு தீ வைப்புப் போராட்டம். அது என்ன?
1978ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராயிருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் தம்முடன் இருந்த பார்ப்பன சகாக்களின் ஆலோசனைப்படி சமூகநீதிக்கு பெருங்கேடு விளைவிக்கும் வகையில் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் புகுத்தினார். அதாவது 9000 ரூபாய் ஆண்டு வருமானம் உடையவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து விலக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பெரியார் பெற்றுத்தந்த பிறப்புரிமையான வகுப்புரிமை வழங்கப்பட மாட்டாது என்பது அந்த அரசாணையின் சாரம்.
அய்யாவின் பொய்யாத நம்பிக்கையாய், ஆரியத்தை வீரியத்துடன் எதிர்த்துப் போரிட்டு இந்த பேரியக்கத்தை நடத்திவந்த ஆசிரியர் வீரமணி சீறினார். ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளை ஒருங்கிணைத்தார்.
சேலத்திலும், சென்னையிலும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைப் பாதுகாப்பு மாநாடுகளை நடத்தினார். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். அம்மாநாடுகளில் தீர்மானித்தபடி, இதே நாளில் (1979 நவம்பர் 26இல்) வருமான வரம்பாணைக்கு தீ வைத்துக் கொளுத்தி அரசின் தலைமைச் செயலகத்துக்கு அஞ்சல் வழியே அனுப்பி வைத்தார். இதே நாளில் தமிழ்நாடு எங்கும் இதுபோல் தபால் பெட்டிகள் சாம்பல் கவர்களால் நிரம்பி வழிந்தன. விளைவு, அடுத்து வந்த தேர்தலில் அதற்கு முன்பும் பின்பும் இல்லாத அளவில் படுதோல்வியைத் தழுவினார் எம்.ஜி.ஆர். காரணத்தை ஆராய்ந்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அதில் பங்கேற்று ஆசிரியர் தெளிவாக உரிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். புரிந்துகொண்ட முதலமைச்சர் வருமான வரம்பாணையை வாபஸ் பெற்றார். மேலும் இடஒதுக்கீட்டு அளவை அதிகமாக்கித் தந்தார்.
நவம்பர் 26 என்பது திராவிடர் கழக வரலாற்றில் ‘புரட்சி’ச் சிந்தனை பூத்து, போர்ப்பரணி கொட்டி வெற்றிக் கனிகளைப் பறித்துச் சுவைத்த சுவைமிகு நாளாகும்.
20ஆம் தேதி கிளர்ச்சியில் நீதிமன்றத்தில்ல் கூற வேண்டியது
நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப் படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.
ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக்-கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து-கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்-வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்-கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
பெரியார் அறிக்கை:
(விடுதலை 23-11-1957)
ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் பட்டியல்
1. பட்டுக்கோட்டை இராமசாமி
2. மணல்மேடு வெள்ளைச்சாமி
3. காரைக்கோட்டை இராமய்யன்
4. கோவில் தேவராயன் பேட்டை (பாபநாசம்) நடேசன்
5. திருவையாறு மஜித்
6. இடையாற்றுமங்கலம் நாகமுத்து
7. பொறையார் தங்கவேல்
8. இடையாற்றுமங்கலம் தெய்வானை அம்மையார்
9. நன்னிமங்கலம் கணேசன்
10. வரகநேரி சின்னசாமி
11. மாதிரிமங்கலம் (மாயூரம்) இரத்தினம்
12. கீழவாளாடி பெரியசாமி
13. திண்டிவனம் பூங்கோதை
14. சென்னை புதுமனைக்குப்பம் எம்.கந்தசாமி
15. திருச்சி டி.ஆர்.எஸ்.வாசன்
16. கண்டிராதித்தம் (அரியலூர்) சிங்காரவேலர்
17. மணல்மேடு அப்பாத்துரை